Thursday, 24 May 2012

Catholic News in Tamil - 19/05/12

1. திருத்தந்தை : தன்னையே வழங்குதல் கிறிஸ்தவ வாழ்வின் மையம்

2. உரோம் பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை 6ம் பவுல் குறித்த ஆய்வுத்துறை

3. பற்றுறுதி போன்று கலையும் மனிதரில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றது  - கர்தினால் ரவாசி

4. வத்திக்கான் தொலைக்காட்சி இயக்குனர் - மனச்சான்று மற்றும் மத சுதந்திரம்

5. கொலம்பியாவில் நீதியின்றி அமைதி இல்லை - ஆயர்

6. இராஜஸ்தான் மாநில சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினராக ஓர் அருள்சகோதரி

7. கூடங்குளம் அணுமின் நிலைய  எதிர்ப்புக்குச் சில ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

8. கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் மருத்துவர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்

-------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : தன்னையே வழங்குதல் கிறிஸ்தவ வாழ்வின் மையம்

மே19,2012. ஒரு சமுதாயத்தின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் பொதுநிலை விசுவாசிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
FOCSIV, MEIC, MCL எனப்படும் இத்தாலிய திருஅவை இயக்கம், சர்வதேச தன்னார்வப் பணியாளர் கிறிஸ்தவ தொண்டு அமைப்புக்களின் கூட்டமைப்பு, கிறிஸ்தவத் தொழிலாளர் இயக்கம் ஆகிய மூன்று இத்தாலிய இயக்கங்களின் சுமார் எட்டாயிரம் பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று பாப்பிறை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
1932க்கும் 1972ம் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கழகங்களின் பணி, தங்களது தன்னார்வச் சேவை மூலம் நற்செய்தியைப் பரப்புவதே என்றுரைத்த திருத்தந்தை, இந்தப் பணிகளில், இத்தாலியிலும் பிற நாடுகளிலும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், சமூகநீதியையும் கல்வியையும் ஊக்குவித்தல் ஆகியவையும் உள்ளடங்கியுள்ளன என்றும் கூறினார்.
எந்தத்துறையில் தன்னார்வப்பணி செய்தாலும், கிறிஸ்தவராய் இருப்பதன் உண்மையான அர்த்தத்தை அப்பணிகள் கொண்டுள்ளன எனவும், ஒருவர் தன்னையே வழங்குதல் என்பது சட்டத்தினாலோ அல்லது பொருளாதாரத்தினாலோ பெறப்படுவது அல்ல என்பதையும் சுட்டிக் காட்டினார்.
இயக்கங்கள் தங்களது ஆண்டு நிறைவுகளைச் சிறப்பிப்பது என்பது, அவை தொடங்கப்பட்டதன் நோக்கம் மற்றும் காலத்தின் புதிய அடையாளங்கள் மீது கவனம் செலுத்தி, நன்றி  செலுத்துவதாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.
அன்பைச் சுதந்திரமாக வழங்குவதை முதலில் அனுபவிக்கும் இடம் குடும்பம் என்றும், பிறரின் நலனுக்காக தன்னையே அளிப்பது குடும்பத்தில் நடக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

2. உரோம் பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை 6ம் பவுல் குறித்த ஆய்வுத்துறை

மே19,2012. இத்தாலியில் வருகிற கல்வியாண்டில் உரோம் பல்கலைக்கழகம் ஒன்று, திருத்தந்தை 6ம் பவுல் குறித்த ஆய்வுத்துறையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக இவ்வெள்ளியன்று அறிவித்தது.
வருகிற அக்டோபரில் தொடங்கும் கல்வியாண்டில், LUMSA எனப்படும் உரோம் Libera புனித விண்ணேற்பு அன்னை பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை 6ம் பவுலின் போதனைகள் குறித்த பாடங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வெள்ளியன்று இடம் பெற்ற நிருபர் கூட்டத்தில், திருப்பீட ஆயர் பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் Giovanni Battista Re, இப்புதிய துறை குறித்து அறிவித்தார்.
மறைந்த திருத்தந்தை 6ம் பவுலின் தாக்கங்கள் குறி்ததுப் படிப்பது தகுதியானது என்றுரைத்த கர்தினால் Re, 20ம் நூற்றாண்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இத்திருத்தந்தையின் தனித்திறமை, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் பணிகளுக்கு இன்றியமையாதவைகளாக இருந்தன என்று பாராட்டினார்.
இத்தாலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு உருவானதில் முக்கிய அங்கம் வகித்தவர் திருத்தந்தை 6ம் பவுல். அத்துடன், இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்குப் பின்னரும் நிவாரணப் பணிகளை, குறிப்பாக, யூத அகதிகளுக்கு இடர் துடைப்புப் பணிகளை ஆற்றியவர். இவை போன்று இன்னும் பல சிறந்த பணிகளைச் செய்திருப்பவர் திருத்தந்தை 6ம் பவுல்.

3. பற்றுறுதி போன்று கலையும் மனிதரில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றது  - கர்தினால் ரவாசி

மே19,2012. உண்மையான கலை ஆர்வத்தைத் தூண்டுவது, இது ஒருவரைப் பாராமுகமாய் இருக்கச் செய்யாது என்பதால், கலையும் பற்றுறுதி போன்று மனிதரில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி கூறினார்.
இஸ்பெயின் நாட்டு பார்செலோனாவின் தேசிய கலை அருங்காட்சியகத்தில் இவ்வியாழன் முதல் நடைபெற்று வரும் புறவினத்தார் முற்றம் என்ற அமைப்பின் அமர்வில் உரையாற்றிய கர்தினால் ரவாசி, கலையில் காணப்படும் மேலெழுந்தவாரியான தன்மைக்கு எதிராய்ச் செயல்படுமாறு எல்லாருக்கும் அழைப்பு விடுத்தார்.
அதேசமயம், கலையும் பற்றுறுதியும் எல்லாம்வல்ல இறைவன் பக்கம் திரும்புவதற்கான ஒரு நுழைவாயிலாக இருப்பதால், காணக்கூடியதில் காணக்கூடாதவரைத் தேடவும் கர்தினால் ரவாசி கேட்டுக் கொண்டார்.
இக்காலத்திய மனிதர் இறைவனோடு தொடர்பு கொள்வதற்கு உதவியாக, புதிய புறவினத்தார் முற்றங்களைத் திறக்குமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்பு விடுத்ததன் பேரில் திருப்பீட கலாச்சார அவை உலகெங்கும் புறவினத்தார் முற்றங்களை நடத்தி வருகின்றது.

4. வத்திக்கான் தொலைக்காட்சி இயக்குனர் - மனச்சான்று மற்றும் மத சுதந்திரம்

மே19,2012. மனச்சான்று அல்லது மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடாமல், ஒரு சமுதாயத்தின் பொதுநலனைத் தேடுவதில், கத்தோலிக்கத் திருஅவையும் அதன் உறுப்பினர்களும் முயற்சித்து வருகிறார்கள் என்று வத்திக்கான் தொலைக்காட்சி இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
Octava Dies என்ற வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய அருள்தந்தை லொம்பார்தி,  மனச்சான்று மற்றும் மத சுதந்திரம் குறித்து அண்மையில் கானடா ஆயர்கள் வெளியிட்ட முக்கியமான மேய்ப்புப்பணி அறிக்கை குறித்து விளக்கினார்.
மதம் மற்றும் பொது வாழ்வு குறித்து The Pew Forum என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகில் 70 விழுக்காட்டுக்கு மேற்பட்ட நாடுகளில் சட்டரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக தனியாள் அல்லது சில மதக்குழுக்களின் வழிபாட்டு உரிமைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும்,  உலகில் இன்று இடம் பெறும்  75 விழுக்காட்டுக்கு மேற்பட்ட சமய அடக்குமுறைகளால் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
உண்மை மற்றும் வாழ்வின் பொருள் குறித்து அறிந்திருப்பதாகக் கூறும் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள், கவலை தருவதாகவும் உள்ளது எனவும் அருள்தந்தை லொம்பார்தி விளக்கினார்.

5. கொலம்பியாவில் நீதியின்றி அமைதி இல்லை - ஆயர்

மே19,2012. கொலம்பியா நாட்டின் அழகு ஒருபுறமிருக்க, வன்முறை, ஆயுதப்போராட்டம், கடத்தல்கள், பலரின் உயிரிழப்பு என அந்நாடு நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளின் வரலாற்றை கொண்டுள்ளது என்று ஆயர் ஒருவர் கவலை தெரிவித்தார்.
இறைவன் எங்கே அழுகிறார் என்ற வார நிகழ்ச்சிக்காகப் பேட்டியளித்த Girardota ஆயர் Guillermo Orozco Montoya, போதைப்பொருள் வியாபாரம், கெரில்லாக்கள், வேலைவாய்ப்பின்மை, கட்டாயப் புலப்பெயர்வு  போன்ற சில பிரச்சனைகளுக்கு எதிராக அந்நாடு பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது என்று கூறினார்.
கொலம்பியாவில் நீதியின்றி அமைதி இல்லை என்றும் ஆயர் தெரிவித்தார்.

6. இராஜஸ்தான் மாநில சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினராக ஓர் அருள்சகோதரி

மே19,2012. இந்தியாவின் இராஜஸ்தான் மாநில சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினராக ஒரு கத்தோலிக்க அருள்சகோதரியை நியமித்துள்ளது அம்மாநில அரசு.
வட இந்தியாவில் இத்தகைய நியமனம் முதன் முறையாக இடம் பெற்றுள்ளதாகவும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
ஆஜ்மீர் மறைபோதக அருள்சகோதரிகள் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி Mariola Sequeira இராஜஸ்தான் மாநில சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஜ்மீரிலுள்ள புகழ்மிக்க சோஃபியா கல்லூரியில் ஆங்கிலம் கற்பிக்கும் சகோதரி Mariola Sequeira, குடியுரிமை சுதந்திரத்திற்கான மக்கள் கழகத்தில் உறுப்பினராகவும், இந்தியத் திருஅவையின் சிறைப்பணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

7. கூடங்குளம் அணுமின் நிலைய  எதிர்ப்புக்குச் சில ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

மே19,2012. கூடங்குளம் அணுமின் நிலையம் சுனாமியால் பாதிக்கப்படும் பகுதியில் இருப்பதாகக் கூறி அந்நிலையத்துக்கு எதிராகப் புகார் தெரிவித்துள்ளனர் சில ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள்.
தெற்காசிய அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுக்களின் கடிதத்தில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சில உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து தாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக அக்கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அஹிம்சா வழியில் போராடுவோர் கேள்விகளால் நச்சரிக்கப்படுகின்றனர், பொய்க்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகின்றனர், ஒரு காவல் நிலையத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8. கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் மருத்துவர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்
மே19,2012. மகாராஷ்டிர மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என அம்மாநில மருத்துவக்கல்வி அமைச்சர் விஜய்குமார் காவித் கூறினார்.
சென்னை அரசு மருத்துவக்கல்லூரியையும், மருத்துவமனையையும் பார்வையிடுவதற்காக, மகாராஷ்டிர மாநிலத்தின் மருத்துவக்கல்வி அமைச்சர் விஜய்குமார் காவித் சென்னை வந்த போது இவ்வாறு கூறினார்.
சென்னை அரசு பொதுமருத்துவமனை மிகவும் பெரியதாக இருக்கிறது. இங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, மிகவும் அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிர மருத்துவமனையில் அதிகமாக 1,500 படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன என்றார் அவர்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மருத்துவர்கள், மகாராஷ்டிர அரசு மருத்துவமனையில் பணிபுரியத் தாராளமாக வரலாம். ஏனென்றால், அங்கு ஓய்வின் வயது 62 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு, 14 அரசு மருத்துவமனைகள் உள்ளன. மேலும், ஆறு மருத்துவமனைகள் உருவாக்கப்பட உள்ளன என்றும் விஜய்குமார் காவித் கூறியதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...