செய்திகள் - 28.11.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவின் வெற்றி அருகிலுள்ளது என, கிறிஸ்தவர்களின் சித்ரவதை நமக்குச் சொல்கிறது
2. பிற சமயத்தவருடன் நன்மதிப்பையும் நட்பையும் ஊக்குவிக்க திருத்தந்தை அழைப்பு
3. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவார்த்தைக்கு திறந்தமனம் கொண்டவர்களாக இருப்பதற்கு முயற்சிப்போம்
4. நாட்டு நலனுக்காக இந்தியக் கிறிஸ்தவர்கள் சிறப்புச் செபம்
5. மால்ட்டாவில், குடியேற்றதாரர் குறித்த ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கருத்தரங்கு
6. கென்யாவில் இனமோதல்களை முடிவுக்குக்கொணர அரசின் தலையீட்டை வேண்டியுள்ளார் அந்நாட்டு ஆயர்
7. இலங்கையில் போர்க்கால இழப்புகள் குறித்த கணக்கெடுப்புகள் ஆரம்பம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவின் வெற்றி அருகிலுள்ளது என, கிறிஸ்தவர்களின் சித்ரவதை நமக்குச் சொல்கிறது
நவ.28,2013. இறைவனை வழிபடுவதைத் தடைசெய்யும் மற்றும் மதம், ஒருவரின் தனிப்பட்ட விவகாரம் என்று சொல்லும் உலக சக்திகள்மீதும், தீமையின்மீதும் கிறிஸ்து அடைந்த வெற்றி அருகிலுள்ளது என, கிறிஸ்தவர்களின் சித்ரவதை நமக்குச் சொல்கிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருவழிபாட்டு
ஆண்டின் நிறைவு வாசகங்கள் இந்நாள்களில் நமக்கு வழங்கும் இறைவனுக்கும்
அலகைக்கும் இடையே நடக்கும் இறுதிப் போராட்டம் குறித்து, இவ்வியாழன்
காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய
திருப்பலி மறையுரையில் பேசிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இறைவனைத் தோற்கடிக்க விரும்புவரின் கவர்ச்சிகளுக்குள் ஈர்க்கப்படும் பெரும் ஆபத்தான சோதனை குறித்துப் பேசிய திருத்தந்தை, இயேசு பாலைவனத்திலும், பொதுவாழ்விலும், சிலுவையிலும் எதிர்கொண்ட பற்பல சோதனைகள், அவமானங்கள், பழிபாவங்கள் என எல்லாவற்றையும் குறிப்பிட்டு, அமைதியின் இளவரசரின் உயிர்ப்பில் உலகின் இளவரசரின் போர் தோல்வி கண்டது எனக் கூறினார்.
உலகின் இறுதிநேரத்தில் அமைதியின் இளவரசர் வந்து உலகின் தலைவராக இருப்பார் என்றும் கூறிய திருத்தந்தை, இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தில் சொல்லப்பட்டுள்ள, இறைவாக்கினர் தானியேல், அரசரை வழிபட மறுத்ததால் சிங்கக் குகையில் போடப்பட்டது பற்றியும் பேசினார்.
இந்த அருவெறுப்பான செயலை, இறைவழிபாட்டுத் தடை எனப் பெயரிடலாம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ், சித்ரவதைகளை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்கள் நம் அனைவருக்கும் நிகழவிருப்பதன் முன்னடையாளமாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
நாம் அஞ்சக் கூடாது, இயேசு நம்மிடம் பிரமாணிக்கத்தையும் பொறுமையையும் மட்டுமே கேட்கிறார், இறுதிவரை
இறைவனுக்கு பிரமாணிக்கமாக இருந்த தானியேல் போன்று நாம் உறுதியாய்
இருக்குமாறு இயேசு கேட்கிறார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரையில்
கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. பிற சமயத்தவருடன் நன்மதிப்பையும் நட்பையும் ஊக்குவிக்க திருத்தந்தை அழைப்பு
நவ.28,2013. உலகின் வருங்காலம் பன்மைத்தன்மையை மதித்து ஒன்றிணைந்து வாழ்வதில் அடங்கியுள்ளது என்பதால், சமய சுதந்திரம் அடிப்படை உரிமை என்பதை, அதன் அனைத்துக் கூறுகளோடும் ஏற்பது இன்றியமையாதது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியாழனன்று
நிறைவடைந்த திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் ஆண்டுக் கூட்டத்தில்
கலந்துகொண்ட 50 பிரதிநிதிகளை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து
உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், உலகில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு சமய சுதந்திரம் இன்றியமையாதது என்பதால், திருஅவை அண்மைக் காலமாக இதற்காகத் தன்னை அர்ப்பணித்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
“சமுதாயத்தில் பல்வேறு மரபுகளைக்கொண்ட மதங்களின் உறுப்பினர்கள்” என்ற தலைப்பில் இவ்வவை நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு ஆற்றிய உரையில், குடிபெயர்வுகள் அதிகம் அதிகமாக இடம்பெற்றுவரும் இந்நாள்களில், பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள்
மற்றும் பாரம்பரியங்களுக்குத் தன்னைத் திறந்ததாகச்
செயல்படவேண்டிய சவாலை கத்தோலிக்கத் திருஅவை எதிர்நோக்குகின்றது
எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மக்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்குப் பலவேளைகளில் அச்சம் தடையாக இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அச்சத்தை மேற்கொள்வதற்கு பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவேண்டியது அவசியம் என்றார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவார்த்தைக்கு திறந்தமனம் கொண்டவர்களாக இருப்பதற்கு முயற்சிப்போம்
நவ.28,2013. இறைவன் நம்மிடம் பேசும்போது அவரின் வார்த்தைக்கும், அவரின் வியப்புகளுக்கும் திறந்தமனம் கொண்டவர்களாக இருப்பதற்கு முயற்சிப்போம் என இவ்வியாழக்கிழமையன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தினமும் ஏறக்குறைய ஒன்பது மொழிகளில் டுவிட்டரில் குறுஞ்செய்திகளை எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், இறையன்பு, இறைவனின் கருணை குறித்து அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.
மேலும், Antilles தீவு
நாடுகளுக்கு இவ்வெள்ளி முதல் வருகிற டிசம்பர் 4ம் தேதிவரை சுற்றுப்பயணம்
மேற்கொள்கிறார் திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. நாட்டு நலனுக்காக இந்தியக் கிறிஸ்தவர்கள் சிறப்புச் செபம்
நவ.,28, 2013. பாவங்களுக்கு மனம் வருந்தும் நோக்கிலும், நாட்டின்
நலனுக்காகவும் வரும் சனிக்கிழமையன்று இந்தியாவின் ஆயிரம் இடங்களில்
செபக்கூட்டங்கள் இடம்பெறும் என தலத்திருஅவை அறிவித்துள்ளது.
அனைத்து மக்களுக்காகவும், குறிப்பாக அதிகாரத்திலிருப்போருக்காகச் செபிக்கவேண்டும் எனற விவிலியப் போதனைகளுக்கு இயைந்தவகையில், இந்தியாவில் ஒன்றிணைந்த கிறிஸ்தவ செபவழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுநலனுக்கான சேவை, கல்வி, நலஆதரவு, ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவைகளில் பங்களிப்பு மூலம் நாட்டுநலனுக்கான தங்கள் அன்பை வெளிப்படுத்திவரும் கிறிஸ்தவ சமூகம், இம்மாதம்
30ம் தேதி நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் நாட்டு நலனுக்கான கூட்டுச்
செபத்தை மேற்கொள்ளும் என டில்லி உயர்மறைமாவட்டம் வெளியிட்ட அறிக்கை
கூறுகிறது.
நாடு வளர்ச்சி கண்டுவரும் அதேவேளை, அரசியலில் ஊழல், கௌரவக்கொலைகள், சாதிகளிடையே மற்றும் மதங்களிடையே மோதல்கள் போன்றவையும் அதிகரித்து வருவது குறித்த கவலையை வெளியிட்டுள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், நல்லவைகளைக் காத்துக்கொள்ள இறைவனின் தலையீட்டை வேண்டி சிறப்பு செபவழிபாட்டை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஆதாரம் : CBCI
5. மால்ட்டாவில், குடியேற்றதாரர் குறித்த ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கருத்தரங்கு
நவ.28,2013.
குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
மற்றும் சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்கென ஐரோப்பிய ஆயர் பேரவைகளின்
குடியேற்றதாரர்க்கான மேய்ப்புப்பணிக் குழுக்களின் தலைவர்களும் மற்ற
உறுப்பினர்களும் மால்ட்டாவில் வருகிற டிசம்பர் 2 முதல் 4 வரை கருத்தரங்கு
ஒன்றை நடத்தவுள்ளனர்.
குடியேற்றதாரரும், புலம்பெயர்ந்தோரும் முன்வைக்கும் சவால்கள், இவ்விவகாரம் குறித்த ஆயர் பேரவைகளுக்கு இடையே ஒத்துழைப்பு, குடியேற்றதாரருக்குப் பொறுப்பான தேசிய இயக்குனர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள், அவர்களின் அனுபவங்கள், குடியேற்றதாரர் குறித்த கொள்கைகள் போன்றவை இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.
மால்ட்டாவின் La Valletta பேராயர் Paul Cremonaவின் அழைப்பின்பேரில் அந்நகரில் நடைபெறும் இரண்டு நாள் கருத்தரங்கில், குடியேற்றதாரர்
மற்றும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் சிறந்த மேய்ப்புப்பணியாற்றும்
வல்லுனர்கள் மற்றும் ஆர்வலர்களும் கலந்து கொள்கின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. கென்யாவில் இனமோதல்களை முடிவுக்குக்கொணர அரசின் தலையீட்டை வேண்டியுள்ளார் அந்நாட்டு ஆயர்
நவ.28,2013.
கென்யாவின் வடமேற்குபகுதியில் இனங்களிடையே இடம்பெற்றுவரும்
மோதலகளை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் அரசு தலையிட்டு உடனடி
நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர்
ஒருவர்.
கென்யாவின் வடமேற்கு பகுதியில் எரிசக்தி எண்ணெய்வளம் இருப்பதாக கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி அப்பகுதியிலுள்ள Turkana மற்றும் Pokot சமூகங்களிடையே நிலஉரிமைகள் குறித்த மோதல்கள் அதிகரித்திருப்பது குறித்த கவலையை வெளியிட்ட கென்யாவின் Lodwar மறைமாவட்ட ஆயர் Dominic Kimengich, எண்ணெய்வளம் கண்டுபிடிக்கப்பட்டது, மோதல்களுக்கான காரணம் என்பதை மறுக்க முடியாது என்றார்.
மேய்ச்சல்
நிலங்கள் இன்மையாலும் தண்ணீர்ப் பற்றாக்குறையாலும் துன்புறும் கென்யாவின்
வடமேற்குப் பகுதியில் எண்ணெய்வளக் கண்டுபிடிப்பிற்குப்பின்னர் வருமானம்
குறித்த சிந்தனையால் மோதல்கள் துவங்கியுள்ளன எனவும் எடுத்துரைத்தார் ஆயர் Kimengich.
ஆதாரம் : CNS
7. இலங்கையில் போர்க்கால இழப்புகள் குறித்த கணக்கெடுப்புகள் ஆரம்பம்
நவ.,28, 2013. இலங்கையில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்த போர்க் காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள், உடமைகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஆகியவை குறித்த ஒரு கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு, புள்ளிவிவரங்கள் ஆகிய இரண்டு துறைகளும் இணைந்து நாடு தழுவிய அளவில் இந்தக் கணக்கெடுப்பை இவ்வியாழன் முதல் தொடங்கியுள்ளன.
அந்த நாடு தழுவியத் திட்டத்தில், தொழில்முறை ரீதியில், பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களையும் உள்ளடக்கும் வகையில், நாடு முழுவதும் ஒரு கணக்கெடுப்பு நடத்தி, மோதல்கள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள், சொத்துக்கள் சேதம் ஆகியவை குறித்து நேரடியாகத் தகவல்களைச் சேகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நாடு
முழுவதும் இடம்பெறவுள்ள இந்தக் கணக்கெடுப்பு 1983ம் ஆண்டு முதல் 2009ம்
ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் மோதல்கள் காரணமாக இடம்பெற்ற
உயிரிழப்புகள், சொத்துக்களுக்கான சேதங்கள் ஆகியவை குறித்த விபரங்களைச் சேகரிக்கவுள்ளதாக அரசின் அறிக்கை கூறுகிறது.
போரின் காரணமாக ஏறத்தாழ 90,000 பேர் கைம்பெண்களாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : BBC
No comments:
Post a Comment