செய்திகள் - 27.11.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. Rett syndrome நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திருத்தந்தை
2. லெபனனிலுள்ள சிரியா நாட்டுச் சிறார் அகதிகளுக்குத் திருஅவையின் நலவாழ்வுப் பணி
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைத்தூது அறிவுரை ஏடு, திருஅவையின் வருங்காலத்தின் வரைபடம், திருப்பீட அதிகாரிகள்
4. திருஅவை, 116 நாடுகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சேவை செய்து வருகிறது, காரித்தாஸ் தலைவர்
5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள், ஆன்மப் பரிசோதனை செய்ய வைக்கின்றன, நியுயார்க் கர்தினால்
6. லிபியாவில் அமைதி ஏற்படும், ட்ரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி நம்பிக்கை
7. பாகிஸ்தானில் பெண் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் படுகொலை
8. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் கடும் மனித உரிமை மீறல்கள், ஐ.நா. எச்சரிக்கை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. Rett syndrome நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திருத்தந்தை
நவ.27,2013. Rett syndrome என்ற நோயால் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 50 குழந்தைகள், அவர்களின்
பெற்றோர் என 170 பேரை திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் இப்புதன்
பொதுமறைபோதகத்திற்கு முன்னர் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Rett syndrome என்ற உடல் ஆற்றல்கள் மற்றும் மூளை வளர்ச்சிக்குறைவு நோயால் பாதிக்கப்பட்ட இந்த குழந்தைகளைச் சந்தித்த திருத்தந்தை, இக்குழந்தைகளுக்கு தனிப்பட்ட ஆசீரையும், அவர்களின் பெற்றோருக்கு ஊக்க வார்த்தைகளையும் வழங்கினார்.
ஏற்கனவே கடந்த மாதம் 4ம் தேதி அசிசி நகரிலும், இவ்வாண்டு மேமாதம் 31ம் தேதி தான் தங்கியிருக்கும் வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்திலும் Rett syndrome நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைச் சந்தித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1966ம் ஆண்டில்தான் Rett syndrome நோய் குறித்த முழுவிவரங்கள் Andreas Rett என்பவரால் வெளி உலகுக்குத் தெரியவந்தன. இவர் பெயராலேயே அழைக்கப்படும் இந்நோய், பெரும்பாலும் பெண்குழந்தைகளையே, அதுவும் அவைகள் பிறந்த சில மாதங்களுக்குப்பின் தாக்கத் தொடங்குகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. லெபனனிலுள்ள சிரியா நாட்டுச் சிறார் அகதிகளுக்குத் திருஅவையின் நலவாழ்வுப் பணி
நவ.27,2013. போரால் துன்புறும் சிரியா நாட்டு மக்களுக்கு இனம், மதம் என்ற பாகுபாடின்றி உதவுவது, அந்நாட்டில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு நேரிடையான பாதையாக உள்ளது என, திருப்பீட “கோர் ஊனும்”(Cor Unum)பிறரன்பு அவைத் தலைவர் கர்தினால் இராபெர்ட் சாரா கூறினார்.
திருப்பீட கோர் ஊனும் பிறரன்பு அவை, உரோம் பம்பினோ ஜேசு குழந்தைகள் மருத்துவமனை, லெபனன் காரித்தாஸ் ஆகிய மூன்றும் இணைந்து, “லெபனனிலுள்ள சிரியா நாட்டுச் சிறார் அகதிகளுக்கு நலவாழ்வுப் பணி”
என்ற திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இப்புதனன்று திருப்பீட
பத்திரிகை அலுவலகத்தில் இடம்பெற்ற நிருபர் கூட்டத்தில் இவ்வாறு கூறிய
கர்தினால் சாரா, இச்சிறாருக்கு உதவும் இத்திட்டத்துக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள் தூண்டுகோலாய் இருந்தன எனவும் கூறினார்.
கர்தினால் சாரா, பம்பினோ ஜேசு குழந்தைகள் மருத்துவமனை தலைவர் Giuseppe Profiti, இம்மருத்துவமனையின் தோல் பிரிவுத்துறை இயக்குனர் May El Hachem, லெபனன் காரித்தாஸ் தலைவர் அருள்பணி Simon Faddoul ஆகியோர் இந்நிருபர் கூட்டத்தில் பேசினர்.
இத்திட்டத்தின்மூலம், போரினால் துன்புற்றுள்ள சிரியாக் குழந்தைகள் மீண்டும் சிரித்து மகிழவும், தங்கள் வாழ்வில் உடல் மற்றும் ஆன்மீகத் தேவைகளைப் பெறவும் இயலும் என்றும் கர்தினால் சாரா கூறினார்.
ஐ.நா.வின் அகதிகள் அமைப்பின் கணிப்புப்படி, மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக் கடல் பகுதியில் 20 இலட்சத்துக்கு மேற்பட்ட சிரியா அகதிகள் உள்ளனர், இவர்களில் 7இலட்சம் பேர் லெபனனில் உள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைத்தூது அறிவுரை ஏடு, திருஅவையின் வருங்காலத்தின் வரைபடம், திருப்பீட அதிகாரிகள்
நவ.27,2013. தான் எதிர்நோக்கும் சவால்களை ஏற்கும்அதேவேளை, கடவுளின் அன்பும் அவரின் மேலாண்மையுமே மேலோங்கும் என்பதை திருஅவை அறிந்துள்ளது என்பதை Evangelii Gaudium ஏடு வெளிப்படுத்தியுள்ளது என, திருப்பீட அதிகாரிகள் தெரிவித்தனர்.
"Evangelii Gaudium" அதாவது
நற்செய்தியின் மகிழ்ச்சி என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல்
மறைத்தூது அறிவுரை ஏட்டை இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் வெளியிட்டுப்
பேசிய திருப்பீட அதிகாரிகள், இவ்வேடு, விசுவாசம் நிறைந்த நம்பிக்கை வாழ்வுக்கு அழைப்பு விடுக்கின்றது என்று கூறினர்.
இந்நிருபர் கூட்டத்தில் பேசிய, நற்செய்தி அறிவிப்பைப் புதிய முறையில் செய்வதை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா, தற்போதைய சவால்களைப் புறக்கணிக்காமல், உண்மைத்தன்மையின் இறைவாக்கு மற்றும் நேர்மறைக் கண்ணோட்டத்தை மீண்டும் கண்டுணர, திருஅவைக்கு அழைப்பு விடுப்பதாக இவ்வேடு உள்ளது என்று கூறினார்.
திருஅவை
எப்பொழுதும் மறைப்போதகராக இருக்க வேண்டும் என்றோ அல்லது மறையுரைகளை
மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தோ அல்லது திருஅவை முதலில்
ஏழைகளுக்குப் பணியாற்றுதல் பற்றியோ அல்லது திருஅவை எப்பொழுதும் கருவில்
வளரும் குழந்தையின் வாழ்வுக்கு ஆதரவாக இருக்கும் என்பது குறித்தோ
திருத்தந்தை எழுதும்போது, இந்த அனைத்துத் தலைப்புகளும் கடவுளின் கருணைநிறை அன்பில் கவனம் செலுத்துவதாக உள்ளன என்று கூறினார் பேராயர் ஃபிசிக்கெல்லா.
மேலும், இந்நிருபர் கூட்டத்தில் பேசிய திருப்பீட சமூகத்தொடர்புத் துறைத் தலைவர் பேராயர் கிளவ்தியோ சேல்லி, "Evangelii Gaudium" என்ற மறைத்தூது அறிவுரை ஏடு, தனித்துவமிக்க மற்றும் ஆழமான மேய்ப்புப்பணி உணர்வைக் கொண்டுள்ளது என்றுரைத்தார்.
இன்னும், இந்நிருபர் கூட்டத்தில் பேசிய உலக ஆயர்கள் மாமன்றச் செயலர் பேராயர் லொரென்சோ பால்திச்சேரி, நற்செய்தி
அறிவிப்பைப் புதிய முறையில் ஆற்றுவது குறித்து 2012ம் ஆண்டில் நடைபெற்ற
உலக ஆயர்கள் மாமன்றப் பரிந்துரைகளைக் கவனத்தில்கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது சொந்தப் பாணியில் இவ்வேட்டை அமைத்துள்ளார் என்று கூறினார்.
"Evangelii Gaudium" என்ற மறைத்தூது அறிவுரை ஏட்டின் பெரும் பகுதியை, கடந்த ஆகஸ்டில் கோடை விடுமுறையின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தானே
இஸ்பானியத்தில் எழுதினார் என்று திருப்பீடச் செயலர் இயேசு சபை அருள்பணி
பெதரிக்கோ லொம்பார்தி இந்நிருபர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருஅவை, 116 நாடுகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சேவை செய்து வருகிறது, காரித்தாஸ் தலைவர்
நவ.27,2013. எய்ட்ஸ் நோயாளிகளுக்கானத் திருஅவையின் கனிவும் ஒருமைப்பாடும் நிறைந்த சேவையை, அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து ஆற்றி வருகின்றது என, அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் ஆஸ்கார் ரொட்ரிக்கெஸ் மாராதியாகா கூறினார்.
டிசம்பர்
முதல் தேதி கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு
தினத்துக்கென செய்தி வெளியிட்டுள்ள கர்தினால் மாராதியாகா, ஏறக்குறைய 116 நாடுகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் திருஅவை தனது அன்பின் பணியை ஆற்றி வருகின்றது எனக் கூறினார்.
HIV நோய்க் கிருமிகளால் யாரும் புதிதாகப் பாதிக்கப்படக் கூடாது, எய்ட்ஸ் நோயாளிகளே இருக்கக் கூடாது, இந்நோயாளிகளுக்கு
எதிரானப் பாகுபாடுகளே இருக்கக் கூடாது என்ற விருதுவாக்குடன் இந்த 2013ம்
ஆண்டின் அனைத்துலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம்
கடைப்பிடிக்கப்படுவதறுகு ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளதையும் கர்தினாலின்
செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
திருமணத் தம்பதியர் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாக இருப்பது, தனிப்பட்டவர் தனது பாலியல் நடவடிக்கையில் ஒழுக்கமாக இருப்பது, ஒருவர் ஒருவருடனான உறவுகளில் பொறுப்புடன் நடந்துகொள்வது போன்றவை மூலமாக, HIV நோய்க் கிருமிகள் யாரையும் புதிதாகத் தாக்காமல் இருக்கச் செய்யலாம் எனவும் கூறியுள்ளார் கர்தினால் மாராதியாகா.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள், ஆன்மப் பரிசோதனை செய்ய வைக்கின்றன, நியுயார்க் கர்தினால்
நவ.27,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள், மனச்சான்றைப் பரிசோதனை செய்வதாகவும், மனதில் ஆழப்பதித்து தியானிக்கவேண்டியவைகளாகவும் உள்ளன என, அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க் கர்தினால் திமோத்தி டோலன் கருத்து தெரிவித்தார்.
Yonkersலுள்ள புனித வளன் குருத்துவ கல்லூரியில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த கர்தினால் டோலன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்று என்ன போதித்தார் என்ற ஆவலுடன், ஏறக்குறைய ஒவ்வொரு நாள் காலையிலும் தான் கண்விழிப்பதாகத் தெரிவித்தார்.
நம்பிக்கை ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய கர்தினால் டோலன், அண்மைக் காலத்து மூன்று திருத்தந்தையரும், கிறிஸ்துவின் மறையுடலின் ஆன்மா, மனது மற்றும் இதயத்துக்கு எடுத்துக்காட்டுகளாய் இருக்கின்றனர் என்றும் கூறினார்.
ஆதாரம் : CNS
6. லிபியாவில் அமைதி ஏற்படும், ட்ரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி நம்பிக்கை
நவ.27,2013. லிபியாவில் தற்போது நிச்சயமற்றநிலை காணப்படுகின்றபோதிலும், அந்நாட்டில்
அமைதி ஏற்படும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்
லிபியத் தலைநகர் ட்ரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி
இன்னோசென்சோ மார்த்தினெல்லி.
லிபியாவில் அமைதி ஏற்பட வேண்டுமென்று பொதுமக்கள் அழுத்தம் கொடுத்து வருவது, அந்நாட்டில் எந்த நேரத்திலும் அமைதி வெடிக்கலாம் என்று பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார் ஆயர் மார்த்தினெல்லி.
பென்காசி மற்றும் ட்ரிப்போலி
நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பல்வேறு
புரட்சிக்குழுக்கள் அந்நகரங்களைவிட்டு வெளியேற வேண்டுமென்று இம்மாதம் 15ம்
தேதி மக்கள் போராட்டங்களை மேற்கொண்டது பற்றிக் கூறிய ஆயர் மார்த்தினெல்லி, இந்தப் புரட்சிக்குழுக்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு அவ்விடங்களைவிட்டு வெளியேறுவதன்மூலம், பாதுகாப்புப் படையினர் தங்களது நடவடிக்கைகளைச் செயல்படுத்த முடியும் என்றும் கருத்து தெரிவித்தார்.
இந்தப் பொது மக்கள் போராட்டங்களில் 46 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், பென்காசியில் இசுலாமிய புரட்சிப்படைக்கும், இராணுவத்துக்கும் இடையே இத்திங்களன்று இடம்பெற்ற மோதலில் 9 பேர் இறந்தனர் மற்றும் 51 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆதாரம் : Fides
7. பாகிஸ்தானில் பெண் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் படுகொலை
நவ.27,2013. பாகிஸ்தானில் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த காரணத்திற்காக அதிக அளவில் தாய்மார்கள் கொல்லப்பட்டுவரும்வேளை,
கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி முதல் 2013ம் ஆண்டு செப்டம்பர் வரை
இக்காரணத்திற்காக 56 தாய்மார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மனித
உரிமை ஆர்வலர் ஐ.ஏ.ரஹ்மான் இத்திங்களன்று தெரிவித்தார்.
மேலும், பெண்களுக்கு எதிராக அமிலம் வீசிய 90 வழக்குகளும், உயிருடன் எரிக்கப்பட்ட 72 வழக்குகளும், குடும்ப வன்முறையில் 491 வழக்குகளும், பாலியல் வன்செயலில் 344 வழக்குகளும், மற்ற வன்முறைச் சம்பவங்களில் 835 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் ஐ.ஏ.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக மகளிர்க்கெதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு APWA என்ற அனைத்து பாகிஸ்தான் மகளிர் கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய ரஹ்மான், பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த காரணத்திற்காகத் தாய்மார்களைக் கொலைசெய்யும் ஒரு நாடு, நன்னெறிசார்ந்த சமூகம் என அழைக்கப்பட தகுதியற்றது எனவும் குறை கூறினார்.
பாகிஸ்தானில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்குத்தான் முக்கியத்துவம்
அளிக்கப்படுகின்றது.
ஆதாரம் : LifeNews
8. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் கடும் மனித உரிமை மீறல்கள், ஐ.நா. எச்சரிக்கை
நவ.27,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் முடியாட்சிக்குரிய நடவடிக்கைகள் அதிகரித்துவரும்வேளை, அந்நாட்டில்
அமைதியை ஏற்படுத்துவதற்கு ஆப்ரிக்க ஒன்றியம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு
அனைத்துலக சமுதாயம் ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளது ஐ.நா. நிறுவனம்.
மத்திய
ஆப்ரிக்கக் குடியரசில் ஐ.நா.வின் அமைதி காக்கும் படைகள்
அமர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் பற்றியும் பேசிய ஐ.நா. உதவிப்
பொதுச்செயலர் யான் எலயாசன், அந்நாட்டின் அரசுத்தலைவரை, பரட்சிக்குழுக்கள்
ஆட்சியிலிருந்து வெளியேற்றிய கடந்த மார்ச் மாதத்திலிருந்து அந்நாடு கடும்
நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது என்றும் கூறினார்.
கொலைகள், சித்ரவதைகள், பாலியல் வன்செயல்கள், சிறாரைப் படைக்குக் கடத்துவது உட்பட அந்நாடு கடும் மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டு வருவதாகவும் எலயாசன் கூறினார்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் 46 இலட்சம் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடும் உணவு மற்றும் தண்ணீர்ப் பற்றாக்குறை, இன்னும் நலவாழ்வுப் பிரச்சனைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர் என்றும் எலயாசன் கூறினார்.
No comments:
Post a Comment