Saturday, 28 May 2011

Catholic News - hottest and latest - 21May 2011

1.  உரோம் தூய இதய  மருத்துவப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு திருத்தந்தையின் உரை.

2.  உரோமையில் சர்வதேச காரித்தாஸின் பொது அவைக் கூட்டம்.

3.  சீனத்திருச்சபைக்கான செபத்தின் முக்கியத்துவம்

4.  மறைந்து வாழும் சீன கிறிஸ்தவ சபைகள் மத உரிமை கேட்டு விண்ணப்பம்.

5.  பள்ளிகளில் நட்புணர்வு கற்பிக்கப்பட வேண்டும் என்கின்றது வத்திக்கான்-இஸ்லாம் கூட்டறிக்கை.

6.  திருச்சபையின் பணிகளை பாராட்டுகிறார் எயிட்ஸ் வல்லுனர்.

7.  இலங்கையில் போருக்கு பிறகும் மக்களின் வாழ்க்கை மேம்படவில்லை

8.  பெற்றோர்கள் தங்களின் இளமைக் கால படிப்பு கனவை, பிள்ளைகளிடம் திணிப்பதோ, விதைப்பதோ கூடாது.

----------------------------------------------------------------------------------------------------------------


1.  உரோம் தூய இதய  மருத்துவப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு திருத்தந்தையின் உரை.

மே 21, 2011.  உண்மை மற்றும் இறைவன் குறித்த கேள்விகள், ஒவ்வொரு நாளின் உண்மை நிலைகளிலிருந்து விலகி நிற்பவைகள் அல்ல, மாறாக உலகம் மற்றும் வாழ்வு குறித்து புரிந்து கொள்வதற்கான வழிகள் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் நகரின் ஜெமல்லி தூய இதய கத்தோலிக்க மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 90ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அத‌ன் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களைத் திருப்பீடத்தில் இச்சனிக்கிழமை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
'கலாச்சார, மனிதாபிமான மற்றும் ஒழுக்க ரீதி மதிப்பீடுகளைத் தேடும் மனிதன் நற்செய்தியின் வழி உலகைப்புரிந்து கொள்ள முடியும் என்ற பாப்பிறை, பல அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதன் சக்தி உடையவனாக மாற உதவும் அதேவேளை, அவனை அடிமையாக்கவும் வழி திறந்துள்ளன‌ என்றார். அன்பில் உண்மைக்கு பணிபுரிய வெண்டிய மனிதன், எல்லாச் சூழல்களிலும், குறிப்பாக தங்களையே பாதுகாக்க முடியாத சூழல்களிலும், பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை. மனித மாண்பு என்பது கிறிஸ்துவ விசுவாசத்தின் ஒளியிலேயே முழுமையாக உணர்ந்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதை கலாச்சாரத்தின் வரலாறு காட்டுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.

2.  உரோமையில் சர்வதேச காரித்தாஸின் பொது அவைக் கூட்டம்.

மே 21, 2011.  சர்வதேச காரித்தாஸ் அமைப்பின் 19வது பொதுஅவைக் கூட்டம் இஞ்ஞாயிறு முதல் வரும் வெள்ளி வரை உரோம் நகரில் இடம்பெறுகிறது.
கத்தோலிக்கத் திருச்சபையின் பல்வேறு சேவை அமைப்புகள் இணைந்து சர்வதேச காரித்தாஸ் அமைப்பாகத் துவக்கப்பட்டதன் 60ம் ஆண்டையொட்டி இடம்பெறும் இப்பொதுஅவைக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 300 பிரதிநிதிகள் பங்குபெறுகின்றனர்.
165 நாடுகளின் காரித்தாஸ் அமைப்புகளை ஒன்றிணைத்து, கர்தினால் ஆஸ்கர் அந்த்ரேஸ் ரொட்ரிக்குஸ் மரதியாகா தலைமையில், மக்களின் துயர் துடைக்க உழைத்து வரும் சர்வதேச காரித்தாஸ் அமைப்பு, அடுத்த 4 ஆண்டுகளுக்கானப் பணித்திட்டங்கள் குறித்து இப்பொதுஅவைக் கூட்டத்தில் விவாதிக்கும்.

3.  சீனத்திருச்சபைக்கான செபத்தின் முக்கியத்துவம்

மே 21, 2011.  இம்மாதம் 24ந்தேதி சீனாவிற்கான உலக செபநாளை நினைவுறுத்தி நம் செபங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, திருச்சபைக்கான நம் உண்மையான பங்களிப்பை செபத்தின் மூலம் ஆற்றமுடியும் என்பதைக் கூறியுள்ளார் என்றார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தான் சீனாவிற்குச் சென்றபோது, அங்குள்ள ஒரு வீட்டில் இடம்பெற்ற திருப்பலிக்குப்பின் அதில் பங்குபெற்ற வயதான குரு ஒருவர், திருத்தந்தையைக் குறித்து ஆர்வமாக விசாரித்ததை நினைவுகூர்ந்த திருப்பீடப்பேச்சாளர், திருத்தந்தை மீதான அன்பிலும் ஆன்மீக ஐக்கியத்திலும் சீனத்திருச்சபை வளர்ந்து வருவதை உணர முடிகிறது என்றார்.
சீனத்திருச்சபை துன்பங்களை அனுபவித்து வரும் இவ்வேளையில், அத்தலத் திருச்சபைக்காக செபிக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை திருத்தந்தை சுட்டிக்காட்டி வருவது நம் செபங்களுக்கான முக்கிய அழைப்பு என மேலும் கூறினார் இயேசு சபை குரு லொம்பார்தி.

4.  மறைந்து வாழும் சீன கிறிஸ்தவ சபைகள் மத உரிமை கேட்டு விண்ணப்பம்.

மே 21, 2011.  சீன அரசின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் வீடுகளிலேயே மறைவாக வழிபாடுகளை நடத்த தள்ளப்பட்டுள்ள அந்நாட்டு கிறிஸ்தவ அமைப்புகள் சில இணைந்து, மத உரிமை கேட்டு பாராளுமன்றத்திற்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளன.
சீனாவின் கடந்த 60 ஆண்டுகால கம்யூனிச அடக்குமுறை ஆட்சியில் இத்தகைய மதச்சுதந்திர விண்ணப்பம் ஒன்று பாராளுமன்றத்திற்கு சீனக்கிறிஸ்தவர்களாலேயே விடப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும்.
வழிபாட்டிற்கென இடத்தை வாங்க 'சௌவாங் கிறிஸ்தவ சபை' என்ற குழுவிற்கு சீன அரசு அனுமதி மறுத்து வருவதால், திறந்த வெளிகளில் வழிபாடுகளை நடத்தி அரசின் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருவதைத் தொடர்ந்து, இவ்விண்ணப்பம் சீனப் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த துணிச்சலான முயற்சிக்கு அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கானடாவில் பணிபுரியும் சீன கிறிஸ்தவ குருக்களும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.

5.  பள்ளிகளில் நட்புணர்வு கற்பிக்கப்பட வேண்டும் என்கின்றது வத்திக்கான்-இஸ்லாம் கூட்டறிக்கை.

மே 21, 2011.  ஒவ்வோர் இளையோரும் தங்கள் மதத்தனித்தன்மையில் வேரூன்றி வாழவும் பிற மதங்களின் தனித்தன்மைக்குத் தங்களை திறந்தவர்களாகச் செயல்படவும் உதவுவதாக கல்வி நிலையங்கள் இருக்க வேண்டும் என்கிறது, திருப்பீட அவை மற்றும் இஸ்லாம் அமைப்பு இணைந்து நடத்திய கூட்டத்தின் இறுதி அறிக்கை.
மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவை மற்றும் மதங்களிடையேயான உறவு குறித்த கல்விக்கான ஜோர்தான் நாட்டு அமைப்பு இணைந்து நடத்திய இரண்டு நாள் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, மாணவர்கள் பகைமையைக் கற்றுக்கொள்ள அல்ல, மாறாக, தங்களைத் திறந்தவர்களாகச் செயல்பட கல்வி நிலையங்கள் உதவவேண்டும் என்கிறது.
மனித வாழ்வு என்பது புனிதமானது, அதற்கு மீறமுடியாத உரிமைகள் உள்ளன எனக் கூறும் இந்த கூட்டு அறிக்கை, வேறுபாடுகளை மதித்து புரிந்துகொள்வது, உண்மையான பேச்சுவார்த்தைகளுக்கான முன் நிபந்தனை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

6.  திருச்சபையின் பணிகளை பாராட்டுகிறார் எயிட்ஸ் வல்லுனர்.

மே 21, 2011.  ஹெச்.ஐ.வி. பாதிப்பாளர்கள் மற்றும் எயிட்ஸ் நோயாளிகளிடையே திருச்சபை ஆற்றி வரும் பணிகளுக்குத் தன் பாராட்டுதல்களை வெளியிட்டுள்ளார் பிலிப்பீன்ஸின் எய்ட்ஸ் கழகத்தின் தலைவர் ஒஃபேலியா மோன்சொன்.
எய்ட்ஸ் நோயைக் குறித்த தப்பெண்ணங்கள் மற்றும் அந்நோயாளிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய இவர், இந்நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோரிடையே ஆலோசனைகள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கும் திருச்சபையின் பணி மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.
எய்ட்ஸ் நோய்க்கிருமிகள் குறித்து மக்களுக்கு கல்வி மூலமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே இந்நோயை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த முடியும் என இக்கருத்தங்கில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

7.  இலங்கையில் போருக்கு பிறகும் மக்களின் வாழ்க்கை மேம்படவில்லை
 
மே 21, 2011.  இலங்கையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், போரினால் இடம்பெயர்ந்திருந்த மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் வகையில் இடம்பெறவில்லை என்றே பலரும் கூறுவதாக Asia News செய்தி நிறுவனம் அறிவிக்கிறது.
இலங்கைத் தமிழர்களிடையே வேலைவாய்ப்பற்ற நிலைகள் அதிகமாகக் காணப்படுவதாகவும், இதனால் ஏறத்தாழ 48 பேர் தற்கொலை புரிந்துள்ளதாகவும் இச்செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தின் வழியாக விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஆகியோருக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளிலும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் பலரும் தெரிவித்துள்ளனர்.

8.  பெற்றோர்கள் தங்களின் இளமைக் கால படிப்பு கனவை, பிள்ளைகளிடம் திணிப்பதோ, விதைப்பதோ கூடாது.

மே 21, 2011.  "பெற்றோர்கள் தங்களின் இளமைக் கால படிப்புக் கனவை, பிள்ளைகளிடம் திணிப்பதோ, விதைப்பதோ கூடாது,'' என, மதுரை டாப்கிட்ஸ் குழந்தைகள் மனநல மருத்துவர் தீப் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ள நிலையில், குழந்தைகளுக்கான கல்வி குறித்து கருத்து வெளியிட்ட குழந்தைகள் மனநல மருத்துவர் தீப்,  ஆசிரியர்களிடம் நம்பிக்கை வைத்து, பிள்ளைகளை ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் ஆசிரியர்களிடம் ஈடுபாடு ஏற்படும் எனவும், குழந்தைகள் வீடு திரும்பியவுடன் பள்ளியில் ஆசிரியர் அடித்தாரா, சக பிள்ளைகள் அடித்தனரா என எதிர்மறையான கேள்விகள் கேட்கக்கூடாது, ஏனெனில் அதுவே, ஆசிரியர்கள் என்றாலே அடிப்பார்கள் என்ற சிந்தனையை மனதில் பதித்து விடும் என்று எச்சரித்தார்.
எச்சூழலிலும் பக்கத்து வீட்டு பிள்ளைகளுடனோ, உடன் பிறந்தவர்களுடனோ படிப்பை, மதிப்பெண்ணை ஒப்பிட்டு பேச வேண்டாம் என்ற அறிவுரைகளையும் வழங்கியுள்ள குழந்தைகள் மனநல மருத்துவர் தீப், குழந்தைகள் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே, "டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும்' என்ற எண்ணங்களைத் திணிக்காதீர்கள். உங்களது இளமைக்கால படிப்புக் கனவை, பிள்ளைகள் மீது திணிப்பது நியாயமே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஈடுபாடு, திறமை இருக்கும். அத்திறமையைக் கண்டறிந்து, அதைநோக்கி பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...