செய்திகள்-06.04.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை – வாழ்வின் இருளான நேரங்களில் நற்செய்தியை எடுத்துச் செல்லுங்கள்
2. ஆர்மேனிய இனப்படுகொலையின் நூறாம் ஆண்டு நினைவு திருப்பலி
3. போரைச் சந்தித்துள்ள மக்கள் ஒப்புரவுடன் வாழ வேண்டும்,மன்னார் ஆயர்
4. நேபாளம்-புதிய அரசியல் அமைப்புக்காக கத்தோலிக்கர் செபம்
5. நவீன மனித வர்த்தகம் குறித்து உலகம் அறிய வேண்டும்
6. நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு மேலும் உதவிகள் தேவை, ஐ.நா.
7. மத்தியதரைக் கடல் பிளாஸ்டிக் குப்பைக்கூடமாக மாறும் அபாயம்
8. வெப்பநிலை மாற்றம் சிறிய தீவு நாடுகளின் வாழ்வுக்கு அச்சுறுத்தல்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை – வாழ்வின் இருளான நேரங்களில் நற்செய்தியை எடுத்துச் செல்லுங்கள்
ஏப்.06,2015. நம் வாழ்வு இயேசுவின் உயிர்ப்பால் வெற்றியடைந்து, மாற்றம் அடையட்டும் என்று இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இத்திங்கள் நண்பகலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, இத்திங்கள் நற்செய்திப் பகுதியை(மத்.28,8-15) மையமாக வைத்து அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
திருமுழுக்கு வழியாக நாம் இயேசுவில் உயிர்பெற்றுள்ளோம், அவரில் மரணத்திலிருந்து வாழ்வுக்கும், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து அன்பின் சுதந்திரத்துக்கும் கடந்து வந்துள்ளோம் என்று கூறினார் திருத்தந்தை.
இந்த
நற்செய்தியையே நாம் தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்டு ஒவ்வொரு சூழலிலும்
பிறருக்கு வழங்குவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் உரைத்த திருத்தந்தை, இயேசுவின் உயிர்ப்பில் நாம் கொண்டுள்ள விசுவாசமும், இயேசு
நமக்குக் கொணர்ந்துள்ள நம்பிக்கையும் கிறிஸ்தவர்கள் தங்களின் சகோதர
சகோதரிகளுக்கு வழங்கக்கூடிய மற்றும் வழங்கவேண்டிய அழகான கொடை என்றும் கூறினார்.
எனவே கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என்று மீண்டும் மீண்டும் சொல்வதில் சோர்வடைய வேண்டாம் எனக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த அனைவரையும், கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என்று தன்னுடன் சேர்ந்து மூன்று முறை சப்தமாகச் சொல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.
மூலைமுடுக்கெல்லாம், வாழ்வின் இருளான நேரங்களில் நற்செய்தியை எடுத்துச் செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நம் வாழ்வின் இருளான நேரங்களில் உயிர்த்த கிறிஸ்துவின் ஒளி நம்மில் ஒளிருகின்றது என்றும் கூறினார்.
பிறர் சிரிக்கும்போது சிரிக்கவும், கண்ணீர் விடும்போது கண்ணீர் விடவும், கவலையாக, நம்பிக்கையை இழக்கும் ஆபத்தில் இருப்பவர்களோடு துணை நிற்கவும், வாழ்வின் பொருளையும் மகிழ்வையும் தேடுவோருக்கு நம் விசுவாச அனுபவத்தைப் பகிரவும் வேண்டும் என அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. ஆர்மேனிய இனப்படுகொலையின் நூறாம் ஆண்டு நினைவு திருப்பலி
ஏப்.06,2015. “ஆண்டவரே, மனத்தாராளம் என்ற பண்பில் வாழவும், வரையறையின்றி அன்புகூரவும் எங்களுக்கு உதவும்” என்ற வார்த்தைகளை இத்திங்களன்று தனது டுவிட்டர் செய்தியாக பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும்,
ஆர்மேனியக் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவு
நினைவு திருப்பலியை இம்மாதம் 12ம் தேதி தலைமையேற்று நிறைவேற்றவுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நிகழ்வு குறித்துக் கூறிய திருப்பீடத்துக்கான ஆர்மேனியத் தூதர் Mikayel Minasyan அவர்கள், ஆர்மேனியர்களுக்கு எதிராக இத்தனை கொடுமைகள் நடத்தப்பட்ட பின்னரும் ஆர்மேனியர்கள் இன்றும் வாழ்கின்றனர், அவர்களுக்கென ஒரு வரலாறு உள்ளது, இது உலக வரலாற்றின் ஓர் அங்கம் என்று கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்நினைவு திருப்பலியை நிறைவேற்ற இசைவு தெரிவித்திருப்பது மாபெரும் காரியம் என்றும், இது ஓர் அரசியல் நிகழ்வு அல்ல என்றும் கூறினார் Minasyan.
1915ம் ஆண்டுக்கும் 1923ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒட்டமான் முஸ்லிம் பேரரசு ஆட்சியில் ஏறக்குறைய 15 இலட்சம் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்மேனியர்கள் தப்பிக்கக் கையாண்ட அதே வழிகளையே, ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் தற்போது பயன்படுத்துகின்றனர் என்றும் கூறினார் Minasyan.
ஏப்ரல் 12, ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியில் ஆர்மேனியப் புனிதராகிய Narek Gregory அவர்களை, திருஅவையின் மறைவல்லுனராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. போரைச் சந்தித்துள்ள மக்கள் ஒப்புரவுடன் வாழ வேண்டும்,மன்னார் ஆயர்
ஏப்.06,2015. இலங்கையில் போரை எதிர்கொண்டுள்ள மக்கள் இனிமேல் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதை அந்நாட்டுத் தலைவர்களுக்கு கூற விரும்புவதாக, மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தெரிவித்தார்.
மன்னார்
புனித செபஸ்தியார் பேராலயத்தில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலி
மறையுரையில் இவ்வாறு கூறிய மன்னார் ஆயர் ஜோசப் அவர்கள், இந்நாட்டிலே ஆண்டவர் புதியதோர் காரியத்தைச் செய்து, புதியதோர் அரசை தந்திருக்கிறார், இந்நாட்டை
ஆட்சி செய்கின்றவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து
பொறுப்புள்ளவர்களாக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் ஒப்புரவையும், இணக்கத்தையும்
ஏற்படுத்தி அமைதியைக் கொண்டுவரும் எண்ணமுடையவர்களாக இருக்க வேண்டும் என
மேலும் கேட்டுக் கொண்டார் ஆயர் இராயப்பு ஜோசப் .
ஆதாரம் : ஆதவன் /வத்திக்கான் வானொலி
4. நேபாளம்-புதிய அரசியல் அமைப்புக்காக கத்தோலிக்கர் செபம்
ஏப்.06,2015.
நேபாளத்தில் புதிய சமயச் சார்பற்ற அரசியல் அமைப்பை எழுதிக்
கொண்டிருப்பவர்களுக்கு இறைவன் ஞானத்தை வழங்குமாறு அந்நாட்டுக்
கிறிஸ்தவர்கள் கடந்த வாரப் புனித நாள்களில் சிறப்பாகச் செபித்தனர்.
இது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய நேபாள அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Paul Simick அவர்கள், நேபாளத்தில்
புதிய சமயச் சார்பற்ற அரசியல் அமைப்பை எழுதிக் கொண்டிருக்கும் தலைவர்கள்
பல்வேறு பிரச்சனைகளால் ஒரு தீர்வு காண்பதற்கு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்
என்று கூறினார்.
சட்ட அமைப்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கடந்த காலத் தவறுகளை இறைவன் மன்னித்து, இந்தப்
புதிய சமயச் சார்பற்ற அரசியல் அமைப்பை எழுதுவதற்கு இறைவன் ஞானத்தை
அருளுமாறு இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவில் கத்தோலிக்கர் செபித்தனர்
என்று கூறினார் ஆயர் Paul Simick.
240 ஆண்டுகளாக இந்து அரச நாடாக இருந்த நேபாளம், 2007ம்
ஆண்டில் புதிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுத்தது. இந்த அமைப்பு 2010ம்
ஆண்டுக்குள் புதிய சமயச் சார்பற்ற அரசியல் அமைப்பை கொண்டுவந்திருக்க
வேண்டும். ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் அது இன்னும் முடிக்கப்படவில்லை.
நேபாள மக்கள்தொகையில் ஏறக்குறைய 0.5 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.
ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி
5. நவீன மனித வர்த்தகம் குறித்து உலகம் அறிய வேண்டும்
ஏப்.06,2015. நவீன மனித வர்த்தகம் குறித்த புள்ளி விபரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன என்று கூறியுள்ள அதேவேளை, இந்நிலை குறித்து உலகினரின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புவதாக அருள்சகோதரி ஒருவர் தெரிவித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் எட்டு இலட்சம் முதல் இருபது இலட்சம் பேர்வரை மனித வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர், இவர்களில்
எண்பது விழுக்காட்டினர் பெண்களும் சிறுமிகளும் என்று அமெரிக்க அரசு
வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களையும் குறிப்பிட்டார் கொம்போனி சபை
அருள்சகோதரி Gabriella Bottani.
மனித
வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உழைக்கும் அனைத்துலக
அருள்சகோதரிகள் அமைப்பான தலித்தா கும் என்ற அமைப்பின் புதிய
ஒருங்கிணைப்பாளரான அருள்சகோதரி Bottani அவர்கள், வாஷிங்டனில் அளித்த பேட்டியொன்றில் நவீன மனித வர்த்தகத்தின் பல்வேறு முகங்கள் குறித்து விளக்கினார்.
பாலியலுக்குப் பயன்படுத்தப்படுவது, கட்டாய வேலை, வீட்டுக் கொத்தடிமை, உடல் உறுப்புகளை அகற்றல், கட்டாயத் திருமணம் என நவீன மனித வர்த்தகத்தின் பல்வேறு முகங்களையும் விளக்கிய அருள்சகோதரி Bottani அவர்கள், இன்றைய உலகம் இந்நிலையைக் களைவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : CNS /வத்திக்கான் வானொலி
6. நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு மேலும் உதவிகள் தேவை, ஐ.நா.
ஏப்.06,2015. இன்று உலகில் 162 நாடுகள் நிலக்கண்ணி வெடிகளைத் தடைசெய்யும் உலக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளவேளை, உலகை
நிலக்கண்ணி வெடிகளின் அச்சுறுத்தலினின்று பாதுகாப்பதில் ஐக்கிய நாடுகள்
நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி
மூன் அவர்கள் கூறினார்.
நிலக்கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வு
மற்றும் அவ்வெடிகளை அகற்றுவதற்கு உதவி குறித்த அனைத்துலக தினத்தின்
பத்தாம் ஆண்டு நிறைவு நாள் இம்மாதம் 4ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டபோது
இவ்வாறு கூறினார் பான் கி மூன்.
கடந்த ஆண்டில் மட்டும் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட நிலக்கண்ணி வெடிகளும், இரண்டாயிரம் டன்களுக்கு மேற்பட்ட, போர்க்காலங்களில் வெடிக்காத குண்டுகளும் அழிக்கப்பட்டுள்ளன என்றுரைத்துள்ள பான் கி மூன் அவர்கள், ஐ.நா. நிறுவனம் மட்டுமே 1,500 கிலோ மீட்டருக்கு அதிகமான சாலைகளைப் பரிசோதித்துள்ளது என்றும் கூறினார்.
இந்நடவடிக்கைக்கு உதவியுள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள பான் கி மூன் அவர்கள், நிதி மற்றும் அரசியல் முறைப்படி மேலும் இதற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளார்.
ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி
7. மத்தியதரைக் கடல் பிளாஸ்டிக் குப்பைக்கூடமாக மாறும் அபாயம்
ஏப்.06,2015. மத்தியதரைக் கடலில் பெருமளவான பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன என்று இஸ்பானிய அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மத்தியதரைக்கடலின் மேற்பரப்பில், பைகள், பாட்டில்கள், பொருள்களைச்
சுற்றி வைக்கும் பிளாஸ்டிக் தாள்கள் போன்றவற்றின் பாகங்கள் என ஏறக்குறைய
ஆயிரம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் மிதப்பதாக இஸ்பானிய அறிவியலாளர்கள்
மேற்கொண்ட ஓர் ஆய்வு கூறுகிறது.
மத்தியதரைக்கடலில் வாழ்கின்ற மீன்கள், பறவைகள், ஆமைகள் மற்றும் திமிங்கிலங்களின் வயிற்றிலிருந்தும் பிளாஸ்டிக் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அவ்வாய்வு, குறிப்பாக, வட
ஐரோப்பிய கரையோரங்களில் வளர்ந்த சிப்பி வகை உயிரினங்களின் வயிற்றிலும்
மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கிறது.
மத்தியதரைக் கடல் பகுதி, உலகப் பெருங்கடல் பகுதியில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான பகுதியாக இருந்தபோதிலும், இப்பகுதி பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு முக்கியமானது என்று கூறப்படுகிறது.
மத்திய தரைக்கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவை ஐந்து மில்லிமீட்டருக்கும் சிறிய அளவிலானவை என சுட்டிக்காட்டியுள்ள இந்த ஆய்வறிக்கை, இந்தப் பகுதியில் குவிந்திருக்கும் இவ்வளவு பெரிய பரப்பளவிலான பிளாஸ்டிக் குப்பைகள் குறித்து ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடல், வட மற்றும் தென் அட்லான்டிக் கடல், வட மற்றும் தென் பசிபிக் கடல், ஆகியவற்றிற்கு
இடையே தொடர்ந்து இடம்பெறும் கடல் நீரோட்ட சுழற்சியில் எந்த அளவுக்கு இந்த
பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்திருக்கிறதோ அதற்குச் சமமான அளவுக்கு மத்திய
தரைக் கடலிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்திருப்பதாக அந்த ஆய்வு
தெரிவிக்கின்றது.
ஆதாரம் : Agencies /வத்திக்கான் வானொலி
8. வெப்பநிலை மாற்றம் சிறிய தீவு நாடுகளின் வாழ்வுக்கு அச்சுறுத்தல்
ஏப்.06,2015. உலகில் வெப்பநிலை மாற்றங்கள் கடுமையாய் இருக்கும்வேளை, சிறிய தீவு நாடுகளின் வருங்கால வளர்ச்சி குறித்து கவலை தெரிவித்துள்ளார் ஐ.நா.வின் பேரிடர் தடுப்பு அலுவலகத் துறைத் தலைவர் Margareta Wahlström.
வறுமை, உள்கட்டமைப்பு, வீட்டுவாரியம் ஆகியவற்றோடு வெப்பநிலை மாற்றங்களும் தொடர்புடையதாய் இருப்பதால், இவை
பொருளாதாரத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்
ஐ.நா.பொதுச் செயலரின் பேரிடர் தடுப்பு நடவடிக்கையின் சிறப்பு அதிகாரி Wahlström.
கடல் மட்டம் உயருவது, புயல்காற்றால் ஏற்படும் சேதங்கள் அதிகரிப்பு போன்றவை பற்றியும் குறிப்பிட்டுள்ள Wahlström அவர்கள், பிலிப்பைன்சில் இலட்சக்கணக்கான மக்கள் Maysak புயலை எதிர்நோக்குகின்றனர் என்றும் கூறினார்.
வனுவாத்து தீவில் ஏற்பட்ட புயல் பற்றியும் குறிப்பிட்ட Wahlström அவர்கள், பல சிறிய தீவு நாடுகள் தங்களின் உயிர்வாழ்வுக்கே அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்றும் கூறினார்.
No comments:
Post a Comment