Wednesday, 2 May 2012

CAtholic News in Tamil - 02/05/12

 
1. அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் சட்டரீதியான அமைப்பு முறையைப் புதுப்பிக்கும் ஆணை

2. இளையோரின் விசுவாசமும்கிறிஸ்தவ வாழ்வும் ஒரு மாற்று சாட்சியாக விளங்கும் - இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர்

3. மனித வர்த்தகத்தை ஒழிக்க, திருப்பீட நீதி, அமைதி அவை உரோம் நகரில் நடத்தவிருக்கும் கருத்தரங்கு

4. இந்திய கத்தோலிக்க நலவாழ்வுக் கழகம் (CHAI) துவக்கியிருக்கும் நலக் காப்பீட்டுத் திட்டம்

5. இஸ்லாமிய வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தும் சக்தியை அரசு இழந்துவிட்டது - நைஜீரிய ஆயர்கள் கண்டனம்

6. மரியன்னையின் மாதத்தில் சீனாவில் உள்ள மரியன்னை திருத்தலங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது

7. கொடுமை அனுபவிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள்: கொத்தடிமையாக 50 ஆயிரம் பேர்

------------------------------------------------------------------------------------------------------

1. அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் சட்டரீதியான அமைப்பு முறையைப் புதுப்பிக்கும் ஆணை

மே02,2012. இன்றைய நவீன உலகின் சூழலில் அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு வழங்கப்படும் ஆதரவை மேலும் சிறந்ததாக அமைக்கும் நோக்கத்தில் அந்நிறுவனத்தின் சட்டரீதியான அமைப்புமுறையைப் புதுப்பிக்கும் ஆணையை இப்புதனன்று வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் கடந்த 61 ஆண்டுகளாகச் செய்து வரும் மிகவும் தகுதிமிக்கப் பணிகள், குறிப்பாக அண்மை ஆண்டுகளில் அது அடைந்துள்ள வளர்ச்சியை வைத்து அந்நிறுவனத்துக்கு மேலும் ஆதரவு வழங்கும் நோக்கத்தில் இவ்வாணை வெளியிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாணையை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே அந்நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவையில் பிறரன்பு நடவடிக்கையின் சலுகை பெற்ற கருவியாக இருந்து வருகிறது அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம். உலகில் சண்டைகள் இடம் பெறும் இடங்களில் திருஅவையின் தோழமை உணர்வை வெளிப்படுத்தவும், உலகில் அவசரகால உதவிகளைத் செய்வதற்குமென இத்தகைய நிறுவனத்தைத் தொடங்க வேண்டுமென்று, இரண்டாம் உலகப் போரின் கொடூரங்களுக்குப் பின்னர் திருத்தந்தை 12ம் பத்திநாதர் விரும்பினார். அதன் பயனாக இதன் 13 நிறுவுனர்களைக் கொண்டு 1951ம் ஆண்டில் இதன் முதல் பொதுக் கூட்டம் நடந்தது. இந்நிறுவனம், 1957ம் ஆண்டில் Caritas Internationalis என்ற பெயருடன் செயல்படத் தொடங்கியது. 2004ம் ஆண்டில் திருஅவை சட்டப்படி அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றது.


2. இளையோரின் விசுவாசமும்கிறிஸ்தவ வாழ்வும் ஒரு மாற்று சாட்சியாக விளங்கும் - இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர்

மே,02,2012. கடவுளும், மதமும் தேவையில்லை என்ற நிலை வளர்ந்துவரும் உலகில் இளையோராகிய உங்கள் விசுவாசமும்கிறிஸ்தவ வாழ்வும் ஒரு மாற்று சாட்சியாக விளங்கும் என்று ஐரோப்பிய ஆயர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Angelo Bagnasco கூறினார்.
இச்செவ்வாயன்று உரோம் நகரில் நடைபெற்ற ஐரோப்பியப் பல்கலைக் கழக மாணவ மாணவியரது கருத்தரங்கின் ஆரம்பத் திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் Bagnasco இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்கத் திருஅவையின் தலைவரான திருத்தூதர் பேதுரு மறைசாட்சியாக உயிரைத் தந்த உரோம் நகரில் நீங்கள் இக்கருத்தரங்கிற்காகக் கூடி வந்திருப்பது உங்கள் விசுவாசத்தைப் புதுப்பிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் கர்தினால் Bagnasco மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருக்கும் பல்கலைக் கழக மாணவர்கள் ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்துவரும் வேளையில், உங்கள் கண்ணோட்டத்தையும், கலாச்சார சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பதுபோல், உங்கள் விசுவாசம், நம்பிக்கை ஆகியவற்றையும் வளர்த்துக்கொள்ள இது நல்லதொரு வாய்ப்பு என்று இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் தன மறையுரையில் சுட்டிக்காட்டினார்.


3. மனித வர்த்தகத்தை ஒழிக்க, திருப்பீட நீதி, அமைதி அவை உரோம் நகரில் நடத்தவிருக்கும் கருத்தரங்கு

மே,02,2012. நாடுகளிடையே மனித வர்த்தகத்தைத் தடுக்கவும், மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோரை மீட்கவும் திருஅவையும், அரசுகளும், மனிதநல அமைப்புக்களும் உறுதி கொண்டுள்ளன என்று இங்கிலாந்து ஆயர் Patrick Lynch கூறினார்.
உலகெங்கும் மனித வர்த்தகத்தை ஒழிக்கும் ஒரு முயற்சியாக, திருப்பீட நீதி, அமைதி அவை வருகிற செவ்வாய், மே மாதம் 8ம் தேதி உரோம் நகரில் நடத்தவிருக்கும் கருத்தரங்கைக் குறித்து பேசிய ஆயர் Lynch இவ்வாறு கூறினார்.
இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள கர்தினால் Peter Turkson அவர்களுக்குத் தன் நன்றியைத் தெரிவித்த இங்கிலாந்து வேல்ஸ் ஆயர் பேரவையின் புலம் பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Lynch, இக்கருத்தரங்கு திருஅவையிலும் உலகிலும் இப்பிரச்சனையைப்  பற்றிய பல தெளிவுகளை உருவாக்கும் என்று கூறினார்.
மனித வர்த்தகத்திற்கு உள்ளாக்கப்படும் பல அப்பாவி மக்கள் வன்முறைகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் பலியாகின்றனர் என்று இக்கருத்தரங்கில் பேசவிருக்கும் காவல்துறை உயர் அதிகாரி Kevin Hyland கூறினார்.


4. இந்திய கத்தோலிக்க நலவாழ்வுக் கழகம் (CHAI) துவக்கியிருக்கும் நலக் காப்பீட்டுத் திட்டம்

மே,02,2012. மருத்துவ வசதிகளுக்கு ஆகும் செலவு அதிகரித்து வரும் இந்நாட்களில் இந்திய கத்தோலிக்க நலவாழ்வுக் கழகம் துவக்கியிருக்கும் நலக் காப்பீட்டுத் திட்டம் மக்களுக்குப் பெரும் பயனை விளைவிக்கும் என்று டில்லிப் பேராயர் Vincent Concessao கூறினார்.
CHAI என்று அழைக்கப்படும் இந்திய கத்தோலிக்க நலவாழ்வுக் கழகம், இந்தியத் திருஅவையால் நடத்தப்படும் அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நலக் காப்பீட்டுத் திட்டத்தை இச்செவ்வாயன்று அறிமுகப்படுத்திய விழாவில் தலைமையேற்று பேசிய டில்லிப் பேராயர் Concessao, இவ்வாறு கூறினார்.
நலக் காப்பீட்டுத் திட்டத்துடன் சூரிய ஒளியால் சக்தி பெறும் வழிகளையும் CHAI அமைப்பு அறிமுகப்படுத்தியது. 'நலவாழ்வும் பசுமையும்' என்ற கருத்தில் இவ்விரு திட்டங்களும் இச்செவ்வாயன்று CHAI தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
1943ம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அருள்சகோதரி Mary Glowrey என்ற மருத்துவர் உருவாக்கிய CHAI அமைப்பு, அரசு சாரா அமைப்புக்களில் உலகிலேயே மிகப் பெரியதோர் அமைப்பாக விளங்குகிறது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. இஸ்லாமிய வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தும் சக்தியை அரசு இழந்துவிட்டது - நைஜீரிய ஆயர்கள் கண்டனம்

மே,02,2012. நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் மேற்கொள்ளும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தவறிவிட்டது என்று நைஜீரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஏப்ரல் 29 கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் 21 பேர் உயிரிழந்தனர், மற்றும் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்களைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Ignatius Kaigamaம், Abuja பேராயர் John Onaiyekanம் இந்த வன்முறையைத் தடுக்க அரசு சக்தியற்று இருப்பதைக் கண்டனம் செய்துள்ளனர்.
நைஜீரியாவில் உள்ள அரசு பிளவுபட்டு இருப்பதால், இஸ்லாமிய வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தும் சக்தியை இழந்துள்ளது என்று பேராயர் Onaiyekan சுட்டிக் காட்டினார்.
கடந்த ஞாயிறன்று பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் பல இளையோர் இறந்துள்ளனர் என்பதைக் குறித்துப் பேசிய Jos பேராயர் Kaigama, நாட்டின் வருங்கால சந்ததியை அழிக்க நினைக்கும் வன்முறையாளர்களின் போக்கு முற்றிலும் அறிவற்ற ஒரு செயல் என்று கூறினார்.
நைஜீரியாவில் பல வன்முறைத் தாக்குதல்களுக்குக் காரணாமாய் இருக்கும் Boko Haram என்ற ஓர் அடிப்படைவாதக் குழுவினர் கிறிஸ்தவர்களை நைஜீரியாவில் இருந்து முற்றிலும் வேரறுக்கப் போவதாக ஏப்ரல் மாதத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த அடிப்படைவாதக் குழுவினரின் தாக்குதல்களில் நடப்பு ஆண்டின் நான்கு மாதங்களில் 450 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று  ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.


6. மரியன்னையின் மாதத்தில் சீனாவில் உள்ள மரியன்னை திருத்தலங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது

மே,02,2012. மே மாதம் 9ம் தேதி, வருகிற புதனன்று Lang Shan என்ற மரியன்னைத் திருத்தலத்தின் திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி, அத்திருத்தலத்தை நோக்கி ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு செல்வதாக Hai Men மறைமாவட்டத்தின் ஆயர் Joseph Shen Bin, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மரியன்னையின் மாதம் என்று அழைக்கப்படும் மே மாதத்தில் சீனாவில் உள்ள மரியன்னை திருத்தலங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது என்று Fides செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மேமாதம் 24ம் தேதியன்று சீனத் திருஅவைக்காக சிறப்பான செபங்களை அகில உலகத் திருஅவை எழுப்பவேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்பு விடுத்துள்ளத்தான் எதிரொலியாக மக்கள் மரியன்னைத் திருத்தலங்களை நாடிச் செல்கின்றனர் என்றும் Fides செய்தி நிறுவனம் மேலும் கூறியுள்ளது.


7. கொடுமை அனுபவிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள்: கொத்தடிமையாக 50 ஆயிரம் பேர்

மே,02,2012. தமிழகத்தைச் சேர்ந்த 50 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்கள், வடஇந்திய மாநிலங்களில் கொத்தடிமையாக இருப்பதாக, மதுரையில் நடந்த குழந்தை உழைப்பு எதிர்ப்பு தின மாநில கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
வடஇந்திய மாநிலங்களில் முறுக்கு, மிட்டாய், அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, தமிழகக் குழந்தைகளை அனுப்ப நிறைய தரகர்கள் உள்ளனர். 7 முதல் 15 வயதுக்குட்பட்டக் குழந்தைகள், தொழிலுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
குழந்தை ஒன்றுக்கு, ஆண்டுக்கு ரூ.25,000 கூலி நிர்ணயிக்கப்பட்டு, முன் பணமாக, ரூ.10 ஆயிரம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, குழந்தையை அழைத்துச்செல்லும் தரகர்கள், அதன்பின் பேசியபடி பணம் தருவதில்லை என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
தென்மாவட்டத்திலிருந்து, 50,000 குழந்தைத் தொழிலாளர்கள் வடஇந்திய மாநிலங்களில் கொத்தடிமையாக உள்ளனர் என்றும், அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு ஆர்வலர்கள் கூறினர்.
சட்டத்தில் குழந்தைகளுக்கான வயதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்றும், கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக உள்ள, 1986ன் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என்றும் குழந்தை உழைப்பு எதிர்ப்பு விழிப்புணர்வை வளர்க்கும் தென்பகுதி அமைப்பாளர் வனராஜன் கூறினார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...