Saturday, 7 May 2011

Catholic News - hottest and latest - 07 May 2011


1. திருத்தந்தை : இத்தாலியின் பொதுநிலை கத்தோலிக்கர் அந்நாட்டின் பல நெருக்கடியான காலங்களில் தூண்களாக இருந்துள்ளார்கள்

2. அரபு நாடுகளில் புரட்சிகளை ஊக்குவிக்காதீர்கள், மேற்கத்திய தலைவர்களுக்கு மெல்கித்தே முதுபெரும் தலைவர் வேண்டுகோள்

3. இந்தோனேசிய ஆயர்கள் : ASEAN உச்சி மாநாடு, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

4. ஐவரி கோஸ்டில் இடம் பெற்ற கடும் சண்டை ஏழைகளை மேலும் ஏழைகளாக்கியிருக்கின்றது

5. அமெரிக்க ஐக்கிய நாட்டில் குருத்துவ வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் போக்கு இளம் வயதினர் மத்தியில் அதிகரித்து வருகின்றது

6. பான் கி மூன் : 2011ம் ஆண்டில் சனநாயகத்தைக் கட்டி எழுப்ப முயற்சிக்கும் நாடுகளுக்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஓர் எடுத்துக்காட்டாக இருக்க முடியும்

7. கஜக்ஸ்தான், யுரேனியம் விநியோகிப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றது

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இத்தாலியின் பொதுநிலை கத்தோலிக்கர் அந்நாட்டின் பல நெருக்கடியான காலங்களில் தூண்களாக இருந்துள்ளார்கள்

மே07,2011. தங்களது திறமைகள் அனைத்தையும், தங்களது வாழ்க்கையின் ஆன்மீகம், அறிவு, நன்னெறி ஆகிய அனைத்தையும் தாராளத்துடன் அர்ப்பணிக்கக்கூடியவர்கள், இன்றைய இத்தாலி நாட்டின் பொது வாழ்வுக்குத் தேவைப்படுகிறார்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலிய வரலாற்றில் பல நெருக்கடியான கட்டங்கள் வழியாக அந்நாடு கடந்து வந்துள்ளது, அச்சமயங்களில் அரசியலிலும் நிறுவனங்களிலும் வேலை செய்த மிகுந்த பக்தியுள்ள பொதுநிலை கத்தோலிக்கரால் நாடு மீண்டும் உயிரூட்டம் பெற்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
இத்தாலிய தேசிய பொதுநிலை கத்தோலிக்கக் கழகத்தின் 14வது மாநாட்டிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, இந்தக் கழகத்தினர் விசுவாசத்தின் அழகை எடுத்துச் சொல்பவர்களாகத் தொடர்ந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.
உரோமையில் இவ்வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள மூன்று நாள் மாநாட்டிற்குத் திருத்தந்தை அனுப்பிய செய்தியில், கத்தோலிக்கர், இக்காலத்திய  மாயைத் தோற்றங்களில் சிக்கி விடாமலும் அதேசமயம் நம்பிக்கையையும் மாண்பையும் இழக்காமலும் வாழ வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தாங்கள் கடவுளின் குழந்தைகள் என்ற தங்களது உரிமைகள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சூழலில், நீதி, அமைதி, சுதந்திரம், உணவு ஆகியவைகளுக்காக உழைக்குமாறும் திருத்தந்தை தனது செய்தியில் கேட்டுள்ளார்.
இவ்வெள்ளிக்கிழமை தொடங்கிய 14வது தேசிய பொதுநிலை கத்தோலிக்கக் கழக  மாநாடு இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.

2. அரபு நாடுகளில் புரட்சிகளை ஊக்குவிக்காதீர்கள், மேற்கத்திய தலைவர்களுக்கு மெல்கித்தே முதுபெரும் தலைவர் வேண்டுகோள்

மே07,2011. மத்திய கிழக்குப் பகுதியை தற்போது உலுக்கியுள்ள பொதுமக்கள் கிளர்ச்சிகளுக்கு மேற்கத்திய தலைவர்கள் ஊக்கம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சிரியாவை மையமாகக் கொண்ட மெல்கித்தே கிரேக்க-கத்தோலிக்க ரீதி திருச்சபையின் முதுபெரும் தலைவர் மூன்றாம் கிரகோரியோஸ் கேட்டுக் கொண்டார்.
எங்களது அரபு நாடுகள் புரட்சிகளுக்கும், ஏன், ஐரோப்பாவில் இருக்கும் சனநாயகத்தைப் போன்றதோர் அமைப்பிற்குக்கூடத் தயாராக இல்லை என மேற்கத்தியத் தலைவர்களுக்கு அக்கத்தோலிக்கத் தலைவர் அண்மையில் அனுப்பிய கடிதம் கூறுகிறது.
அராபிய உலகத்தில் இங்கும் அங்கும் காலவரையறையற்ற புரட்சிகளை ஊக்குவிக்க வேண்டாமென மேற்கத்திய நாடுகளின் தலைவர்களைத் தான் கேட்டுக் கொள்வதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அத்தலைவர்.
சிரியாவில் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தும் மக்களில் நூற்றுக்கணக்கானவர்களை அரசுத் துருப்புக்கள் கொலை செய்துள்ளன.

3. இந்தோனேசிய ஆயர்கள் : ASEAN உச்சி மாநாடு, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

மே07,2011. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ASEAN நாடுகளின் தலைவர்கள் இச்சனிக்கிழமை தொடங்கியுள்ள 18வது உச்சி மாநாடு, அப்பகுதியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது குறித்து கலந்தாலோசிக்கும் என்ற தங்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் இந்தோனேசிய ஆயர்கள்.
பத்து நாடுகளின் கூட்டமைப்பான ASEAN அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாடானது வெறும் கூட்டமாக மட்டும் அமைந்து விடாமல், அந்நாடுகளில் மக்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக அமைய வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக இந்தோனேசிய ஆயர் பேரவையின் அருள்திரு Antonius Benny Susetyo கூறினார்.
ASEAN நாடுகளின் மக்களின் முன்னேற்றத்திற்கு கல்வி மிகவும் இன்றியமையாதது என்று இந்தோனேசிய கத்தோலிக்க அறிவாளர் கழகத் தலைவர் Mulyawan Margadana கூறினார்.
"நாடுகளின் உலகளாவிய குழுமத்தில் ASEAN குழுமம்" என்ற தலைப்பில் இம்மாநாடு தொடங்கியுள்ளது.

4. ஐவரி கோஸ்டில் இடம் பெற்ற கடும் சண்டை ஏழைகளை மேலும் ஏழைகளாக்கியிருக்கின்றது

மே07,2011. ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டில் நான்கு வாரங்களாக இடம் பெற்ற கடும் சண்டைக்குப் பின்னர் தற்போது அமைதி திரும்பியிருந்தாலும், சச்சரவு செய்பவர்கள் இன்னும் தங்கள் செயல்களை நிறுத்தவில்லை என்று திருக்குடும்ப சபை அருள்சகோதரி ரொசாரியா தெரிவித்தார்.
இந்த நிலைமை உடனடியாக மாற்றக்கூடியது அல்ல என்றுரைத்த அச்சகோதரி, கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து நான்கு வாரங்களாக இடம் பெற்ற கடும் மோதல்களில் காயம்பட்டவர்களின் உடல்களிலிருந்து எத்தனை குண்டுகளை அகற்றினேன் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை என்றார்.
இந்த நான்கு வாரப் போரானது ஏழைகளை மேலும் ஏழைகளாக்கியிருக்கின்றது என்ற அவர், ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரை அயராது வேலை செய்தோம், தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளித்தோம் என்றார்.

5. அமெரிக்க ஐக்கிய நாட்டில் குருத்துவ வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் போக்கு இளம் வயதினர் மத்தியில் அதிகரித்து வருகின்றது

மே07,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் குருத்துவ வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் போக்கு இளம் வயதினர் மத்தியில் அதிகரித்து வருகின்றது என அந்நாட்டு ஆயர் பேரவை வெளியிட்ட புள்ளி விபரக் கணக்கெடுப்புக் கூறுகிறது.
இவ்வாண்டில் குருத்துவ திருநிலைப்பாட்டைப் பெற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 25க்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதிலிருந்து இளவயது குருக்களின் திருநிலைப்பாடு அதிகரித்து வருவதை அது காட்டுகின்றது என்று அக்கணக்கெடுப்பு மேலும் கூறியது.
இவர்களில் 69 விழுக்காட்டினர் ஐரோப்பிய அமெரிக்க இனத்தைச் சேர்ந்த வெள்ளையர்கள், 15 விழுக்காட்டினர் இலத்தீன் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் 10 விழுக்காட்டினர் ஆசிய பசிபிக் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாண்டில் குருத்துவ திருநிலைப்பாட்டைப் பெற்றவர்களில் 21 விழுக்காட்டினர், குருத்துவப் பயிற்சிக்  கல்லூரியில் சேருவதற்கு முன்னர் உலக இளையோர் தினத்தில் கலந்து கொண்டவர்கள் எனவும் அமெரிக்க ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது

6. பான் கி மூன் : 2011ம் ஆண்டில் சனநாயகத்தைக் கட்டி எழுப்ப முயற்சிக்கும் நாடுகளுக்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஓர் எடுத்துக்காட்டாக இருக்க முடியும்

மே07,2011. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சனநாயகத்தை நோக்கிய புதிய அமைப்பு முறைக்குச் சென்ற மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அனுபவங்கள் தற்போது அரபு நாடுகளுக்கு முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருகின்றன என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
2011ம் ஆண்டில் சனநாயகத்தைக் கட்டி எழுப்ப முயற்சிக்கும் நாடுகளுக்கு மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஓர் எடுத்துக்காட்டாக இருக்க முடியும் என்று பல்கேரியாவுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் கூறினார் பான் கி மூன்.
சோஃபியா நகரில் நடைபெற்ற நிருபர் கூட்டத்தில் இவ்வாறு உரைத்த ஐ.நா.பொதுச் செயலர், 1989ம் ஆண்டில் ஐரோப்பா எவ்வாறு சனநாயகத்தைத் தழுவியது என்பது, இந்த 2011ம் ஆண்டில் சனநாயகத்தை அமைக்க முயற்சிக்கும் நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என்று கூறினார்.

7. கஜக்ஸ்தான், யுரேனியம் விநியோகிப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றது

மே07,2011. கஜக்ஸ்தான் குடியரசு, இரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளுக்கு யுரேனியம் விநியோகிப்பதில் உலகில் முக்கிய இடம் வகிக்கின்றது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
கஜக்ஸ்தான் நாட்டை பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கைக்குரிய பங்காளராக நோக்குவதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியது.
2010ம் ஆண்டில் உலகில் யுரேனியம் தயாரிப்பு ஆறு விழுக்காடு அதிகரித்திருந்ததாகவும் அதாவது உலகில் 2009ல் 50,772  டன்களாக இருந்த யுரேனிய உற்பத்தி 2010ல் 53,663  ஆக அதிகரித்தது எனவும் உலக அணு கழகம் கூறியது. எனினும் இத்தயாரிப்பைக் கனடாவும் ஆஸ்திரேலியாவும் குறைத்து வருகின்றன, அதேசமயம் கஜக்ஸ்தான் இதே காலக்கட்டத்தில் 17,803 டன்களை அதிகரித்திருக்கின்றது, இது 2018ல் முப்பதாயிரம் டன்னை எட்டக்கூடும் என்றும் உலக அணு கழகம் கூறியது. 
உலகில் தற்போது 53 புதிய அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 2030ல் மேலும் 500 அணுமின் நிலையங்கள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...