Friday, 20 December 2013

செய்திகள் - 17.12.13

செய்திகள் - 17.12.13


டிசம்பர் 17, 2013
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 77வது பிறந்தநாள்

2013ம் ஆண்டின் தலைசிறந்த மனிதர் என்று Times இதழால் அறிவிக்கப்பட்டிருக்கும் இவரை இறைவன் இன்னும் பல்லாண்டுகள் காத்து, வழிநடத்த வேண்டுகிறோம், வாழ்த்துகிறோம்.

------------------------------------------------------------------------------------------------------

1. மார்த்தா இல்லப் பணியாளர்கள், தெருவில் வாழும் மூன்று ஏழைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் பிறந்த நாள்

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிறந்த நாளுக்கு, இந்தியத் திருஅவை நல்வாழ்த்துக்கள்

3. கர்தினால் Carles Gordó அவர்களின் இறப்புக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தந்தி

4. மனித வியாபாரத்தில் பாதிக்கப்படுபவரை நினைவுகூருகிறது அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை

5. சிரியா அகதிகளுக்கு உடனடியான மனிதாபிமான உதவிகளுக்கு எருசலேம் முதுபெரும் தந்தை Twal அழைப்பு

6. நெல்சன் மண்டேலாவைப்போல் மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய விழுமியங்களில் இலங்கை மக்கள் வளர வேண்டும் பலசமயத் தலைவர்கள்

7. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் அதிகரிப்பு, ஐ.நா. எச்சரிக்கை

8. எழுத்தறிவின்மை தெற்கு ஆசியாவுக்குப் பெரும் பிரச்சனை

------------------------------------------------------------------------------------------------------

1. மார்த்தா இல்லப் பணியாளர்கள், தெருவில் வாழும் மூன்று ஏழைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் பிறந்த நாள் 

டிச.17,2013. கடவுள் ஒருபோதும் நம்மைத் தனியே விடுவதில்லை, அவர் எப்போதும் நம்முடனே நடக்கிறார், நம்மோடு பயணிக்கிறார் என்று, இச்செவ்வாய் காலையில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிறந்த நாளான இச்செவ்வாயன்று, அவர் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ, திருப்பீடச் செயலர், அவ்வில்லத்தில் வாழ்வோர் மற்றும் வீடற்று தெருவில் வாழும் மூன்று ஏழைகளுடன் சேர்ந்து திருப்பலி நிகழ்த்தியபோது, கடவுள் நமது வாழ்வில் எப்போதும் பிரசன்னமாய் இருக்கிறார் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
இயேசுவின் தலைமுறை பட்டியல் பற்றிச் சொல்லும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்த நற்செய்திப் பகுதி, தொலைபேசி எண்கள் பதிந்த நூல்போல இருக்கின்றது என, ஒருசமயம் ஒருவர் சொன்னதைக் கேட்டிருக்கிறேன், ஆனால் இந்நற்செய்திப் பகுதி தூய்மையான வரலாறு, இது முக்கியமான தலைப்பைக் கொண்டுள்ளது எனக் கூறினார்.
முதல் பெற்றோர் பாவம் செய்தபின்னர் கடவுள் நம்முடனே பயணம் செய்வதற்குத் திருவுளம் கொண்டார் என்றும் கூறிய திருத்தந்தை, கடவுள் ஆபிரகாமைக் கூப்பிட்டு தம்மோடு நடக்க அழைத்தார், இவ்வாறு கடவுளின் பயணம் வரலாறு முழுவதும் தொடருகிறது, அவர் நம்மோடு வரலாற்றை அமைக்க விரும்பினார், இந்த வரலாற்றில் புனிதர்களும் பாவிகளும் உள்ளனர் என்றுரைத்தார்.
தாம் ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் என்று சொன்னதன்மூலம், கடவுள் நம் ஒவ்வொருவரின் பெயரையும் தமது குடும்பப் பெயராக எடுத்துக்கொண்டார், நமது பெயரை தமது குடும்பப் பெயராக எடுத்துக்கொண்டதன்மூலம் அவர் நம்மோடு வரலாற்றை அமைத்தார், நாம் வரலாற்றை எழுதவும் அனுமதித்தார் எனவும் கூறினார் திருத்தந்தை.
இச்செவ்வாயன்று தனது 77வது பிறந்த நாளைச் சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இத்திருப்பலியின் இறுதியில் திருப்பீடச் செயலர் பேராயர் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனைவர் பெயராலும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின்னர் அனைவருடன் சேர்ந்து காலை சிற்றுண்டி அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், கடவுளின் அன்பு ஓர் இனத்துக்குரியது அல்ல, அவர் ஒவ்வொரு மனிதரையும் அன்புடன் நோக்கி, பெயர் சொல்லி அழைக்கிறார் என, இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் செய்தியில் ஒன்பது மொழிகளில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிறந்த நாளுக்கு, இந்தியத் திருஅவை நல்வாழ்த்துக்கள்

டிச.17,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இந்தியத் திருஅவையின் செபமும் அன்பும் கலந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை இச்செவ்வாயன்று தெரிவித்துள்ளார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
தனது 77வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இந்தியத் திருஅவையும், அதன் ஒரு கோடியே 80 இலட்சம் கத்தோலிக்கரும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையைத் தொடர்ந்து நடத்தவும், அனைவருக்கும் உள்தூண்டுதலாக இருக்கவும் இறைவன் அவருக்கு மெய்ஞானத்தையும், அருளையும் பொழியவேண்டுமென்று செபிப்பதாகவும் கூறியுள்ளார் மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ்.
மும்பையில் அன்னை தெரேசா சபையினர் நடத்தும் கருணை இல்லத்தில்  இச்செவ்வாய் மாலையில் திருப்பலி நிகழ்த்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகச் செபித்தார் கர்தினால் கிரேசியஸ்.
விண்ணகத்திலுள்ள முத்திப்பேறுபெற்ற அன்னை தெரேசாவும் இந்தியத் திருஅவையுடன் சேர்ந்து  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைச் சொல்வதில் மகிழ்வார் என்று தான் நம்புவதாகவும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.

ஆதாரம் : AsiaNews                

3. கர்தினால் Carles Gordó அவர்களின் இறப்புக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தந்தி

டிச.17,2013. இஸ்பெயின் நாட்டு பார்செலோனாவின் முன்னாள் பேராயர் கர்தினால் Ricardo María Carles Gordó அவர்களின் இறப்பையொட்டி இரங்கல் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பார்செலோனா பேராயர் கர்தினால் Lluis Martinez Siatach அவர்களுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், கர்தினால் Carles Gordó அவர்கள், தலத்திருஅவைக்கும், அகிலத் திருஅவைக்கும் ஆற்றிய அரும்பணிகளைப் பாராட்டியுள்ளதோடு, அவரின் ஆன்மா நிறைசாந்தியடையத் தான் செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்செவ்வாய் காலையில் மரணமடைந்த 87 வயதாகும் கர்தினால் Carles Gordó, 1999ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டுவரை இஸ்பெயின் ஆயர் பேரவையின் தலைவராகப் பணியாற்றியவர்.
கர்தினால் Ricardo María Carles Gordó அவர்களின் இறப்போடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 199 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆகவும் மாறியுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. மனித வியாபாரத்தில் பாதிக்கப்படுபவரை நினைவுகூருகிறது அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை

டிச.17,2013. மனித வியாபாரத்தால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மற்றும் அதற்குப் பலியானவர்களை நினைவுகூரும் ஆண்டு தினமாக பிப்ரவரி 8ம் தேதியைக் குறித்துள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை.
சிறுமியாக இருக்கும்போதே கடத்தப்பட்டு சூடானிலும், பின்னர் இத்தாலியிலும் அடிமையாக விற்கப்பட்ட சூடான் நாட்டுப் பெண் புனித ஜோஸ்பின் பக்கித்தாவின் விழாவான பிப்ரவரி 8ம் தேதியை இந்த தேசிய ஆண்டு தினமாக அறிவித்துள்ளது அமெரிக்க ஆயர் பேரவை.
மனித வியாபாரத்திற்குப் பலியாவோர் மற்றும் அதில் பாதிக்கப்படுவோரை ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 8ம் தேதியன்று நினைவுகூர்ந்து அன்றைய நாளில் செபம் மற்றும் உண்ணாநோன்பைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.
வருகிற சனவரி 5 முதல் 11 வரை தேசிய குடியேற்றதாரர் வாரம்  கடைப்பிடிக்கப்படும் நாள்களில் மனித வியாபாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் அமெரிக்க ஆயர்கள் ஈடுபடவுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. சிரியா அகதிகளுக்கு உடனடியான மனிதாபிமான உதவிகளுக்கு எருசலேம் முதுபெரும் தந்தை Twal அழைப்பு

டிச.17,2013. இந்தக் குளிர்காலக் கடும் பனிப்பொழிவில் துன்புறும் சிரியா நாட்டு அகதிகளுக்கு உடனடியான மனிதாபிமான உதவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal.   
சிரியாவில் நடைபெற்றுவரும் சண்டை, ஆயிரம் நாள்களையும் கடந்துவிட்ட நிலையில், அச்சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், லெபனன் காரித்தாஸ் நிறுவனமும் சிரியா அகதிகளுக்கென மனிதாபிமான உதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளது.
கிழக்கு லெபனனின் பெக்கா பள்ளத்தாக்கிலுள்ள முகாம்களில் வாழ்கின்ற எட்டு இலட்சத்துக்கு மேற்பட்ட அகதிகளுள் பலர் கடும் குளிரால் இறந்துகொண்டிருக்கின்றனர் என்றுரைத்த லெபனன் காரித்தாஸ் இயக்குனர் பேரருள்திரு Simon Faddoul, இம்மக்களைக் காப்பாற்றுவதற்கு தாராளமனத்துடன் உதவிகள் செய்யப்படுமாறு கேட்டுள்ளார்.
இதற்கிடையே, ஐ.நா. உலக உணவுத் திட்ட நிறுவனம் இவ்வகதிகளுக்கு உணவுப்பொருள்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

ஆதாரம் : ICN

6. நெல்சன் மண்டேலாவைப்போல் மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய விழுமியங்களில் இலங்கை மக்கள் வளர வேண்டும் பலசமயத் தலைவர்கள்

டிச.17,2013. தென்னாப்ரிக்கக் காந்தி என்றழைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்களின் எடுத்தக்காட்டான வாழ்வில் காணப்பட்ட மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய விழுமியங்களில் இலங்கை மக்கள் வளர வேண்டுமென, பலசமயக் கூட்டம் ஒன்றில் கூறப்பட்டது.
மறைந்த நெல்சன் மண்டேலா அவர்களுக்கு, நினைவஞ்சலி கூட்டம் நடத்திய இலங்கையின் கத்தோலிக்க, கிறிஸ்தவ, புத்த, இந்து மதங்களின் பிரதிநிதிகள், மண்டேலா அவர்கள் வாழ்வில் கடைபிடித்த விழுமியங்களைக் கடைபிடிக்குமாறு இலங்கை மக்களைக் கேட்டுக்கொண்டனர்.
மேலும், தென்னாப்ரிக்காவில் இத்திங்களன்று கடைபிடிக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு தினத்தன்று, வெண்கலத்திலான மண்டேலாவின் மிகப் பிரம்மாண்டமான உருவச்சிலை, Pretoria வில் திறந்துவைக்கப்பட்டுள்ளது

ஆதாரம் : AsiaNews

7. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் அதிகரிப்பு, ஐ.நா. எச்சரிக்கை

டிச.17,2013. கடந்த பல ஆண்டுகளில் மனிதர்களுக்குத் தொற்றியுள்ள புதிய நோய்களுள் ஏறக்குறைய 70 விழுக்காடு விலங்குகளிடமிருந்து பரவியுள்ளன என, FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் எச்சரித்துள்ளது.
உயிரினங்களிடமிருந்து மனிதர்களுக்கு வெகு எளிதாக நோய்கள் தொற்றுகின்றன என்று எச்சரித்துள்ள FAO நிறுவனத்தின் உதவிப் பொது இயக்குனர் Ren Wang, வனப்பகுதிகளில் விளைநிலங்களை அமைப்பதும், வீட்டு விலங்குகளின் பெருக்கமும் அதிகரித்து வருவது இதற்குக் காரணங்களாகக் குறிப்பிட்டுள்ளார்.
காடுகளுக்கும் வீட்டு விலங்குகளுக்கும் இடையே அதிகத் தொடர்பு இருப்பதாகவும், மனிதர்களாகிய நாம் முந்தையக் காலங்களைவிட தற்போது விலங்குகளுடன் அதிகத் தொடர்பை வைத்துள்ளோம் எனவும் கூறினார் Ren Wang.
1940களிலிருந்து மனிதருக்குத் தொற்றியுள்ள பெரும்பாலான நோய்கள் காட்டு விலங்குகளிடமிருந்து பரவியுள்ளன எனக் கூறப்படுகின்றது.  

ஆதாரம் : UN

8. எழுத்தறிவின்மை தெற்கு ஆசியாவுக்குப் பெரும் பிரச்சனை

டிச.17,2013. உலகில் எழுத்தறிவற்ற மக்கள்தொகையில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டுள்ள தெற்கு ஆசியாவில், எழுத்தறிவின்மை பெரும் பிரச்சனையாக உள்ளது என, பாகிஸ்தான் மற்றும் நேபாள அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
Rotary South Asia Literacy Summit 2013 என்ற தலைப்பில் புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய பாகிஸ்தான் கல்வி அமைச்சர் Nisar Ahmed Khuhro, எழுத்தறிவின்மை வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருப்பதாகக் கூறினார்.
மேலும், இக்கருத்தரங்கில் பேசிய நேபாள கல்வி அமைச்சர் Madhav Poudel, உலகில் பிற பகுதிகளைவிட தெற்கு ஆசியாவில் எழுத்தறிவின்மை அதிகமாக இருப்பதாகவும், பல நாடுகளில் பாலின இடைவெளி தொடர்ந்து காணப்படுவதாகவும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு முயற்சிகள் அவசியம் எனவும் கூறினார்.
தெற்கு ஆசியாவில் 2017ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்ற புதிய முயற்சி இக்கருத்தரங்கின் இறுதியில் தொடங்கப்பட்டது. 

ஆதாரம் : IANS                          

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...