பால்வீதி நட்சத்திரங்களை ஆராய ஐரோப்பாவின் அதிநவீன தொலைநோக்கி ‘கையா’ விண்ணில் பாய்ந்தது
அண்டவெளியின் பால்வீதியில் கோடிக்கணக்கான நட்சத்திர கூட்டங்கள் (விண்மீன் திரள்) உள்ளன. இந்த கோடிக்கணக்கான நட்சத்திர கூட்டத்தின் ஒரு பகுதியை பற்றி ஆராய ஐரோப்பிய விண்வெளி நிலையம் கையா என்ற அதிநவீன தொலைநோக்கியை இன்று அனுப்பியுள்ளது.
ரஷ்ய தயாரிப்பான சோயூஸ் ராக்கெட் மூலம், பிரெஞ்ச் கயானா ஏவுதளத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள இந்த கையா தொலைநோக்கியானது வெற்றிகரமாக இயங்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 100 கோடி டாலர் மதிப்பிலான தொலைநோக்கி, ஏவப்பட்ட 42வது நிமிடத்திலேயே ராக்கெட்டை விட்டு பிரிந்து சென்றது.
மிக சக்திவாய்ந்த 1000 மெகா பிக்சல் கேமிராவுடன் இயங்கும் தொலைநோக்கியானது அண்டவெளியில் உள்ள 100 கோடி நட்சத்திரங்களை பற்றி ஆராயவும், அவைபற்றிய முப்பரிமாண புகைப்படங்களை எடுத்து அனுப்பி ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் உதவும்.
மூன்றுவார பயணத்திற்கு பிறகு சுமார் 15 லட்சம் மைல்களுக்கு அப்பால் இந்த தொலைநோக்கி சென்றுவிடும். அப்போது அதன் பார்வையிலிருந்து பூமி மறைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த தொலைநோக்கி நட்சத்திரங்களின் தூரம், வேகம், இயக்கம், திசை பற்றிய தகவல்களை துல்லியமாக அளிக்கும்.
5 வருட காலம் அண்டவெளியில் சுற்றி ஆராயும் இந்த தொலைநோக்கி 50 ஆயிரம் கோள்கள் பற்றிய தகவல்களை தரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அண்டவெளியில் நிகழும் அரிய நிகழ்வான நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவது, புதிய நட்சத்திரங்கள் உருவாவது தொடர்பான புகைப்படங்களையும் அனுப்பி விஞ்ஞானிகளுக்கு உதவும்.
வியாழன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு இடையே சுற்றிவரும் விண்பாறைகளால் பூமிக்கும் எதாவது அபாயம் இருக்குமா? என்பது குறித்து தெரிந்துகொள்ள முடியும்.
No comments:
Post a Comment