Monday, 14 February 2011

Catholic News - hottest and latest - 11 Feb 2011

1. கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர்
 
2. வத்திக்கான் வானொலி எல்லைகளற்ற ஒரு பெரிய குடும்பம், கர்தினால் இலயோலா
 
3. எண்பது வயதாகும் வத்திக்கான் வானொலி புதிய ஊடகத்துறையில்......
 
4. அயர்லாந்தில் குற்றவியல் அமைப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் உடனடியாகத் தேவை - ஆயர்கள்
 
5. ஆப்ரிக்காவுக்கு அர்த்தமுள்ள வளர்ச்சியைக் கொண்டுவரும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு கர்தினால் வலியுறுத்தல்
 
6. இந்தோனேசிய அரசு கிறிஸ்தவர்களையும் பிற சிறுபான்மை மதத்தவரையும் பாதுகாப்பதற்கு தவறியுள்ளது - ஆயர் கண்டனம்
 
7. மலேசியாவில் வலெண்டைன் தினம் குறித்த அறிக்கைக்குக் கிறிஸ்தவர்கள் வருத்தம்
 
8. இந்திய மனித உரிமை ஆர்வலருக்குப் பிணையல் மறுப்பு
 
----------------------------------------------------------------------------------------------------------------
 
1. கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர்
 
பிப்.11,2011. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்ட புதிய பேராயராக, ஆயர் ஜான் பார்வாவை இவ்வெள்ளிக்கிழமை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்ட பேராயராக இதுவரை பணியாற்றி வந்த பேராயர் இரபேல் சீனத் பணி ஓய்வு பெறுவதைத் திருச்சபை சட்டம் 401, எண் 1 ன் படி ஏற்றுக் கொண்ட திருத்தந்தை, அவ்வுயர்மறைமாவட்டத்திற்கு ரூர்கேலா ஆயர் ஜான் பார்வாவை நியமித்துள்ளார்.
1955ம் ஆண்டு ஜூன் ஒன்றாந்தேதி ஒரிசாவின் காய்பிராவில் பிறந்த ஆயர் ஜான் பார்வா, இறைவார்த்தை சபையில் சேர்ந்து 1985ம் ஆண்டு குருவானார். 2006ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி ரூர்கேலா மறைமாவட்ட வாரிசு ஆயராகப் பொறுப்பேற்ற இவர், 2009ம் ஆண்டு ஏப்ரல் 02ம் தேதி அம்மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார். இவ்வெள்ளிக்கிழமை கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்ட புதிய பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார் ஆயர் ஜான் பார்வா.
பணி ஓய்வு பெறும் பேராயர் இரபேல் சீனத், 1934ம் ஆண்டு கேரளாவின் மணலூரில் பிறந்தவர். 1974ல் சம்பல்பூர் ஆயராகப் பணியைத் தொடங்கிய இவர் 1985ம் ஆண்டு ஜூலை ஒன்றாந்தேதி கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்ட பேராயராகப் பணியைத் தொடங்கினார். 
 
 
2. வத்திக்கான் வானொலி எல்லைகளற்ற ஒரு பெரிய குடும்பம், கர்தினால் இலயோலா
 
பிப்.11, 2011. வத்திக்கான் வானொலி எல்லைகளற்ற ஒரு பெரிய குடும்பம், இது பலதரப்பட்ட கலாச்சார மற்றும் மொழியினரைக் கொண்டு இதில் ஒவ்வொருவரும் சகோதர சகோதரிகளாக இருக்கின்றனர், இவ்வாறு இது மாபெரும் அமைதியை ஏற்படுத்தும் சக்தியாகச் செயல்படுகின்றது என்று  வத்திக்கான் நகர நாட்டு நிர்வாகத் தலைவர் கர்தினால் ஜொவான்னி இலயோலோ கூறினார்.
வத்திக்கான் வானொலி ஆரம்பிக்கப்பட்டதன் எண்பதாம் ஆண்டை முன்னிட்டு வத்திக்கான் அருங்காட்சியகத்தில், வத்திக்கான் வானொலி பற்றிய அருங்காட்சியகம்  இவ்வியாழன் மாலை தொடங்கப்பட்ட நிருபர் கூட்டத்தில் இவ்வாறு பாராட்டினார் கர்தினால் இலயோலோ.
வத்திக்கான் வானொலி தொடங்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிகழ்வில்  திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியதை மேற்கோள் காட்டிப் பேசிய  கர்தினால் இலயோலோ, இந்த 2011ம் ஆண்டில் இரண்டு முக்கிய ஆண்டு நிறைவுகள் சிறப்பிக்கப்படுகின்றன என்றார்.
வத்திக்கான் சமூகத் தொடர்புத் துறையில் இரண்டு மிக முக்கியமான மற்றும் மிகவும் அறியப்பட்ட திருப்பீடச் சார்புத் தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ (L’Osservatore Romano) தொடங்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவும், வத்திக்கான் வானொலியின் எண்பது ஆண்டுகள் நிறைவும் இவ்வாண்டில் கொண்டாடப்படுகின்றன என்றார் கர்தினால் இலயோலோ.
இத்தாலி ஒரு நாடாக ஒன்றிணைக்கப்பட்ட 1861ம் ஆண்டில்  லொசர்வாத்தோரே ரொமானோ செய்தித்தாளும் தொடங்கப்பட்டது, இவ்வாண்டில் திருத்தந்தையரின் நாடுகளின் மீதான அதிகாரமும் முடிந்தது, இதனையொட்டி உரோமன் கேள்வி என்று நீண்ட காலமாக இருந்து வந்த தீர்க்கப்படாதப் பிரச்சனை குறித்து இத்தாலி மற்றும் ஐரோப்பிய மக்களுடன் திருப்பீடம் நடத்திய விவாதங்களின் குரலாக இத்தினத்தாள் செயல்பட்டது என்றார் அவர்.
வத்திக்கான் நகர நாடு உருவாக்கப்பட்டதோடு வத்திக்கான் வானொலியும் உருவாக்கப்பட்டது என்றுரைத்த கர்தினால் இலயோலோ, இரண்டாம் உலகப் போர் காலத்திலும் சமய சுதந்திரம் மறுக்கப்பட்ட சர்வாதிகாரக் காலத்திலும், கம்யூனிசம் ஆட்சியிலிருந்த காலத்திலும் எனப் பல முக்கிய கட்டங்களில் நசுக்கபபட்டோர் மற்றும் உரிமை மறுக்கப்பட்டோருக்கானத் திருச்சபையின் குரலாக வத்திக்கான் வானொலி செயல்பட்டுள்ளது, தொடர்ந்து செயல்பட்டும் வருகிறது என்றார்.
 
 
3. எண்பது வயதாகும் வத்திக்கான் வானொலி புதிய ஊடகத்துறையில்......

பிப்.11,2011. மேலும், வத்திக்கான் வானொலியின் எண்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிருபர் கூட்டத்தில் வத்திக்கான் நாட்டுச் செயலகத்தின் சார்பில் பேசிய பேரருட்திரு பீட்டர் வெல்ஸ்,  ஏற்கனவே 45 மொழிகளில் ஒலிபரப்பை நடத்தி வரும் வத்திக்கான் வானொலி வருங்காலத்தில் புதிய ஊடகத்துறையில் நுழையும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார்.
திருச்சபை உள்ளார்ந்த புதுப்பித்தலுக்கானத் திறமையைக் கொண்டிருக்கவில்லை என்று குறை சொல்லுவோரின் குரலுக்குப் போட்டியாக வத்திக்கான் வானொலி தொடர்ந்து செயல்பட வேண்டும் எனறார் பேரருட்திரு வெல்ஸ்.
வத்திக்கான் வானொலி இத்தகைய குரலாக இருந்து வெற்றி பெற வேண்டுமானால், அதற்குப் புதிய ஊடகங்கள் இன்றியமையாதவை என்றுரைத்த அவர், 21ம் நூற்றாண்டில் நற்செய்தி அறிவிப்புக்கு. வாய்ப்புக்களாக வழங்கப்படும் iPad, Facebook, Twitter போன்ற புதிய ஊடகங்களை ஒலிபரப்பாளர் பயன்படுத்த வேண்டும் என்றார்.
திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர், 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி வத்திக்கான் வானொலி தொடங்கி வைத்துப் பேசிய போது பயன்படுத்திய ஒலிதாங்கி, பல்வேறு திருத்தந்தையர் புதிய ஒலிபரப்பிகளைத் தொடங்கி வைத்த போது எடுத்த புகைப்படங்கள் எனப் பல பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
வத்திக்கான் வானொலி, இரண்டாம் உலகப் போரின் போது 2,50,000 செய்திகளைக் கைதிகளின் குடும்பத்தினரிடமிருந்து கைதிகளுக்குத் தெரிவித்தது. கொசோவோப் போரின் போதும் போரில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தியது.
 
 
4. அயர்லாந்தில் குற்றவியல் அமைப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் உடனடியாகத் தேவை - ஆயர்கள்
 
பிப்.11,2011. அயர்லாந்து நாட்டில் குற்றவியல் அமைப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் உடனடியாக இடம் பெற வேண்டும் என்று அந்நாட்டு ஆயர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய சித்ரவதை தடுப்புக் குழு, அயர்லாந்து சிறைகளின் நிலைமை குறித்துக் கடுமையாய் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளதை வரவேற்றுள்ள அந்நாட்டுச் சிறைகளுக்கான ஆன்மீகக் குருத் தலைவர் அருட்திரு Ciaran Enright, அந்நாட்டின் பல்வேறு சிறைகள் கீழ்த்தரமான மற்றும் ஆபத்தான நிலைகளில் இருப்பதாகக் கூறினார்.
அயர்லாந்து சிறைகளில் 2006ம் ஆண்டில் 3,191 ஆக இருந்த  கைதிகளின் எண்ணிக்கை 2010ம் ஆண்டில் 5,456 ஆக உயர்ந்துள்ளது என்றும் அக்குரு குறிப்பிட்டார்.
 
 
5. ஆப்ரிக்காவுக்கு அர்த்தமுள்ள வளர்ச்சியைக் கொண்டுவரும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு கர்தினால் வலியுறுத்தல்
 
பிப்.11,2011. ஆப்ரிக்கக் கண்டத்திற்கு அர்த்தமுள்ள வளர்ச்சியைக் கொண்டு வரும் மற்றும் பொது மக்களின் நல்வாழ்வுக்காக உழைக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு அக்கண்டத்தின் கர்தினால் ஒருவர் கேட்டுக் கொண்டார்.
இந்த 2011ம் ஆண்டில் 25 ஆப்ரிக்க நாடுகளில் நகராட்சி, சட்டமன்ற மற்றும் அரசுத்தலைவர்க்கானத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு பேட்டியளித்த ஜாம்பிய நாட்டு லுசாகா கர்தினால் Medardo Mazombwe, வெறுமனே நாட்டை நிர்வாகம் செய்யும் தலைவர்களை மட்டும் தேர்ந்தெடுக்காமல், பொது மக்களின் நலனுக்காகச் சேவை செய்யும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு வலியுறுத்தினார்.
நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும் தேர்தல் முடிவுகளை ஆப்ரிக்கத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கர்தினால் கேட்டுக் கொண்டார்.
ஜாம்பியா, பெனின், புர்க்கினா ஃபாசோ, காமரூன், கேப்வெர்தே, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, சாட், காங்கோ சனநாயகக் குடியரசு, திஜிபவுத்தி, கபோன், காம்பியா, லைபீரியா, மடகாஸ்கர், மௌரித்தானியா, மொரீஷியஸ், நைஜர், நைஜீரியா, ருவாண்டா, நைஜர், நைஜீரியா, சா தோம் பிரின்ச்சிப்பே, ஷேய்ச்ஷெல்ஸ், தென்னாப்ரிக்கா, டுனிசியா, உகாண்டா, ஜிம்பாபுவே ஆகிய ஆப்ரிக்க நாடுகளில் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.
 
 
6. இந்தோனேசிய அரசு கிறிஸ்தவர்களையும் பிற சிறுபான்மை மதத்தவரையும் பாதுகாப்பதற்கு தவறியுள்ளது - ஆயர் கண்டனம்
 
பிப்.11,2011. இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்களையும் மற்றும் பிற சிறுபான்மை மதத்தவரையும் பாதுகாப்பதற்கு அரசு தவறியுள்ளது என்று அந்நாட்டு அரசு அதிகாரிகளை வன்மையாய்ச் சாடியுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
கடந்த வாரத்தில் 1500 முஸ்லீம்கள் கொண்ட கும்பல் மூன்று ஆலயங்களையும் ஒரு கருணை இல்லத்தையும் ஒரு மருத்துவமனையையும் தாக்கி அழித்ததைத் தொடர்ந்து இவ்வாறு அரசு அதிகாரிகளைக் குறை கூறினார் அந்நாட்டு ஆயர் பேரவையின் பல்சமய ஆணையத் தலைவர் ஆயர் Petrus Canisius Mandagi.
வன்முறைக்கு முடிவு கட்ட அரசு அறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்திய ஆயர், கிறிஸ்தவர்களும்  பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டு மன்னிப்பில் வளருமாறு கேட்டுள்ளார்.
 
 
7. மலேசியாவில் வலெண்டைன் தினம் குறித்த அறிக்கைக்குக் கிறிஸ்தவர்கள் வருத்தம் 
 
பிப்.11,2011. வலெண்டைன் தினத்தை பாவம் மற்றும் கிறிஸ்தவத்தோடு தொடர்புபடுத்தி அண்மையில் மலேசியாவில் பொதுவில் வெளியாகியுள்ள அறிக்கைகள் தங்களைப் புண்படுத்தியிருப்பதாக அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் இசுலாம் மதப் பேச்சாளர் Siti Nor Bahyah Mahamood, தேசிய தொலைக்காட்சியில் வெளியிட்ட பொறுப்பற்ற கருத்துக்கள் குறித்து மலேசிய கிறிஸ்தவக் கூட்டமைப்பும் மலேசியக் கிறிஸ்தவ சபைகள் அவையின் இளையோர் அமைப்பும் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
இது குறித்து மலேசியக் கிறிஸ்தவக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு குறிப்பிட்ட மத சமூகத்திற்கு எதிராக வெறுப்பையூட்டுவது சகித்துக் கொள்ள முடியாதது என்றும் இவ்விழா திருச்சபையில் கொண்டாடப்படும் கிறிஸ்தவ விழாவும் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது. 
 இவ்விழா, மேலைநாட்டுக் கலாச்சாரத்தோடு தொடர்புடையது என்றும் கிறிஸ்தவ விசுவாசத்திற்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் கோலாலம்பூர் உயர்மறைமாவட்ட பல்சமய பணிக்குழுவின் அருட்தந்தை Michael Chua கூறினார்.
வலெண்டைன் தினம் : இசுலாத்தில் தடை என்ற தலைப்பில் உரையாற்றிய Siti, பிப்ரவரி 14ம் தேதி வலெண்டைன் தினக் கொண்டாட்டங்களில் முஸ்லீம் இளையோர் பங்கெடுக்க வேண்டாமென்று எச்சரித்துள்ளார்.
 
 
8. இந்திய மனித உரிமை ஆர்வலருக்குப் பிணையல் மறுப்பு 
 
பிப்.11,2011. இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர் பிநாயக் சென் என்பவருக்குப் பிணையல் வழங்க சட்டீஸ்கார் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பதற்குக் கிறிஸ்தவத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மருத்துவரான சென், இந்த மேற்கு இந்திய மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு உதவினார் என்று குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
இவரது வழக்கை இவ்வியாழனன்று விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, சென், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்றும் கூறியது.
இது குறித்துப் பேசிய இந்திய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையச் செயலர் அருட்திரு சார்லஸ் இருதயம், ஏழைகள் மற்றும் நலிந்தோரின் நலவாழ்வுக்காக உழைக்கும் எவரும் இந்தத் தீர்ப்பை குறை கூறுவர் என்றார்.
 
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...