Saturday 26 February 2011

Catholic News - hottest and latest - 24 Feb 2011

1. லெபனன் அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு

2. வத்திக்கானில் லெபனன் புனிதர் மரோனின் திருவுருவம்

3. புத்தாண்டு தினத்தன்று எகிப்தின் கோவிலில் நடந்த வன்முறைத் தாக்குதலின் பின்புலத்தில் ஹோஸ்னி முபாரக் ஈடுபட்டிருக்கக் கூடும் - கர்தினால் Antonios Naguib

4. நாசி படையினரால் கொல்லப்பட்ட 335 இத்தாலியர்களின் நினைவுச்சின்னத்தைத் திருத்தந்தை பார்வையிடுவார்

5. மத்தியப்பிரதேசத்தில் தற்கொலைக்குத் தள்ளப்படும் விவசாயிகளுக்குச் சேவை செய்ய தலத்திருச்சபையின் முயற்சிகள்

6. இந்தியாவின் SIGNIS அமைப்பின் தலைவராக Sunil Lucas என்ற ஆவணத் திரைப்பட தயாரிப்பாளர்

7. ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கோவில்

8. லிபியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஆப்ரிக்க அகதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் - கிறிஸ்தவ அமைப்பின் அழைப்பு

9. இஸ்பெயின் நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளில் பஙகேற்கும் 300000 இளையோர்

----------------------------------------------------------------------------------------------------------------

1. லெபனன் அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு

பிப்.24,2011. பல்வேறு கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் சமூகங்களைக் கொண்டிருக்கும் லெபனன் நாடு இத்தகைய ஓர் அமைப்பினாலே, சுதந்திரம் மற்றும் ஒருவர் ஒருவரை மதிக்கும் நல்லிணக்க வாழ்வுக்கு அப்பகுதிக்கு மட்டுமல்லாமல் இந்த உலகிற்கே எடுத்துக்காட்டாகத் திகழ முடியும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழனன்று லெபனன் அரசுத் தலைவர் மிஷேல் ஸ்லைமானை வத்திக்கானிலுள்ள தனது நூலகத்தில் முப்பது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசிய திருத்தந்தை, லெபனன் நாட்டுப் புதிய அரசு அந்நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் உறுதியான தன்மைக்கு ஆதரவாகச் செயல்படும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.
மத்திய கிழக்குப் பகுதியின், குறிப்பாக, சில அரபு நாடுகளின் தற்போதைய நிலவரம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இப்பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படவும் ஒட்டுமொத்த சமூகத்தின் நல்வாழ்வுக்குக் கிறிஸ்தவர்கள் தங்கள் பங்கை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பில், லெபனன் புனிதர் மரோனின் திருவுருவத்தை இப்புதனன்று திருத்தந்தை ஆசீர்வதித்தது முதலில் இடம் பெற்றது.
மேலும், இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ஸ்லைமான்.
இதற்குப் பின்னர், லெபனன் அரசுத்தலைவர் ஸ்லைமான் மனைவி உட்பட 15 பேர் கொண்ட அந்நாட்டு உயர்மட்டக் குழுவும் திருத்தந்தையைச் சந்தித்தது. அரசுத் தலைவர் ஸ்லைமான் திருத்தந்தைக்கு, 17ம் நூற்றாண்டு தந்தம் மற்றும் தங்கத்தாலானத் தூப கலசத்தைப் பரிசாகக் கொடுத்தார். திருத்தந்தையும் பாப்பிறை மெடலை ஸ்லைமானுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்


2. வத்திக்கானில் லெபனன் புனிதர் மரோனின் திருவுருவம்

பிப்.24,2011. மேலும், லெபனன் மாரனைட் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவிய புனித மரோனின் திருவுருவத்தைத் திருத்தந்தை ஆசீர்வதித்த நிகழ்ச்சியிலும் லெபனன் அரசுத்தலைவர் ஸ்லைமான் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய ஸ்லைமான், லெபனனில் மாரனைட் திருச்சபை ஏற்படுத்தியுள்ள அளவற்ற தாக்கத்தைப் பாராட்டினார்.
15 அடி உயரம் கொண்ட இப்புனிதரின் திருவுருவம், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவின் வெளிப்புற மாடச் சுவரில் வைக்கப்பட்டுள்ளது. இப்புதன் பொது மறைபோதகத்திற்கு முன்னர் இடம் பெற்ற இந்நிகழ்வில் லெபனன் முதுபெரும் தந்தை நஸ்ரல்லா ஸ்ஃபயர், திருப்பீடத்துக்கானத் தூதர்கள், திருப்பீடச் செயலர், இன்னும் உரோமிலும் அதைச் சுற்றிலும் வாழும் லெபனன் விசுவாசிகளும் கலந்து கொண்டனர்.
இந்த 5ம் நூற்றாண்டு சிரியத் துறவியின் எடுத்துக்காட்டை எல்லாரும் பின்பற்றுமாறு வலியுறுத்திய திருத்தந்தை, ஒருவர் தன்னையே கொடையாக வழங்கும் அளவுக்கு நற்செய்தியைச் சோர்வின்றி அறிவிக்கும் கொடைக்காகவும் ஆண்டவரிடம் மன்றாடினார்.
லெபனன் மாரனைட் ரீதி கத்தோலிக்கத் திருச்சபை, தனது நிறுவனரான புனித மரோனின் 16வது நூற்றாண்டைச் சிறப்பித்து வருவதையொட்டி வத்திக்கானில் இந்நிகழ்வு நடைபெற்றது.


3. புத்தாண்டு தினத்தன்று எகிப்தின் கோவிலில் நடந்த வன்முறைத் தாக்குதலின் பின்புலத்தில் ஹோஸ்னி முபாரக் ஈடுபட்டிருக்கக் கூடும் - கர்தினால் Antonios Naguib

பிப்.24,2011. இவ்வாண்டின் புத்தாண்டு தினத்தன்று  எகிப்தின் அலெக்சாந்த்ரியாவில் காப்டிக் ரீதி கத்தோலிக்கக் கோவிலில் நடந்த வன்முறைத் தாக்குதலின் பின்புலத்தில் எகிப்து அரசுத் தலைவர் ஹோஸ்னி முபாரக் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று காப்டிக் ரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் கர்தினால் Antonios Naguib கூறியுள்ளார்.
30 Giorni என்று அழைக்கப்படும் ஓர் இத்தாலிய நாளிதழுக்கு அண்மையில் அளித்த பேட்டியொன்றில் இக்கருத்தை வெளியிட்ட கர்தினால் Naguib, அரசுத் தலைவர் Mubarak தனது அரசைக் காக்கும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இவ்வன்முறைத் தாக்குதலைக் காரணம் காட்டியிருப்பார் என்று கூறினார்.
முபாரக்கிற்கு எதிராக எழுந்த போராட்டங்களில் இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் வயது வேறுபாடின்றி கலந்து கொண்ட ஒற்றுமையைத் தன் நாட்டில் பல ஆண்டுகளுக்குப் பின் காண முடிந்ததெனும் மகிழ்வையும் கர்தினால் Naguib வெளியிட்டார்.
இதற்கிடையே, முபாரக் பதவி துறந்ததையடுத்து எகிப்தில் பொறுப்பேற்றிருக்கும் அரசு அந்நாட்டில் நிகழ்ந்த புத்தாண்டு வன்முறை குறித்த வழக்கைத் தீர ஆராய்ந்து தீர்ப்புகள் வழங்க வேண்டுமென்று அகில உலக சமய உரிமைகளுக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டுக் குழு USCIRF வலியுறுத்தி வருகிறது.


4. நாசி படையினரால் கொல்லப்பட்ட 335 இத்தாலியர்களின் நினைவுச்சின்னத்தைத் திருத்தந்தை பார்வையிடுவார்

பிப்.24,2011. இரண்டாம் உலகப்போரில் நாசி படையினரால் கொல்லப்பட்ட 335 இத்தாலியர்களின் நினைவுச்சின்னத்தைத் திருத்தந்தை பார்வையிடுவார் என்று வத்திக்கான் செய்தியொன்று கூறுகிறது.
உரோமை நகரின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள Fosse Ardeatine என்ற இடத்தில் உள்ள இந்த நினைவுச்சின்னத்தை வருகிற மார்ச் மாதம் 27ம் தேதி திருத்தந்தை பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1944ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி ஜெர்மானிய காவல் படையினர் மீது இத்தாலிய தேசப்பற்று அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 33 ஜெர்மானியர்கள் இறந்தனர். இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இறந்த ஒவ்வொரு ஜெர்மானிய வீரருக்கும் பத்து இத்தாலியர்கள் 24 மணி நேரத்தில் கொல்லப்பட வேண்டுமென ஹிட்லரின் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இவ்வாணையைத் தொடர்ந்து, மார்ச் 24ம் தேதி 75 யூதர்கள் உட்பட பொதுமக்கள், சிறைக் கைதிகள் மற்றும் போர் வீரர்கள் என 335 இத்தாலியர்கள் நாசி படையினரால் கொல்லப்பட்டனர்.
இந்நினைவுச் சின்னத்தை மறைந்தத் திருத்தந்தையர் ஆறாம் பவுல் மற்றும் இறையடியார் இரண்டாம் ஜான் பால் ஆகியோர் முறையே, 1965 மற்றும் 1982 ஆகிய இரு ஆண்டுகள் சென்று பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.


5. மத்தியப்பிரதேசத்தில் தற்கொலைக்குத் தள்ளப்படும் விவசாயிகளுக்குச் சேவை செய்ய தலத்திருச்சபையின் முயற்சிகள்

பிப்.24,2011. இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் வேளாண்மைப் பிரச்சனைகளால் தற்கொலைக்குத் தள்ளப்படும் விவசாயிகளுக்குச் சேவை செய்ய தலத்திருச்சபை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் கடந்த இரு மாதங்களாய் நிலவும் கடுமையான பனியால் இதுவரை அம்மாநிலம் சந்தித்திராத அளவில் பயிர்கள் பெரிதும் அழிந்துள்ளன. எனவே, கடந்த 86 நாட்களில் அப்பகுதியில் 136 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக மத்தியப் பிரதேச அரசு அண்மையில் அறிவித்தது.
அரசின் இவ்வறிவிப்பைத் தொடர்ந்து, விவசாயிகளின் குடும்பத்திற்குத் தேவையான வாழ்வு ஆதாரங்களை போபால் உயர்மறை மாவட்டம் செய்ய முன் வந்துள்ளதென பேராயர் Leo Cornelio தெரிவித்தார்.
மனித சமுதாயத்திற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளே பட்டினியைச் சந்திக்கும் சூழ்நிலை மிகக் கொடூரமானதென்று பேராயர் Cornelio தன் கவலையை வெளியிட்டார்.


6. இந்தியாவின் SIGNIS அமைப்பின் தலைவராக Sunil Lucas என்ற ஆவணத் திரைப்பட தயாரிப்பாளர்

பிப்.24,2011. இந்தியாவின் SIGNIS அமைப்பின் தலைவராக பொது நிலையினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒரு செய்தி என்று கொல்கத்தா உயர்மறைமாவட்டப் பேராயர் Lucas Sircar கூறினார்.
ஊடகத் துறையில் பணிபுரியும் இந்திய கத்தோலிக்கர்களுக்கென உருவாகியுள்ள SIGNIS என்ற அமைப்பின் தலைவராக 44 வயதான Sunil Lucas என்ற ஆவணத் திரைப்பட தயாரிப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவ்வமைப்பின் தலைவராக முதல் முறையாக ஒரு பொதுநிலையினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய கொல்கத்தா பேராயர், இந்தியத் திருச்சபை பொதுநிலையினருக்கு வழங்கும் முக்கியப் பொறுப்புக்கள் நல்லதொரு அடையாளம் என்று கூறினார்.
வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், ஊடகக் கல்வி மற்றும் கணனிவழித் தொடர்புகள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் கத்தோலிக்கர்களுக்கென உருவாகியுள்ள SIGNIS அமைப்பு, உலகின் 140 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்தியாவில் இவ்வமைப்பில் 300க்கும் மேற்பட்ட அங்கத்தினர்கள் உள்ளனர்.


7. ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கோவில்

பிப்.24,2011. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் வன்முறைகளுக்கு உள்ளான பெட்டிக்கலா (Betticala) என்ற கிராமத்தின் மக்கள் நந்தகிரி என்ற இடத்தில் மறு குடியமர்வு செய்யப்பட்டு, அங்குள்ள ஒரு கோவிலில் அண்மையில் தங்கள் முதல் திருப்பலியைக் கண்டனர்.
மூன்று ஆண்டுகளாய் தங்களுக்கென ஒரு கோவில் இல்லாமல் வருந்திய இம்மக்கள் இப்புதிய கோவிலில் அண்மையில் நிகழ்த்திய திருப்பலியால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று அருள் சகோதரர் K J மார்கோஸ் கூறினார்.
கந்தமால் வன்முறைகள் தணிந்த பிறகும், தங்கள் சொந்த ஊரான பெட்டிக்கலா கிராமத்தில் மறுபடியும் குடியேற விழைந்த கிறிஸ்தவர்களை அங்குள்ள இந்துக்கள் அனுமதிக்காமல் விரட்டியதால், அம்மக்கள் தலத்திருச்சபையின் உதவியுடன் நந்தகிரியில் குடியேறியுள்ளனர் என்று அருள் சகோதரர் மார்கோஸ் விளக்கினார்.
மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு உரிய நிலங்களைப் பெற்றுத் தருவதில் அரசு இன்னும் சரியான முயற்சிகள் எடுக்காததால், தற்போது தலத்திருச்சபை அம்முயற்சிகளை மேற்கொண்டுள்ளதென்று சகோதரர் மார்கோஸ் மேலும் கூறினார்.


8. லிபியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஆப்ரிக்க அகதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் - கிறிஸ்தவ அமைப்பின் அழைப்பு

பிப்.24,2011. லிபியாவில் தொடர்ந்து நிலவும் பதட்டச் சூழ்நிலையில் அந்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் அகதிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று கிறிஸ்தவ அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக, லிபியாவில் போராடும் மக்கள் மேல் அரசு மேற்கொண்டு வரும் வன்மையான அடக்கு முறைகள் குறித்து பல நாடுகளின் அரசுத் தலைவர்களும் ஐ.நா. பொதுச் செயலரும் கவலைகளை வெளியிட்டுள்ளனர்.
இச்சூழலில் அந்நாட்டில் உள்ள பிற நாட்டவர்களை வெளியேற்றும் முயற்சியில் ஒவ்வொரு நாடும் ஈடுபட்டுள்ளது. எனினும், எரித்ரியா, எத்தியோப்பியா, மற்றும் சோமாலியா போன்ற ஆப்ரிக்க நாடுகளிலிருந்து லிபியாவில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளுக்கு எந்த நாடும் உதவாத நிலையில், அவர்களுக்குரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென்று CSW என்ற அகில உலக கிறிஸ்தவ ஒன்றிணைப்பு அமைப்பு குரல் கொடுத்து வருகிறது.
லிபியாவின் Tripoliயில் உள்ள கத்தோலிக்கக் கோவிலில் தஞ்சம் புகுந்திருக்கும் ஆப்ரிக்க அகதிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டுமென்று இத்தாலியில் உள்ள Habeshia என்ற அரசு சாரா அமைப்பு இத்தாலிய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
அகதிகளாய் Tripoliயில் தங்கியுள்ள 40 ஆப்ரிக்கக் குடும்பங்களின் நிலை மிகவும் கவலை தருவதாக உள்ளதால் அகில உலக குடும்பமும், சிறப்பாக ஐரோப்பிய ஒன்றியமும் இவ்விவகாரத்தில் தலையிட்டு அம்மக்களுக்கு உதவிகள் செய்யவேண்டுமென்று CSW இயக்குனர் Andrew Johnston கூறினார்.


9. இஸ்பெயின் நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளில் பஙகேற்கும் 3,00,000 இளையோர்

பிப்.24,2011. வருகிற ஆகஸ்ட் மாதம் 11 முதல் 15 வரை இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் 2011ஐ முன்னிட்டு, அந்நாட்டிற்கு வருகை தரும் 3 இலட்சம் இளையோரை வரவேற்க அந்நாடு தயாராகி வருகிறது.
உலக இளையோர் மாநாட்டிற்கு முன்னதாக, இஸ்பெயினின் மறைமாவட்டங்களில் கத்தோலிக்கக் குடும்பங்கள் உலக இளையோரை வரவேற்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக  இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் Javier Igea கூறினார்.
மாநாட்டிற்கு முந்திய ஒரு சில நாட்கள் இஸ்பானிய கலாச்சாரம், அங்குள்ள கத்தோலிக்க வாழ்வு இவைகளை வெளிக்கொணரும் பல நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இளையோர் தங்கள் இல்லங்களில் தங்குவதற்கென, சிறப்பாக, ஏழை நாடுகளில் இருந்து வரும் இளையோர் எவ்வித கட்டணமும் இல்லாமல் தங்குவதற்கென பல குடும்பங்கள் முன் வந்துள்ளன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இதுவரை இம்மாநாட்டில் கலந்து கொள்ள 137 நாடுகளில் இருந்து 1,50,000க்கும் அதிகமான இளையோர் முன்பதிவு செய்துள்ளனர் என்றும், இஸ்பெயினில் உள்ள 63 மறைமாவட்டங்களில் 12 மறை மாவட்டங்களின் தங்குமிடங்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

No comments:

Post a Comment