செய்திகள் - 30.12.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : குடும்பங்களுக்குள் முதியோரும் குழந்தைகளும் எவ்விதம் நடத்தப்படுகின்றனர் என்பதே குடும்ப நலத்தின் அளவுகோல்
2. திருக்குடும்பத் திருநாளன்று திருத்தந்தை இயற்றி, வாசித்த செபம்
3. திருத்தந்தையின் திங்கள் டுவிட்டர் செய்தி
4. அமெரிக்க மக்கள் கருத்துக் கணிப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிக உயர்ந்த இடம்
5. இலஞ்ச ஊழல் மற்றும் வன்முறைகளைப் புறந்தள்ளிட பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் அழைப்பு
6. மத்திய ஆப்ரிக்கக் குடியசிற்கான போரை அந்நாட்டுப் பேராயரும் இஸ்லாமிய தலைமைக்குருவும் இணைந்து அழைப்புவிடுத்துள்ளனர்
7. எகிப்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : குடும்பங்களுக்குள் முதியோரும் குழந்தைகளும் எவ்விதம் நடத்தப்படுகின்றனர் என்பதே குடும்ப நலத்தின் அளவுகோல்
டிச.30,2013. ஒரு குடும்பத்தில் வயது முதிர்ந்தோரும், குழந்தைகளும் எவ்விதம் நடத்தப்படுகின்றனர் என்பதே, அக்குடும்பத்தில் உறவுகள் நலமாக உள்ளனவா என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 29, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட திருக்குடும்பத் திருநாளையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த 60,000க்கும் அதிகமான மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
திருக்குடும்பத் திருநாளன்று நற்செய்தியாக வழங்கப்பட்டிருந்த, இயேசு, மரியா, யோசேப்பு ஆகிய மூவரும் எகிப்திற்குத் தப்பித்துச்செல்லும் நிகழ்வைத் தன் உரையின் மையமாக்கியத் திருத்தந்தை அவர்கள், உலகெங்கும், புலம்பெயர்ந்து செல்லும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் குடும்பங்களைச் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.
சொந்த நாட்டிலிருந்து வேற்று நாடுகளுக்கு அன்னியராக விரட்டப்படும் மக்களை நினைவுகூரும் வேளையில், குடும்பங்களுக்குள்
அன்னியராக நடத்தப்படும் மக்களையும் எண்ணிப் பார்க்கவேண்டும் என்று
சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களுக்குள் முதியோரும் குழந்தைகளும் எவ்விதம் நடத்தப்படுகின்றனர் என்பதே குடும்ப நலத்தின் அளவுகோல் என்று கூறினார்.
பொறுத்துக்கொள்ளுங்கள், நன்றி, மன்னித்துக்கொள்ளுங்கள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் குடும்பங்கள் நலமாக, மகிழ்வாக இருக்கும் என்று கூறியத் திருத்தந்தை, அனைவரையும் அந்த வார்த்தைகளை தன்னோடு சேர்ந்து சொல்லவைத்ததை, கூடியிருந்தோர் அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
நற்செய்தியை அறிவிப்பது என்ற உயர்ந்த செயல்பாடு ஒவ்வொரு குடும்பத்திலுமிருந்து துவங்குகிறது என்று கூறியத் திருத்தந்தை, ஒவ்வொரு நாள் குடும்ப வாழ்வையும் நிறைவுடன் வாழ, அன்னை மரியா, யோசேப்பு, இயேசு ஆகியோரின் உதவியை நாடுவோம் என்று தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருக்குடும்பத் திருநாளன்று திருத்தந்தை இயற்றி, வாசித்த செபம்
டிச.30,2013. டிசம்பர் 29, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூவேளை செப உரையை வழங்கியபின், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த குடும்பங்களையும், இத்தாலியின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த இளையோரையும் சிறப்பாக குறிப்பிட்டு, வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
விரைவில் கூடவிருக்கும் கர்தினால்கள் அவையும், அதைத் தொடர்ந்து நிகழவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றமும், குடும்பம் என்ற மையக்கருத்தில் விவாதங்களை மேற்கொள்ளவிருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திரு அவை மேற்கொள்ளும் இந்த முயற்சிகள் வெற்றிகரமாக அமைய ஒரு சிறு செபம் ஒன்றைக் கூறினார்.
திருத்தந்தை இயற்றி, வாசித்த செபம் பின்வருமாறு:
திருக்குடும்பத்திடம் செபம்
இயேசு, மரியா, யோசேப்பே,
உங்களுக்குள் இருக்கும்
உண்மையான அன்பின் மகிமையைத் தியானிக்கின்றோம்.
உங்களிடம் நம்பிக்கையோடு இறைஞ்சுகிறோம்.
நாசரேத்தூர் திருக்குடும்பமே,
எமது குடும்பங்களும்
ஒன்றிப்பின் இடங்களாக, செபத்திற்கென கூடிவரும் மேல்மாடி அறைகளாக,
நற்செய்தியின் உண்மையான பள்ளிகளாக
குட்டிக் குடும்பத் திருஅவைகளாக
அமையும் வரம் தாரும்.
நாசரேத்தூர் திருக்குடும்பமே,
வன்முறையின், பிரிவினைகளின்
அனுபவத்தை இனிமேல்
ஒருபோதும் குடும்பங்கள் எதிர்நோக்காதிருக்கட்டும்.
குடும்பங்கள் காயப்பட்டு அல்லது அவமானப்பட்டு இருந்தால்
அவை விரைவில் ஆறுதலையும் நற்சுகத்தையும் பெறட்டும்.
நாசரேத்தூர் திருக்குடும்பமே,
குடும்பத்தின் புனிதத்துவத்தை, அதன் மாறாத இயல்பை,
கடவுளின் திட்டத்திலுள்ள அதன் அழகை
நடைபெறவிருக்கும் ஆயர்கள் மாமன்றம்
அனைவரிலும் தட்டியெழுப்ப உதவி செய்யும்.
இயேசு, மரியா, யோசேப்பே,
எங்களின் இவ்வேண்டுதல்களைக் கேட்டு அவற்றை நிறைவேற்றும். ஆமென்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தையின் திங்கள் டுவிட்டர் செய்தி
டிச.30,2013. 'இயேசு பாலனின் முகத்தில் நாம் தந்தையாம் இறைவனின் முகத்தைக் கண்டு தியானிக்கிறோம். வாருங்கள் அவரை ஆராதிப்போம்' என தன் இத்திங்கள் டுவிட்டர் பக்கத்தில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலத்தீன், இத்தாலியம், ஆங்கிலம், அரபு, இஸ்பானியம், போலந்து, செர்மானியம், போர்த்துக்கீசியம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் இக்கிறிஸ்துமஸ் காலத்தில் டுவிட்டர் வழி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. அமெரிக்க மக்கள் கருத்துக் கணிப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிக உயர்ந்த இடம்
டிச.30,2013. அமெரிக்காவில்
உள்ள கத்தோலிக்கர்களில் 88 விழுக்காட்டினர் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் திருஅவையின் தலைவராகச் செயல்படும் முறையைப் பாராட்டியுள்ளனர் என்று
CNN ஊடகத்தின் கருத்துக் கணிப்பு ஒன்று அண்மையில் தெரிவித்துள்ளது.
இணையத்தளம், முகநூல் என்ற இரு சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாகப் பேசப்படும் ஒரு தலைவராக விளங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, Times வார இதழ் 2013ம் ஆண்டின் தலைசிறந்த மனிதர் என்று அறிவித்துள்ளது, தகுதியானத் தேர்வு என்று CNN தன் கணிப்பில் கூறியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளர் இளம் பருவத்தினர் வாழ்ந்த சிறைக்குச் சென்று அவர்கள் காலடிகளைக் கழுவியதையும், தன் பிறந்தநாளன்று வீடற்றோருடன் காலை உணவைப் பகிர்ந்துகொண்டதையும், அருவருக்கத்தக்க முகத் தோற்றம் கொண்ட ஒருவரை அணைத்ததையும் மக்கள் பெருமளவில் பாராட்டியுள்ளனர் என்று இக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 16ம் தேதி முதல் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் 1035 பேர் கலந்துகொண்டனர் என்று CNN அறிவித்துள்ளது.
ஆதாரம் : CNN
5. இலஞ்ச ஊழல் மற்றும் வன்முறைகளைப் புறந்தள்ளிட பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் அழைப்பு
டிச.30,2013.
பிலிப்பீன்ஸ் மக்கள் தங்கள் பழைய தீய வழிகளைக் கைவிட்டு 2014ம் ஆண்டை
விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் வரவேற்கவேண்டும் என
அழைப்புவிடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர்பேரவைத் தலைவர்.
பிலிப்பீன்ஸ் சமூகத்தை அலைக்கழித்துக்கொண்டிருக்கும் இலஞ்ச ஊழல் மற்றும் வன்முறைகளைப் புறந்தள்ளி, புத்தாண்டில்
புதிய வாழ்வை மேற்கொள்ள விசுவாசிகள் முன்வரவேண்டும் என பிலிப்பீன்ஸ்
ஆயர்கள் சார்பில் அழைப்புவிடுத்துள்ள ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Socrates Villegas, கடத்தல், வன்முறை, பயங்கரவாதம், இலஞ்ச ஊழல் போன்றவை நிறுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார்.
'மீண்டும் புதிதாகத் துவக்குவோம்' என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த புத்தாண்டு மேய்ப்புப்பணி சுற்றறிக்கை, சிரியா நாட்டின் அமைதிக்கான செபத்திற்கும் அழைப்புவிடுத்துள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. மத்திய ஆப்ரிக்கக் குடியசிற்கான போரை அந்நாட்டுப் பேராயரும் இஸ்லாமிய தலைமைக்குருவும் இணைந்து அழைப்புவிடுத்துள்ளனர்
டிச.30,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியசிற்கான அனைத்துலக உதவிப்பணிகளின் ஓர் அங்கமாக 1,600 பிரான்ஸ் இராணுவ வீரர்கள் வந்துள்ளபோதிலும், வன்முறைகள் நிறுத்தப்பாடாத நிலையில், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உதவிக்கு அந்நாட்டுப் பேராயரும் இஸ்லாமிய தலைமைக்குருவும் இணைந்து அழைப்புவிடுத்துள்ளனர்.
ஐ.நா. அமைதி காப்புத் துருப்புகளின் உடனடித் தலையீடு தேவைப்படுகின்றது என அழைப்புவிடுத்த மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Bangui பேராயர் Dieudonné Nzapalainga, மற்றும் இஸ்லாமிய மத்த்தலைமைக் குரு Omar Kobine Layama, 'மத்திய ஆப்ரிக்கக் குடியரசு போரை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதற்கு மதமும் காரணங்கள் எனச் சொல்லப்படும் நிலையில், அந்நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டியது அனைத்துலகச் சமுதாயத்தின் கடமை என மேலும் உரைத்துள்ளனர்.
கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என செய்தி நிறுவனங்கள் கூறும்வேளை, Bangui நகரில் மட்டும் ஏறத்தாழ 60 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Bangui நகரில் இம்மாதத் துவக்கத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
ஆதாரம் : MISNA
7. எகிப்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு
டிச.30,2013. கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் எகிப்தில் அண்மைக் காலங்களில் பெருகிவருவதால், அரசியலைப்பு
மாற்றங்கள் தொடர்புடைய மக்கள் கருத்து வாக்கெடுப்பில் கிறிஸ்தவர்கள்
பங்கெடுக்க முடியாத நிலை ஏற்படலாம் என்ற கவலையை வெளியிட்டுள்ளனர் எகிப்து
கிறிஸ்தவத் தலைவர்கள்.
அண்மைக்
காலங்களில் எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள்
அதிகரித்துள்ளது குறித்து கருத்து வெளியிட்ட அந்நாட்டு கத்தோலிக்கத்
திருஅவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருட்திரு Rafic Greiche, கிறிஸ்தவர்களின்
மனங்களில் அச்சத்தை விதைப்பதன் மூலம் அரசியலமைப்பு திருத்தம் குறித்த
கருத்து வாக்கெடுப்பில் அவர்களைப் பங்கெடுக்காமல் ஒதுங்கியிருக்க வைப்பதே
இஸ்லாமிய தீவிரவாதிகளின் நோக்கம் என்றார்.
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ வழிபாட்டுமுறையினரின் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டங்கள் சனவரி மாதம் 7ம் தேதி இடம்பெற உள்ள நிலையில், மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற சந்தேகம் இருக்கின்றபோதிலும், அச்சமின்றி கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புகள் இடம்பெற்றுவருவதாகவும் கூறினார் அருட்திரு Greiche.
இஸ்லாமியக்
குழு ஒன்றை தீவிரவாத அமைப்பு என அறிவித்து எகிப்து அரசு தடைசெய்துள்ளதை
ஒட்டியும் அந்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள்
அதிகரித்துள்ளன.
எகிப்தில் அரசியலமைப்பு திருத்தம் குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு வருகிற சனவரி மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் இடம்பெற உள்ளது
ஆதாரம் : AsiaNews
No comments:
Post a Comment