1. உரோம் தூய இருதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை
2. கிறிஸ்துவின் தலைமைத்துவம் அவரின் பணிவானப் பணிகளில் வெளிப்பட்டது - திருப்பீடச்
செயலர்
3. Suu Kyi பாராளுமன்றத்தில் கலந்து கொண்டது குறித்து மியான்மார் ஆயர்கள்
பாராட்டு
4. BAE நிறுவனத்தின் அறநெறிக் கூறுகள் குறித்து Pax Christi கேள்வி
5. Mayfeeliings குறும்படங்கள்
6. உலக பத்திரிகை சுதந்திர நாள் மே 03
7. பிறக்கும் பத்துக் குழந்தைகளில் ஒரு குழந்தை நிறைபேறு காலத்திற்கு முன்னதாகப்
பிறக்கிறது - ஐ.நா.
------------------------------ ------------------------------ ------------------------------ -
1. உரோம் தூய இருதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை
மே,03,2012. இறைவனைத்
தேடும் தாகம் ஒவ்வொரு மனித உள்ளத்திலும் இருப்பதே அறிவியல் ஆய்வுகள் அனைத்தின்
அடிப்படையாக அமைகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோமையில் உள்ள தூய இருதய
கத்தோலிக்கப் பல்கலைக்கழக மருத்துவத் துறையின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்வில்
ஆற்றிய உரையில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
"எங்களை
உமக்காக உருவாக்கினீர் இறைவா, எனவே உம்மில் நாங்கள் ஒய்வு
கொள்ளும்வரை எங்கள் இதயம் ஓய்வதில்லை" என்று புனித அகஸ்தின் கூறிய
வார்த்தைகளை மேற்கோளாகச் சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, அறிவியலில்
மனிதர்கள் மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளும் உண்மையின் ஊற்றாம் இறைவனை அடையும் வரை
ஓய்வதில்லை என்று கூறினார்.
தற்போதைய உலகில் அற்புதமான பல
அறிவியல் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், அவற்றில் திருப்தி அடையாமல், மனித மனம்
இன்னும் ஆழ்ந்த தேடலில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிகிறது என்பதை எடுத்துரைத்தார்
திருத்தந்தை.
விசுவாசமும் அறிவியலும்
இணைந்து செல்ல முடியாது என்பது போன்ற ஓர் எண்ணத்தை இன்றைய தொழில் நுட்ப உலகம்
உருவாக்கினாலும், இவை இரண்டும் இணைந்து செல்லும்போது இன்னும் பல ஆழமான
உண்மைகளை உணர முடியும் என்பதற்கு இந்தப் பல்கலைக்கழகம் ஒரு சான்று என்று
திருத்தந்தை பாராட்டிப் பேசினார்.
பிறரன்பை வெறும் வார்த்தைகளாகக்
கூறாமல், அதனை
நடைமுறைப்படுத்தும் முயற்சியில் கத்தோலிக்க மருத்துவப் பணி எப்போதும் ஈடுபட்டுள்ளது
என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, கருவிலிருந்து கல்லறை வரை
உயிர்காக்கும் உத்தமப் பணியில் ஈடுபடுவதே கிறிஸ்தவ மருத்துவப் பணியாளர்களின்
அழைப்பு என்று வலியுறுத்தினார்.
தன் உரையின் இறுதியில் அந்த
விழாக்கூட்டத்தில் பங்கேற்ற நோயாளிகளைச் சிறப்பாக நினைவுகூர்ந்து, அவர்களுக்குத்
தன் தனிப்பட்ட செபங்களையும் ஆசீரையும் வழங்குவதாகக் கூறினார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட்.
2. கிறிஸ்துவின் தலைமைத்துவம் அவரின் பணிவானப் பணிகளில் வெளிப்பட்டது
- திருப்பீடச் செயலர்
மே,03,2012. கிறிஸ்துவின்
தலைமைத்துவம் அவர் புரிந்த பணிவானப் பணிகளில் வெளிப்பட்டது என்று திருப்பீடச்
செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்த்தோனே கூறினார்.
புத்துயிர் தரும் ஆவி என்ற
ஓர் இத்தாலியக் கழகத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு திருப்பலி
ஆற்றிய கர்தினால் பெர்த்தோனே, கிறிஸ்துவே நமது வாழ்வின் மையம் என்பதை வெளிப்படுத்த
தயங்கவேண்டாம் என்று தன் மறையுரையில் கூறினார்.
விசுவாசிகள் குடும்பத்திற்கு
ஆற்றும் ஒவ்வொரு பணியிலும் முழு மூச்சுடன் ஈடுபடும்போது, திருஅவையும் இவ்வுலகமும்
புத்துயிர் பெறுவது உறுதி என்று கர்தினால் பெர்த்தோனே எடுத்துரைத்தார்.
மே மாதம் 30 முதல் ஜூன் மாதம் 3ம் தேதி வரை மிலான் நகரில்
நடைபெற உள்ள ஏழாவது அனைத்துலக குடும்பங்கள் மாநாட்டைக் குறித்துப் பேசிய கர்தினால்
பெர்த்தோனே, அந்நிகழ்வுக்கு
ஒரு முன்னேற்பாடாக குடும்பங்களில் ஆவியானவரின் புத்துணர்ச்சியை வளர்க்கவேண்டும்
என்று கேட்டுக் கொண்டார்.
3. Suu Kyi பாராளுமன்றத்தில் கலந்து கொண்டது குறித்து மியான்மார் ஆயர்கள்
பாராட்டு
மே,03,2012. எதிர்கட்சித்
தலைவர் Aung San Suu Kyi இப்புதனன்று
உறுதிமொழி எடுத்து மியான்மார் பாராளுமன்றத்தில் கலந்து கொண்டது நாட்டுக்கு
நல்லதொரு எதிர்காலம் உருவாவதன் ஓர் அடையாளம் என்று மியான்மார் ஆயர்கள் கூறியுள்ளனர்.
மியான்மார் பாராளுமன்றத்தில்
சொல்லப்படும் உறுதிமொழியில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி போராடி வந்த Suu Kyi,
தன் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கிவைத்து, பாராளுமன்றத்தில்
இணைந்தது நாட்டுக்கு நல்லது என்று மியான்மார் ஆயர் பேரவையின் நீதி அமைதி
பணிக்குழுவின் தலைவர் ஆயர் Raymond Saw Po Ray,
Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
நாட்டுக்குப் புதியதோர் எதிர்காலம்
என்ற தொனியில் பேசுவதற்குமுன், தற்போது தங்கள் நாடு எதிர்கொண்டுள்ள
பல பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும் என்றும் ஆயர் Po
Ray சுட்டிக்காட்டினார்.
மியான்மாரில் கத்தோலிக்கத்
திருஅவை சிறுபான்மை நிலையில் இருந்தாலும், நாட்டின் அனைத்து முன்னேற்ற
முயற்சிகளிலும் முழுமூச்சுடன் இணைந்து உழைக்கும் என்ற உறுதியையும் ஆயர் Po Ray
வெளிப்படுத்தினார்.
4. BAE நிறுவனத்தின் அறநெறிக் கூறுகள் குறித்து Pax
Christi கேள்வி
மே,03,2012. போர்க்
கருவிகளை உலகின் பல நாடுகளுக்கு வழங்கும் BAE எனப்படும் பிரித்தானிய
விண்வெளி நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டம் நடைபெறும் வேளையில், இந்நிறுவனத்தின்
செயல்பாடுகளைக் குறித்து உலக அமைதிக்காக உழைத்து வரும் Pax Christiயும்
இன்னும் மற்ற நிறுவனங்களும் கேள்விகள் எழுப்பியுள்ளன.
இந்தியா, ஆஸ்திரேலியா, சவூதி
அரேபியா, அமெரிக்க
ஐக்கிய நாடு உட்பட பல நாடுகளுக்குப் போர்கருவிகளை வழங்கி வரும் BAE நிறுவனம், 1915 கோடியே
40 இலட்சம்
பவுண்டுகள் மதிப்புள்ள போர்கருவிகளை 2011ம் ஆண்டு விற்பனை
செய்ததாகவும்,
158 கோடி பவுண்டுகள் இலாபம் கண்டதாகவும் இப்புதனன்று தன்
ஆண்டறிக்கையை வெளியிட்டது.
இந்நிறுவனத்தின் ஆண்டுக்
கூட்டத்தில் பங்கேற்ற Pax Christiயின் பொதுச்செயலர் Pat Gaffney, சவுதி அரேபியாவில் நடைபெற்ற போராட்டங்களை அடக்கப்
பயன்படுத்தப்பட்ட பல கருவிகளை BAE நிறுவனம் வழங்கியது குறித்து
கேள்விகளை எழுப்பியதாகக் கூறினார்.
மனித உரிமைகள் மதிக்கப்படாத
நாடுகளுடன் BAE
கொண்டுள்ள தொடர்புகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற
கோரிக்கையை இக்கூட்டத்தில் தான் வைத்துள்ளதாகவும் Pax
Christiயின் பொதுச்செயலர் கூறினார்.
5. Mayfeeliings குறும்படங்கள்
மே,03,2012. தொடர்புத்துறை
நுட்பத்தில் உலகம் பல வழிகளிலும் வளர்ந்துள்ள போதிலும், நம்மிடையே தனிமையில் வாடும்
மக்களின் எண்ணிக்கையும் ஏன் வளர்ந்து வருகிறது என்ற கேள்வியை எழுப்பும் ஒரு
குறும்படம் அண்மையில் வெளியானது.
மரியன்னையின் மாதம் என்று
அழைக்கப்படும் மேமாதத்தில் 2008ம் ஆண்டு முதல் ஒவ்வொரு
மேமாதமும் குறும்படங்களை தயாரித்து வரும் இளம் இஸ்பானிய திரைப்படத் தயாரிப்பாளர் Santiago Requejo தனது ஐந்தாவது குறும்படத்தை மேமாதம்
முதல் தேதியன்று வெளியிட்டார்
நான் ஏன் செபமாலை சொல்கிறேன், அருளாளர்
இரண்டாம் ஜான்பால் மீது இளையோர் கொண்டுள்ள மதிப்பு ஆகிய எண்ணங்களை மையப்படுத்தி Requejo
கடந்த ஆண்டுகளில் குறும்படங்களை வெளியிட்டார். இவ்வாண்டு அவர் வெளியிட்டுள்ள
குறும்படத்தின் மையப் பொருள் செபம்.
Mayfeeliings என்ற
பெயரில் அவர் வெளியிடும் இக்குறும்படங்களைக் காணவும், அவர் உருவாக்கியிருக்கும் செப
இணையதளத்தில் சேரவும் mayfeelings.com என்ற வலைதளத்தை
அணுகலாம் என்று ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனம்
கூறியுள்ளது.
6. உலக பத்திரிகை சுதந்திர நாள் மே 03
மே,03,2012. வடகொரியா, சீனா ஆகிய
நாடுகள் உலகிலேயே பத்திரிகைச் சுதந்திரம் மிகக் குறைவாக உள்ள நாடுகள் என்று
ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
மே மாதம் 3, இவ்வியாழனன்று
உலக பத்திரிகை சுதந்திர நாள் கடைபிடிக்கப் படுவதையொட்டி, உலகின் 197 நாடுகளில்
மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுகள் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளன.
பத்திரிகைச் சுதந்திரம்
அதிகம் குறைந்துள்ள 12 நாடுகளில் வடகொரியா, சீனா, மியான்மார், வியட்நாம்
ஆகிய நாடுகள் அடங்கியுள்ளன.
இந்தக் கருத்துக்
கணிப்பின்படி உலகிலேயே ஆசிய நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் பெருமளவு
குறைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. லாவோஸ், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, தாய்லாந்து
ஆகிய நாடுகளிலும் இச்சுதந்திரம் அதிகம் காணப்படவில்லை என்று இவ்வறிக்கை கூறுகிறது.
உலகில் வாழும் மக்கள்
தொகையில் ஆறில் ஒருவரே, அதாவது, 14.5 விழுக்காட்டு
மக்களே பத்திரிகைச் சுதந்திரம் நல்ல நிலையில் உள்ள நாடுகளில் வாழ்கின்றனர் என்றும்
இவ்வாய்வு அறிக்கை கூறுகிறது.
7. பிறக்கும் பத்துக் குழந்தைகளில் ஒரு குழந்தை நிறைபேறு
காலத்திற்கு முன்னதாகப் பிறக்கிறது - ஐ.நா.
மே,03,2012. பிறக்கும்
பத்துக் குழந்தைகளில் ஒரு குழந்தை நிறைபேறு காலத்திற்கு முன்னதாகப் பிறக்கிறது
என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஐ.நா.அமைப்பின் நாற்பது பிரிவுகளைச்
சேர்ந்த 100க்கும்
மேற்பட்ட அறிஞர்கள் WHO என்ற உலக நலவாழ்வு
நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் இப்புதனன்று வெளியிடப்பட்டன.
ஒவ்வோர் ஆண்டும் உலகில் 1 கோடியே 50 இலட்சம்
குழந்தைகள் பேறுகால நிறைவுக்கு முன்னரே பிறக்கின்றன என்று கூறும் ஐ.நா.அறிக்கையில், இக்குழந்தைகளைக்
காக்கும் வழிகள் இன்னும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற அழைப்பும்
விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிறக்கும்
குழந்தைகளில் 10
இலட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
நிறைபேறு காலத்திற்கு முன்
பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் ஆப்ரிக்காவின் சகாராப் பகுதியில்
பிறக்கின்றன என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
No comments:
Post a Comment