Tuesday, 17 May 2011

Catholic News - hottest and latest - 17 May 2011

1.  குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகளைக் கையாளும் முறை குறித்த விதிகள், ஏற்கனவே பல ஆயர் பேரவைகளில் உள்ளன.

2.  ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி அலுவலகத்தின் இளைஞர் கூட்ட ஏற்பாடு.

3.  மியான்மாரிலும் இலங்கையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உள்ளது கொரிய கத்தோலிக்க அமைப்பு.

4.  அரசியல்வாதிகளுக்காக தங்களுடன் இணைந்து செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர் நேபாள மதத்தலைவர்கள்.

5.  சீனாவின் முக்கிய மருத்துவமனைகளில் எயிட்ஸ் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மறுக்கப்படுவதாக ILO உரைக்கிறது.

----------------------------------------------------------------------------------------------------------------

1.  குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகளைக் கையாளும் முறை குறித்த விதிகள், ஏற்கனவே பல ஆயர் பேரவைகளில் உள்ளன.

மே 17, 2011.  உலகிலுள்ள பல்வேறு நாடுகளின் ஆயர் பேரவைகள், குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகளைக் கையாளும் முறை குறித்த விதிகள் அடங்கிய ஏட்டைத் தயாரிக்கவேண்டும் என திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ள போதிலும், ஏற்கனவே பல நாடுகளில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக அறிவித்தார் திருப்பீடப்பேச்சாளர்.
குருக்களின் தவறானப் பாலியல் நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு உதவும் வகையிலான வழிகாட்டு விதிகளை திருப்பீடம் உலகின் ஆயர் பேரவைகளுக்கு அனுப்பியுள்ளது பற்றிக் குறிப்பிட்ட இயேசுசபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி, ஆங்கிலம் பேசும் நாடுகளுள் பல ஏற்கனவே இத்தகைய விதிகள் அடங்கிய ஏட்டை தயாரித்துள்ளதாகவும், அவைகளுள் அமெரிக்க ஐக்கிய நாடு, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, மால்டா, ஆஸ்திரேலியா, கானடா ஆகியவை முக்கியமானவை எனவும் தெரிவித்தார்.
பிலிப்பீன்ஸ், பிர‌சில், சிலே,ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் ஏற்கனவே இது குறித்த விதிகளைத் தயாரித்துள்ளதாகவும், இந்தியா, வெனிசுவேலா, ஹாலந்து, ஸ்வீடன், பெல்ஜியம், இத்தாலி ஆகியவைகளில் இதற்கான தயாரிப்புகள் ஏற்கனவே துவங்கியுள்ளதாகவும் மேலும் கூறினார் குரு லொம்பார்தி.

2.  ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி அலுவலகத்தின் இளைஞர் கூட்ட ஏற்பாடு.

மே 17, 2011.  ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான திருப்பீட நிரந்தரப்பார்வையாளர் அவை மற்றும் சில கத்தோலிக்க அமைப்புகள் இணைந்து வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி இளையோர் குறித்த உயர்மட்டக் கூட்டம் ஒன்றை ஐநாவில் நடத்த உள்ளன.
இளையோர் குறித்தும் உலக இளையோர் தினம் குறித்தும் விவாதிக்க உள்ள இக்கூட்டத்தின்போது இளையோருக்கான ஃபெர்னாண்டோ ரியேலோ விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய இளையோர் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்னைகள் மற்றும் மனித வாழ்வைப் பாதுகாத்து முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து கருத்துக்களைப் பரிமாற  இக்கருத்தரங்கு நல்லதொரு வாய்ப்பை இளையோருக்கு வழங்கும் என இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோர் அறிவித்துள்ளனர்.
மரணக் கலாச்சாரத்தை வாழ்வுக் கலாச்சாரமாக மாற்றுவதற்கான உண்மைநம்பிக்கை ஆகியவைகளின் வழிகாட்டிகளாக கருத்துக்களை முன் வைக்கும் இளையோருக்கு ஃபெர்னாண்டோ ரியேலோ அமைப்பின் விருதாக, மத்ரித் உலக இளையோர் தினத்திற்கான பயணம் ஏற்பாடுச் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3.  மியான்மாரிலும் இலங்கையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உள்ளது கொரிய கத்தோலிக்க அமைப்பு.

மே 17, 2011.  கொரியாவின் Gwangju மனித உரிமைகள் அமைதி அமைப்பால் அண்மையில் திரட்டப்பட்டுள்ள 90,000 டாலர் நிதியின் பெரும்பகுதி மியான்மார் அகதிகளுக்கும், உள்நாட்டுப் போரிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார் கொரிய பேராயர் Hyginus Kim Hee-jung.
Gwangju பகுதியில் 1980ம் ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சியின்போது கொல்லப்பட்ட மக்களின் நினைவாக, கடந்த அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்டுள்ள இந்த மனித உரிமைகள் நிதி, உலகின் பல்வேறு நாடுகளில் சுதந்திரத்திற்காகப் போராடி வரும் மக்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் சியாங் மாய் பகுதியிலுள்ள பூர்வீகக்குடி பெண்களுக்கும், நேபாளத்தின் தலித் இன மக்களுக்கும் இந்நிதி மூலம் உதவ உள்ளதாகவும் அறிவித்தார் பேராயர் Kim Hee-jung.

4.  அரசியல்வாதிகளுக்காக தங்களுடன் இணைந்து செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர் நேபாள மதத்தலைவர்கள்.

மே 17, 2011.  நேபாளத்தில் இடம்பெற்றுவரும் அரசியல் நிலையற்ற தன்மைகளை எதிர்கொள்ளும் மக்கள் பிறரைக் குற்றஞ்சாட்டுவதை விடுத்து, அரசியல்வாதிகளுக்காகத் தங்களுடன் இணைந்து செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு மதத்தலைவர்கள்.
க‌டந்த‌ மூன்று ஆண்டுக‌ளாக‌ புதிய‌ அர‌சிய‌ல‌மைப்பை வ‌டிவ‌மைப்பதில் த‌ங்க‌ளை ஈடுப‌டுத்தியும் வெற்றி காணாத‌ நேபாள‌ அர‌சிய‌ல்வாதிக‌ள், த‌ங்க‌ள் செய‌ல்பாடு குறித்து வெட்க‌ப்ப‌ட‌ வேண்டும் என அறிவித்த‌ அந்நாட்டின் கிறிஸ்த‌வ‌, இந்து, இஸ்லாம் ம‌ற்றும் புத்த‌மதப் பிர‌திநிதிக‌ள், அர‌சிய‌ல்வாதிக‌ளுக்காக‌ ஒன்றிணைந்து செபிக்க‌வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌த்தையும் வ‌லியுறுத்தின‌ர்.
நேபாள‌த்தின் ப‌ல்வேறு ம‌த‌ங்க‌ளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாய் வாழ்வ‌தைக் காணும் ம‌க்க‌ள், இன‌ ரீதியாக‌ பிரிவினைக‌ளை வேண்டுவ‌தைக் கைவிட்டு ஒற்றுமையில் வாழ‌ முன்வ‌ர‌ வேண்டும் என‌ மேலும் அழைப்பு விடுத்த‌ன‌ர் ம‌த‌ப்பிர‌திநிதிக‌ள்.
நாட்டின் வ‌ருங்கால‌த்தை வ‌டிவ‌மைப்ப‌தில் ம‌த‌த்த‌லைவ‌ர்க‌ளின் ஆலோச‌னைக‌ளும் பெற‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌து குறித்த‌ விழிப்புண‌ர்வு இளைஞ‌ர்க‌ளில் எழ‌ வேண்டும் என‌வும் அவர்கள் கூறின‌ர்.

5.  சீனாவின் முக்கிய மருத்துவமனைகளில் எயிட்ஸ் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மறுக்கப்படுவதாக ILO உரைக்கிறது.

மே 17, 2011.  எயிட்ஸ் நோய் குறித்த அறியாமையாலும் அச்சத்தாலும் சீனாவின் முக்கிய மருத்துவமனைகளில் எயிட்ஸ் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மறுக்கப்பட்டு வருவதாக ஐ.நா. நிறுவனம் ஒன்று அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
134 கோடி மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் 7,40,000 பேர் HIV நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும் 1,05,000 பேர்  AIDS நோயாளிகளாக உள்ளதாகவும் தெரிவிக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பான ILO வின் அறிக்கை, சீனாவில் இந்நோயாளிகளுக்கு மருத்துவப் பணியாளர்களால் சிகிச்சைகள் மறுக்கப்படுவதாகவும், அவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாகவும் அண்மை ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாகக் கூறுகிறது.
சீனாவின் 103 நோயாளிகள் மற்றும் 23 மருத்துவப் பணியாளர்களிடம் அண்மையில் ILO அமைப்பு நடத்திய பேட்டிகள் மூலம், சீனாவில் எயிட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சைகள் மறுக்கப்படும் விவரங்கள்  தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...