Wednesday, 18 May 2011

Catholic News - hottest and latest - 18 May 2011

1. சீனக்கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்குமாறு வேண்டுகிறார் பாப்பிறை

2. அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் 60ம் ஆண்டு நிறைவு

3. 125ம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு தயரித்து வருகிறது திருச்சூர் உயர்மறைமாவட்டம்

4. ஹெயிட்டி மக்கள் குறித்த அமெரிக்க அரசின் முடிவுக்கு அமெரிக்க ஆயர் பேரவையின் வரவேற்பு

5. சிறைக் கைதிகளுக்குத் திருப்பலி நிகழ்த்திய இந்தோனேசியாவின் ஆயர்

6. இந்தியாவில் ஊழலை எதிர்த்துப் போராட இயேசு சபையினர் முன்வர வேண்டும் - உச்ச நீதிமன்ற நீதிபதி

----------------------------------------------------------------------------------------------------------------

1. சீனக்கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்குமாறு வேண்டுகிறார் பாப்பிறை

மே 18,2011. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்து வருகின்றபோதிலும், அங்கு கிறிஸ்து ஒதுக்கப்பட்டு, சித்ரவதைப்படுத்தப்படுவதும் தொடர்வதாக தன் புதன் மறைபோதகத்தின் இறுதியில் உரைத்த திருத்தந்தை, சீனத்திருச்சபைக்காகச் செபிக்க வேண்டியது அனைத்து கிறிஸ்தவர்களின் ஓர் உறுதிப்பாடாக மாறவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
சீனாவிலுள்ள ஷங்கையின் ஷேஷான் மரியன்னை திருத்தத்தில் இம்மாதம் 24ம்தேதி சகாய அன்னை விழா சிறப்பிக்கப்பட உள்ளதைப்பற்றியும் குறிப்பிட்ட பாப்பிறை, அகில உலகத் திருச்சபையுடனான ஐக்கியத்திற்கு தன் ஆவலை பலவேளைகளில் வெளிப்படுத்தியுள்ள சீனத்திருச்சபை, நம் அனைவரின் அன்புக்கும் செபத்திற்கும் தகுதியுடையது என்பதை மனதிற்கொண்டு சிறப்பான விதத்தில் அன்னை மரி நோக்கி நம் செபங்களை எழுப்புவோம் என அழைப்பு விடுத்தார்.
தங்கள் ஆயர் பணிகளை மேற்கொள்வதில் தடைகளை எதிர்நோக்கும் சீன ஆயர்கள், ஏன குருக்கள் மற்றும் கத்தோலிக்க விசுவாசிகளுடன் நம் அருகாமையையும் வெளிப்படுத்துவோம் என்றுரைத்தார் திருத்தந்தை.
அகில உலகத் திருச்சபையிலிருந்து பிரிந்து செல்வதற்கான சோதனைகளைக் கைவிட்டு, தலைமைத் திருச்சபையுடனேயே ஒன்றித்திருக்கவும், விசுவாசம், பிறரன்பு மற்றும் நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், சீன கிறிஸ்தவர்களுக்காக அன்னை மரியின் பரிந்துரையின் வழி இறைவனை நோக்கி செபிப்போம் என மேலும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.


2. அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் 60ம் ஆண்டு நிறைவு

மே 18,2011. கத்தோலிக்கத் திருச்சபையின் அன்பைப் பறைசாற்றும் ஒரு முக்கிய அடையாளமாக அனைத்துலக காரித்தாஸ் அமைந்துள்ளதென்று காரித்தாஸ் தலைவர் கர்தினால் Oscar Rodriguez Maradiaga கூறினார்.
இம்மாத இறுதியில் உரோமை நகரில் நடைபெற உள்ள அனைத்துலக காரித்தாஸின் 19வது பொது அவை கூட்டத்தைப் பற்றி அறிவித்த கர்தினால் Maradiaga, இந்தப் பொது அவையின்போது, அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பின் 60ம் ஆண்டு நிறைவும் கொண்டாடப்படும் என்று கூறினார்.
கத்தோலிக்கத் திருச்சபையில் பிறரன்புப் பணிகளில் ஈடுபாட்டிருந்த 13 தனித் தனி அமைப்புக்களை ஒன்றிணைத்து, 1951ம் ஆண்டு அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளின் ஆயர் பேரவை அங்கத்தினர்களையும், ஏனைய பிறரன்புப் பணி நிறுவனங்களின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய இந்த அமைப்பில் தற்போது 163 உறுப்பினர்கள் உள்ளனர்.
'ஒரே மனித குடும்பம், பூஜ்யமாகும் வறுமை' என்பது மே மாத இறுதியில் நடைபெறும் பொது அவையின் மையப் பொருள் என்று கூறிய கர்தினால் Maradiaga, ஒடுக்கப்பட்டோர் பல வழிகளில் அநீதிகளைச் சந்திக்கும் இன்றைய உலகில் அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பின் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் கூடிவருகிறது என்றும் கூறினார்.


3. 125ம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு தயரித்து வருகிறது திருச்சூர் உயர்மறைமாவட்டம்

மே 18, 2011. கேராளாவின் திருச்சூர் உயர்மறைமாவட்டம் துவக்கப்பட்டதன் 125ம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் இடம்பெற உள்ள ஓராண்டுக் கொண்டாட்டத்தை இம்மாதம் 20ந்தேதி, வெள்ளியன்று இந்தியாவிற்கானத் திருப்பீடத்தூதுவர் பேராயர் சல்வத்தோரே பென்னாக்கியோ துவக்கி வைக்க உள்ளார்.
இந்த ஓராண்டு கொண்டாட்டங்கள், வரும் ஆண்டு மே மாதம் நிறைவுக்கு வரும் என்ற திருச்சூர் பேராயர் மார் ஆண்ட்ரூஸ் தழத், இக்கொண்டாட்டங்களுக்கான அழைப்பு திருத்தந்தையிடம் நேரடியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த உயர் மறைமாவட்டத்தின் நூற்றாண்டு நிறைவு கொண்டாட்டங்கள், 1986ம் ஆண்டு திருத்தந்தை இர்ண்டாம் ஜான் பாலால் துவக்கிவைக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார் பேராயர்.
1887ம் ஆண்டு ஒரு இலட்சம் கத்தோலிக்கர்களுடன் உருவாக்கப்பட்ட திருச்சூர் உயர்மறைமாவட்டத்தில் தற்போது ஐந்து இலட்சம் கத்தோலிக்கர்கள் உள்ளனர். இவர்களிடையே 506 குருக்களும் 3000 அருட்கன்னியர்களும் பணியாற்றுகின்றனர்.


4. ஹெயிட்டி மக்கள் குறித்த அமெரிக்க அரசின் முடிவுக்கு அமெரிக்க ஆயர் பேரவையின் வரவேற்பு

மே 18,2011. ஹெயிட்டியின் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் தஞ்சம் புகுந்த ஹெயிட்டி மக்களின் தற்காலிகக் குடியிருப்பு நிலையை நீட்டிக்க அமெரிக்க அரசு அண்மையில் எடுத்துள்ள முடிவை அமெரிக்க ஆயர் பேரவை மகிழ்வுடன் வரவேற்றுள்ளது.
அதே நேரத்தில் தஞ்சம் புகுந்த ஹெயிட்டி மக்களில் குற்றம் புரிந்தவர்கள் என்ற பின்னணி கொண்டவர்களை மீண்டும் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் முடிவை அமெரிக்க அரசு எடுத்திருப்பதை அமெரிக்க ஆயர்கள் குறை கூறியுள்ளனர்.
2010ம் ஆண்டு சனவரியில் ஹெயிட்டியைத் தாக்கிய நிலநடுக்கத்தின் விளைவுகளை அந்நாட்டு மக்கள் இன்னும் அனுபவித்து வரும் வேளையில், தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றும் எண்ணத்தில் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அமெரிக்க அரசு தொடர்ந்து ஆதரவு அளிப்பது அந்நாட்டிற்கு செய்யப்படும் மிகப் பெரும் உதவி என்று அமெரிக்க ஆயர் பேரவையின் குடிபெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவரான பேராயர் Jose Gomez கூறினார்.
ஹெயிட்டியில் சட்டம் ஒழுங்கு இன்னும் சீரமைக்கப்படாத நிலையில் குற்றப்பின்னணி உள்ளவர்களை அந்நாட்டிற்கு மீண்டும் அனுப்புவது என்ற அமெரிக்க அரசின் முடிவு கவலை தருகிறதென்று கத்தோலிக்க நிவாரணப் பணிகளுக்குப் பொறுப்பான ஆயர் Gerald Kicanas கூறினார்.


5. சிறைக் கைதிகளுக்குத் திருப்பலி நிகழ்த்திய இந்தோனேசியாவின் ஆயர்

மே 18,2011. "நான் சிறையில் இருந்தேன்; என்னைக் காண நீ வரவில்லை என்று இயேசு கூறியது என் மனதில் ஒலித்ததால், உங்கள் உள்ளங்களில் குடியிருக்கும் இயேசுவைக் காண நான் இங்கு வந்துள்ளேன்" என்று இந்தோனேசியாவின் ஆயர் ஒருவர் கூறினார்.
இந்தோனேசியாவின் Nusakambangan என்ற தீவில் அமைத்துள்ள மிக அதிகப் பாதுகாப்புச் சிறையில் உள்ள கைதிகளுக்கு இத்திங்களன்று திருப்பலி நிகழ்த்திய இயேசு சபையைச் சார்ந்த ஆயர் Julianus Sunarka, அங்குள்ள கைதிகள் எவ்வளவு ஆழமான குற்றங்கள் புரிந்திருந்தாலும், இறைவன் அவர்களை மன்னிக்கக் காத்திருக்கிறார் என்று கைதிகளிடம் எடுத்துரைத்தார்.
ஆயரின் வருகையும், அவர் ஆற்றியத் திருப்பலியும்  சிறையில் உள்ள கைதிகளுக்குப் பெரும் ஆறுதலையும், ஊக்கத்தையும் அளித்துள்ளதென்று சிறை அதிகாரி Jose Koelo கூறினார்.
இந்தியப் பெருங்கடலில் ஜாவா தீவுக்கருகே அமைத்துள்ள Nusakambangan தீவின் மிக அதிகப் பாதுகாப்புச் சிறையில் பெரும் குற்றங்கள் புரிந்தவர்களும், மரண தண்டனைக்கு உள்ளானவர்களும் மட்டும் வைக்கப்பட்டுள்ளனர் என்று UCAN செய்தி கூறுகிறது.


6. இந்தியாவில் ஊழலை எதிர்த்துப் போராட இயேசு சபையினர் முன்வர வேண்டும் - உச்ச நீதிமன்ற நீதிபதி

மே 18,2011. இந்தியாவில் நிலவும் அநீதிகளையும், ஊழலையும் எதிர்த்துப் போராட இயேசு சபையினர் முன்வர வேண்டுமென்று இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் கேட்டுக்கொண்டார்.
கேரள மாநில இயேசு சபையின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள ஸ்ரீகார்யம் லொயோலா கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி சிரியக் ஜோசப், இயேசு சபையினர் இந்திய சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய முக்கியப் பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.
இயேசு சபையினரிடம் தான் பெற்ற கல்வியைப் பற்றி பெருமையுடன் நினைவு கூர்ந்த நீதிபதி சிரியக் ஜோசப், கத்தோலிக்கத் திருச்சபை சமூகப்பணிகளில் புது முயற்சிகளை மேற்கொள்வதற்கு இயேசு சபையினர் எப்போதும் தங்கள் முழு ஆதரவை வழங்கி வந்திருப்பதைப் பாராட்டினார்.
இந்திய இளையோருக்கு, அதிலும் சிறப்பாக வறுமைச் சூழ்நிலையில் இருந்து வரும் இளையோருக்கு பல வழிகளிலும் கல்விப் பணிகள் செய்து வரும் இயேசு சபையினர், இந்தியாவில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க இன்னும் பல வழிகளில் போராட வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...