Thursday, 23 January 2014

செய்திகள் - 23.01.14

செய்திகள் - 23.01.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. உலகத் தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்தி - கிறிஸ்தவர்களாகிய நாம் அச்சமின்றி 'டிஜிட்டல்' உலகின் குடிமக்களாக மாறுவோம்

2. உலகத்தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தி, 'பிரான்சிஸ் தன்மை' கொண்டது - பேராயர் Maria Celli

3. திருத்தந்தை பிரான்சிஸ் - விவிலியத்தின் முதல் பக்கங்களிலிருந்து பொறாமையில் தங்களையே இழந்த பலரைக் காண்கிறோம்

4. திருத்தந்தையின் Twitter செய்தி - வாஷிங்டன் பேரணியில், என் செபங்கள் வழியாக, நானும் கலந்துகொள்கிறேன்

5. கருக்கலைப்பை ஆதரிப்பவர்கள் பொய்யான பல காரணங்களில் புகலிடம் தேடுகின்றனர் - கர்தினால் Sean O'Malley

6. தென் கொரியாவில் ஆகஸ்ட் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மேய்ப்புப்பணி பயணம்

7. இரண்டாவது ஜெனீவா பேச்சு வார்த்தைகளில், மக்கள் முதலிடம் பெறவேண்டும் - பேராயர் Silvano Tomasi

8. மதச்சார்பற்ற, ஓர் அரசியல் கட்சியே இந்தியாவை வழிநடத்த வேண்டும் - இந்தியப்  பொருளாதார அறிஞர் Amartya Sen

------------------------------------------------------------------------------------------------------

1. உலகத் தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்தி - கிறிஸ்தவர்களாகிய நாம் அச்சமின்றி 'டிஜிட்டல்' உலகின் குடிமக்களாக மாறுவோம்

சன.23,2014. நம் மத்தியில் பெருகியுள்ள தொடர்புகள் மற்றும் பயண வசதிகள் நம் உலகை மிகவும் சிறிதாக மாற்றி, நம்மை நெருங்கிவர வைத்துள்ளது என்ற வார்த்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு செய்தியை வழங்கியுள்ளார்.
ஜூன் மாதம் 1ம் தேதி, ஞாயிறன்று, திருஅவை சிறப்பிக்கவிருக்கும் 48வது உலகத் தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள இச்செய்தியினை, திருப்பீட சமூகத் தொடர்புப்பணி அவையின் தலைவர் பேராயர் Claudio Maria Celli அவர்கள், இவ்வியாழனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டார்.
கருவிகளின் உதவியாலும், உலகமயமாக்கல் என்ற போக்கினாலும் இவ்வுலகம் நெருங்கி வருவதுபோல் தோன்றினாலும், செல்வர், வறியோர் ஆகிய இரு பிரிவினருக்கிடையே இணைக்கமுடியாத, ஆழமான பிரிவு உருவாகியுள்ளது என்பதையும் நாம் மறுக்கமுடியாது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
எண்ணிப்பார்க்க இயலாத அளவுக்கு குறுகியக் காலத்தில் தகவல்கள் உலகெங்கும் பரிமாறப்படும் இவ்வேளையில், நம்மிடையே உரையாடல்கள் குறைந்து வருவதும் வளர்ந்து வருகிறது என்ற எச்சரிக்கையைத் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய உலகில் ஒருவரை ஒருவர் சந்தித்து, உரையாடல்களை மேற்கொள்ளும் கட்டாயத்தில் நாம் வாழ்கிறோம் என்று சுட்டிக்காட்டும் திருத்தந்தையின் செய்தி, இந்தச் சந்திப்பிற்கு, தொடர்புகள் பெருமளவு உதவவேண்டும் என்றும் கூறுகிறது.
தனக்குள்ளேயே திருப்தியுடன் தங்கிவிடும் திருஅவைக்கும், காயப்பட்டு கிடக்கும் திருஅவைக்கும் இடையே உரையாடல் தேவை என்பதைச் சுட்டிக்காட்டும் திருத்தந்தை அவர்கள், இந்த உரையாடலை 'டிஜிட்டல்' உயர்வழிச் சாலைகள் மூலம் நாம் மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் அச்சமின்றி 'டிஜிட்டல்' உலகின் குடிமக்களாக மாறுவோம் என்ற அழைப்பை தன் செய்தியின் வழியாக விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்பு உலகம் நமக்கு முன் வைத்துள்ள அனைத்து சவால்களையும் திறமையுடன் ஏற்று, இறைவனின் அழகை அனைவரோடும் பகிர்ந்துகொள்வோம் என்ற கருத்துடன் தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. உலகத்தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தி, 'பிரான்சிஸ் தன்மை' கொண்டது - பேராயர் Maria Celli

சன.23,2014. உலகத்தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தி, 'பிரான்சிஸ் தன்மை' கொண்ட ஆழமான கருத்துக்களை வெளியிட்டுள்ளது என்று திருப்பீட சமூகத் தொடர்புப்பணி அவையின் தலைவர் பேராயர் Claudio Maria Celli அவர்கள் கூறினார்.
"உண்மையான சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு உதவும் தொடர்பு" என்ற மையக் கருத்துடன் இவ்வாண்டு ஜூன் 1ம் தேதி ஞாயிறன்று கொண்டாடப்படவிருக்கும் 48வது உலகத் தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியை இவ்வியாழனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட பேராயர் Maria Celli அவர்கள், இச்செய்தியின் முக்கிய எண்ணங்களைத் தொகுத்துக் கூறினார்.
மனித வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் கருவிகளின் பயன்பாடு வளர்ந்து வருவதை நன்கு உணர்ந்துள்ள திருத்தந்தை, இக்கருவிகளினால் நாம் ஆதிக்கம் செய்யப்படுவதைத் தவிர்த்து, இக்கருவிகளின் உதவியுடன் எவ்விதம் நமக்குள் உரையாடலை வளர்க்க முடியும் என்பதை தன் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார் என்று பேராயர் Maria Celli குறிப்பிட்டார்.
ஒரு குறுகிய வட்டத்திற்குள் தங்கிவிடாமல், சமுதாயத்தின் விளிம்புகளுக்கு செல்லவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவைக்கு அடிக்கடி அளித்துவரும் ஓர் உருவகம், அவர் வழங்கியுள்ள இச்செய்தியிலும் வெளியாகிறது என்று பேராயர் Maria Celli எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் - விவிலியத்தின் முதல் பக்கங்களிலிருந்து பொறாமையில் தங்களையே இழந்த பலரைக் காண்கிறோம்

சன.23,2014. நம் மத்தியில் உள்ள ஒற்றுமையைக் குலைத்து, நம்மை அழிவுக்கு இட்டுச் செல்வது, நம் மனதில் தோன்றும் பொறாமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் வழங்கிய மறையுரையில் எச்சரித்தார்.
கிறிஸ்தவ ஒற்றுமைக்காக செபிப்பதற்கென அர்ப்பணிக்கப்பட்ட காலத்தின் ஆறாம் நாளான இவ்வியாழனன்று காலை புனித மார்த்தா இல்லத்தில் ஆற்றியத் திருப்பலியில், தாவீதின் மீது பொறாமை கொண்ட மன்னன் சவுலை எடுத்துக்காட்டாகக் கூறி, தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை.
விவிலியத்தின் முதல் பக்கங்களிலிருந்து பொறாமையில் தங்களையே இழந்த பலரைக் காண்கிறோம் என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, பொறாமையினால் தன் சகோதரனைக் கொன்ற காயின் நமக்குச் சிறந்த எச்சரிக்கையாக உள்ளார் என்றும் கூறினார்.
பொறாமையால் விளையும் இரு ஆபத்துக்களை திருத்தந்தை அவர்கள் தன் மறையுரையில் விளக்கினார். முதலாவதாக, பொறாமைப்படும் ஒருவர் மனதில் கசப்பு உணர்வுகள் நிறைவதால், அவர் மகிழ்வை இழந்து, தான் செல்லும் இடங்களிலெல்லாம் கசப்பை விதைக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
இரண்டாவதாக, போறாமைப்படுபவரிடமிருந்து வதந்திகள் பரவுகின்றன என்றும், இதனால், சமுதாயம் பிளவுபடுகிறது என்றும் விளக்கினார் திருத்தந்தை.
ஒற்றுமையுடன், சிறப்பாகச் செயலாற்றிய பல குழுமங்கள் பொறாமையால் பிளவுபட்டு துன்புறுகின்றன என்றும், இக்குழுமங்களில் துவக்கத்தில் இருந்த மகிழ்வு விடைபெற்று, அங்கு சோகமே ஆட்சி செய்கிறது என்றும் தன் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தையின் Twitter செய்தி - வாஷிங்டன் பேரணியில், என் செபங்கள் வழியாக, நானும் கலந்துகொள்கிறேன்

சன.23,2014. "கிறிஸ்மஸ் காலத்தில் நம் உள்ளத்தில் பிறந்த ஒளியை நாம் பாதுகாத்து வளர்ப்போம்; நம் ஒவ்வொரு நாள் வாழ்விலும், நாம் செல்லும் இடமெல்லாம் இவ்வொளியை ஏந்திச் செல்வோம்" என்ற வார்த்தைகள் அடங்கிய Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒன்பது மொழிகளில் இவ்வியாழனன்று வெளியிட்டார்.
மேலும், சனவரி 22, இப்புதனன்று அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உயிர் காக்கும் பேரணியில் கலந்துகொண்ட பல்லாயிரம் மக்களுக்கென ஆங்கிலம், ஸ்பானியம் ஆகிய இரு மொழிகளில் தன் Twitter செய்தியை வெளியிட்டார் திருத்தந்தை.
"வாஷிங்டன் நகரில் நடைபெறும் பேரணியில் என் செபங்கள் வழியாக நானும் கலந்துகொள்கிறேன். அனைத்து உயிர்களையும், குறிப்பாக, மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள உயிர்களை மதிப்பதற்கு இறைவன் நமக்கு உதவுவாராக" என்ற வார்த்தைகளை இச்செய்தியில் அளித்தார் திருத்தந்தை.
திருத்தந்தை அவர்கள் ஒவ்வொரு நாளும் வழங்கிவரும் Twitter  செய்திகளை, உலகெங்கும் 36 இலட்சம் மக்கள் வாசித்து வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit

5. கருக்கலைப்பை ஆதரிப்பவர்கள் பொய்யான பல காரணங்களில் புகலிடம் தேடுகின்றனர் - கர்தினால் Sean O'Malley

சன.23,2014. கருக்கலைப்பை சட்டமயமாக்கும் முயற்சிகளை ஆதரிப்பவர்கள் பொய்யான பல காரணங்களில் புகலிடம் தேடுகின்றனர் என்று அமெரிக்காவின் பாஸ்டன் பேராயர் கர்தினால் Sean O'Malley அவர்கள் கூறினார்.
சனவரி 22, இப்புதனன்று வாஷிங்டன் நகரில் மேற்கொள்ளப்பட்ட உயிர் காக்கும் பேரணிக்கு முன்னதாக நடைபெற்ற இரவுத் திருவிழிப்பு முயற்சியை திருப்பலியுடன் துவக்கிய கர்தினால் O'Malley அவர்கள், இவ்வாறு கூறினார்.
ஆடைகள் ஏதுமின்றி ஊர்வலம் வந்த அரசனிடம் உண்மையைச் சொல்வதற்கு அஞ்சி, மக்கள் அவர் அணிந்த ஆடையைப் புகழ்ந்தபோது, குழந்தை ஒன்று அஞ்சாமல் உண்மையைப் பகர்ந்த கதையை எடுத்துரைத்துப் பேசிய கர்தினால் O'Malley அவர்கள், அக்குழந்தை உண்மையைக் கூறியதைப் போல, கருக்கலைப்பு தவறு என்பதை எடுத்துச் சொல்லும் நேரம் இது என்று வலியுறுத்தினார்.
கடந்த 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் பேரணி முயற்சியில் தானும் தவறாமல் கலந்துகொண்டு வருவதை எடுத்துரைத்த கர்தினால் O'Malley அவர்கள், இவ்வாண்டு வாஷிங்டன் நகர் பனிப் புயலால் பாதிக்கப்பட்டாலும் அங்கு கூடியிருந்தோரைப் பாராட்டினார்.

ஆதாரம் : CNS

6. தென் கொரியாவில் ஆகஸ்ட் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மேய்ப்புப்பணி பயணம்

சன.23,2014. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசியாவில், குறிப்பாக, தென் கொரியாவில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ளும் திட்டம் குறித்து திருப்பீடம் ஆலோசித்து வருகிறது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் பயணங்கள் குறித்து, இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய திருப்பீட பத்திரிக்கை அலுவலகத்தின் இயக்குனர் அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள், இவ்வாறு கூறினார்.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி முதல் 17ம் தேதி முடிய தென் கொரியாவின் Daejon நகரில் நடைபெறும் ஆசிய இளையோர் நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள திருத்தந்தை செல்லக்கூடும் என்று அருள் பணியாளர் Lombardi அவர்கள் அறிவித்தார்.
1999ம் ஆண்டு ஆசிய ஆயர்கள் பேரவையால் துவக்கப்பட்ட ஆசிய இளையோர் நாள் கொண்டாட்டங்கள், இதுவரை தாய்லாந்து, தாய்வான், இந்தியா, ஹாங்காங் மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளன.
இவ்வாண்டு, தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் இந்த இளையோர் நாள் கொண்டாட்டங்களின்போது, தென் கொரியாவில் மறைசாட்சிகளாக உயிர் நீத்த 124 பேர் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படும் வாய்ப்பும் உள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. இரண்டாவது ஜெனீவா பேச்சு வார்த்தைகளில், மக்கள் முதலிடம் பெறவேண்டும் - பேராயர் Silvano Tomasi

சன.23,2014. சிரியாவில் அமைதி நிலவ தற்போது மேற்கொள்ளப்படும் இரண்டாவது ஜெனீவா பேச்சு வார்த்தைகளில், வன்முறைகளில் பலியாகும் மக்கள் முதலிடம் பெறவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இரண்டாவது ஜெனீவா அமைதிக் கருத்தரங்குஎன்ற பெயரில் சனவரி 22, இப்புதனன்று சுவிட்சர்லாந்து, Montreux என்ற நகரில் துவங்கிய ஐ.நா. கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொள்ளச் சென்றுள்ள பேராயர் Silvano Tomasi அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
சிரியா நாட்டில் ஈராண்டுகளாக நிலவிவரும் வன்முறைகளால் மூச்சடைத்து கிடக்கும் அந்நாட்டு மக்கள், துவங்கியுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகளால் ஓரளவு சுவாசிக்கும் நிலைக்கு கொண்டுவரப்படுவார்கள் என்று தான் நம்புவதாக, சிரியா நாட்டில் பணியாற்றும் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
போர்களாலும், மோதல்களாலும் காயப்பட்டு, சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவரோடும் திருப்பீடம் தன்னையே இணைத்துக் கொள்கிறது என்று ஐ.நா. கூட்டங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Francis Chullikatt அவர்கள் ஐ.நா. அமர்வு ஒன்றில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit

8. மதச்சார்பற்ற, ஓர் அரசியல் கட்சியே இந்தியாவை வழிநடத்த வேண்டும் - இந்தியப்  பொருளாதார அறிஞர் Amartya Sen

சன.23,2014. மதச்சார்பற்ற, அடிப்படைவாதக் கொள்கைகள் அற்ற ஓர் அரசியல் கட்சியே இந்தியாவை வழிநடத்த வேண்டும் என்று நொபெல் பரிசு பெற்ற இந்தியப்  பொருளாதார அறிஞர் Amartya Sen அவர்கள் கூறினார்.
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் அண்மையில் உரையாற்றிய Amartya Sen அவர்கள், ஏழைகளின் வாழ்வை உயர்த்தும் திட்டங்கள் கொண்ட அரசு நமக்குத் தேவை என்பதை வலியுறுத்தினார்.
குழந்தைகளுக்குத் தரமான கல்வி தருவதற்கும், மதத்தை முன்னிறுத்தாமல், மக்களை, குறிப்பாக ஏழைகளை முன்னிறுத்துவதற்கும் முயலும் கட்சிகளையே பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று Amartya Sen அவர்கள் கூறினார்.
ஏழைகளையும், சமுதாயத்தில் புறந்தள்ளப்பட்டவர்களையும் குறித்து ஊடகங்கள் சரியான, உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்தார் நொபெல் பரிசு வென்ற Amartya Sen அவர்கள்.
இதற்கிடையே, வருகிற தேர்தலையொட்டி, பெங்களூருவில் இயேசு சபையினர் நடத்தும் இந்திய சமுதாய ஆய்வு நிலையத்தில், ஏழைகள் விடுக்கும் கொள்கை அறிக்கையொன்று அண்மையில் வெளியிடப்பட்டது.

ஆதாரம் : JESA / AsiaNews

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...