செய்திகள் - 21.12.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : திருப்பீடத்தில் பணியாற்ற திறமை, சேவை மனநிலை, தூய வாழ்வு அவசியம்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : திருவருகைக் காலம், பெத்லகேமை நோக்கிய ஒரு பயணம்
3. இளைய தலைமுறையினர் முகநூலே கதி என இருப்பதை விலக்கி நடக்க சென்னை-மயிலை பேராயர் அறிவுரை
4. ஆயர் Audo : சிரியாவில் குண்டு சப்தங்களுக்கு மத்தியில் கிறிஸ்மஸ்
5. தெற்கு சூடானில் வன்முறை கைவிடப்படுமாறு CAFOD அமைப்பு வேண்டுகோள்
6. ஏழைப் பெண்களுக்கு கிறிஸ்தவம் உதவுகின்றது, அமெரிக்கப் பொருளாதார ஆய்வாளர்
7. 2013, புலம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்டுள்ள ஆண்டு, ஐ.நா. அகதிகள் நிறுவனம்
8. தமிழ்நாட்டில் வீட்டுப் பணிப்பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டம் இல்லை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : திருப்பீடத்தில் பணியாற்ற திறமை, சேவை மனநிலை, தூய வாழ்வு அவசியம்
டிச.21,2013. பணியில் திறமை, சேவை உள்ளம், வாழ்வில் தூய்மை ஆகிய மூன்றும் திருப்பீடத்தில் பணியாற்றுவோர்க்கு அவசியம் என்று, திருப்பீட அதிகாரிகளிடம் இச்சனிக்கிழமையன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் கர்தினால்கள், இன்னும்
பிற அதிகாரிகளை இச்சனிக்கிழமையன்று சந்தித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப்
பரிமாறி உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த அதிகாரிகள் அனைவரும் திருத்தந்தைக்கும், ஆயர்களுக்கும், அகிலத் திருஅவைக்கும், தலத்திருஅவைகளுக்கும் ஆற்றிவரும் அருமையான பணிகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், இப்பணிகளைத் திறம்பட ஆற்றியவர்களின் பெயர்களை முதலில் சொல்லி நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும், ஆயினும், அவர்கள் இங்கு இல்லையெனவும் கூறினார்.
திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றுவதற்கு முதல் அடிப்படைத் தேவை திறமை என்றும், இரண்டாவது தேவை தொண்டுள்ளம் என்றும், இவற்றுக்கு அடுத்ததாகத் தேவைப்படுவது தூய வாழ்வு என்றும் கூறிய திருத்தந்தை, நமது பணியும் சேவையும் தரத்தில் சிறந்தோங்குவதற்கு தூய வாழ்வு இன்றியமையாதது என்று விளக்கினார்.
தூய ஆவியில் மூழ்கியுள்ள வாழ்வு, கடவுளுக்குத் திறந்தமனம், இடைவிடா செபம், ஆழமான மனத்தாழ்மை, நம்முடன் பணிசெய்பவருடன் கொள்ளும் உறவில் சகோதரத்துவ பிறரன்பு ஆகியவை தூய்மைத்துவத்தில் அடங்கியுள்ளன என்றுரைத்த திருத்தந்தை, திருப்பீடத்தில் இந்தத் தூய்மைத்துவம் புறங்கூறாமையையும் உள்ளடக்கியுள்ளது என்று கூறினார்.
நம்மைப் பாதுகாப்பதற்காக எழுதப்படாத சட்டமாக நம் சூழல்களில் புறங்கூறுதலை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம், ஆனால், இது மனிதருக்கும், நமது பணிக்கும், நம் சூழல்களுக்கும் ஊறுவிளைவிக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறுதியில் தனக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், தானும் அவர்களுக்காகச் செபிப்பதாகத் தெரிவித்து, புனித வளனை நம் பணிக்கு எடுத்துக்காட்டாய்க் கொள்வோம் எனக் கூறி, கிறிஸ்மஸ் வாழ்த்துக்களுடன் இவ்வுரையை நிறைவு செய்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : திருவருகைக் காலம், பெத்லகேமை நோக்கிய ஒரு பயணம்
டிச.21,2013. மேலும், இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு உரோம் குழந்தை இயேசு சிறார் மருத்துவமனைக்குச் சென்று, அங்குச்
சிகிச்சை பெற்றுவரும் ஏறக்குறைய எல்லாச் சிறாரையும் பார்ப்பது திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் இந்நாளைய நிகழ்ச்சிகளில் ஒன்றாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீடத்துக்குச் சொந்தமான, பம்பினோ ஜேசு என்ற இந்தச் சிறார் மருத்துவமனை ஐரோப்பாவிலுள்ள சிறார் மருத்துவமனைகளில் பெரியதாகும். இது, பல பன்னாட்டு மருத்துவ மையங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. மருத்துவர்கள், தாதியர், ஆய்வாளர்கள், தொழில்நுட்பத்துறையினர் என ஏறக்குறைய 2,600 பேர் இங்குப் பணிபுரிகின்றனர்.
பம்பினோ ஜேசு மருத்துவமனையில், ஓராண்டில் 27 ஆயிரம் சிறார் சிகிச்சைக்கென அனுமதிக்கப்படுகின்றனர்; 25 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுகின்றன; 71 ஆயிரம் சிறார் அவசரக் கிசிக்கைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
Arabella, Scipione Salviati ஆகிய இருவரின் மனத்தாராளத்தால் 1869ம் ஆண்டில் இத்தாலிய சிறார் மருத்துவமனையாக இது தொடங்கப்பட்டது. பின்னர், 1924ம் ஆண்டில், இது திருப்பீடத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இம்மருத்துவமனையை, திருத்தந்தையின் மருத்துவமனை என குடும்பத்தினர் அழைக்கின்றனர்.
இன்னும், இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், திருவருகைக் காலம், பெத்லகேமை நோக்கிய ஒரு பயணம்; மனிதரான கடவுளின் ஒளியால் ஈர்க்கப்பட நம்மை அனுமதிப்போம் என்று எழுதியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. இளைய தலைமுறையினர் முகநூலே கதி என இருப்பதை விலக்கி நடக்க சென்னை-மயிலை பேராயர் அறிவுரை
டிச.21,2013. இன்றைய இளைய தலைமுறையினர் ஒரு நாளில் பல
மணிநேரங்களை முகநூலில் செலவிடுவதைத் தவிர்த்து புத்தகங்கள் வாசிப்பதில்
ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி.
அயர்லாந்து காணிக்கை அன்னை சபையை நிறுவிய இறையடியார் Nano Nagle அவர்களை
முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கான ஆவணங்களைத் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் அங்கீகரித்துள்ளதைச் சிறப்பிப்பதற்காக இடம்பெற்ற
நிகழ்ச்சியில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி.
சென்னையிலுள்ள Sacred Heart Metriculation பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களும், இந்தியாவுக்கான அயர்லாந்து சிறப்பு தூதர் ராஜீவ் மேச்சேரி அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, இறையடியார் Nano Nagle, அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தவர். அவருடைய காலத்தில், கல்வி அத்தியாவசிய தேவையாக இருந்தது; இன்றும், கல்வி அத்தியாவசிய தேவையாக இருந்தபோதிலும், இன்னும் சில தேவைகள் இருப்பதையும், நிகழ்காலத்தின் தேவையையும் உணர்ந்து சேவை புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இன்றைய இளைய தலைமுறையினர் ஒரு நாளில், பல மணிநேரங்களை முகநூலில் செலவழிப்பதைத் தவிர்த்து, நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும், அதன் மூலம், சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்றும் கூறினார் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி.
இறையடியார் Nano Nagle அவர்களின் வீரத்துவமான வாழ்வுமுறையை ஏற்று, அவரை வணக்கத்துக்குரியவர் என கடந்த அக்டோபர் 31ம் தேதி அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : தினமலர்
4. ஆயர் Audo : சிரியாவில் குண்டு சப்தங்களுக்கு மத்தியில் கிறிஸ்மஸ்
டிச.21,2013. சிரியாவில் குண்டு சப்தங்களுக்கு மத்தியில் கிறிஸ்மஸ் கொண்டாடும் நிலை உள்ளது என, அந்நாட்டின் கல்தேய வழிபாட்டுமுறையின் ஆயர் Antoine Audo கூறினார்.
புரட்சிப்
படைகளின் அதிகாரத்தின்கீழ் இருக்கும் அலெப்போ நகரின் புறநகர்ப் பகுதிகளில்
கடந்த சில நாள்களாக அரசுப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன என்று
பீதெஸ் செய்தி நிறுவனத்துக்குச் செய்தி அனுப்பியுள்ள ஆயர் Audo, அந்நாட்டின் பிற இடங்களிலும் குண்டு சப்தங்களைக் கேட்க முடிகின்றது எனத் தெரிவித்தார்.
காரித்தாஸ் நிறுவனத்தின் பணிகள் தொடர்ந்து இடம் பெறுகின்றன எனவும், விவிலிய வகுப்புகள் உட்பட கிறிஸ்மஸ் பெருவிழாவுக்குத் தாங்கள் விசுவாசிகளைத் தயாரித்து வருவதாகவும் கூறினார் இயேசு சபை ஆயர் Audo.
இதற்கிடையே, வருகிற
சனவரியில் ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் சிரியா குறித்த அமைதிப்
பேச்சுவார்த்தைகளில் பல முக்கிய நாடுகளின் ஏறக்குறைய 30 அமைச்சர்கள்
பற்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம் : Fides
5. தெற்கு சூடானில் வன்முறை கைவிடப்படுமாறு CAFOD அமைப்பு வேண்டுகோள்
டிச.21,2013. தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவில் கடந்த சில நாள்களாக வன்முறை இடம்பெற்றுவரும்வேளை, சண்டையிடும் அனைத்துத் தரப்பினரும் வன்முறையைக் கைவிடுமாறு பிரிட்டனின் CAFOD பிறரன்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜூபாவின் புனித தெரேசா பேராலயத்திலும், அந்நகரின் ஐ.நா. கட்டிடத்திலும் நூற்றுக்காணக்கான மக்கள் அடைக்கலம் தேடியுள்ளனர் எனக் கூறும் CAFOD அமைப்பு, உலகின் மிக இளவயது நாடாகிய தெற்கு சூடானில் அரசுத்தலைவர் Kiir தனது அமைச்சரவையைக் கலைத்துள்ள சூழலில் பதட்டநிலை மேலும் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தது.
சூடானில்
22 வருட உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த புரட்சிப்படைக் கட்சி ஆட்சியைக்
கைப்பற்றும் நோக்கத்தில் மோதல்களைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இம்மாதம் 15ம் தேதி சண்டை தொடங்கிய பின்னர் ஜூபா விமானநிலையம் மூடப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு சூடானின், Jonglei மாநிலத்தில் ஐ.நா. நிறுவன வளாகத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில், அங்கிருந்த மூன்று இந்திய அமைதிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆதாரம் : ICN
6. ஏழைப் பெண்களுக்கு கிறிஸ்தவம் உதவுகின்றது, அமெரிக்கப் பொருளாதார ஆய்வாளர்
டிச.21,2013. இந்தியாவில் வறுமையில் வாடும் பெண்கள் கிறிஸ்தவத்துக்கு மனம் மாறிய பின்னர் அவர்கள், பொருளாதாரச்
சூழல்களில் முன்னேறுவதற்கு கிறிஸ்தவம் பெருமளவில் உதவி வருகின்றது என
அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பொருளாதார ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.
வாஷிங்டன் ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தின் Berkley மையத்தைச் சேர்ந்த Rebecca Samuel Shah நடத்திய ஆய்வில், வறுமையில் வாடும் பெண்கள் கிறிஸ்தவத்துக்கு மனம் மாறிய பின்னர், விசுவாசக் குழுவில் உயிர்த்துடிப்புள்ள உறுப்பினராக உணருவதாகவும், அதிகமாக வேலை செய்து அதிகமாகப் பொருள்களை ஈட்டுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
“கிறிஸ்தவமும் சுதந்திரமும்” என்ற தலைப்பில் இம்மாதத்தில் உரோமையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய Shah, பெங்களூருவில் தானும், தனது குழுவினரும் தலித் பெண்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் இவ்வாறு தெரியவந்ததாகக் கூறினார்.
Shah குழுவினர், பெங்களூருவில் தலித் பெண்கள் வாழும் சேரிகளில் மூன்றாண்டுகள் தங்கி இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
ஆதாரம் : CNA
7. 2013, புலம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்டுள்ள ஆண்டு, ஐ.நா. அகதிகள் நிறுவனம்
டிச.21,2013. உள்நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்தவர்கள், புதிதாக அகதிகள் நிலைக்கு உள்ளானவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை இந்த 2013ம் ஆண்டில் மிக அதிகமான எண்ணிக்கையில் இருந்ததையொட்டி, மற்ற ஆண்டுகளைவிட இவ்வாண்டு, புலம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்டுள்ள ஆண்டாகக் கணிக்கப்பட்டுள்ளது என, ஐ.நா. அகதிகள் நிறுவனம் கூறியது.
கடந்த பத்தாண்டுகளில் இவ்வாண்டின் முதல் பாதிப்பகுதி, கட்டாயமாகப் புலம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்டிருந்த காலமாக இருந்தது என, ஐ.நா. அகதிகள் நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஏறக்குறைய 59 இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டுக் கட்டாயமாக வெளியேறினர் என்றும், கடந்த 2012ம் ஆண்டு முழுவதும் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை 76 இலட்சமாக இருந்ததென்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
இவ்வாண்டில் சிரியாவிலிருந்தே மக்கள் அதிக எண்ணிக்கையில் கட்டாயமாக வெளியேறினர் என்று ஐ.நா. அகதிகள் நிறுவன அறிக்கை கூறுகிறது.
ஆதாரம் : UN
8. தமிழ்நாட்டில் வீட்டுப் பணிப்பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டம் இல்லை
டிச.21,2013. இந்தியாவில், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் வீட்டுவேலை செய்யும் பணிப்பெண்களின் நிலை மோசமாகவே இருக்கிறது, அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தரப்படவேண்டும் என்ற சட்டம் இல்லை என்று கூறியுள்ளார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.
வீட்டுவேலை செய்யும் பணிப்பெண்களின் நல்வாழ்வு குறித்து வீட்டுப்பணியாளர்கள் நலவாரியம் ஏற்கனவே கோரிக்கை ஒன்றை உருவாக்கியதாகவும், தமிழ்நாட்டில் வீட்டுப் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியச் சட்டம் வரும் நிலையில், இது நடுத்தர வர்க்க மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்குமோ என்ற அச்சத்தால் அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை எனவும் கூறினார் ரவிக்குமார்.
ஆனால் வேகமாக நகரமயமாகிவரும் தமிழ்நாட்டில், வீட்டுப் பணிப்பெண்கள் நிலை பெரும்பாலும் "அரை அடிமை" என்ற நிலையிலேயே இருப்பதாகவும், இது குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை எனவும் ரவிக்குமார் கூறினார்.
ஆதாரம் : பிபிசி
No comments:
Post a Comment