Thursday, 5 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 04 ஜனவரி 2012

1. குழந்தைகள் சொல்வதை பெற்றோர் செவிமடுத்தால் பல தற்கொலைகளை தடுக்க முடியும் - அயர்லாந்து கர்தினால் Seán Brady

2. சீனாவில் முதன் முதலாக கத்தோலிக்கத் திருமறையைத் தழுவிய Paul Xu Guangqi பிறந்த 450ம் ஆண்டு இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது

3. டில்லி உயர்மறைமாவட்டத்தில் இந்திய நாட்டுப் பண்ணின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

4. சூரிய ஒளிகொண்டு உருவாக்கப்படும் சக்தி முயற்சிகளில் கல்கத்தா உயர்மறைமாவட்டம்

5. வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு இரு தேசிய விருதுகள்

6. மியான்மாரில் கைதிகள் கருணை அடிப்படையில் விடுதலை

7. சீனாவின் பொருளாதார முன்னேற்ற மாற்றங்களால், 44,000க்கும் மேற்பட்ட கலாச்சார நினைவுச் சின்னங்கள் அழிவு

8. புத்தாண்டையொட்டி, மதுபானங்களின் விற்பனை கடந்த ஆண்டை விட 21 விழுக்காடு அதிகம்

------------------------------------------------------------------------------------------------------
1. குழந்தைகள் சொல்வதை பெற்றோர் செவிமடுத்தால் பல தற்கொலைகளை தடுக்க முடியும் - அயர்லாந்து கர்தினால் Seán Brady

சன.04,2012. குடும்பங்களில் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கிஅவர்கள் சொல்வதை பெற்றோர் செவிமடுத்தால், பல தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று அயர்லாந்து கர்தினால் Seán Brady கூறினார்.
புத்தாண்டு நாளன்று உலக அமைதிக்கென திருத்தந்தை வழங்கிய செய்தியை அடிப்படையாகக் கொண்டு தன் புத்தாண்டு மறையுரையை வழங்கிய அயர்லாந்து தலைமை ஆயர் கர்தினால் Brady, அயர்லாந்தில் தற்கொலைகள் மூலம் இளையோரை அதிக அளவில் நாம் இழக்கிறோம் என்ற எச்சரிக்கையை விடுத்தார்.
பணியிடம், சமுதாயம், குடும்பம் என்ற பல சூழல்களில் பிரச்சனைகளையும், சவால்களையும் சந்திக்கும் இளையோரின் உள்ளத்து ஏக்கங்களைக் கேட்பதற்கு வயது முதிர்ந்தவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கர்தினால் Brady வலியுறுத்திக் கூறினார்.
2012ம் ஆண்டு நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பலர் இருக்கும்போது, இவ்வாண்டு டப்ளின் நகரில் நடைபெறவிருக்கும் 50வது அகில உலக திருநற்கருணை மாநாட்டின் மீது நமது கவனமும், நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்று கர்தினால் Brady தன் மறையுரையில் குறிப்பிட்டார்.


2. சீனாவில் முதன் முதலாக கத்தோலிக்கத் திருமறையைத் தழுவிய Paul Xu Guangqi பிறந்த 450ம் ஆண்டு இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது

சன.04,2012. சீனாவில் முதன் முதலாக கத்தோலிக்கத் திருமறையைத் தழுவிய Paul Xu Guangqiன் வாழ்க்கையைப் பின்பற்றி, சீனக் கலாச்சாரத்தையும், கத்தோலிக்க விசுவாசத்தையும் இணைக்க விசுவாசிகள் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று Shanghai மறைமாவட்ட ஆயர் Aloysius Jin Luxian வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயேசு சபையைச் சேர்ந்த 95 வயது நிரம்பிய ஆயர் Jin Luxian, சனவரி 23 அன்று ஆரம்பமாகும் சீனப் புத்தாண்டையொட்டி வெளியிட்டுள்ள மேய்ப்புப் பணி மடலில் தான் Xu Guangqiன் எண்ணங்களையும் வாழ்வையும் ஆர்வமாய் பின்பற்றுகிறவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
கத்தோலிக்கத் திருமறையின் முதல் திருத்தூதராக சீனாவில் பணியாற்றிய இயேசுசபை குரு Matteo Ricciயினால் திருமுழுக்கு பெற்ற Xu Guangqi பிறந்த 450ம் ஆண்டு 2012ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது என்பதை ஆயர் Jin Luxian இம்மடலில் மக்களுக்கு நினைவுறுத்தியுள்ளார்.
சீனக் கலாச்சாரமும் கத்தோலிக்க விசுவாசமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல என்பதை தன் விசுவாச வாழ்வால் உணர்த்திய Xu Guangqi வெறுப்பை வெளிப்படுத்தும் வழிகள் மேலும் வெறுப்பையே வளர்க்கும் என்பதை நமக்குச் சொல்லித் தருகிறார் என்று ஆயரின் இம்மடல் சுட்டிக்காட்டுகிறது.
Xu Guangqiன் 450ம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில் அவர் வாழ்ந்த இடங்களைப் பார்வையிடவும், அவரது பரிந்துரையால் நடைபெறும் புதுமைகளை வெளிப்படுத்தவும் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஆயர் Jin Luxian.


3. டில்லி உயர்மறைமாவட்டத்தில் இந்திய நாட்டுப் பண்ணின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

சன.04,2012. நூறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்திய நாட்டுப் பண்ணைச் சிறப்பிக்கும் விதமாக, டில்லி உயர்மறைமாவட்டம் புத்தாண்டு நாளன்று ஒரு விழா எடுத்தது. இந்தியாவில் இத்தகைய ஒரு விழா எடுக்கும் முதல் அமைப்பு இதுவாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
Dheerendra Tyagi என்பவர் திரு இருதயப் பேராலய வளாகத்தில் மூவர்ணக் கோடியை ஏற்றியபின், சூழ இருந்த டில்லி துணை ஆயர் Franco Mulakkal  மற்றும் குருக்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் இணைந்து நாட்டுப் பண்ணைப் பாடினர்.
இந்திய அரசு உருவாக்கியுள்ள பல்வேறு திட்டங்களால் இன்னும் அதிகமான மக்கள் பயன்பெறவும், கல்வி, சமுதாய விழிப்புணர்வு இவற்றின் வழியாக இந்நாட்டிற்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்யவும் தலத்திருஅவை எப்போதும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று டில்லி துணை ஆயர் Mulakkal கூறினார்.
கிறிஸ்தவ மக்கள் மேற்கொள்ளும் பணிகளின் எண்ணிக்கை அம்மக்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும், இதனால் இந்தியா பல வழிகளில் முன்னேறியுள்ளது என்றும் விழாத் தலைவர் தியாகி கூறினார்.


4. சூரிய ஒளிகொண்டு உருவாக்கப்படும் சக்தி முயற்சிகளில் கல்கத்தா உயர்மறைமாவட்டம்

சன.04,2012. சூரிய ஒளிகொண்டு உருவாக்கப்படும் சக்தியினால் மக்கள் வாழ்வை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என்று கல்கத்தா உயர்மறைமாவட்ட சமுதாயப் பணி மையத்தின் இயக்குனர் அருள்தந்தை Reginald Fernandes கூறினார்.
கல்கத்தா தலத்திருஅவையின் Seva Kendra Calcutta என்ற சமுதாயப் பணி மையம், மேற்கு வங்கத்தில் சுற்றுச்சூழலை அழிக்காத வண்ணம் சக்தியை உருவாக்கும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள Kalidaherpota என்ற கிராமத்தில் மின்சார வசதிகள் இல்லாததால், அங்குள்ள மக்களின் வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது என்று கூறிய அருள்தந்தை Fernandes, அந்த கிராமத்தில் சமுதாயப் பணி மையம் மேற்கொண்ட முயற்சிகளை ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் விளக்கிக் கூறினார்.
சூரிய சக்தியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒளிவிளக்குகளால் அக்கிராமத்து மக்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தையும், சிறப்பாக, அக்கிராமத்து குழந்தைகள் கல்வியில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் அருள்தந்தை Fernandes எடுத்துரைத்தார்.
கல்கத்தா சமுதாயப் பணி மையத்தைச் சேர்ந்தவர்கள் குஜராத், பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கும் சென்று சூரிய சக்தியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒளிவிளக்குகளை உருவாக்கும் வழிகளை கற்பித்து வருகின்றனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு இரு தேசிய விருதுகள்

சன.04,2012. தமிழ் நாட்டின் வேலூரில் அமைந்துள்ள CMC எனப்படும் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி இரு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.
பெரு நகரங்கள் அல்லாத பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் பல்வேறு சிறப்பு மருத்துவப் பணிகளை ஆற்றிவரும் மருத்துவமனை என்பதற்காகவும், நாட்டிலேயே இதய சிகிச்சையில் தலைசிறந்த மருத்துவமனை என்பதற்காகவும் CMCக்கு இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவ மனைகள் வழங்கும் பல்வேறு சேவைகள், நோயுற்றோருக்கு காட்டப்படும் தனி கவனம் மற்றும் பாதுகாப்பு, மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் மற்றும் ஆய்வுகள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த விருதுகள் தீர்மானிக்கப்படுகின்றன.
சமுதாயத்தின் மீது மிகவும் பொறுப்புள்ள வகையில் செயல்பட்ட மருத்துவ மனை என்று CMC கடந்த ஆண்டு விருது பெற்றுள்ளது என்பதும், The Week என்ற புகழ்பெற்ற வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பின்படிபல துறைகள் கொண்ட மருத்துவ மனைகளில் CMC இந்திய அளவில் மூன்றாவது இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கவை.


6. மியான்மாரில் கைதிகள் கருணை அடிப்படையில் விடுதலை

சன.04,2012. சனவரி 4ம் தேதி, இப்புதனன்று மியான்மாரில் நடைபெற்ற சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் புதிய அரசு சில கைதிகளை விடுதலை செய்துள்ளது.
கருணை அடிப்படையில் சில கைதிகளின் தண்டனைக் காலம் குறைக்கப்படும் என்றும், மரணதண்டனை பெற்றோரின் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படும் என்றும் அரசால் நடத்தப்படும் ஊடகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறவிப்பால் எத்தனை அரசியல் கைதிகள் பயன்பெறுவார்கள் என்பது தெளிவாக்கப்படவில்லை.
சில அரசியல் கைதிகளும் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று பிபிசி நிறவனத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், முக்கியமான அரசியல் கைதிகள் எவரது பெயரும் பட்டியலில் இடம்பெறவில்லை என்று பிபிசி அறிவித்துள்ளது.
மியான்மாரின் மனித உரிமை நிலவரங்கள் மோசமாக இருப்பதாகக் கூறி அதனைத் தடை செய்துள்ள பல மேற்கத்திய நாடுகள், அதற்கான காரணங்களில் முக்கியமானதாக அரசியல் கைதிகளின் விவகாரத்தையும் வலியுறுத்தி வருகின்றன.


7. சீனாவின் பொருளாதார முன்னேற்ற மாற்றங்களால், 44,000க்கும் மேற்பட்ட கலாச்சார நினைவுச் சின்னங்கள் அழிவு

சன.04,2012. பொருளாதார முன்னேற்றம் என்ற விரைவான மாற்றங்களால், 44,000 க்கும் மேற்பட்ட பழம்பெரும் கலாச்சார நினைவுச் சின்னங்கள் சீனாவில் அழிக்கப்பட்டுள்ளன என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.
சீனாவில் 20 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய மாவோ மக்கள் குடியரசு என்ற கொள்கையின் விளைவாக ஏற்பட்ட பல முன்னேற்றங்கள், அந்நாட்டின் பல்லாயிர பாரம்பரிய சின்னங்களை அழித்து, அவைகள் இருந்த நிலங்களையும் அபகரித்து, அங்கு அடுக்கு மாடி கட்டிடங்களை உருவாக்கி வருகிறதென்று இந்த ஆய்வு கூறுகிறது.
சீனாவில் இருக்கும் 700,000 க்கும் அதிகமான பாரம்பரிய நினைவுச் சின்னங்களைப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட சீன கலாச்சார அரசுத் துறை வெளியிட்ட இந்த அறிக்கையில், சீனா மேற்கொண்டுள்ள விரைவான பொருளாதார மாற்றம் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் அழிவதற்கான முக்கிய காரணம் என்று சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த அழிவில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது Shaanxi மாநிலம் என்றும், அங்குள்ள 3500க்கும் அதிகமான கலாச்சார சின்னங்கள் எவ்வித சுவடும் இன்றி அழிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.


8. புத்தாண்டையொட்டி, தமிழ்நாட்டில் மதுபானங்களின் விற்பனை கடந்த ஆண்டை விட 21 விழுக்காடு அதிகம்

சன.04,2012. தமிழ்நாட்டின் டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டையொட்டி, மதுபானங்களின் விற்பனை, கடந்த ஆண்டை விட 21 விழுக்காடு அதிகரித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கடந்த டிசம்பர் 31 மற்றும் சனவரி 1ம் தேதிகளில், இந்திய மற்றும் வெளிநாட்டு மதுவகைகள் 142 கோடி ரூபாய் அளவில் விற்பனை ஆகி உள்ளன.
கடந்த ஆண்டு, இவ்விரு தினங்களையும் சேர்த்து, விற்பனையான மதுவகைகளின் மதிப்பு, 103 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன், டாஸ்மாக் மதுபானங்களின் விலை ஏற்றம் பெற்றிருந்தாலும், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 21 விழுக்காடு விற்பனை அதிகரித்துள்ளது என்று டாஸ்மாக் பணியாளர் ஒருவர் கூறினார்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...