1. திருத்தந்தை பிரான்சிஸ் - இறைவார்த்தை ஒரு புத்தகத்தில் அடங்கிய எழுத்துக்கள் அல்ல, மாறாக, அது மனு உருவெடுத்த கிறிஸ்து
2. திருப்பீடச் செயலர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் திருத்தந்தையின் நன்றி
3. வத்திகான் நாளிதழ் L’Osservatore Romanoவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு திருத்தந்தை ஆற்றிய திருப்பலி
4. Pacem in Terris சுற்றுமடலிலிருந்து இந்தியா பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது - இந்திய ஆயர் பேரவை
5. கத்தோலிக்க அருள் பணியாளருக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது
6. இயேசு சபையின் புலம் பெயர்ந்தோர் பணிக்குழுவுக்கும், ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பிற்கும் இடையே ஒப்பந்தம்
7. நைஜீரியாவில் Boko Haram வன்முறைக் குழுவின் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஏதுவான சூழல்
8. ஐ.நா. பொதுச்செயலர் - நமது கடல்களில் கலக்கப்படும் அமிலங்களின் அளவு அபாயம் தரும் அளவு உயர்ந்து வருகிறது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - இறைவார்த்தை ஒரு புத்தகத்தில் அடங்கிய எழுத்துக்கள் அல்ல, மாறாக, அது மனு உருவெடுத்த கிறிஸ்து
ஏப்.12,2013. இறைவார்த்தை என்பது ஒரு புத்தகத்தில் அடங்கிய எழுத்துக்கள் அல்ல, மாறாக, அது மனு உருவெடுத்த கிறிஸ்து என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
ஏப்ரல் 8 முதல் 12 முடிய வத்திக்கானில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்குப் பின் பாப்பிறை விவிலியக் கழகத்தைச் சேர்ந்தவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
இறைவார்த்தையை உயிரற்ற எழுத்து வடிவத்தில் காண்பதைவிட, உயிருள்ள கிறிஸ்துவின் வடிவத்திலும், அவர்
நிறுவிய திருஅவை என்ற மக்கள் சமுதாயத்திலும் காண்பது விவிலிய
ஆய்வாளர்களின் கடமை என்பதை திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
தூய ஆவியாரின் தூண்டுதலால் எழுதப்பட்ட விவிலியத்திற்கும், அதன் அடிப்படையில் வளர்ந்துள்ள பாரம்பரியம், இறை சமுதாயம் ஆகிய அனைத்திற்கும் இறைவன் ஒருவரே ஊற்று என்பதை என்றும் மனதில் இருத்தவேண்டும் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இறைவார்த்தையின் சிறந்த ஆசிரியரான கிறிஸ்துவின் ஆசீரும், அந்த
வார்த்தைக்கு தன்னை முழுவதும் அர்ப்பணித்த மரியன்னையின் பரிந்துரையும்
விவிலியக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற
வாழ்த்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருப்பீடச் செயலர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் திருத்தந்தையின் நன்றி
ஏப்.12,2013. திருப்பீடச் செயலரும், அவரது அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரும் எவ்விதப் பலனையும் எதிர்பாராமல், உளமாரச் செய்துவரும் பணிகளைப் பாராட்டுவதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி காலையில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே அவர்களது அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள அனைவரையும் தனிப்பட்ட முறையில் வாழ்த்தி, அவர்களுக்குத் தன் நன்றியைச் செலுத்தியத் திருத்தந்தை, அவர்களுடன் ஒரு மணி நேரம் செலவிட்டார்.
ஏப்ரல் 13, இச்சனிக்கிழமையுடன் தான் தலைமைப் பொறுப்பை ஏற்று ஒரு மாதம் நிறைவடையவிருப்பதால், தன் மனம் நிறைந்த நன்றியை நேரடியாகத் தெரிவிக்க வந்திருப்பதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.
திருத்தந்தையின் எதிர்பாராத வரவால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த திருப்பீடச் செயலர், கர்தினால் தர்சீசியோ பெர்தோனே, கடந்த ஒரு மாதமாக, புனித பேதுருவின் பணிகளில் உருவாகியுள்ள ஆர்வம் தங்களை இன்னும் அதிக ஈடுபாட்டுடன் உழைக்க அழைப்பு விடுக்கிறது என்று கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. வத்திகான் நாளிதழ் L’Osservatore Romanoவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு திருத்தந்தை ஆற்றிய திருப்பலி
ஏப்.12,2013. திறந்த உள்ளத்துடன் இறைவனுக்குச் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடப்பதே நமக்கு உண்மையான சுதந்திரம் வழங்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
கடந்த
ஒருமாத காலமாக திருத்தந்தை பிரான்சிஸ் தான் தங்கியிருக்கும் புனித
மார்த்தா இல்லத்தில் தினமும் காலை 7 மணிக்கு ஆற்றும் திருப்பலியில், வத்திகான் நாளிதழ் L’Osservatore Romanoவில் பணியாற்றும் ஊழியர்கள் இவ்வியாழனன்று கலந்துகொண்டபோது, அவர்களுக்கு வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
கடவுளின் குரலுக்கும், தூய
ஆவியாரின் தூண்டுதல்களுக்கும் எப்போதும் கவனமாய் செவிசாய்ப்பது நமது தேவை
என்பதை திருத்தந்தை தன் குறுகிய மறையுரையில் எடுத்துரைத்தார்.
நமது குறைகள் தவறான வழிகளில் நம்மை நடத்திச் சென்றாலும், இறைவன் என்றும் நம்மைக் கைவிடாமல் தொடர்ந்து வழிநடத்துகிறார் என்ற எண்ணத்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. Pacem in Terris சுற்றுமடலிலிருந்து இந்தியா பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது - இந்திய ஆயர் பேரவை
ஏப்.12,2013.
ஐ.நா.பொது அவையில் முன்வைக்கப்பட்ட ஆயுத வர்த்தகக் கோட்பாட்டை ஏற்காத 24
நாடுகளில் ஒன்றான இந்தியா 50 ஆண்டுகளுக்கு முன் திருஅவையால் வெளியிடப்பட்ட Pacem in Terris, அதாவது, 'உலகில் அமைதி' என்ற சுற்றுமடலிலிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்று இந்திய ஆயர் பேரவையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
1963ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்களால் வெளியிடப்பட்ட 'உலகில் அமைதி' என்ற சுற்று மடலின் 50ம் ஆண்டு நினைவையொட்டி, இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, முன்னேற்றப் பணிக்குழு இவ்விழாயனன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இப்பணிக்குழுவின் தலைவர் ஆயர் Yvon Ambroise, பணிக்குழுவின் உறுப்பினர்களான ஆயர் Mathew Arackal, ஆயர் Gerald Almeida ஆகியோரின் சார்பிலும், செயலர் அருள்தந்தை Charles Irudayam சார்பிலும் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கியூபா ஏவுகணை நெருக்கடி நேரத்தில் அமேரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய இரு வல்லரசுகள் மத்தியில் உருவான இறுக்கமானச் சூழலை மனதில் கொண்டு திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் வெளியிட்ட 'உலகில் அமைதி' என்ற சுற்றுமடலின் நோக்கம் அனைத்து நல் மனதோரையும் அமைதியின் முயற்சியில் ஒருங்கிணைப்பதே என்பதை இவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறது.
2003ம் ஆண்டு இச்சுற்று மடலின் 40ம் ஆண்டு நிறைவுற்றபோது, திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 2ம் ஜான்பால் வெளியிட்ட மடலையும் இந்திய ஆயர் பேரவையின் இவ்வறிக்கை நினைவுபடுத்துகிறது.
பாதுகாப்பு
என்ற பெயரில் வளரும் நாடுகள் ஆயுதங்களுக்குச் செலவிடும் பெரும் தொகையால்
அந்நாடுகளின் உண்மையான வளர்ச்சி பெரிதும் பாதிக்கபப்டுகிறது என்பதையும்
இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.
ஆதாரம் : CBCI
5. கத்தோலிக்க அருள் பணியாளருக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது
ஏப்.12,2013. கத்தோலிக்க அருள் பணியாளர் Emil Kapaun இராணுவ உடையில் இருந்த ஒரு நல்ல மேய்ப்பர் என்று அமெரிக்க அரசுத் தலைவர் Barack Obama கூறினார்.
அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு மத்தியில் குருத்துவப் பணிகளை ஆற்றிய அருள் பணியாளர் Kapaun அவர்களுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தினருக்கு வழங்கப்படும் Medal of Honour என்ற மிக உயரிய விருதை இவ்வியாழனன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் வழங்கியபோது, அரசுத் தலைவர் Obama இவ்வாறு கூறினார்.
1950களில் கொரியாவில் நிகழ்ந்த போரில் மெய்ப்புப் பணிகள் செய்தவர் அருள் பணியாளர் Kapaun. போர்க்களத்தில் பணி செய்தாலும், ஆயுதங்களைத் தொடாமல், ஆன்மீகப் பணிகளை மட்டுமே இவர் ஆற்றிவந்தார்.
1950ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கப் படையினரை சீன, மற்றும் வடகொரிய படைகள் சூழ்ந்தபோது, அவ்விடத்தைவிட்டு அகன்று செல்ல தனக்குக் கிடைத்த வாய்ப்பை ஏற்க மறுத்து, அமெரிக்கப் படை வீரர்களுடன் தங்கி அவர்களுடன் கைதியாகப் பிடிபட்ட அருள் பணியாளர் Kapaun அவர்கள் காட்டிய வீரத்தைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
1916ம் ஆண்டு பிறந்த அருள் பணியாளர் Kapaun, 1951ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி தனது 35வது வயதில் ஒரு போர் கைதியாக மரணமடைந்தார். அவரது எடுத்துக்காட்டான வாழ்வை முன்னிட்டு, அவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தும் முயற்சிகள் 2009ம் ஆண்டு துவக்கப்பட்டுள்ளன.
ஆதாரம் : ICN
6. இயேசு சபையின் புலம் பெயர்ந்தோர் பணிக்குழுவுக்கும், ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பிற்கும் இடையே ஒப்பந்தம்
ஏப்.12,2013. போர், பொருளாதாரம், இயற்கைச்
சீரழிவு ஆகிய பல காரணங்களால் சொந்த நாடுகளிலிருந்து புலம் பெயரும்
கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் மக்களுக்கு கல்வி வழங்கும் ஒரு திட்டத்தில், ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பிற்கும், இயேசு சபையின் புலம் பெயர்ந்தோர் பணிக்குழுவுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புலம்
பெயர்வதால் சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு
கணணி வழியாக தொடர்புவழி கல்வி வழங்கும் திட்டம் இவர்கள் மத்தியில்
எதிர்காலத் தலைவர்களை உருவாக்க உதவும் என்று இயேசு சபை புலம்பெயர்ந்தோர்
பணிக்குழுவின் அகில உலகத் தலைவர் அருள் பணியாளர் Peter Balleis வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
இயேசு சபையின் முன்னாள் உலகத் தலைவர் Pedro Aruppe அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட JRS எனப்படும் இயேசு சபையினரின் புலம் பெயர்ந்தோர் பணிக்குழு, 50 நாடுகளில் 7,00,000க்கும் அதிகமான புலம் பெயர்ந்தோர் மத்தியில் பணி புரிகிறது.
கல்விப் பணிக்கு முக்கியத்துவம் தரும் இயேசு சபையில், புலம் பெயர்ந்தோரிடையிலும் 2,80,000 குழந்தைகளுக்குக் கல்வி வசதிகள் அளித்துவரும் JRSன் பணிகளில் ஒன்றாக 2010ம் ஆண்டு கணணிவழி கல்வி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆப்ரிக்க நாடுகளில் கட்டாயமாகப் புலம் பெயரும் நிலைக்குச் தள்ளப்பட்டுள்ள பல்லாயிரம் பேர், அமெரிக்காவின் Denver நகரில் உள்ள Regis பல்கலைக் கழகத்துடன் கணணிவழிக் கல்வி பெற்று வருகின்றனர் என்று JRS தலைவர் Peter Balleis கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. நைஜீரியாவில் Boko Haram வன்முறைக் குழுவின் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஏதுவான சூழல்
ஏப்.12,2013. Boko Haram என்ற வன்முறைக் குழுவின் உறுப்பினர்களில் பலர் தங்கள் ஆயுதங்களைக் களைந்து, சமுதாயத்தில் இணைவதற்கும், அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதற்கும் ஏதுவான சூழல் நைஜீரியாவில் உருவாகி வருகிறது.
2001ம் ஆண்டு நிகழ்ந்த பொதுத் தேர்தலில் நைஜீரியாவின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத்தவரான Goodluck Jonathan பதவியேற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டில் வன்முறையை வளர்த்து வருவது Boko Haram எனப்படும் இஸ்லாமியக் குழு. இக்குழுவினரின் பெரும்பாலான தாக்குதல்களுக்கு கிறிஸ்தவ ஆலயங்களே இலக்காகி வந்துள்ளன.
2011ம் ஆண்டு நைஜீரியாவின் வடபகுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தாலும், மொத்த வாக்குகளில் Goodluck Jonathan இடம் தோல்வியடைந்த இஸ்லாமியத் தலைவர் Muhammadu Buhari, தற்போதைய சமரச முயற்சிகளை ஆதரித்து வருகிறார்.
Abujaவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நைஜீரிய அரசுடன் இணைந்து Boko Haram குழுவுக்கும் அரசுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்று MISNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆதாரம் : MISNA
8. ஐ.நா. பொதுச்செயலர் - நமது கடல்களில் கலக்கப்படும் அமிலங்களின் அளவு அபாயம் தரும் அளவு உயர்ந்து வருகிறது
ஏப்.12,2013. உலகின் பெரும் கடல்களைக் காப்பதில், நாடுகள் அளவிலும், உலக அளவிலும் உடனடியாகவும், நடைமுறைக்குத் தகுந்த முறையிலும், சரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
'பெரும் கடல்கள் - நமது வருங்காலம்' என்ற தலைப்பில் பாரிஸ் மாநகரில் இவ்வியாழனன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் ஐ.நா. பொதுச் செயலரின் செய்தியை ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலாச்சார நிறுவனமான UNESCOவின் இயக்குனர் Irina Bokova வாசித்தார்.
நமது கடல்களில் கலக்கப்படும் அமிலங்களின் அளவு அபாயம் தரும் அளவு உயர்ந்து வருகிறது என்றும், இதனால் உருவாகும் வெப்ப நிலை உயர்வு இன்னும் பிற விளைவுகளை உருவாக்குகின்றன என்றும் பான் கி மூன் கவலை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஐ.நா.வின் ஆதரவுடன் அட்லாண்டிக், பசிபிக், அன்டார்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் 70,000 மைல்கள் ஆய்வு பயணம் மேற்கொண்ட Tara குழுவின் கண்டுபிடிப்புக்களைக் குறித்து தன் செய்தியில் கூறிய பான் கி மூன், இயற்கை அளித்துள்ள மாபெரும் கொடையான கடல்களைக் காப்பது அனைத்து நாடுகளின் அவசரத் தேவை என்று கூறினார்.
ஆதாரம் : UN
No comments:
Post a Comment