Sunday, 8 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 07 ஜனவரி 2012

1. விசுவாச ஆண்டைக் கொண்டாடுவதற்கு உதவும் திருப்பீடத்தின் மேய்ப்புப்பணி சார்ந்த பரிந்துரைகள்

2. ஹாங்காங் ஆயர் Tong, கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது, சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான உறவில் ஹாங்காங் மறைமாவட்டத்தின் பங்கை அங்கீகரிப்பதாக இருக்கின்றது

3. பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் எகிப்தில் கிறிஸ்மஸ்

4. சிலே நாட்டில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலத்திருஅவை உதவி

5. 2011ம் ஆண்டில் உலகில் 103 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்

6. இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பாக ஐ.நா.விடம் கடிதம்

7. எருசலேமில் காந்தி நினைவு மண்டபம்

8. "45 வயது முதலே மூளையின் திறன்கள் குறைய ஆரம்பிக்கின்றன"- புதிய ஆய்வு

----------------------------------------------------------------------------------------------------------------

1. விசுவாச ஆண்டைக் கொண்டாடுவதற்கு உதவும் திருப்பீடத்தின் மேய்ப்புப்பணி சார்ந்த பரிந்துரைகள்

சன.07,2012. இவ்வாண்டு தொடங்கும் விசுவாச ஆண்டை உலகளாவியத் திருஅவையின் அனைத்து நிலைகளிலும் எவ்வாறு கொண்டாடுவது என்பதற்கு உதவும் மேய்ப்புப்பணி சார்ந்த பரிந்துரைகளை இச்சனிக்கிழமை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
கத்தோலிக்கர் தங்களது விசுவாசத்தை நன்றாகவும் சரியாகவும் புரிந்து கொண்டு கிறிஸ்துவுக்கு உண்மையான சட்சிகளாக மாறுவதற்கு உதவும் நோக்கத்தில் திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் இப்பரிந்துரைகள் கொண்ட ஏட்டை வெளியிட்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகள் அடங்கிய முழு ஏடும், இச்சனிக்கிழமை வெளியிடப்படும் என்று இவ்வியாழனன்றே இப்பேராயம் அறிவித்திருந்தது.  
உலகளாவியத் திருஅவை, ஆயர் பேரவைகள், மறைமாவட்டங்கள், பங்குகள், இயக்கங்கள், பக்த சபைகள் என எல்லா நிலைகளிலும் இவ்விசுவாச ஆண்டைக் கொண்டாடுவதற்கென, ஒவ்வொரு நிலைக்கும் பத்துப் பரிந்துரைகளை இவ்வேடு வழங்கியுள்ளது.
கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்குப் புதிய நற்செய்திப்பணி என்ற தலைப்பில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 13வது அனைத்துலக ஆயர் மாமன்றத்தைக் கூட்டுவது, இவ்விசுவாச ஆண்டின் தொடக்கமாக உலகளாவியத் திருஅவையில் முக்கிய நிகழ்வாக இடம் பெறும் எனவும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஆரம்பமானதன் ஐம்பதாம் ஆண்டை நினைவுகூரும் விதமாக, வருகிற அக்டோபர் 11ம் தேதி ஆடம்பரத் திருவழிபாட்டுக் கொண்டாட்டம் இடம் பெறும் எனவும் அவ்வேடு கூறுகிறது.
மேலும், இந்த விசுவாச ஆண்டில் திருப்பீடத்துக்கும் புனித பூமிக்கும் திருப்பயணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும், 2013ம் ஆண்டு ஜூலையில் ரியோ டி ஜெனிரோவில் இடம் பெறும் அனைத்துலக இளையோர் தினம், இளையோர் இயேசுவில் விசுவாசம் வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கவும், திருத்தந்தை மற்றும் திருஅவை என்ற பெரிய குடும்பத்தோடு ஒன்றிப்பு உணர்வு கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பை வழங்கும் எனவும் அவ்வேடு தெரிவிக்கிறது.
திருஅவைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அன்னை மரியா மீது சிறப்புப் பக்தியைக் காட்டவும், பெரிய மரியாத் திருத்தலங்களுக்குத் திருப்பயணங்கள் மேற்கொள்ளவும் இவ்வேடு பரிந்துரைக்கிறது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஆரம்பமானதன் ஐம்பதாம் ஆண்டையொட்டி இவ்விசுவாச ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி ஆரம்பமாகும் இவ்விசுவாச ஆண்டு, 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி நிறைவடையும்.

2. ஹாங்காங் ஆயர் Tong, கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது, சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான உறவில் ஹாங்காங் மறைமாவட்டத்தின் பங்கை அங்கீகரிப்பதாக இருக்கின்றது

சன.07,2012. ஹாங்காங் ஆயர் John Tong Hon, கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது, ஹாங்காங் மறைமாவட்டம், சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான உறவில் இணைக்கும் பாலமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதையே காட்டுகின்றது என்று சீனத் திருஅவை விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இவ்வெள்ளிக்கிழமை திருத்தந்தையால் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள 72 வயதாகும் ஆயர் Tong, சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான உறவு குறித்த விவகாரங்களில் வல்லுனர் ஆவார்.
ஆயர் Tong ன் நியமனம் குறித்துக் கருத்து தெரிவித்த, பாப்பிறை மறைபோதக நிறுவனத்தின் அருள்தந்தை Gianni Criveller, சீனாவுக்கும் திருப்பீடத்துக்கும் இடையேயான உறவின் முக்கியத்துவத்தை இந்நியமனம் காட்டுகின்றது என்று கூறினார்.
அத்துடன், இந்நியமனம், ஹாங்காங் மறைமாவட்டத்திற்கு நல்ல செய்தியாக இருக்கின்றது என்றும் அக்குரு குறிப்பிட்டார்.
இந்தியாவின் சீரோ மலபார் ரீதி திருஅவைத் தலைவர் பேராயர் ஜார்ஜ் அலஞ்சேரி உட்பட 18 பேராயர்கள், ஓர் ஆயர் 3 அருள்தந்தையர் என 22 பேரை இவ்வெள்ளிக்கிழமை கர்தினால்களாக அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 18 பேர்.

3. பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் எகிப்தில் கிறிஸ்மஸ்

சன.07,2012. எகிப்தில் அரசுத்தலைவர் ஹோஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் முதன் முறையாக பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் இச்சனிக்கிழமை கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாடினர் அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள்.
அரசுத்தலைவர் முபாரக் பதவி விலகக் காரணமானப் போராட்டங்களைத் தொடர்ந்து, அந்நாட்டில் சிறுபான்மையினர்க்கெதிரான வன்முறைகளும் இடம் பெற்று வருகின்றன.
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் சனவரி 7ம் தேதி கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்கின்றனர். எகிப்தின் சுமார் 8 கோடியே 50 இலட்சம் மக்களில் சுமார் 10 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.
இச்சனிக்கிழமை இப்பெருவிழாவைக் கொண்டாடிய கீழைரீதிக் கிறிஸ்தவர்களுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இவ்வெள்ளிக்கிழமை மூவேளை செப உரைக்குப் பின்னர் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. சிலே நாட்டில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலத்திருஅவை உதவி

சன.07,2012. தென் அமெரிக்க நாடான சிலேயில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கென தலத்திருஅவை எடுத்து வரும் நடவடிக்கைகளில் கத்தோலிக்கர் பங்கு கொள்ளுமாறு அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிலே நாட்டின் தெற்குப் பகுதியில் பியோபியோ மாநிலத்தில் சுமார் 62 ஆயிரம் ஏக்கர் காடுகள் தீப்பற்றி எரிந்தன. இதில் 160 வீடுகள் அழிந்தன மற்றும் 600க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். மேலும், Maule மாநிலத்தில் சுமார் 16 ஆயிரம் ஏக்கர் காடுகளும்  30க்கும் மேற்பட்ட வீடுகளும் தீயில் அழிந்தன. இதில் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வீடுகள் இன்றி உள்ளன.
இந்தப் புதிய ஆண்டை இத்தகைய துன்பத்தோடு தொடங்கியுள்ள இம்மக்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டியிருக்கின்றது என்று சிலே ஆயர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.   

5. 2011ம் ஆண்டில் உலகில் 103 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்

சன.07,2012. உலகில், 2011ம் ஆண்டில் 103 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மெக்சிகோ நாட்டில் அதிகம் எனவும் IPI என்ற வியன்னாவை மையமாகக் கொண்ட அனைத்துலக பத்திரிகை அமைப்பு (International Press Institute) அறிவித்தது.
2009ம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது தடவையாக இவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளது எனக் கூறும் IPI அமைப்பு, 2009ம் ஆண்டில் 110 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டனர் என அறிவித்தது.
கடந்த 2011ம் ஆண்டில் மெக்சிகோவில் மட்டும் 10, அதற்கடுத்து ஈராக்கில் 9, அந்நாட்டைத் தொடர்ந்து ஹொண்டூராஸ், பாகிஸ்தான், ஏமன், லிபியா, பிரேசில் என நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது இவ்வமைப்பு.
இத்தனை பேர் கொல்லப்பட்டிருந்தாலும் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் எனப் பார்த்தால் அவை அபூர்வமாகவே உள்ளது என்றும் IPI அமைப்பு கூறியது.

6. இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பாக ஐ.நா.விடம் கடிதம்

சன.07,2012. இலங்கையில் காணாமல்போன மனித உரிமைகள் ஆர்வலர்கள் குறித்து புலனாய்வு செய்யுமாறுக் கோரி செயற்பாட்டுக் குழுக்கள் சில அங்குள்ள ஐநா பிரதிநிதிகளிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளன.
சுமார் ஒரு மாதகாலத்துக்கு முன்னதாக காணாமல் போன லலித் குமார் வீரராஜ், குகன் முருகநாதன் ஆகியோர் குறித்து பதில் தருமாறு மனித உரிமைகளுக்கான மாணவர்கள் என்னும் அமைப்பு கோரியுள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சார்பாக இவர்கள் இருவரும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
காணாமல்போன இவர்களைக் கண்டுபிடிக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்வதாக அதிகாரிகள் கூறுகின்ற போதிலும், அவர்கள் காவல்துறையினரால் கடத்தப்பட்டதாக அவர்களது ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

7. எருசலேமில் காந்தி நினைவு மண்டபம்

சன.07,2012. அமைதியை உணர்த்தும் விதமாக எருசலேமில் மகாத்மா காந்திக்கு நினைவு மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு என்று சொல்லி, இதனை உணர்த்தும் விதமாக அவரின் உருவச்சிலையும், தியான மையமும் அமைக்க எருசலேம் மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
இந்த நினைவு மண்டபத்தை எங்கு நிறுவுவது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும், ஏதாவது ஓர் அரபு நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இந்நினைவு மண்டபத்தை வைக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி உருவச்சிலையை, ஜெனீவா மாநகராட்சி, எருசலேம் மாநகராட்சிக்குக் கொடையாக வழங்கவுள்ளதாகவும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

8. "45 வயது முதலே மூளையின் திறன்கள் குறைய ஆரம்பிக்கின்றன"- புதிய ஆய்வு

சன.07,2012. நினைவுத் திறன், பகுத்தாய்வுத் திறன் உள்ளிட்ட மனித மூளையின் முக்கிய ஆற்றல்கள் ஒருவருக்கு ஐம்பது வயதைத் தொடுவதற்கு முன்பேயேகூடக் குறைய ஆரம்பித்து விடுகின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
பிரித்தானிய மெடிக்கல் ஜர்னல் என்ற மருத்துவ பத்திரிகையில் தங்களது ஆய்வு முடிவுகளைப் பிரசுரித்துள்ள பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் மூளைத் திறன்களை வைத்து இந்த முடிவைக் கண்டறிந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
மூளையின் திறன்களைப் பாதுகாக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு காட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துவரும் நிலையில், ஒருவர் வயதாகும்போது அவரது மூளையின் திறன்களில் ஏற்படக்கூடிய தாக்கங்களை விளங்கிக் கொள்வது என்பது இந்த நூற்றாண்டில் மருத்துவத்துறைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கையை எழுதியவர்கள் கூறுகின்றனர்.
45 வயது முதற்கொண்டு 70 வயது வரையிலான பிரிட்டன் அரசு ஊழியர்களைப் பத்து வருட காலத்துக்குத் தொடர்ந்து பரிசோதித்து இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
மூளையின் திறன்கள் குறைந்துபோவது என்பது, அறுபது வயதில்தான் ஆரம்பிக்கிறது என இதற்கு முன்பு நடத்தப்பட்டிருந்த சிறிய அளவிலான ஆய்வுகள் காட்டியிருந்தன.
சிறு வயது முதலே ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வைத்துக்கொள்வதென்பது உடல் நலத்தைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல் மூளையின் திறன்களைப் பேணுவதற்கும் அவசியம் என இந்த ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...