தமிழக போலீசாருக்கு ஆள் இல்லாத விமானங்கள் – தயாரிக்கும் பணி ஆரம்பம்
தமிழக போலீஸ் துறையை நவீனப்படுத்த, முதல்_அமைச்சர் ஜெயலலிதா கோடி, கோடியாக பணத்தை வாரி வழங்கி வருகிறார்.
தற்போது தமிழக போலீஸ் துறைக்கு, ஆள் இல்லாத 3 சிறிய கண்காணிப்பு விமானங்கள் வாங்கவும் அனுமதி வழங்கி உள்ளார். இதற்காக ரூ.95 லட்சம் பணமும் ஒதுக்கி உள்ளார். இந்த 3 விமானங்களையும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்து வழங்க உள்ளது. இதற்காக தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருடன் ஒப்பந்தம் போட்டு, கையெழுத்திட்டுள்ளார்.
இந்த விமானம் வாங்கப்படுவது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக போலீஸ் துறைக்கு அண்ணா பல்கலைக்கழகம் மேற்கண்ட 3 விமானங்களையும் வடிவமைத்து தயாரித்து வழங்க உள்ளது. இது போன்ற ஒரு விமானம், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ளது. அந்த விமானம் 10 கிலோ வரை எடை உள்ளது. பொம்மை விமானம் போல இருக்கும்.
இதில் 2 கிலோ எடை உள்ள வீடியோ கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இந்த விமானத்தை வானத்தில் பறக்கவிட்டால், அது உயரத்தில் பறந்து, கீழே நடக்கும் காட்சிகளை படம் பிடிக்கும். அந்த படங்களை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்க்கலாம். சட்டம்_ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் இடங்களில் இந்த விமானத்தை பறக்க விட்டு கண்காணிக்கலாம்.
தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் கூடங்குளத்தில் இந்த விமானத்தை பறக்கவிட்டு, கண்காணிப்பு பணியில் படுபடுத்தினார்கள். அண்மையில் தேவர் ஜெயந்தி விழா நடத்தப்பட்ட போது, இந்த விமானம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இது வெற்றிகரமாக செயல்பட்டதால், இது போல் 3 விமானங்களை தமிழக போலீசாருக்கு வாங்க, முதல்_அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment