Sunday, 22 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 21ஜனவரி 2012

1. திருத்தந்தை, ரோமன் ரோட்டா உறுப்பினர்கள் சந்திப்பு

2. வத்திக்கான் உயர் அதிகாரி - கிறிஸ்தவ சபைகள் மத்தியில் ஒன்றிப்பு இயலக்கூடியதே என்ற நம்பிக்கையை இயேசு தருகிறார்

3. ஜம்மு-காஷ்மீர் இசுலாமிய நீதிமன்ற ஆணைக்கு இந்தியத் தலத்திருஅவைத் தலைவர்கள் எதிர்ப்பு

4. திருஅவை, ஏழைகளின் குரல்களுக்குப் பதில் சொல்கின்றது - காரித்தாஸ் தலைவர்

5. சூடானில் போரினால் பாதிக்கப்பட்ட இளையோருக்கு அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகள் உதவி

6. முபாரக் உட்பட யாருக்கும் மரணதண்டனை நிறைவேற்றவது அநீதியானது - கத்தோலிக்கத் திருஅவை

7. ஆசியாவில் ஏழ்மை ஒழிப்புத் திட்ட நடவடிக்கைகளுக்கு ஐ.நா.வலியுறுத்தல்

8. சர்வதேச அளவில் குற்றவாளிகள் 50 விழுக்காடு அதிகரிப்பு

9. பாரம்பரிய நோய்களைத் தடுக்க உதவும் மரபணு ஆராய்ச்சி

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, ரோமன் ரோட்டா உறுப்பினர்கள் சந்திப்பு

சன.21,2012. திருஅவை சட்டத்திற்கு கொடுக்கப்படும் விளக்கம், விசுவாசத்தின் உண்மைகளில் தனது சரியான விளக்கங்களைக் கண்டு கொள்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ரோமன் ரோட்டா என்ற வத்திக்கானின் உச்சநீதிமன்றம் புதிய ஆண்டைத் தொடங்குவதையொட்டி, அந்நீதிமன்றத்தின் 150 உறுப்பினர்களை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திருஅவையின் ஒவ்வொரு சட்டமும், இக்காலத் திருஅவையின் மறைப்பணியோடு எவ்விதம் தொடர்பு கொண்டுள்ளது என்பதையும் எடுத்துச் சொன்னார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் 50ம் ஆண்டையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள விசுவாச ஆண்டு பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, விசுவாசத்திற்கு அளிக்கப்படும் விளக்கம் பற்றியும் கூறினார்.
இரக்கம், சமத்துவம், உண்மையான நீதி நிர்வாகம் ஆகிய மூன்று பண்புகளும், திருஅவை சட்டத்திற்கான விளக்கம் மற்றும் அதனை அமல்படுத்துவதில் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்றும் திருத்தந்தை அவர்களிடம் எடுத்துரைத்தார்.
உண்மையான சட்டம், நீதியினின்று பிரிக்கப்பட முடியாதது என்றும் கூறிய திருத்தந்தை, சட்டத்திற்கு கொடுக்கப்படும் விளக்கம், உண்மை மீதான அன்பு, தேடல் மற்றும் சேவைக்கு  உட்பட்டது எனவும் தெரிவித்தார்.
ரோமன் ரோட்டா உறுப்பினர்கள், திருஅவையோடு சிந்தித்துச் செயல்படுமாறும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
மேலும், ரோமன் ரோட்டாவின் புதிய ஆண்டுத் தொடக்கத்தையொட்டி இச்சனிக்கிழமை காலை திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருஅவையின் ஒரு நீதிபதி, சட்டத்துக்கு விளக்கம் அளிக்கும் போது, உண்மையின் ஒளியில் விசுவாசிகளின் வாழ்வை ஒளிரச் செய்வதாய் இருக்க வேண்டும் என்றார். 

2. வத்திக்கான் உயர் அதிகாரி - கிறிஸ்தவ சபைகள் மத்தியில் ஒன்றிப்பு இயலக்கூடியதே என்ற நம்பிக்கையை இயேசு தருகிறார்

சன.21,2012. கிறிஸ்தவ சபைகள் மத்தியில் நிலவும் வரலாற்றுப் பிரிவினைகளை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை இயேசு கிறிஸ்து அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் அளிக்கிறார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இம்மாதம் 18 ம் தேதி தொடங்கியுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் குறித்துப் பேசிய, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைச் செயலர் ஆயர் Brian Farrell, கிறிஸ்தவ சபைகள் மத்தியில் ஒன்றிப்புப் பற்றிப் பேசும் போது, முதலில் அது குறித்த இறையியல் நம்பிக்கை குறித்துப் பேச வேண்டும் என்றார்.
தமது திருத்தூதர்கள் அனைவரும் ஒன்றாய் இருக்குமாறு இறுதி இரவு உணவின் போது இயேசு செய்த செபத்தில் நாம் பங்கு கொண்டால், திருஅவை தனது பிரிவினைப் பாவத்தால் தனது பணியை நிறைவேற்ற இயலாமல் இருக்கின்றது என்பதை நாம் ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பை, மனித முயற்சியினால் கட்டி எழுப்ப முடியாது என்றுரைத்த ஆயர் Farrell, இவ்வொன்றிப்பு, ஒரு கொடையாகவும், கிறிஸ்துவின் வெற்றிக்குச் சாட்சியாகவும் இருக்கின்றது என்றும் கூறினார்.
புனித பவுல் மனம் மாறிய விழாவான சனவரி 25ம் தேதியன்று இவ்வொன்றிப்புச் செப வாரம் நிறைவு பெறும். இச்செப வாரத்தை, கத்தோலிக்கம் உட்பட 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகளும் கிறிஸ்தவ சமூகங்களும் சிறப்பித்து வருகின்றன.

3. ஜம்மு-காஷ்மீர் இசுலாமிய நீதிமன்ற ஆணைக்கு இந்தியத் தலத்திருஅவைத் தலைவர்கள் எதிர்ப்பு

சன.21,2012. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள இசுலாமிய நீதிமன்றம், ஒரு கத்தோலிக்கக் குரு உட்பட ஐந்து கிறிஸ்தவர்கள் அம்மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டுமென்று கூறியிருப்பதைக் குறை கூறியுள்ளனர் தலத்திருஅவைத் தலைவர்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 1963ம் ஆண்டிலிருந்து மறைப்பணியாற்றி வரும் மில்ஹில் சபையின் அருள்தந்தை Jim Borst உட்பட ஐந்து கிறிஸ்தவர்கள் வெளியேற வேண்டுமென இவ்வியாழனன்று ஆணை பிறப்பித்துள்ளது ஷாரியா இசுலாமிய நீதிமன்றம்.
இது குறித்துப் பேசிய இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப், ஒரு மதத்தின் சொந்தச் சட்டங்கள், மற்ற மதத்தவருக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று தெரிவித்தார்.
இந்தியாவில் ஷாரியா நீதிமன்றங்கள் சட்டரீதியான நிலைகளைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரின் இந்தியப் பகுதியில் வாழும் 40 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களில் கிறிஸ்தவர்கள் ஐந்தாயிரத்துக்கும் குறைவே.

4. திருஅவை, ஏழைகளின் குரல்களுக்குப் பதில் சொல்கின்றது - காரித்தாஸ் தலைவர்

சன.21,2012. பொதுவாக மக்கள், குறிப்பாக ஏழைகள் பாதிக்கப்படும் சூழல்களில் மட்டுமே கத்தோலிக்கத் திருஅவை ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது என்று அனைத்துலக கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்புத் தலைவர் Michel Roy  கூறினார்.
இந்தியக் காரித்தாஸ் அமைப்பின் 50ம் ஆண்டுக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய Michel Roy, மக்கள் மத்தியில் ஒருமைப்பாட்டை உருவாக்குவதே காரித்தாசின் பணி என்றும் கூறினார்.
திருஅவை, ஏழைகளின் குரல்களுக்குப் பதில் சொல்கின்றதே தவிர, எந்த விதமான புரட்சிகளையும் உருவாக்குவதில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், சமூகநல நிறுவனங்கள், நாட்டிற்குப் பாதகம் வரும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று இந்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேட்டுக் கொண்டதற்குப் பதில் அளிக்கும் விதமாகவும், அனைத்துலக கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்புத் தலைவரின் உரை இடம் பெற்றதாக ஊடகச் செய்தி ஒன்று கூறியது.

5. சூடானில் போரினால் பாதிக்கப்பட்ட இளையோருக்கு அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகள் உதவி

சன.21,2012. ஆப்ரிக்க நாடான தென் சூடானில் போரினால் பாதிக்கப்பட்ட Jonglei மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் பணியில் இளையோரை ஈடுபடுத்தி வருகின்றது சூடான் கிறிஸ்தவ சபைகள் அமைப்பு.
Jonglei மாநிலத்தின் இளையோருக்கு அரசியல் ரீதியானத் தலைமைத்துவம் இல்லை எனவும், இம்மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே இடம் பெறும் தொடர் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்துள்ளனர் எனவும் அவ்வமைப்பு கூறியது.
அப்பகுதியில் இளையோருக்கும், அரசியல் தலைவர்களுக்கும், பூர்வீக இனங்களின் தலைவர்களுக்கும் இடையே தொடர்பு கிடையாது என்றும் அவ்வமைப்பு கூறியது.
கடந்த ஆண்டு ஜூலையில் புதிய நாடாக உருவெடுத்த தென் சூடானில் அமைதியும் ஒற்றுமையும் தேவைப்படுகின்றது, ஆனால், Jonglei மாநிலத்தில் தொடங்கியுள்ள வன்முறை, அப்பகுதியில் பழிவாங்கும் தாக்குதல்களுக்கு இட்டுச் சென்றுள்ளன என்றும் அவ்வமைப்பு தெரிவித்தது.  
இதற்கிடையே, தென் சூடானில் தொடர்ச்சியாக நடந்து வரும் மோதல்களில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடையே சுமார் 20 வருடமாக இடம் பெற்ற சண்டை, 2005ம் ஆண்டில்தான் முடிவுற்றது.

6. முபாரக் உட்பட யாருக்கும் மரணதண்டனை நிறைவேற்றவது அநீதியானது - கத்தோலிக்கத் திருஅவை

சன.21,2012. ஒருவர் பயங்கரமானக் குற்றங்களைச் செய்தவராய் இருந்தால்கூட, ஒருவரது உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று எகிப்தியக் கத்தோலிக்கத் திருஅவை உட்பட அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் கூறியுள்ளன.
எகிப்திய முன்னாள் அரசுத்தலைவர் ஹோஸ்னி முபாரக்கின் வழக்கு இவ்வாரத்தில் மீண்டும் விவாதிக்கப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகள் எழும்பியுள்ளதையடுத்து இவ்வாறு கூறினார் எகிப்தியக் கத்தோலிக்கத் திருஅவைப் பேச்சாளர் அருட்பணி Rafik Greiche.
மரணதண்டனை வழங்குவது, முஸ்லீம்களின் எண்ணத்தில் சாதாரணமான ஒன்றாக இருப்பது வருத்தமான விடயம் என்றும், கடும் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதை எகிப்திய சட்டம் அனுமதிக்கின்றது என்றும் அக்குரு கூறினார்.
எகிப்தில், 2011ம் ஆண்டு சனவரியில் தொடங்கிய எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசு எடுத்த நடவடிக்கையில் 850 பேர் இறந்தனர். இதற்குக் காரணமான முபாரக்கிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சில நாட்களாக, அவர் விசாரிக்கப்படும் நீதிமன்றத்துக்கு முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

7. ஆசியாவில் ஏழ்மை ஒழிப்புத் திட்ட நடவடிக்கைகளுக்கு ஐ.நா.வலியுறுத்தல்

சன.21,2012. உலகில் ஏறக்குறைய பாதிப்பேருக்கு நவீன மின்சக்தி வசதிகள் குறைவுபடுகின்றன எனவும், உலக மக்கள் தொகையில் 20 விழுக்காட்டுக்கு அதிகமானோர், அதாவது 140 கோடிப் பேருக்கு மின்சார வசதி இல்லை எனவும் ஐ.நா.கூறியது.
உலக மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர், அதாவது 270 கோடிப் பேர் சமைப்பதற்கும் வீட்டை வெப்பமாக்குவதற்கும் மரத்தையும் கரியையும் விலங்குகளின் கழிவையும் சார்ந்துள்ளனர் எனவும் ஐ.நா.அறிவித்தது.
இப்பயன்பாட்டினால் காற்று அசுத்தமடைவதால், 2030ம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு 15 இலட்சத்துக்கு அதிகமானோர் இறக்க நேரிடும் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.

8. சர்வதேச அளவில் குற்றவாளிகள் 50 விழுக்காடு அதிகரிப்பு

சன.21,2012. சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலில் குற்றவாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 50 விழுக்காடு அதிகரித்தது எனக் கூறப்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் குற்றங்களில் ஈடுபட்டு வேறு நாட்டுக்குத் தப்பிச் சென்றவர்களைக் கைது செய்யும் பணியில் இன்டர்போல் என்ற சர்வதேச காவல்துறை அமைப்பு ஈடுபட்டுள்ளது.
தேடப்படும் குற்றவாளிகள் குறித்த விவரங்களை இன்டர்போலுக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் வழங்கும்.
இக்குற்றவாளிகளின் எண்ணிக்கை கடந்த 2010ம் ஆண்டில் சுமார் ஐம்பதாயிரமாக இருந்தது. 2011ம் ஆண்டு அது 50 விழுக்காடு உயர்ந்துள்ளது. 2011ம் ஆண்டில் அது 75,000 ஆக உயர்ந்துள்ளது. அண்மையில் 26 ஆயிரம் பேருக்கு எதிராக எச்சரிக்கையும் அனுப்பப்பட்டது என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

9. பாரம்பரிய நோய்களைத் தடுக்க உதவும் மரபணு ஆராய்ச்சி

சன.21,2012. பிரிட்டனின் நியூகாஸ்ல் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மரபணு ஆராய்ச்சிக்கூடத்தில் நடத்தப்படவுள்ள ஒரு முக்கிய ஆராய்ச்சியின் விளைவாக, பல பாரம்பரிய நோய்கள் முற்றிலுமாக இல்லாமல் போகிற நிலை உருவாகலாம் என பிரித்தானிய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
மைட்டோகொண்ட்ரியா என்ற உயிரணுக் கூறு வழியாக தாயிடம் இருந்து பிள்ளைக்கு வருகின்ற உடல் கோளாறுகளைத் தடுக்கின்ற வழிமுறை பற்றி ஆராயப்படவுள்ளது.
பெற்றோரிடம் இருந்து ஒரு கரு பெறுகின்ற மரபணுக்களின் வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பல நோய்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
மைட்டோகொண்ட்ரியா என்பது மனித உயிரணு கிட்டத்தட்ட அனைத்திலும் உள்ள நுண் பொருள் ஆகும்.
மனிதனுடைய மூளையும், நரம்பு மண்டலமும், தசைகளும் ஒழுங்காக வேலை செய்ய இந்த மைட்டோகொண்ட்ரியாக்கள் அவசியமாகும்.
பாதிப்புள்ள மைட்டோகொண்ட்ரியாவை உடைய ஒரு தாய் அதனைக் கருவில் உள்ள தனது பிள்ளைக்கும் தந்துவிடுகிறார். அவர் அப்படித் தருவதைத் தடுப்பதற்கு மருத்துவத்தில் இதுவரை வழி எதுவும் இல்லாமல் இருந்து வருகிறது.
ஆனால் பாதிப்புடைய மைட்டோகொண்ட்ரியா தாயிடம் இருந்து பிள்ளைக்கு வருவதை தடுக்க முடியும் என நியூகாஸ்ல் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...