Friday, 3 January 2014

செய்திகள் - 03.01.14

செய்திகள் - 03.01.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ்:நற்செய்தி மென்மையுடனும் அன்புடனும் அறிவிக்கப்பட வேண்டும்

2. திருத்தந்தை பிரான்சிஸ்: குழந்தை இயேசு, கடவுளின் அளவிடமுடியாத கனிவான அன்பின் வெளிப்பாடு

3. திருத்தந்தையின் அமைதி தினச்செய்தி இந்தியாவின் வளர்ச்சிக்கு கிரியா ஊக்கி, கர்தினால் கிரேசியஸ் 

4. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரிப்பு, ஆயர்கள் எச்சரிக்கை

5. சனவரி 5, பெல்ஜியத் தலத்திருஅவைக்கு ஆப்ரிக்க தினம்

6. 2014ம் ஆண்டு அமைதியின் ஆண்டாக விளங்கட்டும், பாகிஸ்தான் சமயத் தலைவர்கள்

7. அவசரகால நெருக்கடிகள், உலகளாவிய மனிதாபிமான அமைப்புக்கு பலத்த சோதனைகளை முன்வைத்துள்ளன, ஐ.நா

8. உலக அமைதிக்கு அமெரிக்க ஐக்கிய நாடே முதன்மை அச்சுறுத்தல், புதிய ஆய்வு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ்:நற்செய்தி மென்மையுடனும் அன்புடனும் அறிவிக்கப்பட வேண்டும்

சன.03,2014.  கண்டிப்புடன் அல்ல, மாறாக, மென்மையுடனும் அன்புடனும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்று இவ்வெள்ளியன்று ஏறக்குறைய 350 இயேசு சபை அருள்பணியாளர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் திருப்பெயரின் விழாவான இவ்வெள்ளி காலை, உரோம் நகரிலுள்ள இயேசு சபையினரின் தாய் ஆலயமான ஜேசு ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும் என்ற புனித பவுலின் கூற்றை மையமாக வைத்து மறையுரையாற்றினார்.
இயேசு சபையினராகிய நாம், திருச்சிலுவையின் படைத்துறையின் கொடியின்கீழ், இயேசு என்ற பெயருடன் குறிக்கப்பட விரும்புகிறோம் என்றும், இது கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே உணர்வுகளை நாமும் கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இப்படி வாழ்வதென்பது இயேசுவைப்போல் சிந்தித்து, அவரைப்போல் அன்புகூர்ந்து, அவரைப்போல் நடந்து, அவரைப்போல் ஒவ்வொன்றையும் நோக்க வேண்டும் என்பதாகும் என்று கூறினார்.
கிறிஸ்துவின் இதயம், அன்புக்காகத் தம்மையே வெறுமையாக்கிய ஒரு கடவுளின் இதயம் எனவும், இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வோர் இயேசு சபையினரும் தங்களையே வெறுமையாக்க வேண்டும், இதற்காகவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம் எனவும் திருத்தந்தை கூறினார்.
இயேசு சபையினர் மனிதர்களாக, தன்னை மையப்படுத்தாத மனிதர்களாக வாழ வேண்டும், ஏனெனில் கிறிஸ்துவும் அவரது திருஅவையும் இயேசு சபையின் மையமாக இருக்கின்றது என்றும் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், கடவுள் எப்பொழுதும் நம்மை வியப்பில் ஆழ்த்துபவர், எனவே, இயேசு சபையினராக இருப்பது எண்ணத்தால் திறந்தமனத்தவராய் இருப்பதாகும், இவர்களின் தொலைநோக்கு கடவுளின் அதிமிக மகிமைக்காக மேலும் மேலும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நற்செய்தியை அறிவிப்பதில் சோர்வுறக் கூடாது என்றும், அதனைத் துணிச்சலோடு அறிவிக்க வேண்டுமென்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு சபை புனிதர் பீட்டர் ஃபேபர் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வையும் குறிப்பிட்டுப் பேசினார்.
புனிதர் பீட்டர் ஃபேபர், கடந்த டிசம்பர் 17ம் தேதி அதிகாரப்பூர்வமாக, புனிதராக அறிவிக்கப்பட்டதற்கு நன்றிகூறுவதற்காக இவ்வெள்ளியன்று ஜேசு ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ்: குழந்தை இயேசு, கடவுளின் அளவிடமுடியாத கனிவான அன்பின் வெளிப்பாடு

சன.03,2014. நம் ஒவ்வொருவரையும் சூழ்ந்துள்ள கடவுளின் அளவிடமுடியாத கனிவான அன்பை குழந்தை இயேசு வெளிப்படுத்துகிறார் என்று, தனது டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த மார்ச் 13ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கடந்த 9 மாதங்களில் அவர் நிகழ்த்திய மூவேளை செப உரைகள் மற்றும் அல்லேலூயா வாழ்த்தொலி உரைகளில் 27 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர் என திருப்பீடம் அறிவித்துள்ளது.
வத்திக்கான் தூய பேதுரு வளாகம் மற்றும் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்திய திருவழிபாடுகளில் ஏறக்குறைய 23 இலட்சம் பேரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் பொது மறைபோதகங்களில் ஏறக்குறைய 15 இலட்சம் பேரும் கலந்து கொண்டுள்ளனர் எனவும் திருப்பீடம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தையின் அமைதி தினச்செய்தி இந்தியாவின் வளர்ச்சிக்கு கிரியா ஊக்கி, கர்தினால் கிரேசியஸ் 

சன.03,2014. அமைதிக்கு அடித்தளமும் வழியுமாக அமைவது சகோதரத்துவம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அமைதி தினச்செய்தி இன்றைய இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் கூறினார்.
சனவரி முதல் தேதியன்று கத்தோலிக்க உலகில் சிறப்பிக்கப்பட்ட அமைதி தினத்திற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட செய்தி குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த கர்தினால் கிரேசியஸ், உறுதியான அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு சகோதரத்துவம் மிகவும் தேவைப்படுகின்றது என்று கூறினார்.
பாகுபாடு, சமூக சமத்துவமின்மை ஆகிய தீமைகளிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு சகோதரத்துவத்தால் மட்டுமே இயலும் என்றும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.
ஏழைகளுக்கும் செல்வந்தருக்குமிடையே, கிராமத்தினருக்கும் நகரத்தவருக்குமிடையே இடைவெளி அதிகரித்துவரும் இந்தியாவின் நிலைமை குறித்துப் பேசிய கர்தினால் கிரேசியஸ், 1997ம் ஆண்டிலிருந்து, 2,50,000த்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளது நாட்டுக்குப் பெருத்த அவமானமாக உள்ளது என்றும் கவலை தெரிவித்தார்.
ஆதாரம் : AsiaNews                

4. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரிப்பு, ஆயர்கள் எச்சரிக்கை

சன.03,2014. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் திருஅவைத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைதிகாக்கும் படைகள் ஒரு மாதத்துக்கு மேலாகப் பணியில் இருக்கின்றபோதிலும், அந்நாட்டில் இன்னும் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்படவில்லை என்று அந்நாட்டின் ஆயர் பேரவைச் செயலர் ஆயர் Cyriaque Gbate Doumalo குறை கூறியுள்ளார்.
அந்நாட்டின் அனைத்து ஆலயங்களும் பங்குத்தளங்களும் புலம்பெயர்ந்த மக்களால் நிறைந்துள்ளதால், சில ஆலயங்களில் கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாட முடியாத சூழல் இருந்ததென, CNS கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் ஆயர் Doumalo.
Bangui நகரம் முழுவதும் மக்களின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றது என்றுரைத்த ஆயர் Doumalo, மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருகின்றது என்றும் தெரிவித்தார்.
ஐ.நா. அமைதிகாக்கும் படையின் 1,600 ப்ரெஞ்ச் துருப்புகள் கடந்த டிசம்பர் 8ம் தேதி மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் பாதுகாப்புப் பணியைத் தொடங்கியிருப்பதையும் விடுத்து, தலைநகரில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் புரட்சியாளர்க்கிடையே மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என ஊடகங்கள் கூறுகின்றன.
44 இலட்சம் மக்களைக் கொண்ட மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் ஏறக்குறைய 85 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் மற்றும் 12 விழுக்காட்டினர் முஸ்லீம்கள்.

ஆதாரம் : CNS                           

5. சனவரி 5, பெல்ஜியத் தலத்திருஅவைக்கு ஆப்ரிக்க தினம்

சன.03,2014. ஆப்ரிக்காவில் அமைதியும் ஒப்புரவும் நல்லிணக்கமும் ஏற்படும் நோக்கத்தில் சனவரி 5, வருகிற ஞாயிறை ஆப்ரிக்க தினமாகக் கடைப்பிடிக்கவுள்ளது பெல்ஜியத் தலத்திருஅவை.
பெரிய ஏரிகள் பகுதியிலுள்ள அனைத்து ஆப்ரிக்க நாடுகள், குறிப்பாக, புருண்டி, காங்கோ குடியரசு, ருவாண்டா ஆகிய நாடுகளுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், திருக்காட்சிப் பெருவிழாவுக்குமுன்வரும் ஞாயிறை ஆப்ரிக்க தினமாகக் கடைப்பிடிக்கின்றது பெல்ஜியத் தலத்திருஅவை.
அன்றைய நாளில் திருப்பலியில் எடுக்கப்படும் உண்டியல், பெரிய ஏரிகள் பகுதியிலுள்ள ஆப்ரிக்க நாடுகளின் முன்னேற்றத்துக்காக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் 6 பேருக்கு ஒருவர் வீதம் புலம் பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. 2014ம் ஆண்டு அமைதியின் ஆண்டாக விளங்கட்டும், பாகிஸ்தான் சமயத் தலைவர்கள்

சன.03,2014. 2014ம் ஆண்டு, அமைதியும் ஒப்புரவும் நிறைந்த ஆண்டாக, பாகிஸ்தானுக்கு அமைய வேண்டும் என்ற தங்கள் ஆவலை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டின் சமயத் தலைவர்கள்.
லாகூரில் நடைபெற்ற பல்சமயக் கூட்டமொன்றில் இந்த ஆவலை வெளிப்படுத்தினர் அந்நாட்டின் கிறிஸ்தவ மற்றும் பிற சமயத் தலைவர்கள்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய லாகூர் பேராயர் செபஸ்தியான் பிரான்சிஸ் ஷா அவர்கள், உரையாடலின் வல்லமை, சமயங்கள் மத்தியில் நெருக்கத்தை ஏற்படுத்தி, அச்சத்தையும் சந்தேகத்தையும் அகற்றும் எனக் கூறினார்.
பாகிஸ்தான் பூமி உரையாடலுக்கு மிகவும் வளமையாக இருக்கின்றது என்றும், ஒன்றிணைந்து வாழ்வதற்கு நம்பிக்கையும் சக்தியும் கொடுக்கும் கருணைநிறைந்த கடவுளில் நம்பிக்கை வைப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் பேராயர் ஷா.  

ஆதாரம் : Fides                         

7. அவசரகால நெருக்கடிகள், உலகளாவிய மனிதாபிமான அமைப்புக்கு பலத்த சோதனைகளை முன்வைத்துள்ளன, ஐ.நா

சன.03,2014. இயற்கைப் பேரிடர்கள், இரத்தம் சிந்தும் வன்முறைத் தாக்குதல்கள் போன்றவற்றால் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறியுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு, உலக சமுதாயத்தின் உறுதியான ஆதரவு தேவைப்படுகின்றது என ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
2013ம் ஆண்டு, உலகளாவிய மனிதாபிமான அமைப்புக்கு பலத்த சோதனையாக இருந்தது எனவும், 2014ம் ஆண்டில் இதில் மாற்றம் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லையெனவும் ஐ.நா. அவசரகால நிவாரணப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் Valerie Amos கூறியுள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு குறித்து நியுயார்க்கில் பத்திரிகையாளர்களிடம் பேசிய Valerie Amos, போரினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஹையான் சூறாவளியால்  கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளின் நிலைமைகளைச் சுட்டிக்காட்டினார்.
தென் சூடானில் இடம்பெற்ற வன்முறையில் சில வாரங்களுக்குள் 1,94,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறினர் எனவும், இவர்களுக்கு ஐ.நா.வின் உடனடி உதவி தேவைப்பட்டது எனவும் கூறினார் Amos.

ஆதாரம் : UN                             

8. உலக அமைதிக்கு அமெரிக்க ஐக்கிய நாடே முதன்மை அச்சுறுத்தல், புதிய ஆய்வு

சன.03,2014. உலக அமைதிக்கு அமெரிக்க ஐக்கிய நாடே முக்கிய அச்சுறுத்தலாக உள்ளதாக, 68 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு எதிரான நாடுகள் மட்டுமல்லாமல், அமெரிக்காவின் தோழமை நாடுகளான துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் இந்தக் கருத்து வெளிப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டின் இறுதியில், உலகளாவிய சுதந்திர வலையமைப்பும் Gallup நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், உலக காவல்துறை ஆளாக அமெரிக்கா நடந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இரண்டாவது நாடாக பாகிஸ்தானும்,  மூன்றாவது நாடாக சீனாவும், இவற்றையடுத்து, ஆப்கானிஸ்தான்ஈரான், இஸ்ரேல், வடகொரியா என நாடுகள் இந்த ஆய்வில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆதாரம் : AFP

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...