Friday, 18 February 2011

Catholic News - hottest and latest - 17 Feb 2011

1. இரஷ்ய அரசுத் தலைவரும் திருத்தந்தையும் வத்திக்கானில் சந்திப்பு

2. தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு சட்டங்கள்  விவாதிக்கப்பட வேண்டும் - வத்திக்கான் அதிகாரி

3. நிதிகளைப் பெறுவதிலும், கொடுப்பதிலும் வெட்ட வெளிச்சமான வழிகளை திருச்சபை பின்பற்ற வேண்டும் - இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர்

4. கடல் சார்ந்த நற்செய்திப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கென வத்திக்கானில் நடைபெற்ற கருத்தரங்கு

5. சத்தீஸ்கர் மாநில அரசும் மாவோயிஸ்ட் போராளிகளும் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபடும் முயற்சிக்கு தலத்திருச்சபை ஆதரவு

6. இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அன்னை தெரேசாவுக்கு ஒரு தனிப்பட்ட பிரிவு ஆரம்பிக்கப்படும்

7. பிலிப்பின்ஸ் அரசு பிரதிநிதிகளுக்கும், ஆயர் பேரவையின் பிரதிநிதிகளுக்கும் நடைபெற்ற கூட்டத்திலிருந்து ஆயர் பேரவையின்  பிரதிநிதிகள் வெளிநடப்பு


----------------------------------------------------------------------------------------------------------------
1. இரஷ்ய அரசுத் தலைவரும் திருத்தந்தையும் வத்திக்கானில் சந்திப்பு

பிப்.17,2011. இரஷ்ய அரசுத் தலைவர் Dmitry Medvedev இவ்வியாழன் காலை 11 மணி அளவில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டை வத்திக்கானில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பிற்குப் பின், இரஷ்ய அரசுத் தலைவர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனேயையும் சந்தித்தார்.
வத்திக்கானுக்கும், இரஷ்யாவுக்கும் இடையே 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் முழமையான அரசு உறவுகள் மீண்டும் நிலைநாட்டப்பட்டதன் பின், இரஷ்ய அரசுத்  தலைவர் ஒருவர் திருத்தந்தையைச் சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.
இரு நாடுகளுக்கிடையேயான உறவு, ஐரோப்பிய பாதுகாப்பு, ஐ.நா.அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அகில உலக அரங்குகளில் வத்திக்கானும், இரஷ்யாவும் ஆற்றக் கூடிய முக்கிய பணிகள் ஆகியவை குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டது.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கும், உரோமைய கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இடையே உள்ள உறவுகள் இன்னும் ஆழப்படும் வழிகளையும் இரஷ்ய அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் பேசினார்.
இச்சந்திப்பின் இறுதியில், இரஷ்ய அரசுத் தலைவர் மாஸ்கோ மற்றும் கிரெம்ளின் நகரின் ஓவியங்களையும், முன்னாள் இரஷ்ய அரசுத் தலைவர் Boris Yelstin திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் உட்பட பல நாட்டுத் தலைவர்களுக்கு எழுதிய கடிதங்கள் அடங்கிய இரு கோப்புகளையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் மதக் களஞ்சியம் ஒன்றையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார். திருத்தந்தையும் இரஷ்ய அரசுத் தலைவருக்கு வத்திக்கான் பளிங்கு ஓவியம் ஒன்றைப் பரிசாக அளித்தார்.


2. தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு சட்டங்கள்  விவாதிக்கப்பட வேண்டும் - வத்திக்கான் அதிகாரி

பிப்.17,2011. குழந்தைகளைத் தத்தெடுக்கும் சட்டங்கள் குறித்த விவாதங்கள் தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு விவாதிக்கப்பட வேண்டுமென வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
திருமணம் செய்து வாழும் ஆணும் பெண்ணும் மட்டுமே குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை இத்தாலியில் தற்போது சட்டமாக உள்ளது. இச்சட்டத்தை மாற்றி, தனித்து வாழும் ஆண், பெண் ஆகியோருக்கும் தத்தெடுக்கும் உரிமையை சட்டமாக்க வேண்டும் என்று இத்தாலியின் உச்ச நீதி மன்றம் அரசை அண்மையில் கேட்டுக் கொண்டுள்ளது.
உச்ச நீதி மன்றத்தின் இம்முயற்சி குறித்து, குடும்பங்களுக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Ennio Antonelli தன் கருத்தைக் கூறும்போது, ஒவ்வொரு குழந்தைக்கும் தாய், தந்தை இருவரும் தேவை என்பதால், அவர்கள் இணைந்து வாழும் குடும்பங்களில் தத்தெடுக்கப்படும் குழந்தை வளர்வதே நல்லது. தத்தெடுக்கும் சட்டங்கள் குறித்த விவாதத்தில் இக்கருத்து மனதில் கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.


3. நிதிகளைப் பெறுவதிலும், கொடுப்பதிலும் வெட்ட வெளிச்சமான வழிகளை திருச்சபை பின்பற்ற வேண்டும் - இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர்

பிப்.17,2011. நிதிகளைப் பெறுவதிலும், கொடுப்பதிலும் திறந்த, வெட்ட வெளிச்சமான வழிகளை திருச்சபை பின்பற்ற வேண்டுமென்று இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Angelo Bagnasco கூறினார்.
கத்தோலிக்கத் திருச்சபைக்குப் பல வழிகளிலும் நிதி உதவிகள் செய்து வரும் இத்தாலிய ஆயர் பேரவையின் நிதி சார்ந்த கூட்டத்தை இச்செவ்வாயன்று துவக்கி வைத்துப் பேசிய கர்தினால் Bagnasco, நிதித் துறையில் திறந்ததொரு வழிமுறை இருந்தால் மட்டுமே மக்களுக்கு இவ்வழிகளில் நம்பிக்கை பிறக்கும் என்று தெளிவாக்கினார்.
கத்தோலிக்கத் திருச்சபையில் மேற்கொள்ளப்படும் நிதி உதவிகள் அனைவரும் மேற்கொள்ளும் இணைந்த பொறுப்பு, மற்றும் திறந்த, வெட்டவெளிச்சமான வழிமுறை ஆகிய இரு பெரும் தூண்களின் மேல் கட்டப்பட வேண்டும் என்று கர்தினால் வலியுறுத்தினார்.
திருச்சபையில் நேர்மை, சரியான வழிகள் எப்போதும் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Bagnasco, இன்றைய காலகட்டத்தில் நிதித் துறையில் உள்ள ஒவ்வொருவரும் நிதிகள் பெறுவது, கொடுப்பது ஆகிய அனைத்து விடயங்களிலும் முழு அறிவு பெற்றிருப்பது அவசியம் என்று கூறினார்.


4. கடல்சார்ந்த மேய்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கென வத்திக்கானில் நடைபெற்ற கருத்தரங்கு

பிப்.17,2011. கடல் கொள்ளைக்காரர்களால் தாக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உடல், மன, ஆன்மீக ரீதியான உதவிகளை மேற்கொள்ளும் வழிகளை ஆராய வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
கடல்சார்ந்த மேய்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கென இத்திங்கள் முதல் புதன் வரை மூன்று நாட்கள் வத்திக்கானில் நடைபெற்ற இக்கருத்தரங்கு, புலம்பெயர்ந்தோர் மற்றும் பயணிகளுக்கான திருப்பீட அவையால் நடத்தப்பட்டது.
கடல்வழி  பயணத்தில், சிறப்பாக சரக்குக் கப்பல்களில் பயணம் செய்வோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்கள் பயணம் மேற்கொள்ளும்போது அவர்களது குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவை நமது அருட்பணிகளில் சிந்திக்கப்பட வேண்டியவை என்று இத்திருப்பீட அவையின்  தலைவர் பேராயர் Anotonio Veglio கூறினார்.
இவ்வாண்டு நடைபெற்ற கருத்தரங்கில் கடல் கொள்ளைக்காரர்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் வழிகளும், அத்தாக்குதல்களை எதிர்கொள்ளும் வழிகளும் விவாதிக்கப்பட்டன.
மேலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு பல சமயங்களில் அநீதமான முறைகளில் சிறைப்படுத்தப்படும் மீனவர்கள் குறித்தும் இக்கருத்தரங்கில் பேசப்பட்டதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. சத்தீஸ்கர் மாநில அரசும் மாவோயிஸ்ட் போராளிகளும் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபடும் முயற்சிக்கு தலத்திருச்சபை ஆதரவு

பிப்.17,2011. இந்தியாவில் சத்தீஸ்கர் மாநில அரசும் மாவோயிஸ்ட் போராளிகளும் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சுவாமி அக்னிவேஷ் மேற்கொண்டுள்ள முயற்சியை தலத்திருச்சபையும் சமூக ஆரவலர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
மாவோயிஸ்ட் குழுவினரால் கடத்தப்பட்டு 18 நாட்கள் பிணையக் கைதிகளாய் இருந்த ஐந்து காவல் துறையினரை கடந்த வார இறுதியில் அக்குழுவினர் விடுவித்ததைத் தொடர்ந்து, சுவாமி அக்னிவேஷ் ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் மாவோயிஸ்ட் குழுவும், அரசும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டுமென்ற தன் கோரிக்கையை முன் வைத்தார்.
இக்கோரிக்கைக்குப் பதில் அளித்த சத்தீஸ்கர் மாநில முதல் அமைச்சர் மக்களின் நலன் கருதி எந்த ஒரு முயற்சிக்கும் தானும் தன் அரசும் தயார்  என்று தெரிவித்துள்ளார்.
மனித உரிமை ஆவர்வலரான சுவாமி அக்னிவேஷின் இம்முயற்சி பெரிதும் வரவேற்கப்படவேண்டியதொன்று என்று Bastar பல்கலைகழகத்தில் பணி புரியும் அருள்தந்தை Paul Thymoottil கூறினார். மாவோயிஸ்ட் போராட்டக் குழுக்கள் குறித்த ஆய்வில் அருள்தந்தை தய்மூட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


6. இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அன்னை தெரேசாவுக்கு ஒரு தனிப்பட்ட பிரிவு ஆரம்பிக்கப்படும்

பிப்.17,2011. இந்தியாவின் மிகப்பெரும் பல்கலைக்கழகமான IGNOU என்று அழைக்கப்படும் இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அன்னை தெரேசாவுக்கு ஒரு தனிப்பட்ட பிரிவு ஆரம்பிக்கப்படும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
இப்புதனன்று வெளியான இவ்வறிக்கையில், IGNOU பல்கலைகழகத்தில் உள்ள சமுதாயப் பணிகள் பள்ளியின் ஓர் அங்கமாக இப்பிரிவு விளங்கும் என்றும், HIV நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அகதிகள், புலம்பெயர்ந்தோர், வீதிச்சிறார் ஆகிய பலமிழந்த பல குழுவினரைக் குறித்த ஆய்வுகளை இப்பிரிவு மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அன்னை தெரேசாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 26ம் தேதியை அகில இந்திய பிறரன்பு நாள் என்று அறிவிப்பதோடு, அந்நாளில் பிறரன்பில் தலை சிறந்த பணி புரிவோருக்கு ஒவ்வோர் ஆண்டும் பரிசுகள் வழங்கும் திட்டத்தையும் இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அன்னை தெரேசாவுக்கும் இந்திய கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இது மாபெரும் சிறப்பு என்று இந்திய ஆயர் பேரவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப்  கூறினார்.


7. பிலிப்பின்ஸ் அரசு பிரதிநிதிகளுக்கும், ஆயர் பேரவையின் பிரதிநிதிகளுக்கும் நடைபெற்ற கூட்டத்திலிருந்து ஆயர் பேரவையின்  பிரதிநிதிகள் வெளிநடப்பு

பிப்.17,2011. இவ்வியாழனன்று, பிலிப்பின்ஸ் அரசு பிரதிநிதிகளுக்கும், பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் பிரதிநிதிகளுக்கும் நடைபெற்ற ஒரு கூட்டத்திலிருந்து ஆயர் பேரவையின்  பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
குடும்ப நலம், மற்றும் குழந்தை பேறு நலம் சார்ந்த சட்டங்களை இயற்றவிருக்கும் பிலிப்பின்ஸ் அரசு, தலத்திருச்சபையின் துணையை நாடியது.
இச்சட்டங்கள் குறித்து தலத்திருச்சபை ஏற்கனவே அரசுக்குக் கூறியிருந்த பரிந்துரைகளை இவ்வாலோசனைக் கூட்டத்தில் அரசு பிரதிநிதிகள் சிறிதும் விவாதிக்காததால், திருச்சபை பிரதிநிதிகள் இவ்வெளிநடப்பை மேற்கொள்ள வேண்டியிருந்ததென ஆயர் பேரவையின் வழக்கறிஞர் Jo Imbong செய்தியாளர்களிடம் கூறினார்.
2009ம் ஆண்டிலும் ஒரு முறை இவ்விவாதங்களின் பொது, ஆயர் பேரவையின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர் என்பதை வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார்.
குழந்தை பேறு நலம் குறித்த இந்தச் சட்டம் நன்னெறிக்கு முரண்பட்டதென்பதால், இச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறுவதை மக்கள் எதிர்க்க வேண்டும் என்று ஆயர்கள் ஏற்கனவே மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...