Tuesday, 8 May 2012

Catholic News in Tamil - 07/05/12

1. சுவிஸ் மெய்க்காப்பாள‌ர்க‌ளுககுத் திருத்தந்தையின் உரை

2. திருத்தந்தையின் ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரை

3. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த இலங்கை ஆயர்கள் கோரிக்கை

4. நேபாளத்தில் இயேசு சபையினரின் 60 ஆண்டு பணி

5. சாஹேல் பகுதி மக்களின் துயர்துடைக்க நடவடிக்கைகள் தேவை

6. ஆசியக்கண்டத்தில் உள்ள பல பழமைக் கலாச்சார சின்னங்கள் அழியும் ஆபத்து

7. 40 ஆண்டுகளில் முதற்தடவையாக அணுமின் சக்தியில்லாத ஜப்பான்


-------------------------------------------------------------------------------------------

1. சுவிஸ் மெய்க்காப்பாள‌ர்க‌ளுககுத் திருத்தந்தையின் உரை

மே,07,2012. திருப்பீடத்திற்கான சுவிஸ் மெய்க்காப்பாள‌ர்க‌ள் ப‌டையில் இணையும் இளையோர் தங்கள் வாழ்வின் சில ஆண்டுகளைத் திருத்தந்தை மற்றும் திருப்பீடப்பணிகளுக்கென அர்ப்பணிப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு செயல் என சுவிஸ் மெய்க்காப்பாளர்களை அவர்களின் குடும்பங்களோடு இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
1527ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி திருத்தந்தையின் உயிரைக்காப்பாற்ற தங்கள் இன்னுயிரை அளித்த சுவிஸ் மெய்க்காப்பாளர்களை இவ்வேளையில் நினைவுகூர்ந்த பாப்பிறை, திருத்தந்தைக்கான அதே விசுவாசப்பாதையில் இன்றைய சுவிஸ் மெய்க்காவலர்களின் பணிகள் தொடர்கின்றன என்று கூறினார்.
கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதிப்பாடு, இயேசுவின் திருஅவையை அன்பு கூர்ந்து விசுவாசமாயிருத்தல், துணிவும், பணிவும், சுயநலமற்ற போக்கும், உதவும் மனப்பான்மையும் சுவிஸ் மெய்க்காவலர்களின் பணிகள் என கோடிட்டுக்காட்டினார் திருத்தந்தை.
தங்களின் தினசரி வாழ்வில் சந்திக்கும் மக்களை நற்செய்தி காட்டும் பிறரன்புடன் வழிநடத்த, தெய்வீக அன்பெனும் உலைக்களத்தில் நாம் செம்மைப்படுத்தப்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திய பாப்பிறை, செபித்தல், இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல், திருநற்கருணையை மையமாகக் கொண்ட வாழ்வை அமைத்தல் போன்றவைகளையும் எடுத்துரைத்தார்.

2. திருத்தந்தையின் ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரை.

மே,07,2012. நாம் என்றும் இயேசுவோடு இணைந்து அவரைச் சார்ந்து வாழவேண்டியது அவசியம், ஏனெனில் அவரின்றி நாம் எதையும் ஆற்றமுடியாது என இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தை மையமாக வைத்து தன் ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திராட்சைக் கொடியும் அதன் கிளைகளும் என்பதைப்பற்றி இயேசு கூறிய உவமையைக் குறித்து தன் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, இறைவனின் உண்மையான திராட்சைக்கொடியாம் இயேசு, தன் அன்பெனும் தியாகத்தால் நமக்கு மீட்பளித்து நாம் அக்கொடியுடன் இணைக்கப்படுவதற்கான வழியைக் காட்டியுள்ளார் என்று கூறினார். இயேசு தந்தையின் இறையன்பில் நிலைத்திருப்பதுபோல், அவரின் சீடர்களும் இயேசுவோடு ஆழமாக இணைந்திருக்கும்போது, கனிதரும் கிளைகளாக மாறி, பெருமளவு பலன் தருவர் எனவும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
கடவுளின்றி மனிதனால் எதுவும் ஆற்றமுடியாது என்பது மனிதனின் சுதந்திரத்தைக் குறித்தக் கேள்வியாக இருக்கிறது என்ற இக்காலப் போக்கையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, கடவுளிடம் நாம் வேண்டும்போது, நம் வேண்டுகோளுக்கு செவிமடுக்கும் இறைவன், நம் பணியை ஆற்றுவதற்கான பலத்தை வழங்குகிறார், அதன் வழி நம் சுதந்திரமும், தெய்வீகச் சக்தியும் நம்மில் வளர்ச்சி காண்கிறது என்ற 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைவாக்கினர் யோவானின் வார்த்தைகளையும் எடுத்துரைத்தார்.
கிளைகளாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் தினசரி செபம், அருளடையாளம் மற்றும் பிறரன்பில் பங்கேற்பு போன்றவை மூலம் இறைவனுடன் கொண்டுள்ள ஒன்றிப்பை வளர்த்து, அதன் வழியே வாழமுடியும் என்றார் பாப்பிறை.
மிலான் நகரில் இடம்பெற உள்ள ஏழாவது உலகக் குடும்ப மாநாடு குறித்தும் ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, வரும் ஜூன் மாதம் 1 முதல் 3 வரை, மிலான் நகரில் திருப்பயணம் மேற்கொள்ளும்போது அந்த மாநாட்டில் தான் பங்கேற்க உள்ளதையும் எடுத்துரைத்தார்.

3. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த இலங்கை ஆயர்கள் கோரிக்கை

மே,07,2012. இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள், எதிர்காலத்துக்கான நல்ல வாய்ப்பையும் நம்பிக்கையையும் கொண்டிருப்பதாக பாராட்டியுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர்கள், மற்றுமொரு அரிய வாய்ப்பு தவறிப்போவதைத் தவிர்ப்பதற்காக இலங்கை அரசு அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர்.
அமைதியும் நல்லிணக்கமும், மிகவும் முக்கிய, அவசரத் தேவையாக இருக்கின்ற நிலையில், அந்த ஆணைக்குழுவின் சாத்தியமிக்கப் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என்று, கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் இலங்கை ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நாட்டை இட்டுச்செல்லும் நோக்கில் குறைந்த அளவு அடையாள அளவிலான நடவடிக்கைகளையாவது அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ள ஆயர்கள், இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மக்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் அவை இரு அதிகாரப்பூர்வ மொழிகளிலும் எல்லாருக்கும் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளனர்.
சிங்களம் மாத்திரம் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறி, மொழி விவகாரங்களை மிகவும் முக்கியமாகக் கருதி, அரசு செயலாற்றவேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுவதுடன், காணாமல் போனவர்களின் விவகாரத்தை அரசு நன்முறையில் கையாள வேண்டும் என்றும், இன்னமும் அரசு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விபரங்களை முழுமையாக வெளியிடுவதன் மூலம், மக்கள் தமது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா, இல்லாவிட்டால், அவர்கள் எப்போது உயிரிழந்தார்கள் என்பதையாவது அறிந்துகொள்ள முடியும் என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
நடைமுறைப்படுத்தப்படக்கூடிய பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்கு ஒரு பொறுப்பான குழுவை அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

4. நேபாளத்தில் இயேசு சபையினரின் 60 ஆண்டு பணி

மே,07,2012. நேபாள கல்வி முறையில் ஒரு புதிய புரட்சியைக் கொணர்ந்தவர்கள் இயேசு சபையினர் என தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு அரசுத்தலைவர் இராம் பரன் யாதவ்.
இயேசு சபையினர் நேபாளத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஆற்றி வரும் பணிகளைச் சிறப்பிக்கும் விதமாக இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசுத்தலைவர், நேபாள நாடு மத சகிப்புத் தன்மையையும் மத நல்லிணக்கத்தையும் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளதுடன், மக்கள் எவ்வித அச்சமுமின்றி தங்கள் மதத்தை பின்பற்ற உதவியுள்ளது என்றார்.
1951ம் ஆண்டு நேபாளத்தில் துவக்கப்பட்ட இயேசு சபையினரின் பணி எனும் சிறு செடி இன்று பெரிய மரமாக வளர்ந்துள்ளது என்று கூறிய நேபாள புனித சேவியர் பள்ளி முதல்வர் இயேசு சபை குரு அம்ரித் இராய், இயேசு சபையினரின் வியர்வை மட்டுமல்ல, இரத்தம் சிந்தலும் இவ்வளர்ச்சியில் இடம்பெற்றுள்ளது என்றார்.
நேபாளத்தில் கடந்த 60 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் இயேசு சபையினர் அந்நாட்டில், 4 பள்ளிகள், ஒரு சமூகப்பணி மையம், போதைக்கு அடிமையானோர் மறு வாழ்வு மையம், நோயாளிகள் மற்றும்  முதியோர் மையம், மனிதவள மேம்பாட்டு மையம், குழந்தைகள்நல மையம், புனித சேவியர் கல்லூரி ஆகியவைகளை நடத்தி வருகின்றனர்.

5. சாஹேல் பகுதி மக்களின் துயர்துடைக்க நடவடிக்கைகள் தேவை

மே,07,2012. நெருக்கடிகளைச் சந்தித்து வரும் மேற்கு ஆப்ரிக்காவின் சாஹேல் பகுதி மக்களின் வாழ்வு நிலைகள் மிக மோசமாக உள்ளதாகவும், உடனடி துயர்துடைப்பு நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் உலக சமுதாயத்தை நோக்கி அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. அதிகாரி ஒருவர்.
ஆப்ரிக்க மக்களின் நிலை குறித்து ஆராய அப்பகுதிக்குச் சென்றுள்ள WFP எனும் உலக உணவு திட்ட நிறுவனத்தின் அதிகாரி Ertharin Cousin செய்தியாளர்களிடம் பேசுகையில், சாஹேல் பகுதியின் இன்றைய நெருக்கடி நிலைகள் குறித்து உலக சமூகம் பராமுகமாய் இருக்க முடியாது என்று கூறினார்.
சாஹேல் பகுதியில் 1 கோடியே 50 இலட்சம் மக்கள் கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்கியள்ளனர்.
அண்மைக்காலங்களில் தற்போது மூன்றாம் முறையாக சாஹேல் பகுதி மக்கள், பட்டினிச்சாவுகளை எதிர்நோக்குவதாக தன் கவலையை வெளியிட்ட  Cousin, தற்போதைய பிரச்சனை, உள்நாட்டுப்போரால் மேலும் சிக்கலாகியுள்ளது என மேலும் கூறினார்.
மேற்கு ஆப்ரிக்க பகுதியில் உணவு நெருக்கடியை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவ 45 கோடி டாலர்கள் தேவைப்படுவதாக உலக உணவு திட்ட நிறுவனம் கணித்துள்ளது.

6. ஆசியக்கண்டத்தில் உள்ள பல பழமைக் கலாச்சார சின்னங்கள் அழியும் ஆபத்து

மே,07,2012. கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து வரும் பொருளாதாரமும், அதன் விளைவாக பரவிவரும் சுற்றுலாப் பயணங்களும் ஆசியாவின் பல பகுதிகளில் நிலவிடும் போர்ச்சூழலும் ஆசியக்கண்டத்தில் உள்ள பல பழமைக் கலாச்சார சின்னங்களை அழிக்கும் ஆபத்து பெருகியுள்ளது என்று உலகத் தொன்மைக் கலாச்சாரத்தைக் காக்கும் ஒரு நிறுவனம் (Global Heritage Fund - GHF) கூறியுள்ளது.
ஆசியாவின் பல நாடுகளில் உள்ள 10 தொன்மைக் கலாச்சாரத் தலங்களைத் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இந்நிறுவனம், இந்த ஆபத்து, உலகின் பல நாடுகளில் இருக்கும் பழமைக் கலாச்சார தலங்களிலும் உள்ளது என்று கூறியுள்ளது.
தாய்லாந்து நாட்டில் பழமைவாய்ந்த Siamese கலாச்சாரத்தின் தலைநகராகவும், ‘கிழக்கின் வெனிஸ்என்றும் புகழ்பெற்ற Ayutthaya என்ற பழம்பெரும் நகரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
சிந்து வெளிக் கலாச்சாரத்தின் நினைவாக இந்தியாவில் உள்ள Rakhigarhi என்ற இடமும் அழியும் நிலையில் உள்ளதென இவ்வறிக்கை கூறுகிறது.
இவையன்றி, சீனா, மியான்மார், பங்களாதேஷ், பிலிப்பின்ஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் உள்ள பல நினைவுச் சின்னங்கள் அழியும் நிலையில் உள்ளதென உலகத் தொன்மைக் கலாச்சாரத்தைக் காக்கும் நிறுவனத்தின்  இவ்வறிக்கை கூறுகிறது.

7. 40 ஆண்டுகளில் முதற்தடவையாக அணுமின் சக்தியில்லாத ஜப்பான்

மே,07,2012. 2011 மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமிப் பேரலையால் ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்த அணு உலைகள் உருகிப்போன சம்பவத்தை அடுத்து, ஜப்பான் மேற்கொண்டுவரும் பாதுகாப்பு ஏற்பாட்டின் ஓர் அங்கமாக அணுமின் சக்தியில்லாத ஜப்பானை உருவாக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஜப்பானின் டோமாரி அணுமின் நிலையத்தில் இயங்கிவந்த மூன்றாவது அணு உலை, பழுதுபார்க்கும் பணிக்காக தற்போது மூடப்பட்டுள்ளதையடுத்து ஜப்பான் கடந்த 40 ஆண்டுகளில் முதல்தடவையாக அணுமின் சக்தியில்லாத நாடாக இயங்குகின்றது.
கடந்த ஆண்டுவரை, ஜப்பான் அதன் மின்சக்தி தேவையில் 30 விழுக்காட்டை அணுமின் மூலமே பெற்றுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...