Thursday, 17 May 2012

Catholic News in Tamil - 17/05/12


1. வத்திக்கானில் திரையிடப்பட்ட 'நாசரேத்தூர் மரியா' என்ற திரைப்படத்தைப் பற்றி திருத்தந்தை

2. ஜெர்மன் திருஅவையால் நடத்தப்படும் மாநாட்டிற்குத் திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துச் செய்தி

3. பிரான்ஸ் நாட்டின் புதிய அரசுத் தலைவருக்குத் திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துக்கள்

4. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் Nostra Aetate ஏடு கத்தோலிக்கருக்கும் யூதர்களுக்கும் இடையே நடைபெற வேண்டிய உரையாடலுக்கு வழிவகுத்த ஏடு -வத்திக்கான் அதிகாரி

5. பிரித்தானியப் பாராளு மன்றத்தில் பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளில் கிறிஸ்தவப் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப்பற்றி அறிக்கை

6. அணு ஆயுதங்களின் உருவாக்கம் 21ம் நூற்றாண்டில் வாழும் மனித குலத்திற்கு பெரும் அழிவாகவே அமையும் - அமெரிக்க ஆயர்கள்

7. திரிபுரா மாநிலத்தில் முதல் கத்தோலிக்க மருத்துவமனை

8. மகாராஷ்டிரா மாநிலத்தில் கக்தாரி பழங்குடியினரிடையே இயேசுசபையினர் பணி

------------------------------------------------------------------------------------------------------
1. வத்திக்கானில் திரையிடப்பட்ட 'நாசரேத்தூர் மரியா' என்ற திரைப்படத்தைப் பற்றி திருத்தந்தை

மே,17,2012. மனித வாழ்வின் பல முக்கிய செல்வங்களின் பிறப்பிடமாய் ஒரு தாய் இருப்பதால், அவரை எளிதில் விவரிப்பது கடினம், அதிலும் சிறப்பாக அன்னை மரியாவைக் குறித்து பேசுவது என்றால் அதைவிட கடினம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இப்புதனன்று மாலை வத்திக்கானில் திரையிடப்பட்ட 'நாசரேத்தூர் மரியா' (Maria di Nazareth) என்ற திரைப்படத்தின் இறுதியில் உரையாற்றிய திருத்தந்தை, இத்திரைப்படத்தை உருவாக்கியவர்கள் அனைவருக்கும் தன் பாராட்டுக்களையும், நன்றியையும் கூறினார்.
'நாசரேத்தூர் மரியா' மூன்று பெண்களைச் சுற்றி உருவாக்கப்பட்டத் திரைப்படம் என்பதைக் கூறிய திருத்தந்தை, இம்மூவரில், ஏரோது அரசனுடன் வாழ்ந்த எரோதியா தன் சுயநலத்தால் கட்டுண்டு, நன்மையையும், உண்மையையும் பார்க்கத் தவறியவர் என்றும், மகதலா மரியாவோ துவக்கத்தில் தவறானப் பாதையைத் தேர்ந்திருந்தாலும் இயேசுவைச் சந்தித்தபின் முற்றிலும் மாறினார் என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இத்திரைப்படத்தின் மைய உருவாகச் சித்தரிக்கப்பட்டுள்ள அன்னை மரியா 'ஆகட்டும்' என்ற அருள்நிறைந்த வார்த்தையின் எடுத்துக்காட்டாக தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர் என்றும் திருத்தந்தை கூறினார்.
'இதோ நான் வருகிறேன்' என்று கூறிய நாசரேத்தூர் மரியாவைப் போல் நாம் நமது வாழ்வை அர்ப்பணிக்க அவரே நமக்குப் பரிந்துரை செய்வாராக என்று திருத்தந்தை கூறினார்.


2. ஜெர்மன் திருஅவையால் நடத்தப்படும் மாநாட்டிற்குத் திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துச் செய்தி

மே,17,2012. தங்கள் பழைய வழிகளைத் துறந்து, புதிய வழிகளில் செல்ல விழைவோரே புதிய திருப்பங்களுக்குத் துணிபவர்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
மேமாதம் 16 இப்புதன் துவங்கி இச்சனிக்கிழமை வரை ஜெர்மனியின் Mannheim எனும் நகரில் "துணிவுள்ள புதியத் திருப்பம்" என்ற மையக்கருத்துடன் ஜெர்மன் திருஅவையால் நடத்தப்படும் மாநாட்டிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
புதியத் திருப்பங்களை உருவாக்கும் எந்த ஒரு மனிதரும் இறைவனை நோக்கித் திரும்பும்போதுதான் அத்திருப்பங்கள் முழுமையான பொருள் பெறுகின்றன என்று கூறியத் திருத்தந்தை, இத்திருப்பம் வெறும் தனிப்பட்டவரின் முயற்சி என்பதைவிட, கத்தோலிக்கக் குடும்பம் அனைத்தும் இணைந்து உருவாக்கும் திருப்பமாக இருக்க வேண்டும் என்று தன் செய்தியில் வலியுறுத்தினார்.
தன் செய்தியின் இறுதிப் பகுதியில் இளையோருக்குச் சிறப்பான அழைப்பை விடுத்துள்ளார் திருத்தந்தை. கடந்த ஆண்டு மத்ரித் நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாளில் இவ்விளையோரைத் தான் சந்தித்ததை நினைவு கூர்ந்தத் திருத்தந்தை, இளையோர் எடுக்க வேண்டிய பல முடிவுகளில் கிறிஸ்துவை மையமாகக்  கொண்டு தங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற சிறப்பு அழைப்பை விடுத்தார் திருத்தந்தை.
Mannheimல் நடைபெறும் இந்த 98வது கத்தோலிக்க மாநாடு, வத்திக்கான் பொதுச் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவாக, விரைவில் துவங்கவுள்ள விசுவாச ஆண்டு கொண்டாட்டங்களுக்கு ஒரு முன்னோடியாக உள்ளது என்று தன் செய்தியின் இறுதியில் திருத்தந்தை கூறியுள்ளார்.


3. பிரான்ஸ் நாட்டின் புதிய அரசுத் தலைவருக்குத் திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துக்கள்

மே,17,2012. ஆன்மீக, நன்னெறி விழுமியங்களைப் பின்பற்றும் பரம்பரையில் வளர்ந்துள்ள பிரான்ஸ் நாட்டிற்கு Francois Hollande புதிய அரசுத் தலைவராக இருந்து மக்களை நீதியான முறையில் வழிநடத்த தன் செபங்களும் ஆசீரும் உண்டு என்று திருத்தந்தை கூறினார்.
இச்செவ்வாயன்று பிரான்ஸ் நாட்டின் புதிய அரசுத் தலைவராகப் பதவியேற்ற Hollande அவர்களுக்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியத் திருத்தந்தை, பிரான்ஸ் நாட்டு மக்கள் மீதும், அரசுத் தலைவர் மீதும் மிகுதியானத் தன் அசீரை வழங்குவதாகக் கூறினார்.
மனிதச் சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சக்தியாகவும், ஐரோப்பாவை சமாதான வழிகளில் நடத்தும் ஒரு தூண்டுதலாகவும் பிரான்ஸ் நாடு அமைவதே தன் மேலான விருப்பம் என்பதை திருத்தந்தை தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நீதியையும், உறவையும் வளர்க்கும் ஒரு சமூகமாக, சிறப்பாக, ஏழை நாடுகளை உலக சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் ஒரு நாடாக பிரான்ஸ் திகழ்வதற்குத் தன் சிறப்பான செபங்களை அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை.


4. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் Nostra Aetate ஏடு கத்தோலிக்கருக்கும் யூதர்களுக்கும் இடையே நடைபெற வேண்டிய உரையாடலுக்கு வழிவகுத்த ஏடு -வத்திக்கான் அதிகாரி

மே,17,2012. 'நமது காலத்தில்' என்ற பொருள்படும் Nostra Aetate என்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ஏடு கத்தோலிக்கருக்கும் யூதர்களுக்கும் இடையே நடைபெற வேண்டிய உரையாடலுக்கு வழிவகுத்த ஒரு சிறந்த ஏடு என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் Nostra Aetate ஏடு வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, உரோம் நகரில் உள்ள Angelicum பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய கிறிஸ்தவ ஒற்றுமைக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch, தன் தலைமையுரையில் இவ்வாறு கூறினார்.
கிறிஸ்தவ மதிப்பீடுகளுடன் வளர்ந்த ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களுக்கு எதிராக எழுந்த வன்முறைகளைப் பற்றி ஓர் ஆழமான மனச்சான்று ஆய்வை மேற்கொள்ள Nostra Aetate என்ற இந்த ஏடு பெரிதும் உதவியது என்று கர்தினால் தன் உரையில் எடுத்துரைத்தார்.
நாத்சி அடக்கு முறைகளின்போது, வன்முறைகளைக் கையாண்டது பெரும்பாலும் கிறிஸ்தவர்களே என்றாலும், இந்த வன்முறைகளுக்கு பலியானவர்களில் பலரும் கிறிஸ்தவர்கள் என்பது உண்மை என்பதைக் கூறிய கர்தினால் Koch, இதுபோன்ற ஆபத்தை மனித சமுதாயம் இனி சந்திக்காமல் இருக்க கிறிஸ்தவர்களும் யூதர்களும் உரையாடலில் ஈடுபடுவது அவசியம் என்று எடுத்துரைத்தார்.
இப்படிப்பட்ட உரையாடலை வளர்க்கும் அனைத்து முயற்சிகளையும் திருஅவை ஆவலாய் ஆதரிக்கும் என்று கிறிஸ்தவ ஒற்றுமைக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch தன் உரையின் இறுதியில் வலியுறுத்திக் கூறினார்


5. பிரித்தானியப் பாராளு மன்றத்தில் பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளில் கிறிஸ்தவப் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப்பற்றி அறிக்கை

மே,17,2012. பாகிஸ்தானிலும் எகிப்திலும் உள்ள கிறிஸ்தவப் பெண்கள் தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையிலும் பெண்கள் என்ற பாலின பாகுப்பாடு காரணமாகவும் ஒடுக்கப்படுகின்றனர் என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் Lord Alton கூறினார்.
பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்கள், முக்கியமாக பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப்பற்றி Aid To The Church In Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு உருவாக்கியுள்ள ஓர் அறிக்கை இச்செவ்வாயன்று மாலை பிரித்தானியப் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
உலகின் 13 நாடுகளில் கிறிஸ்தவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளைப் பற்றிய விவரங்கள் அடங்கிய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட வேளையில், இரு பேராயர்களும், வன்முறைகளை அன்புவித்த ஒரு பாகிஸ்தான் பெண்ணும் தங்கள் எண்ணங்களைப் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தனர்.
எகிப்தில் கிறிஸ்தவப் பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்முறைகள், குடும்பங்களில் அடிமைகள் போல் நடத்தப்படுதல் ஆகியப் பிரச்சனைகளை காப்டிக் கத்தோலிக்கப் பேராயர் Joannes Zakaria விளக்கினார்.
பாகிஸ்தானில் வளர்ந்து வரும் அடிப்படைவாத இஸ்லாமியத் தாக்கங்களைக் குறித்தும் அதன் விளைவாக சிறுபான்மை கிறிஸ்தவர்கள், அதிலும் சிறப்பாக கிறிஸ்தவப் பெண்கள் சந்திக்கும் வன்முறைகளைக் குறித்தும் பிரித்தானியப் பாராளு மன்றத்தில் விளக்கிக் கூறினார் கராச்சிப் பேராயர் Joseph Coutts.


6. அணு ஆயுதங்களின் உருவாக்கம் 21ம் நூற்றாண்டில் வாழும் மனித குலத்திற்கு பெரும் அழிவாகவே அமையும் - அமெரிக்க ஆயர்கள்

மே,17,2012. அணு ஆயுதங்களின் உருவாக்கமும் சேகரிப்பும் 21ம் நூற்றாண்டில் வாழும் மனித குலத்திற்கு பெரும் அழிவாகவே அமையும் என்று அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
அணு ஆயுதங்களை முற்றிலும் அகற்றும் திட்டங்களை  அமெரிக்க அரசு மேற்கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பம் ஒன்று 50,000க்கும் அதிகமானோரின் கையொப்பங்களுடன் அமெரிக்க பாராளு மன்றத்திற்கு அண்மையில் அனுப்பப்பட்டது. இந்த விண்ணப்பத்தில் அமெரிக்க ஆயர் பேரவையின் பிரதிநிதிகளும் கையொப்பமிட்டுள்ளனர் என்று கத்தோலிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
அணு ஆயுதங்களைப் பாதுகாப்பதில் ஒரு சிறு தவறு நிகழ்ந்தாலும் அது மிகப் பெரும் அழிவையே தரும் என்று கூறும் இந்த விண்ணப்பம், இந்த ஆயுதங்களைக் காப்பதற்கு அரசுகள் செலவிடும் தொகையைக் கொண்டு பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்று வலியுறுத்தியுள்ளது.


7. திரிபுரா மாநிலத்தில் முதல் கத்தோலிக்க மருத்துவமனை

மே,17,2012. இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் கட்டப்பட உள்ள முதல் கத்தோலிக்க மருத்துவமனைக்கு இவ்வியாழனன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
திரிபுரா மாநிலத்தின் தலைநகரான Agartalaவின் புறநகர் பகுதியில் அமையவுள்ள புனித யோசேப்பு மருத்துவமனையின் அடிக்கல்லை ஆயர் Lumen Monteiro அர்ச்சித்தார்.
36 இலட்சம் மக்களைக் கொண்ட திரிபுரா மாநிலத்தில் மக்களுக்குப் பணியாற்ற மூன்றே மருத்துவமனைகள் உள்ளன என்றும், புனித யோசேப்பு மருத்துவ மனை அப்பகுதி மக்களுக்குப் பெரிதும் தேவையான பணி செய்யும் என்றும் இவ்விழாவில் கலந்துகொண்ட அருள்சகோதரி Janet Tellis கூறினார்.
Annecyயின் புனித யோசேப்பு என்ற துறவுச் சபையின் சகோதரிகள் நடத்தவுள்ள இந்த மருத்துவமனையில் தரமான மருத்துவப் பணியை மேற்கொள்ள இருப்பதாக அருள்சகோதரிகளின் தலைவி Pauline கூறினார்.


8. மகாராஷ்டிரா மாநிலத்தில் கக்தாரி பழங்குடியினரிடையே இயேசுசபையினர் பணி

மே,17,2012. பழங்குடி மக்களின் கலாச்சாரத்தைக் காப்பதும், அரசிடம் இருந்து பெறக்கூடிய அவர்களின் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வைத் தூண்டுவதும் தங்கள் பணி என்று இயேசுசபை அருள்தந்தை Diago D'Souza கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கக்தாரி (Kaktari) என்ற பழங்குடியினரிடையே கல்வி, மருத்துவம், பெண்ணுரிமைப் போராட்டம் ஆகியப் பணிகளை மேற்கொண்டுள்ள Janhit Vikas என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் அருள்தந்தை Diago, ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியொன்றில் தங்கள் பணிகளை விளக்கிக் கூறினார்.
கக்தாரி மக்கள் வேலை தேடி இடம் விட்டு இடம் செல்லும் நாடோடிகள் என்பதால், அவர்களுக்கு நீதிமுறைப்படி கிடைக்க வேண்டிய கூலி கொடுக்கப்படுவதில்லை என்று கூறிய அருள்தந்தை Diago, இம்மக்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே தங்கள் பணியின் முக்கிய அம்சம் என்று கூறினார்.
இம்மக்களுக்கு அடிப்படை கல்வி வழங்குதல், மூலிகை மருந்துகள் பற்றி அவர்களிடம் உள்ள பரம்பரை அறிவை வளர்த்தல், அவர்கள் மத்தியில் உள்ள குடிப்பழக்கத்தை நிறுத்துதல் ஆகியவை தங்கள் முக்கியப் பணிகள் என்று Janhit Vikas அமைப்பின் இயக்குனர் கூறினார்.



No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...