Tuesday, 8 May 2012

Catholic News in Tamil - 08/05/12

1. திருப்பீடத்திற்கும் Lower Saxonyக்கும் இடையேயான ஒப்பந்தத் திருத்தம்

2. அரபு வசந்தத்தில் லெபனன் மக்களின் பங்கு வன்முறையைத் தூண்டுவதாக இருக்கக் கூடாது லெபனன் முதுபெரும் தலைவர்

3. எகிப்தியக் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களின் தொடர் மதமாற்ற நடவடிக்கைகளின் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்

4. மொசாம்பிக்கில் கத்தோலிக்க அருள்தந்தை ஒருவர் கொலை

5. போர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 150 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர் ஐ.நா.

6. தாயாக இருப்பதற்கு மோசமான நாடு நைஜர்

7. வட இலங்கையில் ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன - இராணுவப் பேச்சாளர்

8. ஒலிம்பிக் ஆடைகள்: இலங்கைத் தொழிற்சாலை மீது குற்றச்சாட்டு

-------------------------------------------------------------------------------------------

1. திருப்பீடத்திற்கும் Lower Saxonyக்கும் இடையேயான ஒப்பந்தத் திருத்தம்

மே 08,2012. செர்மனியின் Niedersachsen எனப்படும் Lower Saxony மாநிலத்திற்கும் திருப்பீடத்திற்கும் இடையே கத்தோலிக்கப் பள்ளிகள் குறித்த புதிய ஒப்பந்தத் திருத்தம் கையெழுத்தாகியுள்ளது.
அண்மையில் Lower Saxony மாநிலம் கொணர்ந்த புதிய அரசியலமைப்பு மாற்றங்களின் ஒளியில் இந்த ஒப்பந்தத் திருத்தம் அம்மாநிலத் தலைநகர் Hannoverல் இடம்பெற்றது.
1965ம் ஆண்டு பிரவரி 26ம் தேதி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் விதிகள், தற்போதைய புதிய அரசியலமைப்புக்கு ஏற்றவகையில் மாற்றம் பெற்ற இந்த திருத்தத்தில் திருப்பீடத்தின் சார்பில் செர்மனிக்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் Jean-Claude Périssetயும் Lower Saxony சார்பில் அம்மாநில முதல்வர் David McAllisterம் கையெழுத்திட்டனர்.

2. அரபு வசந்தத்தில் லெபனன் மக்களின் பங்கு வன்முறையைத் தூண்டுவதாக இருக்கக் கூடாது லெபனன் முதுபெரும் தலைவர்

மே 08,2012. லெபனன் மக்களைப் பல வேறுபாடுகள் பிரித்தாலும், அவர்கள் ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கு இது தகுந்த நேரம் என்று அந்நாட்டு மாரனைட்ரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Beshara al-Rahi கூறினார்.
அரபு நாடுகளில் இடம் பெற்ற நிகழ்வுகளை வைத்து லெபனன் மக்கள் அறிவிலிகளாக இருந்து விடக்கூடாது என்றுரைத்த முதுபெரும் தலைவர் al-Rahi, அப்பகுதியின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகச் சீர்திருத்தங்களில் அரபு உலகம் கவனம் செலுத்துவதற்கு அண்மைக் காலங்களில் அரபு நாடுகளில் இடம் பெற்ற மக்கள் எழுச்சிகள் தூண்டுதலாக இருக்கின்றன என்றும் கூறினார்.
கானடாவின் Montreal அரசி எலிசபெத் பயணியர் விடுதியில், கானடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அந்நாட்டு உயர்மட்ட அதிகாரிகளுக்கு உரையாற்றிய லெபனன் முதுபெரும் தலைவர் al-Rahi இவ்வாறு கூறினார்.
கானடாவில் வாழும் லெபனன் மக்கள் தங்கள் நாட்டுத் தேசிய சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வோடு ஒன்றிணைந்து வாழுமாறும் அவர்  கேட்டுக் கொண்டார்.

3. எகிப்தியக் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களின் தொடர் மதமாற்ற நடவடிக்கைகளின் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்

மே 08,2012. எகிப்தில் முஸ்லீம்களின் தொடர் மதமாற்ற நடவடிக்கைகள் மற்றும் பாகுபாடுகளால் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்று வரலாற்றியல் மற்றும் இசுலாமியக் கல்வியின் பேராசிரியர் இயேசு சபை அருள்தந்தை Samir Khalil Samir கூறினார்.
காலை 5 மணியிலிருந்து நாள் முழுவதும் மற்றும் வருடம் முழுவதும் இசுலாமியப் பிரச்சாரமே நடந்து கொண்டிருக்கின்றது மற்றும் ஒரு நாளில் 5 தடவைகள் நடக்கும் இந்த மதப் பிரச்சாரத்திற்குச் சக்திமிக்க ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன என்று அக்குரு கூறினார்.
இதுதவிர, வீடுகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளும் சப்தமாகப் பயன்படுத்தப்படுகின்றன, இது பற்றி அந்த வீடுகளில் வாழ்கின்றவர்களிடமும் எதுவும் கேட்க இயலாது என்று கூறிய அவர், அப்படிக் கேட்டால் இது கடவுளுடைய வார்த்தை என்று நியாயம் சொல்வார்கள் என்றும் கூறினார்.
பல்கலைக்கழகங்களிலும் கிறிஸ்தவர்கள் பாகுபடுத்தப்படுகின்றனர் என்றும் அருள்தந்தை Khalil Samir கூறினார்.

4. மொசாம்பிக்கில் கத்தோலிக்க அருள்தந்தை ஒருவர் கொலை

மே 08,2012. தென்கிழக்கு ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் Consolata மறைபோதக அருள்தந்தை ஒருவர் ஆயுதம் தாங்கிய கும்பலால் கடந்த வாரத்தில் கொடூரமாய்க் கொலை செய்யப்பட்டுள்ளார்.
48 வயதாகும் Valentim Camale என்ற அருள்தந்தையின் Liqueleva பங்கில், ஆயுதங்களுடன் திருடச் சென்ற நான்கு பேர் அவரைக் கொடூரமாய்க் குத்திக் கொலை செய்துள்ளனர். 
மொசாம்பிக்கில் பிறந்த அருள்தந்தை Valentim Camale, 1983ம் ஆண்டு கொன்சலாத்தா துறவு சபையில் சேர்ந்தார். 2000மாம் ஆண்டில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

5. போர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 150 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர் ஐ.நா.

மே 08,2012. கடந்த 20க்கு மேற்பட்ட ஆண்டுகளில் உலகில் வன்முறை மிகுந்த கலவரங்கள் குறைந்திருந்தாலும், போர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 150 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
வாஷிங்டனிலுள்ள, யுக்திகள் மற்றும் சர்வதேச ஆய்வுக்கான நிறுவனத்தில் இவ்வாறு உரையாற்றிய பான் கி மூன், அமைதியைக் கட்டி எழுப்பும் முயற்சி சிக்கலானது, இதற்கு வளர்ச்சியுடன்கூடிய ஒத்துழைப்பு அவசியம் என்று குறிப்பிட்டார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் ஐ.நா.செய்து வருகின்றது என்றும் கூறிய அவர், ஐ.நா.வின் 16 அமைதிகாக்கும் படைகள் 15 நாடுகளில் பணியாற்றுகின்றன என்பதையும் குறிப்பிட்டார்.

6. தாயாக இருப்பதற்கு மோசமான நாடு நைஜர்

மே 08,2012. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் சுமார் மூன்றில் ஒரு பகுதிக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறையுள்ளவர்கள் மற்றும் ஏழு குழந்தைக்கு ஒன்று வீதம் 5 வயதை எட்டு முன்பே இறக்கின்றன என்று Save the Children என்ற பிறரன்பு அமைப்பு கூறியது.
நலவாழ்வு, கல்வி, பொருளாதாரம், ஊட்டச்சத்து உட்பட பல கூறுகளின் அடிப்படையில் 165 நாடுகளில் ஆய்வு நடத்திய Save the Children அமைப்பு, உலகில் தாயாக இருப்பதற்கு மிக மோசமான இடம் நைஜர் என்று அந்த ஆய்வு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேற்கு ஆப்ரிக்காவில் கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்கும் நைஜர், ஆப்கானிஸ்தானைவிட மோசமான நிலையைக் கொண்டிருப்பதாகவும் கூறியது Save the Children அமைப்பு.

7. வட இலங்கையில் ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன - இராணுவப் பேச்சாளர்

மே 08,2012. இலங்கையின் வடக்கு மாநிலத்தில், ஆயிரத்து 963 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 7 இலட்சத்து 91 ஆயிரத்து 620 கண்ணிவெடிகள், இராணுவ கண்ணிவெடியகற்றும் பிரிவினர் மற்றும் மனிதநேய கண்ணி வெடியகற்றும் பிரிவினரால் அகற்றப்பட்டிருப்பதாகவும், அகற்றப்பட்டவை அனைத்தும் உடனடியாகவே அழிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மாவட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் இன்னமும் 124 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடியகற்றப்பட வேண்டியுள்ளது.
மேலும், வடக்கில் மொத்தமாக 1418 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளில் 1314 சதுர கிலோ மீட்டர் பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருக்கின்றன.
இதேபோல் போர்க் காலத்தில் அதிகளவு (219,940) கண்ணிவெடிகள் யாழ் மாவட்டத்திலேயே புதைக்கப்பட்டன. அடுத்தப்படியாக, கிளிநொச்சி (214, 240), வவுனியா (118, 054), முல்லைத்தீவு( 104, 351), மன்னார் (103, 265) என்ற அளவில் அவை உள்ளன.
இதேவேளை போர் நிறைவடைந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்ட கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகள் மூன்று மாநிலங்களில் 5,000 சதுர கிலோமீட்டர் பகுதியில் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் 2061 சதுர கிலோ மீட்டர் பகுதியிலேயே கண்ணிவெடிகள் இருப்பது தொழில் நுட்ப ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டிருக்கின்றார்.

8. ஒலிம்பிக் ஆடைகள்: இலங்கைத் தொழிற்சாலை மீது குற்றச்சாட்டு

மே08,2012. பிரிட்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழாவின் போது பிரிட்டன் விளையாட்டு வீரர்கள் அணியவுள்ள ஆடைகள் இலங்கையில் அடிப்படைத் தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் பிரிட்டன் அணிக்கான அதிகாரப்பூர்வ ஆடைகளைப் பிரிட்டனிலுள்ள நெக்ஸ்ட் ஆடை விற்பனை நிறுவனம் வெளியிட்டு சில நாட்களுக்குள் இந்தக் குற்றச்சாட்டுக்கள் இலண்டனிலிருந்து வெளியாகும் தி இன்டிபெண்டன் நாளிதழில் வெளியாகியுள்ளன.
ஆடை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள நெக்ஸ்ட் நிறுவனத்தின் இலங்கையிலுள்ள தொழிற்சாலையில் மிகக்குறைந்த அளவு ஊதியத்திற்கு, அளவுக்கதிகமான நேரத்திற்கு, கணக்குவழக்கு இல்லாத அளவுக்கு தொழிலாளர்களிடம் வேலை வாங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நெக்ஸ்ட் நிறுவனத்தின் இலங்கைத் தொழிற்சாலையில் சுமார் 2500 தொழிலாளர்கள் இலண்டன் 2012 என்ற ஒலிம்பிக் விழாவுக்கான ஆடைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...