செய்திகள் - 28.10.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயர் அருள்பணி பீட்டர் அபீர்
2. சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டம்
3. திருத்தந்தையின் Twitter செய்தி : நம் அன்னைமரியா முழுமையும் அழகு, ஏனெனில் அவர் அருள் நிறைந்தவர்
4. மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கு ஐ.நா. அமைதி காக்கும் படையினர் உடனடியாகத் தேவை, பல்சமயத் தலைவர்கள்
5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சகோதரத்துவத்துக்கான அழைப்பு, மியான்மாரில் அமைதி ஏற்படுவதற்கு ஒரே வழி
6. இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறாருக்குக் கிறிஸ்மஸ்
7. மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்கள் அப்பகுதியைவிட்டு வெளியேற வேண்டாம், முதுபெரும் தந்தை 3ம் கிரகரி வேண்டுகோள்
8. சீனாவில் ஒரு குழந்தைத் திட்டம் தளர்த்தப்படுகிறது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயர் அருள்பணி பீட்டர் அபீர்
டிச.28,2013.
இந்தியாவில் சுல்தான்பேட்டை என்ற புதிய மறைமாவட்டத்தை உருவாக்கி அதன்
முதல் ஆயராக அருள்பணி பீட்டர் அபீர் அந்தோணிசாமி அவர்களை
இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் சாத்திப்பட்டு என்ற ஊரில் 1951ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி பிறந்த புதிய ஆயர் பீட்டர் அபீர், பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்திற்கென 1979ம் ஆண்டு மே முதல் தேதியன்று குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
திருப்பதி பல்கலைக்கழகத்தில் இலக்கியம் மற்றும் வரலாற்றில் முதுகலைப்பட்டமும், உரோம் பாப்பிறை விவிலிய நிறுவனத்தில் முதுகலைப்பட்டமும், உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் விவிலியத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளவர் புதிய ஆயர் அபீர்.
சென்னை பூவிருந்தவல்லி புனித பவுல் விவிலிய நிறுவனத்தின் இயக்குனர், தமிழக ஆயர் பேரவையின் உதவிச் செயலர், தென்கிழக்கு ஆசிய கத்தோலிக்க விவிலியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தமிழக விவிலிய, மறைக்கல்வி மற்றும் திருவழிபாட்டு மைய இயக்குனர் என பல முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ள புதிய ஆயர் அபீர், 2004ம் ஆண்டில் இவர் தொடங்கிய எம்மாவுஸ் ஆன்மீக மையத்தின் இயக்குனராக 2010ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டம்
டிச.28,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இச்சனிக்கிழமையன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுல்தான்பேட்டை மறைமாவட்டம், கோயம்புத்தூர், கோழிக்கோடு ஆகிய இரு மறைமாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தென் மேற்கே அமைந்துள்ள சுல்தான்பேட்டை மறைமாவட்டம், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை உள்ளடக்கி, கோயம்புத்தூர், கோழிக்கோடு ஆகிய இரு மறைமாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது.
4,466 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட சுல்தான்பேட்டை மறைமாவட்டத்தில் 30,975 கத்தோலிக்கர் உள்ளனர். மேலும், 21 பங்குகளும், 14 மறைமாவட்ட அருள்பணியாளர்களும், 18 துறவற அருள்பணியாளர்களும், 9 அருள்சகோதரர்களும், 102 அருள்சகோதரிகளும், 21 பள்ளிகளும், 12 மருத்துவமனைகள் மற்றும் நலவாழ்வு மையங்களும் இப்புதிய மறைமாவட்டத்தில் உள்ளன.
பாலக்காடு நகரிலுள்ள புனித செபஸ்தியார் ஆலயம், சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டத்தின் பேராலயமாக இருக்கும்.
சுல்தான்பேட்டை
என்ற புதிய மறைமாவட்டத்துடன் தமிழ்நாட்டில் இலத்தீன் வழிபாட்டுமுறை
மறைமாவட்டங்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. இன்னும் 2 சீரோ-மலபார்
வழிபாட்டுமுறை மறைமாவட்டங்களும், ஒரு சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மறைமாவட்டமும் தமிழ்நாட்டில் உள்ளன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தையின் Twitter செய்தி : நம் அன்னைமரியா முழுமையும் அழகு, ஏனெனில் அவர் அருள் நிறைந்தவர்
டிச.28,2013. நம் அன்னைமரியா முழுமையும் அழகு; ஏனெனில் அவர் அருள் நிறைந்தவர் என்று, இச்சனிக்கிழமையன்று தனது Twitter செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வத்திக்கானில்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லச்
சிற்றாலயத்தில் புதிய ஆண்டில் அவர் நிகழ்த்தும் காலைத் திருப்பலிகளில்
உரோம் மறைமாவட்டத்தைச் சார்ந்த பங்கு மக்கள் கலந்துகொள்வார்கள் என, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அறிவித்தார்.
உரோம் மறைமவாட்ட ஆயராகிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறைமவாட்டத்திலுள்ள அனைத்துப் பங்குகளுக்கும் செல்ல முடியாது என்பதால், அம்மக்கள் தங்கள் ஆயரோடு தொடர்பு கொள்வதற்கு உதவியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அருள்பணி லொம்பார்தி கூறினார்.
வருகிற
சனவரி 7ம் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் காலைத் திருப்பலியில் ஏறக்குறைய
25 விசுவாசிகள் வீதம் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அருள்பணி
லொம்பார்தி கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கு ஐ.நா. அமைதி காக்கும் படையினர் உடனடியாகத் தேவை, பல்சமயத் தலைவர்கள்
டிச.28,2013.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் கடும் இனப் பாகுபாட்டுச் சண்டை ஏற்படும்
நிலை உருவாகியிருப்பதால் அந்நாட்டுக்கு ஐ.நா. அமைதி காக்கும் படையினர்
உடனடியாகத் தேவைப்படுகின்றனர் என்று அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும்
முஸ்லிம் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Bangui பேராயர் Dieudonné Nzapalainga அவர்களும், அந்நாட்டின் இஸ்லாமிய சமூகத்தின் தலைவர் Oumar Kobine Layama அவர்களும் இவ்விண்ணப்பத்தை முன்வைத்துள்ளனர்.
இந்நாட்டின் நிலைமை குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் Nzapalainga, மத்திய ஆப்ரிக்கக் குடியரசை கிழித்தெறியும் வன்முறைகளும், கொலைகளும், காட்டுமிராண்டித்தனமான செயல்களும் நிறுத்தப்படுவதற்கு ஐ.நா. அமைதி காக்கும் படையினர் உடனடியாகத் தேவைப்படுகின்றனர் என்று கூறினார்.
அந்நாட்டின் அரசுத்தலைவர் Francois Bozizé, கடந்த மார்ச் மாதத்தில் Seleka எனப்படும் புரட்சிக்குழுவால் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டதற்குப் பின்னர், அந்நாட்டில் ஆயுதம் ஏந்திய மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையே, முன்னாள் ப்ரெஞ்ச் காலனி நாடாகிய மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு உதவியாக, பிரான்ஸ் தனது படைகளை அனுப்பியுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சகோதரத்துவத்துக்கான அழைப்பு, மியான்மாரில் அமைதி ஏற்படுவதற்கு ஒரே வழி
டிச.28,2013. புதிய ஆண்டைக் காண்பதற்காக உலகில் தயாரிப்புகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், சுதந்திரம், சனநாயகம், நீதி, அமைதி, நம்பிக்கை, சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளால் அமையப்பெற்ற புதிய சகாப்தம் உருவாவதற்கு, மியான்மார் தயாரித்து வருகிறது என்று அந்நாட்டு பேராயர் ஒருவர் கூறியுள்ளார்.
2014ம்
ஆண்டு சனவரி முதல் நாளன்று கத்தோலிக்கர் கடைப்பிடிக்கும் உலக அமைதி
நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி, மியான்மார் கத்தோலிக்கருக்கு நம்பிக்கையையும் ஒன்றிப்பையும் ஊக்குவிக்கின்றது என்று கூறியுள்ளார் யாங்கூன் பேராயர் Charles Bo.
கடந்த ஈராண்டளவாக மியான்மாரில் இடம்பெற்றுவரும் சனநாயகச் சுதந்திரத்துக்கு ஆதரவான நடவடிக்கைகள், இன்னும், அந்நாட்டில் இடம்பெற்றுவரும் பெரும் பொருளாதார, சமூக
மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் மூலம் அந்நாடு உலகுக்குத் தனது
கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் பேராயர் Bo.
மியான்மார் மக்களில் குறைந்தது 40 விழுக்காட்டினர் வறுமையில் வாடுவதாகவும், மலேசியாவிலும் தாய்லாந்திலும் வாழும் இலட்சக்கணக்கான மியான்மார் குடியேற்றதாரரின் நிலை கவலைதருவதாக உள்ளது எனவும் கூறிய பேராயர் Bo, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சகோதரத்துவத்துக்கான அழைப்பு, மியான்மாரில் அமைதி ஏற்படுவதற்கு ஒரே வழியாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
ஆதாரம் : AsiaNews
6. இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறாருக்குக் கிறிஸ்மஸ்
டிச.28,2013. கொண்டாட்டம் மற்றும் பகிர்வின் காலமாக இருக்கும் கிறிஸ்மஸ் காலத்தில், பிரிவினைகளையும்
தடுப்புச்சுவர்களையும் கடந்து எவ்வாறு ஒன்றிணைந்து வாழ்வதென்று
சிறாருக்கும் வயதுவந்தோருக்கும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று
இலங்கையின் சமூக மற்றும் சமய நிறுவன இயக்குனர் அருள்பணி அசோக் ஸ்டீபன்
கூறினார்.
நாட்டுக்குள்ளே
புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மத்தியில் கிறிஸ்மஸ் விழாவைச்
சிறப்பித்தது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் விளக்கிய அருள்பணி
ஸ்டீபன், இவ்விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்தவர்களில் பலர், சிறார் எனவும், இச்சிறாரில் ஏறக்குறைய எல்லாருமே இந்துக்கள் எனவும் கூறினார்.
இக்கொண்டாட்டத்தில்
கலந்துகொண்ட சிறாரில் பலருக்குத் தந்தையில்லை மற்றும் அவர்களின் தாய்மார்
தங்களின் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக எந்த வேலையையும் செய்யத் தயாராய்
இருப்பவர்கள் என்றும் கூறிய அருள்பணி ஸ்டீபன், இனம், சாதி, மதம் என்ற பாகுபாடு பாராமல் அனைத்துக் குடிமக்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் பாதிப்பு இச்சிறாரில் இன்றும் தெரிவதாக அக்குரு மேலும் தெரிவித்தார்.
ஆதாரம் : AsiaNews
7. மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்கள் அப்பகுதியைவிட்டு வெளியேற வேண்டாம், முதுபெரும் தந்தை 3ம் கிரகரி வேண்டுகோள்
டிச.28,2013. ஆலயங்கள் அழிக்கப்பட்டு, பங்குத்தளங்கள் கைவிடப்பட்டு, சமூகத்தில்
ஓரங்கட்டப்பட்ட துன்பநிலையை எதிர்கொள்ளும் மத்திய கிழக்குப் பகுதி
கிறிஸ்தவர்கள் தங்களின் பூர்வீக இடங்களிலே தொடர்ந்து தங்கியிருக்குமாறு
கேட்டுக்கொண்டுள்ளார் அந்தியோக்கியாவின் கிரேக்க கத்தோலிக்க முதுபெரும்
தந்தை 3ம் கிரகரி.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கென உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை 3ம் கிரகரி அவர்கள், தம் மக்கள் தாங்கள் வாழும் கிராமங்கள் அல்லது நகரங்களில் தொடர்ந்து வாழுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்லாம் தீவிரவாதிகளால் கிறிஸ்தவர்கள் அடிக்கடி துன்புறுத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டாலும், இக்கிறிஸ்தவர்களின் இருப்பை முஸ்லிம் பிரதிநிதிகள் மிகவும் விரும்புகின்றனர் என்றும் முதுபெரும் தந்தையின் அறிக்கை கூறுகிறது.
முஸ்லிம் அரபு உலகத்துக்கு கிறிஸ்தவர்கள் தேவைப்படுகின்றனர் என்று எழுதியுள்ள முதுபெரும் தந்தை 3ம் கிரகரி, மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் இன்றி அரபு உலகம் வாழ முடியாது என, தன்னால் உறுதியாகச் சொல்ல முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம் : AsiaNews
8. சீனாவில் ஒரு குழந்தைத் திட்டம் தளர்த்தப்படுகிறது
டிச.28,2013. சீனாவில் அமலில் இருந்த “ஒரு குழந்தைக் கொள்கை” என்ற கடுமையான குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தளர்த்துவதற்கான சட்டம் ஒன்று இச்சனிக்கிழமையன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வெளியிட்டுள்ள Xinhua என்ற சீனாவின் அரசு செய்தி நிறுவனம், ஒரு குழந்தை உள்ள தம்பதியினர் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சீனாவின் தேசிய மக்கள் கட்சியின் நிலைக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள
மக்கள்தொகை விகிதத்தைக் கருத்தில்கொண்டு குடும்பக் கட்டுப்பாடு விதிகளைத்
தளர்த்த வேண்டும் அல்லது ஒரு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அந்தத்
தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில்
மக்கள்தொகை வெகு வேகமாகப் பரவி வந்ததைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில்
1970களின் இறுதியில் ஒரு குழந்தைக் கொள்கை என்ற கடுமையான குடும்பக்
கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டுவந்தது அந்நாட்டு அரசு.
2050ம் ஆண்டுக்குள் சீனாவின் மக்கள்தொகையில் 25 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் 65 வயதுக்கு மேற்பட்டவராய் இருப்பார்கள்.
ஆதாரம் : BBC
No comments:
Post a Comment