Monday, 14 February 2011

Catholic News - hottest and latest - 09 Feb 2011

1. இறைவார்த்தைக்கு உரிய மரியாதையை வழங்காமல் இருப்பது ஐரோப்பியத் திருச்சபைக்கு பெரும் சவால் - கர்தினால் Mark Ouellet
 
2. மெக்சிகோவில் நிலவி வரும் வன்முறைகள் திருத்தந்தையை அதிகக் கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது - மெக்சிக்கோவுக்கான திருப்பீடத் தூதர்
 
3. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்த சிறப்பு இணையதளம்
 
4. மும்பையில் ஏற்பட்ட வன்முறைக்கு வசாய் பேராயர் கண்டனம்
 
5. குருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியைப் பயில வேண்டும் - ஆயர் Valence Mendis
 
6. பெத்லகேமை ஒரு பாரம்பரிய நினைவுத் தலமாக அறிவிக்க பாலஸ்தீனிய சுற்றுலா அமைச்சர் வேண்டுகோள்
 
7. இமயமலையின் பனி முகடுகள் வளர்ந்து வருகின்றன - GeoScience ஆய்வாளர்கள் கருத்து
 
8. உலக அளவில் வேலை இல்லாதவர்கள் 20 கோடியே 50 இலட்சம்
 
----------------------------------------------------------------------------------------------------------------
 
1. இறைவார்த்தைக்கு உரிய மரியாதையை வழங்காமல் இருப்பது ஐரோப்பியத் திருச்சபைக்கு பெரும் சவால் - கர்தினால் Mark Ouellet
 
பிப்.09,2011. இறைவார்த்தைக்கு உரிய மரியாதையை வழங்காமல் இருப்பது திருச்சபைக்கு உள்ளேயும், வெளியேயும் பெரும் சவாலாக அமைந்துள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் இப்புதன் வரை மூன்று நாட்கள் நடைபெற்ற 'திருச்சபையில் திருவிவிலியம்' என்ற கருத்தரங்கில் உரையாற்றிய ஆயர்கள் திருப்பேராயத்தின் தலைவரான கர்தினால் Mar k Ouellet இவ்வாறு கூறினார்.
அண்மைக் காலங்களில் ஐரோப்பியக் கலாச்சாரத்தின் அடித்தளமான கிறிஸ்தவத்தைப் புறக்கணித்து விட்டு, உலகப்போக்கு அதிகம் பரவி வருவதால், ஐரோப்பிய கலாச்சாரமே வேரறுக்கப்படும் ஆபத்து சூழ்ந்துள்ளது என்று கர்தினால் Ouellet சுட்டிக் காட்டினார்.
மதசார்பற்ற நிலை என்ற காரணம் காட்டி, கிறிஸ்தவம், விவிலியம் அனைத்தும் புறந்தள்ளப்படுவதால், திருச்சபைக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் பலவித சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்பானிய ஆயர் பேரவை விவிலியத்தின் புதிய மொழிபெயர்ப்பை, தகுந்த அறிவியல் ஆராய்ச்சிகளுடன் மேற்கொண்டுள்ளதைப் பாராட்டிய கர்தினால் Ouellet, ஸ்பெயினின் இந்த முயற்சி பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்குமென்றும், இறைவார்த்தை ஐரோப்பிய கலாச்சாரத்தின் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்தார்.
 
 
2. மெக்சிகோவில் நிலவி வரும் வன்முறைகள் திருத்தந்தையை அதிகக் கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது - மெக்சிக்கோவுக்கான திருப்பீடத் தூதர்
 
பிப்.09,2011. மெக்சிகோவில் நிலவி வரும் வன்முறைகள் திருத்தந்தையை அதிகக் கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறதென மெக்சிகோவுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Christophe Pierre கூறினார்.
மெக்சிகோ நாட்டின் Leon நகரில், அந்நாட்டின் பல்வேறு கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களை அண்மையில் சந்தித்த பேராயர் இவ்வாறு கூறினார்.
உலகில் பிரேசிலுக்கு அடுத்தப்படியாக கத்தோலிக்கரைப் பெரும்பான்மையாய்க் கொண்ட நாடு மெக்சிகோ என்று சுட்டிக்காட்டிய பேராயர், அந்நாடு கடவுளைத் தன் பொது வாழ்வில் மையப்படுத்துவதற்குப் பதில், ஒரு ஓரத்தில் வைத்திருப்பதே அந்நாட்டின் முக்கிய பிரச்சனை என்று கூறினார்.
கடவுளை ஓரப்படுத்திய ஒரு நாட்டில் வாழும் இளையோர், தாங்கள் எதற்காக நன்மைகள் செய்யவேண்டும், கொலை போன்ற தீமைகளை விட்டு விலக வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் வாழும் சூழ்நிலை உருவாகிறது என்று கூறினார் பேராயர் Pierre.
இளையோரைத் தகுந்த வழிகளில் வளர்ப்பதால் கத்தோலிக்க, கிறிஸ்தவ பல்கலைக் கழகங்கள் நாட்டுக்கு அரியதொரு சேவையைச் செய்ய முடியும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார் மேக்சிகொவுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Christophe Pierre.
 
 
3. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்த சிறப்பு இணையதளம்
 
பிப்.09,2011. வருகிற மே மாதம் இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படவுள்ள இவ்வேளையில், அவர் முத்திபேறு பெற்றவராகவும், புனிதராகவும் உயர்த்தப்படுதலை மையப்படுத்திய ஒரு சிறப்பு இணையதளத்தை உரோம் மறைமாவட்டம் துவங்கியுள்ளது.
www.karol-wojtyla.org என்ற இவ்விணையத்தளம் இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானியம் உட்பட ஏழு மொழிகளில் உள்ளது. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்த பல்வேறு தகவல்களைக் கொண்ட இவ்விணையதளத்தில் அவரது கல்லறையிலிருந்து நேரடி ஒளிபரப்பையும் பார்க்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வருகிற மேமாதம் முதல் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்ச்சியைக் குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு காணப்படுகின்றன. உரோம் நகரின் Circus Maximus என்ற ஒரு பழங்கால பந்தயத் திடலில் ஏப்ரல் 30 இரவு திருவிழிப்புத் திருவழிபாடு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்விணையதளத்தின் மூலம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
 
 
4. மும்பையில் ஏற்பட்ட வன்முறைக்கு வசாய் பேராயர் கண்டனம்
 
பிப்.09,2011. தனிப்பட்டவர்களுக்கு இடையே உருவான ஒரு சண்டைக்குச் சமயச் சாயம் பூசி இஸ்லாமிய, கிறிஸ்தவ பூசலாக மாற்றியவர்களை இந்திய ஆயர் ஒருவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
மும்பையில் வசாய் உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்த கத்தோலிக்க குரு யோகேஷ் பெரேரா ஆட்டோ ஓட்டும் ஒரு சில இஸ்லாமிய இளையோரால் இஞ்ஞாயிறன்று தாக்கப்பட்டார்.
தனிப்பட்ட முறையில் எழுந்த ஒரு வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து, இந்த அசம்பாவிதம் நடந்ததென சொல்லப்படுகிறது. குரு தாக்கப்பட்ட செய்தி கேட்டு, அப்பகுதியின் சில கிறிஸ்தவ இஸ்லாமிய இளையோரிடையே சண்டைகள் மூண்டன.
இந்த நிகழ்வில் இருதரப்பினர் மேலும் தன் கண்டனத்தைத் தெரிவித்தார் வசாய் உயர்மறைமாவட்டப் பேராயர் Felix Machado. அப்பகுதியில் நிலவும் பதட்டத்தைத் தீர்க்க கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்கள் வருகிற வெள்ளியன்று சந்திக்க உள்ளனர் என்றும் பேராயர் தெரிவித்தார்.
அருள்தந்தை யோகேஷ் பெரேரா உட்பட, மேலும் ஆறு பேர் மருத்துவ மனையில் உள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
 
 
5. குருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியைப் பயில வேண்டும் - ஆயர் Valence Mendis
 
பிப்.09,2011. இலங்கையில் குருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிங்கள மாணவர்களைத் தமிழ் மொழியையும் பயிலும் படி அந்நாட்டு ஆயர் ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Chilaw மறைமாவட்டத்தின் ஆயர் Valence Mendis, தன் மறைமாவட்டத்தில் குருமடங்களில் உள்ளவர்களை தமிழ் கற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தி வருகிறார்.
தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளும் நோக்கத்தில் தன் குருத்துவ மாணவர்களை திரிகோணமலை-மட்டகளப்பு மறைமாவட்டத்தில் உள்ள பங்குகளுக்கு அனுப்பி வருவதாக ஆயர் Mendis கூறினார்.
Chilaw மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்கர்களில் பாதி பேர் தமிழர்கள் என்றும், அவர்களுக்குத் தகுந்த முறையில் பணி செய்வதற்கு தமிழ் மொழி இன்றியமையாததென்றும் கூறிய ஆயர் Mendis, குருமடத்தில் வாரம் ஒரு முறை தமிழ் திருப்பலிகள் நிறைவேறவும் தான் ஏற்பாடுகள் செய்துள்ளதாகக் கூறினார்.
 
 
6. பெத்லகேமை ஒரு பாரம்பரிய நினைவுத் தலமாக அறிவிக்க பாலஸ்தீனிய சுற்றுலா அமைச்சர் வேண்டுகோள்
 
பிப்.09,2011. பாலஸ்தீனப் பகுதியில் உள்ள பெத்லகேமை ஒரு பாரம்பரிய நினைவுத் தலமாக UNESCO அறிவிக்க வேண்டுமென்று பாலஸ்தீனிய சுற்றுலா அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயேசு பிறந்த இடமான பெத்லகேம் ஒரு பாரம்பரிய நினைவுத் தலமாக அறிவிக்கப்பட்டால், அதன் மூலம் பாலஸ்தீனிய நாடும் உலக அரங்கில் அங்கீகாரம் பெறும் வழிகள் உள்ளதென்று பாலஸ்தீனிய சுற்றுலா அமைச்சர் Khulud Daibes கூறினார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே உள்ள உரசல்களால் பெத்லகேம் குறித்த இந்த விண்ணப்பத்தை UNESCO ஏற்றுக் கொள்வது கடினம் என்று செய்திகள் கூறுகின்றன.
பெத்லகேமுக்கு அடுத்தபடியாக Hebron, Jericho ஆகிய நகரங்களையும் பாரம்பரிய நினைவுத் தலங்களாக சேர்க்கும் முயற்சிகள் நடைபெறும் என்று தெரிகிறது. பெத்லகேம் குறித்த இந்த விண்ணப்பத்தை கத்தோலிக்கத் தலத் திருச்சபையும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஆர்மீனிய கிறிஸ்தவ சபைகளும் ஆதரித்துள்ளன.
 
 
7. இமயமலையின் பனி முகடுகள் வளர்ந்து வருகின்றன - GeoScience ஆய்வாளர்கள் கருத்து
 
பிப்.09,2011. இமயமலையின் பனி முகடுகள் கரைந்து வரவில்லை மாறாக, அவை வளர்ந்து வருகின்றன என்று Nature  GeoScience என்ற அறிவியல் இதழ் கூறியுள்ளது.
இமயமலையின் பனி முகடுகள் அதிக வேகத்தில் கரைந்து வருவதாகவும், அவை முற்றிலுமாக 2035ம் ஆண்டுக்குள் கரைந்து விடும் என்றும் ஐ.நா. அறிக்கை கூறியதற்கு, இந்தத் துறையில் நிபுணரான இந்திய அறிவியலாளர் விஜய் ரைனா தன் மாற்றுக் கருத்தைக் கூறியுள்ளார்.
புவி வெப்பமடைதலால் இமயமலையில் நடக்கும் மாற்றங்கள் குறித்து ஐ.நா. வெளியிட்ட அறிக்கைக்குச் சரியான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்று முனைவர் ரைனா கூறினார்.
இமய மலையில் உள்ள பனி முகடுகள் உருகுவதற்குப் பதில், அவை மாற்றம் ஏதுமின்றி இருப்பதாகவும், ஒரு சில இடங்களில் பனி முகடுகள் வளர்ந்துள்ளதாகவும் GeoScience இதழின் சார்பில் ஆய்வுகளை    மேற்கொண்ட   ஜெர்மனி மற்றும் அமெரிக்க நாடுகளின் இரு பல்கலைக் கழகங்களின் ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
 
 
8. உலக அளவில் வேலை இல்லாதவர்கள் 20 கோடியே 50 இலட்சம்
 
பிப்.09,2011. உலக அளவில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாமலும், இந்தியாவில், ஆறு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை இல்லாமலும் உள்ளனர். உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும், படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுமே இந்நிலைக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால், உலகில் உள்ள எல்லா நாடுகளும் பாதிக்கப்பட்டன. அதன் பின், பொருளாதார மந்த நிலை சிறிது சிறிதாக மாறி வருகிறது. இதனால் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சிறந்த முறையில் வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு வரை உலகில் வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சம் பேர். இது 6.1 விழுக்காடாகும். இதில் 7 கோடியே 80 இலட்சம் பேர் இளைஞர்கள்.
கடந்த 2007ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 கோடியே 35 இலட்சமாக இருந்தது. உலக தொழிலாளர் நிறுவனம் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, இந்த ஆண்டு வேலை இல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை உலகில் 20 கோடியே 33 இலட்சமாக குறையும் என்று உலக தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...