Friday, 6 May 2011

Catholic News - hottest and latest - 03 May 2011

1. மே 26ம் தேதி மேரி மேஜர் பசிலிக்கா செல்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

2. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களது சவப்பெட்டி புனித செபஸ்தியார் பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது

3. குடியேற்றதாரர் இறைவார்த்தையை அறிவிக்க உதவ முடியும் பேராயர் வேலியோ

4. வலைத்தளத்தில் தங்கள் படைப்புக்களை வெளியிடும் உயிர்த்துடிப்புமிக்க கத்தோலிக்க பிளாக்கர்கள் திருச்சபைக்குத் தேவை - வத்திக்கான் அதிகாரி

5. இத்தாலியும் நேட்டோ படைகளும் ஒரு வார இடைக்காலப் போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி வலியுறுத்தல்

6. ஊடகவியலார் புதிய டிஜிட்டல் ஊடகத்துறையைப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துமாறு அனைத்துலக கிறிஸ்தவச்  சமூகத்தொடர்பு கழகம் வலியுறுத்தல்

7. பத்திரிகையாளர்களுக்கானப் பாதுகாப்பு குறைந்து வருகிறது - பான் கி மூன் கவலை

8. பின்லேடன் கொல்லப்பட்ட நகரில் கத்தோலிக்கர் தங்கள் மத நடவடிக்கைகளைக் குறைத்துள்ளனர்

----------------------------------------------------------------------------------------------------------------

1. மே 26ம் தேதி மேரி மேஜர் பசிலிக்கா செல்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

மே03,2011. இத்தாலி ஒன்றிணைந்த நாடாக உருவானதன் 150ம் ஆண்டையொட்டி அன்னை மரியாவிடம் நாட்டை அர்ப்பணிக்கும் நோக்கத்தில் இம்மாதம் 26ம் தேதி உரோம் மேரி மேஜர் பசிலிக்காவில் நடைபெறவிருக்கும் செப வழிபாட்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ முன்வைத்த அழைப்பை ஏற்று மே 26ம் தேதி வியாழன் மாலை 5.30 மணிக்கு மேரி மேஜர் பசிலிக்காவில் சொல்லப்படும் செபமாலை பக்தி முயற்சியில் இத்தாலிய ஆயர்களுடன் திருத்தந்தையும் கலந்து கொள்வார் என்று பாப்பிறை இல்ல நிர்வாகம் அறிவித்தது.
   
2. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களது சவப்பெட்டி புனித செபஸ்தியார் பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது

மே03,2011. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் உடலைக் கொண்டுள்ள சவப்பெட்டி வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் புனித செபஸ்தியார் சிற்றாலயப் பீடத்தில் இத்திங்கள் இரவு வைக்கப்பட்டது.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவின் மையப்பீடத்திற்கு முன்பாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த இந்த மரச் சவப்பெட்டியின் முன்பாக முதலில் சிறிய செபம் சொல்லப்பட்டது.  அதன் பின்னர் அது புனித செபஸ்தியார் சிற்றாலயப் பீடத்திற்குப் பவனியாக எடுத்துவரப்பட்டது.
வத்திக்கான் பசிலிக்காவின் முதன்மைக்குரு கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்திரி தலைமையில் ஒன்பது கர்தினால்கள், பல பேராயர்கள், ஆயர்கள், அத்திருத்தந்தையைக் கவனித்து வந்த போலந்து அருட்சகோதரிகள் உட்பட ஒரு சிறிய குழு இப்பவனியில் கலந்து கொண்டது.
புனித பேதுரு தொழிற்சாலைப் பணியாளர்கள் Beatus Ioannes Paulus PP. II. என்று எழுதப்பட்ட வெள்ளை பளிங்குக் கல்லை இந்தப் பெட்டியின் மீது வைத்தனர்.
புனித செபஸ்தியார் சிற்றாலயப் பீடத்திற்கு வலதுபுறத்தில் திருத்தந்தை 11ம் பத்திநாதரின் திருவுருவமும், இடதுபுறத்தில் திருத்தந்தை 12ம்  பத்திநாதரின் திருவுருவமும் இருக்கின்றன.

3. குடியேற்றதாரர் இறைவார்த்தையை அறிவிக்க உதவ முடியும் பேராயர் வேலியோ

மே03,2011. ஆஸ்திரேலிய கத்தோலிக்கத் திருச்சபை அகதிகளுக்கும் குடியேற்றதாரருக்கும் ஆற்றி வரும் மேய்ப்புப்பணிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இத்திங்கள் முதல் 13 நாட்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் திருப்பீட குடியேற்றதார மற்றும் புலம் பெயர்வோருக்கான அவைத் தலைவர் பேராயர் Antonio Maria Vegliò.
ஆஸ்திரேலியத் திருச்சபையில் குடியேற்றதாரருக்கு மேய்ப்புப்பணியாற்றி வரும் ஆன்மீகக் குருக்களைச் சந்தித்து உரையாற்றிய பேராயர் வேலியோ, தற்போதைய வாழ்க்கையில் எதிர்நோக்கப்படும் இடர்பாடுகள், தொடர்ந்து நடந்து வரும் போர்கள் மற்றும் வன்முறை, மக்களைக் கட்டாயமாகத் தங்களது நாட்டை விட்டு வெளியேற வைக்கின்றன என்றார்.
ஒருவர் தனது சொந்த நாடு உட்பட எந்த நாட்டை விட்டுச் செல்வதற்கும் சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கும் உரிமை உள்ளது என்று அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் கூறுவதையும் பேராயர் சுட்டிக் காட்டினார்.
மொழி, மதம், கலாச்சாரம், உணவு வகைகள் ஆகியவற்றினால் குடியேற்றதாரர் குடியேறிய நாடுகளில் பிரச்சனைகளை எதிர்நோக்கும்வேளை அவர்களும் அந்த நாடுகளுக்குப் பிரச்சனைகளாக இருக்கின்றார்கள், அத்துடன் அவர்கள் வழியாக பல காரியங்களை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாகவும் இருக்கின்றார்கள் என்றார் பேராயர் வேலியோ.
குடியேற்றதாரர் போதுமான அளவு வரவேற்கப்பட்டால் அவர்கள் நற்செய்தியால் தொடப்பட்டு அதனை உலகிற்கு அறிவிப்பவர்களாகவும் மாறுவார்கள் என்றும் திருப்பீட அதிகாரி கூறினார்.
சுமார் 2 கோடியே 10 இலட்சம் மக்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் ஏறத்தாழ 50 இலட்சம் பேர் குடியேற்றதாரத் தொழிலாளர்கள், 22,500 பேர் அகதிகள் மற்றும் 2350 பேர்  அடைக்கலம் கேட்டுக் காத்திருப்பவர்கள். 

4. வலைத்தளத்தில் தங்கள் படைப்புக்களை வெளியிடும் உயிர்த்துடிப்புமிக்க கத்தோலிக்க பிளாக்கர்கள் திருச்சபைக்குத் தேவை - வத்திக்கான் அதிகாரி

மே03,2011. வலைத்தளத்தில் தங்கள் படைப்புக்களை வெளியிடும் உயிர்த்துடிப்புமிக்க கத்தோலிக்க பிளாக்கர்கள் (bloggers) திருச்சபைக்குத் தேவைப்படுகிறார்கள் என்று வத்திக்கான் கூட்டம் ஒன்றில் கூறப்பட்டது.
திருப்பீட கலாச்சார அவையும் சமூகத் தொடர்பு அவையும் இணைந்து இத்திங்களன்று வத்திக்கானில் நடத்திய பிளாக்கர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட 150 பிரதிநிதிகள் இவ்வாறு கூறினர்.
பிளாக்கர்கள், நவீனச் சமூகத்தொடர்புச் சாதனங்களில் திருச்சபையின் வாழ்வுக்கு வழங்கி வரும் நற்செயல்களை அங்கீகரிக்கவும் அத்துடன் பிளாக்கர்களுக்கும் வத்திக்கானுக்கும் இடையே உரையாடலைத் தொடங்கும் நோக்கத்திற்காகவும் இக்கூட்டம் நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இக்கூட்டத்தில் பேசிய திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, திருச்சபையின் உறுப்பினர்களை உருவாக்குவதிலும் அவர்களுக்குத் தகவல்களைக் கொடுப்பதிலும் பிளாக்கர்கள் முக்கிய அங்கம் வகிக்கிறார்கள் என்று கூறினார்.

5. இத்தாலியும் நேட்டோ படைகளும் ஒரு வார இடைக்காலப் போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி வலியுறுத்தல்

மே03,2011. மனித வாழ்க்கை, குடும்பம் மற்றும் லிபியா மீதான மதிப்பின் அடிப்படையில் இத்தாலியும் நேட்டோ படைகளும் ஒரு வார இடைக்காலப் போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மார்த்தினெல்லி வலியுறுத்தினார்.
லிபிய அதிபர் கடாபியின் இளைய மகனும் இரண்டு பேரக் குழந்தைகளும் கொல்லப்பட்டதற்குப் பின்னர் இவ்வாறு கேட்டுக் கொண்ட ஆயர் மார்த்தினெல்லி, லிபியா மீது போர் தொடுத்துள்ள அனைத்து நாடுகளும் அப்பாவி மக்களைக் கொல்வதையும் குண்டுகள் வீசுவதையும் நிறுத்துமாறு கூறினார்.
தொடர்ந்து இடம் பெறும் குண்டு வீச்சு தாக்குதல்கள் குறித்து மக்கள் சோர்வடைந்து விட்டார்கள், அனைத்துத் தாக்குதல்களும் நிறுத்தப்படுமாறு அவர் கூறினார்  
கடாபியின் சொந்தக் கோட்டையான Bab al-Aziziya மீது நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் கடாபியின் இளைய மகன் Saif Al-Arab Gaddafi கொல்லப்பட்டார். அவருக்கு இத்திங்களன்று டிரிப்போலியில் அரசு மரியாதையுடன் அடக்கச்சடங்கு நிறைவேற்றப்பட்டது. இதில் ஆயர் மார்த்தினெல்லியும் கலந்து கொண்டார்.

6. ஊடகவியலார் புதிய டிஜிட்டல் ஊடகத்துறையைப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துமாறு அனைத்துலக கிறிஸ்தவச்  சமூகத்தொடர்பு கழகம் வலியுறுத்தல்

மே03,2011. உலக அளவில் பத்திரிகை சுதந்திரத்தையும் சமூகத்தொடர்பு உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு, ஊடகவியலார் புதிய டிஜிட்டல் ஊடகத்துறையைப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துமாறு WACC என்ற அனைத்துலக கிறிஸ்தவ  சமூகத்தொடர்பு கழகம் கேட்டுக்கொண்டது.
மே 3ம் தேதி இச்செவ்வாய்க்கிழமை அனைத்துலக பத்திரிகை சுதந்திர நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி அறிக்கை வெளியிட்ட WACC கழகம் இவ்வாறு வலியுறுத்தியது.
தற்போதைய இணையதளம், சமூக வலைத்தள அமைப்புகள், புதிய தலைமுறையின் டிஜிட்டல் பயன்பாடு போன்றவை, பொறுப்பு, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, பாதுகாப்பு ஆகியவை குறித்த கவலையை அதிகரித்து வருகிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
21ம் நூற்றாண்டு ஊடகம் புதிய எல்லைகள், புதிய தடைகள் என்ற தலைப்பில் 2011ம் ஆண்டு அனைத்துலக பத்திரிகை சுதந்திர நாள்  கடைபிடிக்கப்பட்டது.

7. பத்திரிகையாளர்களுக்கானப் பாதுகாப்பு குறைந்து வருகிறது - பான் கி மூன் கவலை

மே03,2011. அனைத்துலக பத்திரிகை சுதந்திர நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், பத்திரிகையாளர்களுக்கானப் பாதுகாப்பு குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்தார்.
அரசுகள் தம் மக்களை அடக்கி அவர்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தும் போது தவறான நடவடிக்கைகளை வெளியே அறிவிப்பதற்குப் பத்தரிகை சுதந்திரம் சக்தி வாய்ந்த கருவியாக இருக்கின்றது என்றும் அச்செய்தி கூறுகிறது.
இந்த அனைத்துலக பத்திரிகை சுதந்திர நாள் ஆப்ரிக்க பத்திரிகையாளர்களிடமிருந்து முதலில் உருவானது என்றுரைத்த பான் கி மூன், 2010ம் ஆண்டில் குறைந்தது ஆறு வலைத்தள நிருபர்கள் கொல்லப்பட்டனர் என்றும் 2008ம் ஆண்டில் முதன்முறையாக இந்த வலைத்தள நிருபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் கூறினார்.   

8. பின்லேடன் கொல்லப்பட்ட நகரில் கத்தோலிக்கர் தங்கள் மத நடவடிக்கைகளைக் குறைத்துள்ளனர்

மே03,2011. பாகிஸ்தானின் வடக்கிலுள்ள நகரமான Abbottabad ல் அல்கெய்தா அமைப்பின் தலைவர் பின்லேடன் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படையினால் கொல்லப்பட்ட பின்னர் அந்நகரத்தில் இருக்கின்ற சிறிய கத்தோலிக்கப் பங்குத்தளம் தனது சமய நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க் வர்த்தக மையம் செப்டம்பர் 11ம் தேதி தரைமட்டமாக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் உட்பட பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று பங்குக்குரு Akram Javed Gill கூறினார்.
வடக்கு மலைப்பகுதிகளுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ள Abbotabbad நகரில் 2007ம் ஆண்டிலிருந்து பங்குக்குருவாக இருக்கிறார் அருட்பணி ஜில்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...