Thursday, 24 February 2011

Catholic News - hottest and latest - 23 Feb 2011

1. நியுசிலாந்தில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை அனுதாபம், செபம்

2. திருச்சபையின் உயரிய மனிதாபிமானச் சேவைகளும் மக்களுக்கு அறிவிக்கப்பட  வேண்டும் - கர்தினால் சாரா

3. பரோடா ஆயர் : கோத்ரா இரயில் தீ வைப்பு குறித்தத் தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது

4. கருக்கலைப்புக்கு ஆதரவான மசோதா குறித்த அரசுடனானப் பேச்சுவார்த்தையை பிலிப்பைன்ஸ் ஆயர்கள் நிறுத்தி வைப்பு

5. கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்டுள்ளன - கர்நாடகா முன்னாள் நீதிபதி

6. ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் கருவறையே - மன்ஹாட்டன் விளம்பரப் பலகை

7. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் வன்முறை அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு லிபிய அரசுக்கு ஐ.நா.பாதுகாப்பு அவை அழைப்பு


----------------------------------------------------------------------------------------------------------------

1. நியுசிலாந்தில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை அனுதாபம், செபம்

பிப்.23,2011. இச்செவ்வாய் நண்பகலில் நியுசிலாந்தின் Christchurch பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களுக்கும், இப்பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் , செபங்களையும் திருத்தந்தை தெரிவித்தார்.
இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை தன் அனுதாபங்களைக் கூறியபின், இப்பேரிடரால் துன்பப்பட்டு வரும் நியுசிலாந்து மக்களுக்குத் தன் சிறப்பான செபங்களையும் தெரிவித்தார்.
இன்னும், Christchurch ஆயருக்குத் திருத்தந்தையின் பெயரில் அனுதாபத் தந்தியையும் அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே
மேலும், நியுசிலாந்தின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் ஸ்காட்லாந்து ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் Keith Patrick O'Brien.
Christchurchல் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தில் இதுவரை 65 உயிர்கள் பலியாகியுள்ளன மற்றும் 100 பேருக்கும் மேல் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்று பிபிசி செய்தி கூறுகிறது.
இந்நிலநடுக்கத்தால் Christchurchல் உள்ள கத்தோலிக்க, மற்றும் ஆங்கலிக்கன் பேராலயங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன என்று UCAN செய்தி நிறுவனம் கூறுகிறது.
நாட்டின் இராணுவம், மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல நிறுவனங்கள் இரவுபகலாக உழைத்து வருகின்றன என்று Christchurch நகர மேயர் கூறியுள்ளார்.
இந்நிலநடுக்கத்தின் விளைவாக நியுசிலாந்துக்கருகே உள்ள ஒரு பனிப்பாறையில் இருந்து 3 கோடி டன் பனிப் பாறை இடிந்துள்ளதென்றும், இதனால் அப்பகுதியில் மாபெரும் அலைகள் உருவாகியுள்ளன என்றும் செய்திகள் கூறுகின்றன.
1931ம் ஆண்டு அந்நாட்டில் Hawke 's Bay பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 256 பேர் இறந்தனர். அதற்கு எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு பல உயிர்களைப் பலி வாங்கியுள்ள நிலநடுக்கம் இதுவே என்று ஒரு செய்திக் குறிப்பு சுட்டிக் காட்டுகின்றது.

2. திருச்சபையின் உயரிய மனிதாபிமானச் சேவைகளும் மக்களுக்கு அறிவிக்கப்பட  வேண்டும் - கர்தினால் சாரா

பிப்.23,2011. திருச்சபையில் ஒரு சிலர் செய்யும் குறைகளைப் பெரிதுபடுத்தும் ஊடகத்துறை, திருச்சபை மேற்கொள்ளும் பல உயரிய மனிதாபிமானச் சேவைகளையும் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கர்தினால் இராபர்ட் சாரா.
 திருச்சபையின் பிறரன்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் திருப்பீடத்தின் Cor Unum அவைத் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா இச்செவ்வாயன்று திருத்தந்தையின் தவக்காலச் செய்தியை வெளியிட்டுப் பேசியபோது, செய்தியாளர்களிடம் இப்பரிந்துரையை முன்வைத்தார்.
கடந்த ஆண்டு சனவரியில் பெரும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட ஹெயிட்டி நாட்டிற்கு திருச்சபை செய்துள்ள எண்ணிலடங்காச் சேவைகளை நினைவுறுத்திய கர்தினால், இவ்வாண்டு சனவரியில் திருத்தந்தையின் பிரதிநிதியாக ஹெயிட்டிக்குத் தான் சென்றதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், உலகிலேயே மிகவும் ஏழ்மையான ஒரு பகுதியாக இருக்கும் ஆப்ரிக்காவின் சாஹெல் பகுதியில், இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சில பிறரன்பு அமைப்புக்களைக் குறித்தும் கர்தினால் சாரா எடுத்துரைத்தார்.
திருச்சபை ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் பல ஆயிரம் பிரறன்புப் பணிகளில் இவ்விரண்டை மட்டும் எடுத்துக்காட்டிப் பேசினார் கர்தினால் இராபர்ட் சாரா.
உலகில் காணப்படும் துன்பங்கள் குறித்தும் அவைகளைப் போக்க தவக்காலம் ஒரு சிறந்த நேரம் என்றும் திருத்தந்தையின் தவக்காலச் செய்தி அமைந்திருப்பதை Cor Unum அவைத்தலைவர் கர்தினால் Robert Sarah கூறினார்.

3. பரோடா ஆயர் : கோத்ரா இரயில் தீ வைப்பு குறித்தத் தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது

பிப்.23,2011. 2002ம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா இரயில் நிலையத்தில் தீக்கிரையான இரயில் குறித்து இச்செவ்வாயன்று குஜராத் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தைத் தருகிறதென்று பரோடா மறைமாவட்ட ஆயர் Rosario Godfrey de Souza கூறினார்.
59 இந்துக்களின் உயிர்களைப் பலி வாங்கிய இந்த தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 63 பேரில் 31 பேரின் குற்றத்தை உறுதி செய்து அவர்களுக்கு இச்செவ்வாயன்று அகமதாபாத் நீதி மன்றம் தீர்ப்பு  வழங்கியதையடுத்து, பரோடா ஆயர் தன் கருத்தை இவ்விதம் தெரிவித்தார்.
2002ம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் ஒரு விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறைச் செயலா என்று விவாதித்து வந்த நீதிமன்றம், இச்சம்பவம் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதென்று தன் தீர்ப்பை வழங்கியுள்ளது. எனினும், முக்கிய குற்றவாளிஎன்று கைது செய்யப்பட்ட Maulvi Umarji உட்பட 63 பேரை விடுவித்துள்ளது.
இத்தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளைச் சுற்றிக் காட்டிப் பேசிய மனித உரிமை ஆர்வலர் இயேசுசபை குரு Cedric Prakash குஜராத்தின் நீதித்துறை நீதிக்கு எதிராகவும், அரசுக்குச் சாதகமாகவும் தந்துள்ள இந்தத் தீர்ப்பு கேவலமான ஒன்று என்று கூறினார்.
குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டுள்ள 63 பேரைக் குறித்து பேசிய சமுதாய ஆர்வலரான மற்றொரு இயேசுசபை குரு Stanny Jebamalai விடுதலை செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அரசு தகுந்த ஈடு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

4. கருக்கலைப்புக்கு ஆதரவான மசோதா குறித்த அரசுடனானப் பேச்சுவார்த்தையை பிலிப்பைன்ஸ் ஆயர்கள் நிறுத்தி வைப்பு

பிப்.23,2011. பிலிப்பைன்சில் கருக்கலைப்புக்கு ஆதரவான மசோதா குறித்து அந்நாட்டு அரசுடன் நடத்துவதாய்த் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தையை அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் திருச்சபை மற்றும் வாழ்வுக்கு ஆதரவான குழுக்களின் கோரிக்கைகளையும் புறக்கணித்து குடும்பக் கட்டுப்பாடு குறித்த மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் அது செனட் அவையிலும் விரைவில் அங்கீகரிக்கப்பட்டு அரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
இந்த விவகாரம் குறித்து பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Nereo Odchimar அரசுத்தலைவர் அக்குய்னோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த மசோதா நாட்டின் இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு வரும் வேகத்தைப் பார்க்கும் போது இது குறித்த பேச்சுவார்த்தையை தற்போதைக்கு நிறுத்தி வைப்பதே விவேகமான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மசோதா துரிதமாக அங்கீகரிக்கப்பட்டால் இதனைச் செயல்படுத்துவதற்கெனப் பிலிப்பைன்ஸ் அரசுக்கு 90 கோடி டாலர் நிதியுதவி செய்வதற்கு US Aid என்ற அமெரிக்க அமைப்பு உட்பட வெளிநாட்டு குழுக்கள் உதவுவதற்குத் தயாராக இருப்பதாக HLI  என்ற சர்வதேச மனித வாழ்வு அமைப்பு கூறியது.

5. கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்டுள்ளன - கர்நாடகா முன்னாள் நீதிபதி

பிப்.23,2011. 2008ம் ஆண்டு கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் மாநில அரசின் ஆதரவுடன் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன என்று கர்நாடகா உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவர் கூறினார்.
மக்கள் மன்ற விசாரணைக் குழுவின் கண்டுபிடிப்புக்கள் அடங்கிய அறிக்கையொன்றை இச்செவ்வாயன்று மும்பையில் வெளியிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி Michael Saldhana இவ்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.
அண்மையில் வெளியிடப்பட்ட B.K.Somashekhara குழுவின் அறிக்கையில் பல அப்பட்டமான தவறுகள் இருப்பதாகவும், இவ்வறிக்கை வெறும் கண்துடைப்பு என்றும் கூறிய நீதிபதி Saldhana தனது அறிக்கையின் ஒரு பிரதியை இந்திய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் Oswald Gracias இடம் அளித்தார்.
Somashekhara அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து கர்நாடகாவில் பல்வேறு மதங்களையும் சார்ந்த மக்கள் கர்நாடகாவில் மேற்கொண்ட மாபெரும் பேரணிகள் அம்மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஓர் அடையாளமாக இருக்கும் என்று தான் நம்புவதாகக் கூறிய கர்தினால் Gracias மத்திய அரசு இவ்வன்முறைகளைக் குறித்து ஒரு CBI விசாரணைக்கு உத்திரவேண்டும் என்ற ஆயர்களின் வேண்டுகோளை தானும் முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினார்.

6. ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் கருவறையே - மன்ஹாட்டன் விளம்பரப் பலகை

பிப்.23,2011. "ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் கருவறையே" (the most dangerous place for an African American is in the womb) என்ற வார்த்தைகளுடன் கூடிய விளம்பரப் பலகை ஒன்று நியூயார்க் பெருநகரின் Manhattan பகுதியில் அண்மையில் வைக்கப்பட்டுள்ளது.
கருவில் வளரும் குழந்தை முதல் உயிர்களைப் பல வழிகளிலும் காப்பதற்கென உருவாகியுள்ள Life Always என்ற அமைப்பினரால் இவ்விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டிலேயே நியூயார்க் நகரில்தான் அதிக அளவு கருக்கலைப்பு நடைபெருகிறதென்றும், கருக்கலைப்பு செய்பவர்களில் 60 விழுக்காட்டினர் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
 2010ம் ஆண்டு நியூயார்க் நகரில் மட்டும் 17,000 கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் இக்குறிப்பு மேலும் கூறுகிறது.
கறுப்பின வரலாறு மாதம் என்று கொண்டாடப்படும் பிப்ரவரி மாதத்தில் கறுப்பின மக்களின் எதிர்காலம் ஆபத்து நிறைந்ததாய் உள்ளதென்றும், அவ்வாபத்திலிருந்து கருப்பினத்தைச் சார்ந்த இளையோரைக் காக்கும் ஒரு முயற்சியாக இவ்விளம்பரம் செய்யப்பட்டுள்ளதென்றும் Life Always அமைப்பின் உறுப்பினரான போதகர் Stephen Broden கூறினார்.

7. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் வன்முறை அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு லிபிய அரசுக்கு ஐ.நா.பாதுகாப்பு அவை அழைப்பு

பிப்.23,2011. லிபியாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் வன்முறை அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறும் அப்பாவி பொது மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசு ஏற்குமாறும் அந்நாட்டு அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஐ.நா.பாதுகாப்பு அவை.
அமைதியாகப் போராடும் அப்பாவி மக்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை ஐ.நா.பாதுகாப்பு அவை உறுப்பினர்கள் வன்மையாய்க் கண்டிப்பதாகக் கூறிய பிரேசில் தூதர் மரிய லூயிசா ரிபெய்ரோ வியோட்டி, லிபியாவில் நடக்கும் போராட்டங்களில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் இறந்துள்ளது குறித்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் உரையாடலைத் தொடர்வது உட்பட குடிமக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் லிபிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் லூயிசா ரிபெய்ரோ.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...