Wednesday, 11 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 09 ஜனவரி 2012

1.  கல்வி, மதவிடுதலை மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து திருத்தந்தை

2.  சிஸ்டீன் சிற்றாலயத்தில் இஞ்ஞாயிறு காலை 16 குழந்தைகளுக்கு திருமுழுக்கு

3.  திருத்தந்தை : “இறைவனின் குழந்தைகளாக இருப்பதன் மகிழ்ச்சியை உணருவதற்கு அழைப்பு

4.  அனைத்துச் சூழல்களிலும் கிறிஸ்தவ சாட்சியாக விளங்குவதே தலையாயத் தேவை - கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பேராயர்
    ஆலஞ்சேரி

5.  பாகிஸ்தான் ஆசியா பீபியின் வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல்.

6.  கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது சூடான் மற்றும் நைஜீரியாபில் அதிகரித்துள்ளது

7.  அருளாளர் ஜோசப் வாஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் திரைப்படம்

8.  தமிழகம் அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: அப்துல்கலாம் ஆலோசனை

------------------------------------------------------------------------------------------------------


1.  கல்வி, மதவிடுதலை மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து திருத்தந்தை

சன.09,2012. கடந்த ஆண்டில் உலக அளவில் இடம்பெற்ற பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி குறித்தும், இன்றைய உலகில் கல்வி, மதவிடுதலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் திருப்பீடத்திற்கான நாடுகளின் தூதர்களுக்கு இத்திங்களன்று உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதத்தில் திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதர்களை திருப்பீடத்தில் சந்தித்து வாழ்த்துச் சொல்லும் திருத்தந்தை, இவ்வாண்டும் இத்திங்களன்று அவர்களைச் சந்தித்தபோது, கடந்த ஆண்டின் நிதிநெருக்கடியால் பணக்கார நாடுகளும் ஏழை நாடுகளும் பாதிக்கப்பட்டதில் குடும்பங்களோடு இணைந்து இளைஞர்களும் துன்பங்களை அனுபவித்துள்ளனர் மற்றும் வருங்காலம் குறித்த அச்சமும் அவர்களில் உருவாகியுள்ளது என்ற கவலையை வெளியிட்டார்.
இளைஞர்களின் இத்தகைய அச்ச உணர்வே மத்தியக் கிழக்கு நாடுகள் சிலவற்றிலும் வட ஆப்ரிக்க நாடுகளிலும் அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்கான குரலாய் ஓங்கி ஒலித்தது என்பதையும் குறிப்பிட்டார் பாப்பிறை.
ஓர் உறுதியான, ஒப்புரவு பெற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் பாதையில் அநீதியான பாகுபாட்டுமுறைகள், குறிப்பாக, மத அடிப்படையிலான பாகுபாட்டு முறைகள் அகற்றப்படவேண்டும் என அழைப்பு விடுத்த திருத்தந்தை, தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறும் குறுகிய கண்ணோட்டத்துடன் கூடிய திட்டங்கள் நீக்கப்படவேண்டும் என்று கூறினார்.
ம‌த‌விடுதலையைப் பற்றி பேசுகையில், க‌டந்த‌ ஆண்டில் பாகிஸ்தானில் சிறுபான்மை ச‌மூக‌ அமைச்ச‌ர் Shahbaz Bhatti கொல்ல‌ப்பட்ட‌து குறித்து க‌வ‌லையை வெளியிட்ட‌ திருத்தந்தை, ச‌மூக‌த்திலிருந்து ம‌த‌த்தை ஒதுக்கி வைக்கும் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறி, அமைதி, நீதி மற்றும் மனித மாண்பை மதிப்பதில் கல்வியறிவூட்டும் பள்ளியாக மதம் நோக்கப்படவேண்டுமேயொழிய, சகிப்பற்ற தன்மையின் பொருளாக நோக்கப்படக் கூடாது என்றார்.
சமூகப்பிரச்சனைகளை அலசுகையில், சிரியாவின் வ‌ன்முறைக‌ள், ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் நிலைய‌ற்ற‌ த‌ன்மை, புனித‌ பூமியில் இஸ்ராயேலுக்கும் பால‌ஸ்தீன‌த்திற்கும் இடையேயான ப‌த‌ட்ட‌ நிலைக‌ள், ஈராக்கில் அண்மையில் இட‌ம்பெற்ற‌ தாக்குத‌ல‌க‌ள் போன்றவைகளையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
க‌ட‌ந்த‌ ஆண்டில் உல‌கில் இட‌ம்பெற்ற‌ இய‌ற்கைப் பேர‌ழிவுக‌ளையும் சுட்டிக்காட்டி, சுற்றுச்சூழ‌லைக் காப்ப‌தில் ஒவ்வொருவ‌ருக்கும் இருக்க‌ வேண்டிய‌ க‌ட‌மைக‌ளையும் வ‌லியுறுத்தினார் திருத்த‌ந்தை 16ம் பென‌டிக்ட்.
திருப்பீடத்துடன் உலகின் 178 நாடுகள் முழு அரசியல் உறவைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2. சிஸ்டீன் சிற்றாலயத்தில் இஞ்ஞாயிறு காலை 16 குழந்தைகளுக்கு திருமுழுக்கு

சன.09,2012. வத்திக்கான் அருங்காட்சியகத்திலுள்ள சிஸ்டீன் சிற்றாலயத்தில் இஞ்ஞாயிறு காலை 16 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கித் திருப்பலியும் நிகழ்த்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்குவதற்கு எடுக்கும் தீர்மானம், அவர்கள் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்திற்குச் சான்றாக எடுக்கும் முதல் அறிவுப்பூர்வமான மற்றும் அடிப்படையான தீர்மானம் என்று கூறினார்.
இக்குழந்தைகள் இறைவனோடு நல்லுறவில் வளர்வதற்கு அவர்களின் பெற்றோர், ஞானப்பெற்றோர், குடும்பங்கள், மற்றும் நண்பர்களுக்கு இருக்கும் கடமையையும் திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
முதலாவது மறறும் உண்மையான கல்வியாளராக இருக்கும் இறைவனுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு கல்வியறிவு புகட்டும் போது, அது நேர்த்தியான பணியாக மாறுகிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
உண்மையான ஆசிரியர், தனது மாணவர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மாட்டார், மாறாக, தனது மாணவர்கள் உண்மையை அறிவதற்கும், அவ்வுண்மையோடு தனிப்பட்ட முறையில் உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் அவர் விரும்புவார் என்றும் திருத்தந்தை தனது மறையுரையில் கூறினார்.

3. திருத்தந்தை : “இறைவனின் குழந்தைகளாக இருப்பதன் மகிழ்ச்சியை உணருவதற்கு அழைப்பு

சன.09,2012. திருமுழுக்குத் திருவருட்சாதனத்தால் இறைவனின் குழந்தைகளாக இருப்பதன் மகிழ்ச்சியை   இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கிறிஸ்தவர்களுக்கு நினைவுபடுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
நம் ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவாகிய இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் 16 குழந்தைகளுக்குத் திருமுழுக்குத் திருவருட்சாதனத்தை நிறைவேற்றிய பின்னர், நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
ஒவ்வொரு படைப்புயிரின் இருப்புக்கு, இறைவனே மூலகாரணமாக இருக்கிறார் என்றும், தந்தையாம் இறைவன் ஒவ்வொரு மனிதரோடும் தனிப்பட்ட விதத்தில் உறவு வைத்துள்ளார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா பற்றிய சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, நம்மை ஒன்றிணைப்பதற்கு அடிப்படையான வரையறை, நாம் குழந்தையாக இருப்பது என்றும், நம்மில் எல்லோரும் பெற்றோர் அல்ல, ஆனால் நாம் எல்லாரும் குழந்தைகள் என்று கூறினார்.
இவ்வுலகில் பிறப்பது நமது தேர்வு அல்ல, நாம் பிறப்பதற்கு ஆசைப்படுகிறோமா என்று நம்மிடம் முதலில் கேட்கப்படுவதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வாழ்க்கையை ஒரு கொடையாக வரவேற்பதற்கு, நாம் வாழும் காலத்தில் வாழ்க்கை பற்றிய ஓர் எண்ணத்தை வளர்த்துக் கொள்வது, நமது ஆன்மாவிலும் நம் பெற்றோருடனான உறவிலும் பக்குவமடைந்த நிலையைக் குறிக்கிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
இவ்வெண்ணமானது, உயிரியல் ரீதியாக அல்ல, மாறாக, ஒழுக்க ரீதியாக பெற்றோராக இருக்கும் திறமையை மக்களில் ஏற்படுத்துகின்றது என்றுரைத்தத் திருத்தந்தை, நாம் ஒவ்வொருவரும் இறைவனால் அன்பு செய்யப்ப்டடு அவரின் திட்டத்தின்படி இருக்கிறோம் என்றும் கூறினார்.
திருஅவைக்கும் உலகத்திற்கும் மறுபிறப்பின் ஊற்றாக விளங்கும் திருமுழுக்கின் மாபெரும் மறையுண்மைக்காக  இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்றும் மூவேளை செப உரையில் திருத்தந்தை கூறினார்.
நம் ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவோடு திருஅவையின் கிறிஸ்மஸ் காலம் முடிவடைகிறது.

4. அனைத்துச் சூழல்களிலும் கிறிஸ்தவ சாட்சியாக விளங்குவதே தலையாயத் தேவை - கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பேராயர் ஆலஞ்சேரி

சன.09,2012. குடும்பங்களிலும், திருஅவை நிறுவனங்களிலும், அனைத்து மறைப்பணிகளிலும் கிறிஸ்தவ சாட்சியாக விளங்குவதே இன்றைய மிகப்பெரும் தேவையாக உள்ளதாக அறிவித்தார் கர்தினாலாக திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ள பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி.
கர்தினாலாக அறிவிக்கப்பட்டபின் ஆசிய செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த சீரோ மலபார் ரீதி கத்தோலிக்க திருஅவையின் தலைவர் பேராயர் ஆலஞ்சேரி, கிறிஸ்தவ வாழ்வின் சாட்சியமும் செய்தியும் இவ்வுலகில் தன் உண்மையான பிரசன்னத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே இன்றைய மிக முக்கியத் தேவை என்றார்.
திருக்காட்சிப் பெருவிழாவின் மூலம் உலகிற்குத் தன்னையே வெளிப்படுத்திய கிறிஸ்துவின் பிரசன்னம், திருஅவை ஒன்றிப்பு, திருத்தந்தையுடன் கர்தினால்கள் கொண்டிருக்கும் ஒன்றிப்பு ஆகியவை மூலம் இவ்வுலகில் தொடர்ந்து வெளிப்படுத்தப்படவேண்டும் என்று கூறிய பேராயர் ஆலஞ்சேரி, இதற்கென தான் மேலும் அர்ப்பணத்துடன் உழைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

5. பாகிஸ்தான் ஆசியா பீபியின் வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல்.

சன.09,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் உள்ள ஆசியா பீபியின் விடுதலைக்காக முயன்று வரும் அவரின் வழக்குரைஞரும் சில மனித உரிமை நடவடிக்கையாளர்களும் கொலை மிரட்டல்களைப் பெற்றுள்ளனர்.
கிறிஸ்தவர்களைப் பழிவாங்குவதற்கென தவறான முறையில் பாகிஸ்தானில் பயன்படுத்தப்படும் தேவநிந்தனைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்ததற்காக கடந்த ஆண்டு பாகிஸ்தான் பஞ்சாப் ஆளுனர் சல்மான் தசீர் மற்றும் சிறுபான்மைத் துறை அமைச்சர் Shahbaz Bhattiயும் கொலைச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியத் தீவிரவாத குழு ஒன்று அண்மையில், ஆசியா பீபியின் உயிருக்கு விலை நிர்ணயித்திருப்பதாகவும், இது, அவருக்காகப் போராடுபவர்களின் மனதில் அச்சத்தை விதைத்திருப்பதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து குழந்தைகளின் தாயான கிறிஸ்தவப் பெண் ஆசியா பீபி, தேவ நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு ஷேக்புரா தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

6. கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது சூடான் மற்றும் நைஜீரியாபில் அதிகரித்துள்ளது

சன.09,2012. கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது சூடான் மற்றும் நைஜீரியாவில் கடந்த ஆண்டு பெரிய அளவில் அதிகரித்திருந்ததாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு கிறிஸ்தவர்களின் உரிமைகள் மீறப்பட்ட 50 நாடுகளுள் சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இது மிகப்பெரும் அளவில் அதிகரித்திருந்ததாக 'Open Doors' என்ற கிறிஸ்தவ மையம் எடுத்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்ட‌தாகக் கூறும் இவ்வாய்வறிக்கை, கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதில் கடந்த பத்தாண்டுகளாக வடகொரிய நாடே முன்ன‌ணியில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.
சூடான், நைஜீரியா தவிர எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் சித்திரவதைப்படுத்தப்படுவது கடந்த ஆண்டில் அதிகரித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள் சித்ரவதைச் செய்யப்படும் 50 நாடுகளுள் 38 நாடுகள் இஸ்லாமியரை பெரும்பான்மையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

7.  அருளாளர் ஜோசப் வாஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் திரைப்படம்

சன.09,2012. கோவா மாநிலத்தின் பாதுகாவலர் என்று போற்றப்படும் அருளாளர் ஜோசப் வாஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவாவின் Consua-Verna பகுதியைச் சார்ந்த அக்னெலோ பெர்னாண்டஸ் என்ற இளைஞர் உருவாக்கியுள்ள ‘Panvlam’ என்ற இத்திரைப்படத்தில், அருளாளர் ஜோசப் வாஸ் இலங்கைக்குச் சென்று உழைத்ததும், அங்கு அவர் சந்தித்த சவால்களும் காட்டப்பட்டுள்ளன.
நிலேஷ் கேனி என்பவரது ஒளிப்பதிவிலும், அருள்தந்தை பீட்டர் கர்டோசோ என்பவற்றின் இசையிலும் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை அனைத்து பள்ளிகளிலும், பங்குத்தளங்களிலும் திரையிடுவதற்கு கோவா பேராயர் Filipe Neri Ferrao ஒரு அத்தாட்சி மடலை அளித்துள்ளார் என்று திரைப்பட இயக்குனர் அக்னெலோ பெர்னாண்டஸ் கூறினார்.
1651ம் ஆண்டு கோவாவில் பிறந்த ஜோசப் வாஸ் தன் குருத்துவப் பணியை இலங்கையில் மேற்கொண்டபோது, இலங்கை Dutch ஆதிக்கத்தில் கத்தோலிக்க மறையை இழந்து வந்தது. இதைத் தடுக்க அருள்தந்தை வாஸ் இரகசியமாக பணிகள் செய்து, கத்தோலிக்க மறையைக் காத்து வந்தார்.
1711ம் ஆண்டு நோயுற்று இலங்கையில் காலமான இவரை, 1995ம் ஆண்டு இலங்கை சென்ற திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தினார். அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள் இறந்ததன் மூன்றாம் நூற்றாண்டு நினைவு சென்ற  ஆண்டு கொண்டாடப்பட்டது.

8. தமிழகம் அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: அப்துல்கலாம் ஆலோசனை

சன.09,2012. தமிழக நதிகளை இணைத்து நீர்வழிச் சாலைகள் அமைத்தால், அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறினார்.
சனவரி 5ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு இஞ்ஞாயிறன்று சென்ற அப்துல்கலாம், அங்கு நடந்த ஒரு விழாவில் பேசுகையில், பத்தாவது வயதுமுதல் தான் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.
புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அதிகரித்தால், கற்பனைத் திறன் அதிகரிக்கும், நல்ல கற்பனைத் திறன்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று கூறிய அபுதுல்கலாம், வேளாண்மை மற்றும் தமிழக நதிகள் குறித்து தான் அண்மையில் படித்த இருபுத்தகங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.
செயற்கைக்கோளின் வழியாக, தமிழகத்தில் உள்ள நதிகளின்
...

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...