Thursday, 12 May 2011

Catholic News - hottest and latest - 12 May 2011

1. B'nai B'rith International என்ற ஓர் அகில உலக யூத அமைப்பினருடன் திருத்தந்தை சந்திப்பு

2. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பான் பகுதிகளை, திருத்தந்தையின் சார்பில் பார்வையிடச் செல்லும் கர்தினால் Robert Sarah

3. பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்கள் அதிகத் துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர் - பேராயர் இலாரன்ஸ் ஜான் சல்தானா

4. ஒரிஸ்ஸாவில் சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதியைக் கொன்றவர்கள் தீவிர இடது சாரி மாவோயிஸ்ட் குழுவினரே

5. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவச் சமுதாயத்தைக் காக்கவேண்டும் - இந்திய அரசுத் தலைவரிடம் விண்ணப்பங்கள்

6. பொது வாழ்வில் பணிகளை மேற்கொள்ள இலங்கையின் வட பகுதி பெண்களுக்குப் பயிற்சிகள்

7. ஒவ்வொரு நாளும் உலகில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது - ஐ.நா. அறிக்கை

----------------------------------------------------------------------------------------------------------------

1. B'nai B'rith International என்ற ஓர் அகில உலக யூத அமைப்பினருடன் திருத்தந்தை சந்திப்பு

மே 12,2011. யூதர்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து இறைவனின் திருவுளப்படி உலகை முன்னேற்றும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட முடியும் என்று திருத்தந்தை கூறினார்.
மனித நலம், மனித உரிமைகள் ஆகியவற்றை நிலைநிறுத்த உழைத்து வரும் B'nai B'rith International என்ற ஓர் அகில உலக யூத அமைப்பின் உறுப்பினர்களை இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் நோக்குடன் உருவான கத்தோலிக்க-யூத உரையாடல் குழு இவ்வாண்டு பிப்ரவரி மாதம்  பாரிஸ் நகரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் B'nai B'rith International அமைப்பின் உறுப்பினர்கள் ஆர்வமாய் பங்கேற்றதற்கு தன் நன்றியைக் கூறினார் திருத்தந்தை.
மனித சமுதாயத்தின் துயர் துடைக்கும் பணிகளிலும், பிறரன்புச் சேவைகளிலும் அதிகமாய் ஈடுபடும் கிறிஸ்தவ மற்றும் யூத அமைப்புக்கள், கடவுளின் சாயலாக உருவான மனிதர்களின் அடிப்படை மதிப்பை நிலை நிறுத்துவதில் இன்னும் ஒருமித்த கருத்துடன் உழைப்பது அவசியம் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார் பாப்பிறை.
மனித சமுதாயம் கண்டுவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இவ்வுலக அளவிலேயே தீர்வுகளைக் காண விழையும் நமது இன்றைய சமுதாயத்தின் பார்வையை, கண்ணுக்குப் புலப்படாத இறைவனை நோக்கித் திருப்பும் முயற்சிகளில் கிறிஸ்தவர்களும், யூதர்களும் இணைவது மிக அவசியமான ஒரு பணி என்று திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.


2. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பான் பகுதிகளை, திருத்தந்தையின் சார்பில் பார்வையிடச் செல்லும் கர்தினால் Robert Sarah

மே 12,2011. ஜப்பானில் இவ்வாண்டு மார்ச் மாதம் 11ம் தேதி இடம்பெற்ற நிலநடுக்கத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை, திருத்தந்தையின் சார்பில் பார்வையிடச் செல்கிறார் கர்தினால் Robert Sarah
இவ்வெள்ளி முதல் வரும் திங்கள் வரை நான்கு நாட்கள் ஜப்பானில் பயணம் மேற்கொள்ளும் திருப்பீடத்தின் பிறரன்புப் பணிகளுக்கான 'Cor Unum' அமைப்பின் தலைவர் கர்தினால் Sarah நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் அவர்களிடையே பணிபுரியும் குழுக்களை நேரடியாகச் சந்தித்து, திருத்தந்தையின் ஆறுதலையும், ஊக்கத்தையும் வழங்குவார் என திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
நிலநடுக்கத்தின் விளைவாக உறைவிடங்களை இழந்து, தலத் திருச்சபையின் உதவி மையங்களில் வாழ்ந்து வரும் மக்களை இச்சனிக்கிழமையன்று சந்திக்கும் கர்தினால், பின்னர் தலை நகர் டோக்கியோ சென்று திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அருளாளராக அறிவிக்கப்பட்டதற்கான நன்றித் திருப்பலியை ஜப்பான் ஆயர்களுடன் இணைந்து நிறைவேற்றுவார்.
இப்பேரிடரின் மையப்  பகுதியான Sendai நகர் சென்று, அங்குள்ள பேராலயத்தில் ஞாயிறன்று திருப்பலி நிகழ்த்துவார். இம்மாதம் 16 ம் தேதி, திங்களன்று உதவி மையங்களைப் பார்வையிடுவதுடன், பிறரன்பு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வார் கர்தினால் Sarah.


3. பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்கள் அதிகத் துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர் - பேராயர் இலாரன்ஸ் ஜான் சல்தானா

மே 12,2011. பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்களின் வாழ்வு, முக்கியமாக, உழைக்கும் மக்களின் வாழ்வு, ஒவ்வொரு நாளும் அதிகத் துன்பங்களுக்கு உள்ளாகிறதென்று அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
சிறுபான்மையினராய் இருக்கும் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினரான இஸ்லாமியரின் சந்தேகத்திற்கு நாளும் ஆளாவதால், ஒவ்வொரு நாளும் பயத்துடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர் என்று லாகூரின் ஒய்வு பெற்ற பேராயர் இலாரன்ஸ் ஜான் சல்தானா ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு இரு வாரங்கள் கழிந்தும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக எந்நேரமும் வன்முறைகள் வெடிக்கலாம் என்ற பயம் அவர்களைச் சூழ்ந்துள்ளதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
இந்தப் பதட்டமானச் சூழலில் கிறிஸ்தவப் பள்ளிகள் நம்பிக்கை ஒளியை வழங்கி வருகின்றன என்றும், கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் பெரும்பான்மை மாணவ மாணவியர் இஸ்லாமியராக இருப்பதால், அங்கு வழங்கப்படும் நல்ல கல்வித்தரம் கிறிஸ்தவர்கள் மீது மதிப்பை உருவாக்கி வருவதைக்  காணலாம் என்றும் பேராயர் சல்தானா சுட்டிக் காட்டினார்.
இறுக்கமான இச்சூழலிலும் பாகிஸ்தான் கத்தோலிக்கர்கள் திருப்பலிகளில் பெருமளவில் பங்கு பெறுவதைக் காணும்போது, நம்பிக்கை கூடுகிறதென்று பேராயர் வலியுறுத்திக் கூறினார்.


4. ஒரிஸ்ஸாவில் சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதியைக் கொன்றவர்கள் தீவிர இடது சாரி மாவோயிஸ்ட் குழுவினரே

மே 12,2011. 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதியைக் கொன்றவர்கள் தீவிர இடது சாரி மாவோயிஸ்ட் குழுவினரே என்று ஒரிஸ்ஸா மாநில புலனாய்வுத் துறையின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இத்திங்களன்று வெளியான இவ்வறிக்கையின்படி, மாவோயிஸ்ட் குழுவின் தலைவரான Sabyasachi Panda உட்பட, 14 பேர் கொண்ட மாவோயிஸ்ட் குழுவினரே இக்கொலையைச் செய்தனர் என்று தெரிய வந்துள்ளது.
சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதியைக் கொன்றவர்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறி, இந்துத் தீவிரவாத அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் கூட்டத்தினர் ஒரிஸ்ஸா கிறிஸ்தவர்கள் மீது வன்முறைகளை மேற்கொண்டதால், 1000க்கும் அதிகமான கிறிஸ்தவர்களின் இல்லங்கள், 100க்கும் அதிகமான கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்கள் பெருமளவில் தாக்கப்பட்டன; 100க்கும் அதிகமான கிறிஸ்தவர்களின் உயிர்கள் பலியாயின.
சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதியின் கொலையில் எவ்வித ஆதாரமும் இல்லாமல், கிறிஸ்தவர்கள் மீது குற்றம் சாட்டிய  விஷ்வ இந்து பரிஷத் கூட்டத்தினர் இந்திய மக்களிடமும், அகில உலக சமுதாயத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அகில உலக இந்தியக் கிறிஸ்தவர்கள் சங்கத்தின் தலைவரான Sajan K. George கூறினார். இது மட்டுமின்றி, வன்முறைகளை இந்தியாவில் வளர்த்து வரும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினை அரசு தடை செய்ய வேண்டுமென்றும் George கேட்டுக் கொண்டார்.


5. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவச் சமுதாயத்தைக் காக்கவேண்டும் - இந்திய அரசுத் தலைவரிடம் விண்ணப்பங்கள்

மே 12,2011. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவச் சமுதாயத்தைக் காக்கும்படி வலியுறுத்தி, இந்திய அரசுத் தலைவர் பிரதிபா பாட்டிலிடம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.
அகில உலக இந்தியக் கிறிஸ்தவர்கள் சங்கமும், மத அடிப்படைவாதம் சாராத கத்தோலிக்க அமைப்பு ஆகிய இரு குழுக்களும் அண்மையில் இந்திய அரசுத் தலைவரைச் சந்தித்து, தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.
ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மத்திய இந்திய மாநிலங்களிலும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய தெற்கு மாநிலங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாய் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுந்துள்ள வன்முறைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகியுள்ளன என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இக்குழுக்கள் அரசுத் தலைவரையும், துணைத் தலைவர் Mohammed Ansariயையும் நேரில் சந்தித்து சமர்ப்பித்துள்ள இந்த விண்ணப்பங்களில் காவிமயமான இந்திய மாநிலங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாய் 1000க்கும் அதிகமான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், 100க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்குச் சாட்சி பகர உயிர் துறந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.


6. பொது வாழ்வில் பணிகளை மேற்கொள்ள இலங்கையின் வட பகுதி பெண்களுக்குப் பயிற்சிகள்

மே 12,2011. இலங்கையின் வட பகுதிகளில் ஏற்பட்ட போரினால், ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகக் குறைந்திருப்பதால், அப்பகுதிகளில் பணிபுரியும் காரித்தாஸ் அமைப்பு, பொது வாழ்வில் பணிகளை மேற்கொள்ள பெண்களுக்குப் பயிற்சிகள் அளித்து வருகிறது.
போரில் உயிரிழத்தல், இடைக்கால முகாம்களில் தடுக்கப்படுதல், பிற நாடுகளுக்குச் செல்லுதல் ஆகிய காரணங்களால் வட பகுதியில் ஆண்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளதென்று காரித்தாஸ் பணியாளர்கள் கூறுகின்றனர்.
போரினால் கைம்பெண் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பெண்கள் உட்பட வட பகுதியில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் கிள்ளிநொச்சிப் பகுதியில் பணிபுரியும் காரித்தாஸ் அமைப்பினர், பங்குத் தளங்கள் வழியாக, தலைமைத்துவப் பயிற்சிகள் அளித்து வருகின்றனர்.
பெண்கள் என்றால் வீட்டில் மட்டுமே வேலை செய்பவர்கள் என்ற பரம்பரைக் கருத்தை விட்டு விலகி, இப்பெண்கள் சமுதாயத்தில் தலைமைத்துவப் பணிகளில் ஈடுபடவும், சட்டம் தொடர்பான விடயங்களிலும் அவர்களுக்குத் தேவையான வழிநடத்துதலைத் தரவும் காரித்தாஸ் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதென்று கிள்ளிநொச்சி காரித்தாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Arulanandam Johnaly Yavis கூறினார்.


7. ஒவ்வொரு நாளும் உலகில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது - ஐ.நா. அறிக்கை

மே 12,2011. ஒவ்வோர் ஆண்டும் உலகில் ஒரு பில்லியன், அதாவது, 100 கோடி டன் உணவு வீணாகிறது என்று ஐ.நா. அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் பணித்த ஒரு ஆய்வினை மேற்கொண்ட சுவீடன் நாட்டு உணவு நிறுவனம் இப்புதனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, ஒவ்வொரு நாளும் உலகில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறதென்று கூறப்பட்டுள்ளது.
வளரும் நாடுகளில் உணவு உற்பத்தி, மற்றும் பகிரும் முறைகள் இவற்றில் உள்ள குறைகளால் உணவு பாழடைகிறதென்றும், வளர்ந்துள்ள நாடுகளில் உணவு தேவைக்கும் அதிகமாகச் செய்யப்பட்டு, அவை வீணாக்கப்படுகிறதென்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
வளர்ந்துள்ள, தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் 670 மில்லியன், அதாவது 67 கோடி டன் உணவுப் பொருட்களும், வளரும் நாடுகளில் 630 மில்லியன், அதாவது, 63 கோடி டன் உணவும் வீணாக்கப்படுகின்றன என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
ஐரோப்பா, மற்றும் வட அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வோர் ஆண்டொன்றுக்கு சராசரி 100 கிலோ எடையுள்ள உணவை வீணாக எறிகின்றனர் என்றும், ஆசியா, ஆப்ரிக்கப் பகுதிகளில் வாழும் ஒவ்வொரு மனிதரும் சராசரி 6 முதல் 11 கிலோ எடையுள்ள உணவை வீணாக எறிகின்றனர் என்றும் ஐ.நா.வெளியிட்ட இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...