Friday 20 December 2013

செய்திகள் - 18.12.13

செய்திகள் - 18.12.13
 ------------------------------------------------------------------------------------------------------
1. இயேசு சபையின் முத்திப்பேறு பெற்ற Peter Faber அவர்களை, திருத்தந்தை புனிதராக அறிவித்துள்ளார்

2. சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோருக்கு நற்செய்தியின் ஒளியை எடுத்துச் செல்வோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

3. கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள், மாஸ்கோவில் பயணம்

4. கேரளாவின் கர்தினால்கள் சோனியா காந்தியுடன் சந்திப்பு

5. டிசம்பர் 18, ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அகில உலக நாளையொட்டி, லாம்பெதுசா படகில் இரு ஆயர்கள் 

6. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைபோதகங்களில் 1,500,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்

7. பிலிப்பின்ஸ் நாட்டின் சூறாவளியில் சிக்கிய பகுதியில் பள்ளிகளை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் UNICEF

8. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் இயங்கும் குளிர்சாதனைப் பெட்டி - திண்டுக்கல் மாணவ, மாணவிகள் கண்டுபிடிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. இயேசு சபையின் முத்திப்பேறு பெற்ற Peter Faber அவர்களை, திருத்தந்தை புனிதராக அறிவித்துள்ளார்

டிச.18,2013. புனித லொயோலா இஞ்ஞாசியாருடன் இணைந்து இயேசு சபையை உருவாக்கிய முதல் குழுவினரில் ஒருவரான முத்திப்பேறு பெற்ற Peter Faber அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று புனிதராக அறிவித்துள்ளார்.
புனிதர் நிலைக்குப் பரிந்துரைக்கும் திருப்பீட பேராயத்தின் தலைவரான கர்தினால் Angelo Amato அவர்களை, இச்செவ்வாய் மாலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முத்திப்பேறு பெற்ற Peter Faber அவர்களை, புனிதராக உயர்த்தி, திருஅவையின் புனிதர்கள் பட்டியலில் இணைத்தார்.
திருத்தந்தையர், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு சிலரை புனிதர்களாக அறிவிக்கும் பழக்கம் திருஅவையில் நிலவி வருகிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Hildegard என்பவரை புனிதராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இச்செவ்வாயன்று புனிதராக அறிவிக்கப்பட்ட புனித Peter Faber அவர்கள், 1506ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் Savoy எனுமிடத்தில் ஓர் எளியக் குடும்பத்தில் பிறந்தவர். பாரிஸ் நகரில் இவர் பயின்றபோது, புனிதர்களான இஞ்ஞாசியார், சேவியர் ஆகியோருடன் ஒரே அறையில் தங்கி பயின்றார்.
1534ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட Peter Faber அவர்கள், உரோம் நகரில் விவிலிய ஆசிரியராகப் பணியாற்றினார். கத்தோலிக்கத் திருஅவைக்கு சவாலாக எழுந்த லூத்தரின் வழியைப் பின்பற்றியவர்களுடன் உரையாடலை மேற்கொள்வதில் பெரும் ஆவல் கொண்டிருந்தார்.
கருத்து வேறுபாடு கொண்டவர்கள் மீது உள்ளார்ந்த மதிப்பு கொண்டு, அவர்களுடன் உரையாடலை மேற்கொண்ட Peter Faber அவர்களின் திறந்த மனதும், இறைவனை ஆழ்நிலை தியானத்தில் அவர் கண்ட முறையும் அவரைப் புனிதராக கருதுவதற்குக் காரணங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
1546ம் ஆண்டு தன் 40வது வயதில் இறையடி சேர்ந்த Peter Faber அவர்களை, 1872ம் ஆண்டு திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்ந்த இறையடியாரான அருள் சகோதரி Miriam Teresa Demjanovich, ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த மறைமாவட்ட அருள் பணியாளர் Emanuele Herranz Establés, மற்றும் போலந்து நாட்டில் ஒரு குடும்பத்தின் தலைவராக வாழ்ந்த George Ciesielski ஆகியோரை முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கும் வரைமுறைகளைத் துவக்குவதற்கு, திருத்தந்தை இச்செவ்வாயன்று இசைவளித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோருக்கு நற்செய்தியின் ஒளியை எடுத்துச் செல்வோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

டிச.18,2013. சுகமாக நமக்குள்ளேயே தங்கியிருக்கும் நிலையிலிருந்து வெளியேறி, சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோருக்கு நற்செய்தியின் ஒளியை எடுத்துச் செல்வோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று வெளியிட்ட ஒரு மடலில் எழுதியுள்ளார்.
கட்டுண்டோரின் விடுதலைக்கென நிறுவப்பட்டுள்ள மூவொரு கடவுளின் துறவு சபையை நிறுவிய புனித Juan de Mata அவர்களின் எட்டாம் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் அத்துறவு சபையின் தலைவரான அருள் பணியாளர் Jose Narlaly அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பிய மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.
சபையின் நிறுவனரான புனித Juan de Mata அவர்களும், நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர், சபையின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்ட புனிதர் Juan Bautista de la Concepcion அவர்களும் வாழ்ந்த விழுமியங்கள் நமக்கு நல்லதொரு வழிகாட்டி என்று திருத்தந்தை தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.
சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோர், குறிப்பாக பல்வேறு தளைகளால் கட்டுண்டிருப்போர் ஆகியோரை வரவேற்கும் வண்ணம், இத்துறவு சபையின் கதவுகள் எப்போதும் திறந்திருப்பதையே தான் விரும்புவதாக திருத்தந்தை இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.
1169ம் ஆண்டு பிறந்த Juan de Mata அவர்கள், அன்றையச் சூழலில், இஸ்லாமியரின் அடக்குமுறைகளால் சிறையுண்ட கிறிஸ்தவர்களைக் காப்பதற்கென துறவு சபையொன்றை 1198ம் ஆண்டு நிறுவினார். 1213ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி மறைந்த Juan de Mata அவர்கள் இறந்ததன் 8ம் நூற்றாண்டு இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டது.

ஆதாரம் : VIS

3. கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள், மாஸ்கோவில் பயணம்

டிச.18,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையுடன் மேற்கொள்ளவிருக்கும் சந்திப்பு இதுவரை வரலாற்றில் நிகழாத ஒரு முயற்சி என்பதால், அதற்குத் தகுந்த தயாரிப்புக்கள் தேவைப்படுகின்றன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Kurt Koch அவர்கள், டிசம்பர் 14, கடந்த சனிக்கிழமை முதல், டிசம்பர் 19, இவ்வியாழன் முடிய மாஸ்கோவில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இப்பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, இப்புதனன்று இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை Kirill அவர்களைச் சந்தித்தார்.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை Kirill அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுக்கு வாய்ப்புக்கள் உள்ளன என்று கூறிய கர்தினால் Koch அவர்கள், இச்சந்திப்பு எப்போது நிகழும் என்பதை குறிப்பிட்டுப் பேசவில்லை.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும், கத்தோலிக்கத் திருஅவையும் பல்வேறு வழிகளில் ஒருங்கிணைந்து செயலாற்றும் வழிகள் இச்சந்திப்பில் பேசப்பட்டன என்றும், குறிப்பாக, சிரியாவில் அமைதி நிலவ தேவையான முயற்சிகள் விவாதிக்கப்பட்டன என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews

4. கேரளாவின் கர்தினால்கள் சோனியா காந்தியுடன் சந்திப்பு

டிச.18,2013. கேரளாவின் சீரோ மலபார் தலைமைப் பேராயர், கர்தினால் George Alencherry, சீரோ மலங்கரா தலைமைப் பேராயர் Baselios Cleemis, திருவனந்தபுரம் பேராயர் சூசை பாக்கியம் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்று புது டில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர், சோனியா காந்தி அவர்களை இச்செவ்வாயன்று சந்தித்தது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலைகளில் பசுமை முயற்சிகளை மேற்கொள்ளும் ஒரு திட்டத்தின் மூலம் 123 கிராமங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவர் என்ற தங்கள் கவலையை இக்குழுவினர் இச்சந்திப்பின்போது தெரிவித்தனர்.
பசுமை முயற்சிகள் தேவை என்றாலும், அவை பல்லாயிரம் ஏழை மக்களை அப்புறப்படுத்தும் முயற்சியாக மாறக்கூடாது என்ற விண்ணப்பத்தை இக்குழுவினர் சமர்ப்பித்துள்ளனர்.
பசுமை திட்டத்தால் இக்கிராம மக்கள் அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் என்ற வாக்குறுதி இந்தச் சந்திப்பின் இறுதியில் வழங்கப்பட்டதென இந்திய ஆயர்கள் பேரவை செயலர் அருள் பணி  ஜோசப் சின்னய்யன் அவர்கள், UCAN செய்தியிடம் கூறியுள்ளார்.

ஆதாரம் : UCAN

5. டிசம்பர் 18, ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அகில உலக நாளையொட்டி, லாம்பெதுசா படகில் இரு ஆயர்கள் 

டிச.18,2013. இரு ஆயர்கள், நான்கு பாராளு மன்ற உறுப்பினர்கள், ஓர் அருள் சகோதரி ஆகியோர் ஒரு சிறு படகில் இத்தாலிய பாராளுமன்ற இல்லங்களைக் கடந்து செல்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 18, இப்புதனன்று கடைபிடிக்கப்படும் ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அகில உலக நாளையொட்டி, மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில், இத்தாலியின் தெற்குக் கோடியில் அமைந்துள்ள லாம்பெதுசா என்ற தீவுக்கு புலம்பெயர்ந்தொரைச் சுமந்து வந்திருந்த படகு ஒன்று பயன்படுத்தப்படுகிறது.
லாம்பெதுசா தீவுக்கும், இன்னும் உலகில் பல்வேறு கடற்கரை நகரங்களுக்கும் புகலிடம் தேடி வந்து சேரும் புலம்பெயர்ந்தோரின் ஆபத்தான பயணங்களையும், அவர்கள் சந்திக்கும் பாதுகாப்பற்றச் சூழலையும் நினைவுறுத்தவே அகில உலக புலம்பெயர்ந்தோர் நாளன்று இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : ICN

6. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைபோதகங்களில் 1,500,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்

டிச.18,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு மார்ச் மாதம் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து, டிசம்பர் 18, இப்புதன் முடிய 30 முறை புதன் பொது மறைபோதகம் வழங்கியுள்ளார் என்றும், இந்த மறைபோதகங்களில் கலந்துகொள்வோருக்கு 1,500,000க்கும் அதிகமாக நுழைவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டன என்றும் திருப்பீட அலுவலகம் அறிவித்துள்ளது.
2013ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி தலைமைப் பொறுப்பேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் மாதம் 27ம் தேதி தன் முதல் புதன் மறைபோதகத்தை வழங்கினார். அன்று முதல், டிசம்பர் 18 இப்புதன் முடிய அவர் தன் மறைபோத்கம் அனைத்தையும் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு புதன் பொது மறைபோதகத்திற்கும் முன்பாக, திருப்பீட அலுவலகம் நுழைவுச் சீட்டுக்களை வழங்கிவந்துள்ளது. இந்த நுழைவுச் சீட்டுக்களின் அடிப்படையில் புள்ளிவிவரங்களை இப்புதன் வெளியிட்டுள்ள திருப்பீட அலுவலகம், நுழைவுச்சீட்டு இன்றியும் மறைபோதகத்தில் இன்னும் பல்லாயிரம் பேர் கலந்துகொண்டனர் என்றும் அறிவித்துள்ளது.
இப்புள்ளி விவரங்களின்படி, மே மாதத்திலும், அக்டோபர் மாதத்திலும் திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகத்தில் கலந்துகொண்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததெனத் தெரிகிறது.
மிக அதிக அளவாக, மே மாதம் 29ம் தேதி 90,000 நுழைவுச் சீட்டுக்களும், அக்டோபர் மாதம் 23ம் தேதி, 85,000 நுழைவுச் சீட்டுக்களும் வழங்கப்பட்டன என்று திருப்பீட அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. பிலிப்பின்ஸ் நாட்டின் சூறாவளியில் சிக்கிய பகுதியில் பள்ளிகளை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் UNICEF

டிச.18,2013. எவ்வளவுதான் புள்ளிவிவரங்கள் வெளிவந்தாலும், பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கிய சூறாவளியின் அழிவை நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நவம்பர் 8ம் தேதி Haiyan சூறாவளியால் தாக்கப்பட்ட பிலிப்பின்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான UNICEF நிறுவனத்தின் இயக்குனர் Anthony Lake அவர்கள், மீட்புப் பணியின் சவால்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
6,000க்கும் அதிகமான மக்களின் உயிரைப் பலிகொண்ட இந்தச் சூறாவளியால், 1 கோடியே 40 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், குறிப்பாக, 60 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் Anthony Lake அவர்கள் கூறினார்.
இப்புகுதியில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளையும் மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் UNICEF தீவிரமாக இயங்கி வருவதாகவும், இதற்கிடையே, குழந்தைகள் படிப்பதற்கு கூடாரங்களில் பள்ளிகளை அமைத்து வருவதாகவும் ஐ.நா. அதிகாரி Anthony Lake தெரிவித்தார்.
மேலும், சூறாவளியால் பாதிக்கப்பட்ட 55,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் டிசம்பர் சனவரி மாதங்களில் மீண்டும் நெல் பயிரிடும் முயற்சிகளில் ஐ.நா.வின் உணவு, வேளாண்மை நிறுவனமான FAO ஈடுபட்டுள்ளது என்று ஐ.நா. செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் இயங்கும் குளிர்சாதனைப் பெட்டி - திண்டுக்கல் மாணவ, மாணவிகள் கண்டுபிடிப்பு

டிச.18,2013. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல், குறைவான மின்சக்தி கொண்டு இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதனைப் பெட்டியை தமிழ்நாட்டில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர்.
திண்டுக்கல்லுக்கு அருகே உள்ள சின்னாளபட்டியில் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அமலோற்பவ செரின், பிரசாத், உமர் பாருக், சான்டோ ஆனந்த், ஜெயரோசினி ஆகிய மாணவ, மாணவிகள் வேதியல் பொருள்களின் பயன்பாடு அற்ற குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்துள்ளனர்.
டிசம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் திருப்பூர் பொறியியல் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற 21-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆற்றல் என்ற பிரிவில், பாதுகாப்போம், பயன்படுத்துவோம் என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவியர் தங்களுடைய கண்டுபிடிப்பின் ஆய்வினைச் சமர்ப்பித்தனர்.
இவற்றில் 30 சிறந்த ஆய்வறிக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த குளிர்சாதனப் பெட்டியை வடிவமைத்து சமர்ப்பித்த ஆய்வறிக்கையை அறிவியல் அறிஞர்கள் சிறந்த ஆய்வறிக்கையாக தேர்ந்தெடுத்தனர்.
இவர்களது கண்டுபிடிப்பைக் கொண்டு குளிர்சாதனப் பெட்டியைத் தயாரித்தால் வருடத்திற்கு 100 முதல் 150 யூனிட் மின்சக்தியே செலவாகும். இந்தக் குளிர்சாதன பெட்டியில் அமோனியா போன்ற குளிர்விப்பான்கள் பயன்படுத்தாததால் ஓசோன் படலத்தை பாதிக்கும் குளோரோ புளோரா கார்பன் வெளியிடுவதில்லை.
சுற்றுச்சூழலுக்கு நன்மை தரக்கூடிய குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடித்த சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகைள தமிழக ஆளுனர் ரோசையா பாராட்டி பரிசளித்தார்.

ஆதாரம் : தி இந்து

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...