Thursday, 11 April 2013

Catholic news in tamil - 11/04/13


1. வறுமையைப் போக்க திருஅவையின் பல்வேறு அறக்கட்டளைகள் ஆற்றும் பணிகள் பாராட்டுக்குரியவை - திருத்தந்தை

2. திருத்தந்தையுடன் Mozambique நாட்டுப் பிரதமர் சந்திப்பு

3. வாஷிங்டன் நகரில் நடைபெற்ற அகில உலகக் கருத்தரங்கில் கர்தினால் பீட்டர் டர்க்சன்

4. புனித லாரன்ஸ் கால்பந்தாட்டக் குழுவினர் திருத்தந்தையுடன் சந்திப்பு

5. போர்ச் சூழலால், செல்வந்தர், வறியோர் ஆகிய அனைவருமே தற்போது ஒரே நிலையை அடைந்துள்ளனர் - Aleppo ஆயர்

6. கொலம்பியா நாட்டின் தலைநகரில் நடந்த அமைதி ஊர்வலத்தை ஆதரித்து ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டன

7. புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் பாதுகாக்கப்பட்டு வரும் Bom Jesus பசிலிக்காவிற்கு ஆபத்து

8. 'உலகில் மரண தண்டனை குறைகிறது' - Amnesty International

------------------------------------------------------------------------------------------------------
1. வறுமையைப் போக்க திருஅவையின் பல்வேறு அறக்கட்டளைகள் ஆற்றும் பணிகள் பாராட்டுக்குரியவை - திருத்தந்தை

ஏப்.11,2013. இறைமக்களின் தேவைகள் ஒவ்வொரு நாளும் பெருகிவரும் சூழலில், பொருளாதார முறையிலும், ஆன்மீக வழியிலும் எழும் வறுமையைப் போக்க திருஅவையின் பல்வேறு அறக்கட்டளைகள் ஆற்றும் பணிகள் பாராட்டுக்குரியவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
திருத்தந்தையின் அறக்கட்டளை என்ற பொதுவான பெயருக்குக் கீழ் பணியாற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் உறுப்பினர்கள் தற்போது உரோம் நகரில் திருப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இவ்வுறுப்பினர்களில் 120க்கும் அதிகமானோரை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வறக்கட்டளைகள் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.
அருள் பணியாளர்களின் பயிற்சிகளுக்கும், வறியோரின் துயர் துடைப்புப் பணிகளுக்கும் நிதி உதவி செய்துவரும் பல்வேறு அமைப்புக்கள் கடந்த 25 ஆண்டுகளாக ஆற்றிவரும் உதவிகளைத் திருத்தந்தை பாராட்டினார்.
கடவுளின் கருணையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் உழைக்கும் இவ்வறக்கட்டளைகளை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பார் என்று கூறிய திருத்தந்தை, கூடியிருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையுடன் Mozambique நாட்டுப் பிரதமர் சந்திப்பு

ஏப்.11,2013. Mozambique நாட்டுப் பிரதமர் Alberto Vaquina Clementine அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து, தன் நாட்டின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
2011ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி, Mozambique நாட்டுக்கும் வத்திக்கானுக்கும் இடையே உருவான நல்லுறவு மீண்டும் சென்ற ஆண்டு புதுப்பிக்கப்பட்டது என்பது இச்சந்திப்பின்போது நினைவு கூரப்பட்டது.
கத்தோலிக்கத் திருஅவை Mozambique நாட்டின் முன்னேற்றத்திற்கு, சிறப்பாக அந்நாட்டின் கல்வி, நல வாழ்வு ஆகியவற்றில் காட்டும் அக்கறை குறித்து பிரதமர் Clementine தன் பாராட்டைத் தெரிவித்தார். ஆப்ரிக்காவின் தெற்கு பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது பேசப்பட்டது.
திருத்தந்தையைச் சந்தித்தபின், பிரதமர் Clementine, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே அவர்களையும், நாடுகளுடன் உறவு பணியில் ஈடுபடும் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்து உரையாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. வாஷிங்டன் நகரில் நடைபெற்ற அகில உலகக் கருத்தரங்கில் கர்தினால் பீட்டர் டர்க்சன்

ஏப்.11,2013. உலகில் வாழும் வறியோர், மற்றும் உலக படைப்பில் இறைவனின் திட்டங்கள் என்ற பின்னணியில் போர், அமைதி ஆகிய எண்ணங்களைச் சிந்திக்கவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஏப்ரல் 9, 10 ஆகிய இரு நாட்கள் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள அமெரிக்க கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் அமைதியைக் கட்டியெழுப்புதல் என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற ஓர் அகில உலகக் கருத்தரங்கில் இப்புதனன்று பேசிய திருப்பீட நீதி அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் இவ்வாறு கூறினார்.
"Pacem in Terris", அதாவது, 'உலகில் அமைதி' என்ற சுற்றுமடலை திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்கள் 1963ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி வெளியிட்ட நிகழ்வின் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கருத்தரங்கில் கர்தினால் டர்க்சன் கத்தோலிக்கத் திருஅவை உலக அமைதிக்கென மேற்கொண்டு வரும் முயற்சிகளைச் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவும், சோவியத் இரஷ்யாவும் நேரடி மோதலில் ஈடுபடவிருந்த கியூபா நெருக்கடிக்குப் பின் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் விடுத்த இந்தச் சுற்றுமடலிலிருந்து, 'அமைதியின் கருவியாய் என்னை மாற்றும்' என்ற அழகிய செபத்தை உலகிற்கு வழங்கிய புனித பிரான்சிஸ் அவர்களின் பெயரைத் தற்போதையத் திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ளது வரை, அனைத்து முயற்சிகளிலும் உலக அமைதியை நிலைநாட்ட கத்தோலிக்கத் திருஅவை வெகுவாக முயன்று வருகிறது என்று கூறினார் கர்தினால் டர்க்சன்.
வறுமை ஒழிப்பு, உயிர்கள் மீது காட்ட வேண்டிய மரியாதை, நீதியை நிலைநாட்டுதல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே உலக அமைதியை நிலைநாட்ட முடியும் என்று கர்தினால் டர்க்சன் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. புனித லாரன்ஸ் கால்பந்தாட்டக் குழுவினர் திருத்தந்தையுடன் சந்திப்பு

ஏப்.11,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Aires பேராயராகப் பணியாற்றியபோது இரசித்துப் பின்பற்றிய புனித லாரன்ஸ் கால்பந்தாட்டக் குழுவினர் இப்புதன் பொது மறைப்போதகத்தின் இறுதியில் திருத்தந்தையைச் சந்தித்தனர்.
2008ம் ஆண்டு முதல் இந்தக் கால்பந்தாட்டக் குழுவின் 88235N என்ற இரசிகர் எண் பேராயர் கர்தினால் Bergoglio அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது என்றும், இக்குழுவின் இரசிகர்கள் "கழுகுகள்" என்று அழைக்கப்பட்டனர் என்றும் வத்திக்கான் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மறைப்போதகத்தின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், NATO பாதுகாப்புப் பயிற்சிக் கல்லூரியிலிருந்து வந்திருந்த மாணவர்களையும் சந்தித்து, உலக அமைதிக்காக அவர்கள் உழைப்பது அவசியம் என்பதைக் கூறினார்.
தோல் தொடர்பான நோய்களைக் குணமாக்க உரோம் நகரில் இயங்கிவரும்  IDI என்ற ஒரு மருத்துவ நிறுவனம் தற்போது பொருளாதார நெருக்கடிகளையும், உழைப்பாளர்கள் வேலை நிறுத்தத்தையும் சந்தித்து வருவதை உணர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நிறுவனத்தின் உறுப்பினர்களைச் சந்தித்தபோது, அவர்களுக்காக தான் செபிப்பதாகக் கூறினார்.

ஆதாரம் : VIS

5. போர்ச் சூழலால், செல்வந்தர், வறியோர் ஆகிய அனைவருமே தற்போது ஒரே நிலையை அடைந்துள்ளனர் - Aleppo ஆயர்

ஏப்.11,2013. பசியாலும், வறுமையாலும் துன்புறும் மக்கள் ஒவ்வொரு நாளும் சிறிதளவு உணவாகிலும் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் தெருக்களில் சுற்றிவருவது வேதனை தரும் ஒரு காட்சி என்று சிரியா நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
Aleppo நகரில் பணியாற்றும் கல்தேய வழிபாட்டு முறையைச் சேர்ந்த இயேசு சபை ஆயர் Antoine Audo, மத்தியக் கிழக்குப் பகுதியில் செல்வம் மிகுந்த ஒரு நகரமாக Aleppo இருந்தது என்பதை வருத்தத்துடன் நினைவு கூர்ந்தார்.
சிரியா நாட்டின் காரித்தாஸ் பணிகளை ஒருங்கிணைக்கும் ஆயர் Audo, Aleppo நகரின் அனைத்துக் கோவில்களிலும் துயர் துடைப்புப் பணிகள் நடைபெறுகின்றன என்றும், இப்பணிகளுக்குத் தடையாக அப்பகுதியில் தொடரும் போர்ச் சூழல் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
போர்ச் சூழலால், செல்வந்தர், வறியோர் ஆகிய அனைவருமே தற்போது ஒரே நிலையை அடைந்துள்ளனர் என்பதை எடுத்துரைத்த ஆயர் Audo, இறைவனை மட்டுமே நம்பி வாழும் இம்மக்களின் விசுவாசம் ஒரு பாடமாக அமைகிறது என்பதையும் கூறினார்.

ஆதாரம் : Fides

6. கொலம்பியா நாட்டின் தலைநகரில் நடந்த அமைதி ஊர்வலத்தை ஆதரித்து ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டன

ஏப்.11,2013. ஏப்ரல் 9, இச்செவ்வாயன்று கொலம்பியா நாட்டின் தலைநகர் Bogotaவில் 2,00,000க்கும் அதிகமான மக்கள் மேற்கொண்ட அமைதி ஊர்வலத்தை ஆதரித்து அந்நாட்டு ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டன.
கொலம்பிய அரசுக்கும் FARC எனப்படும் புரட்சிக் குழுவுக்கும் இடையே பல்லாண்டுகளாய் நடைபெற்று வரும் வன்முறை மோதல்களால் பல்லாயிரம் அப்பாவி உயிர்கள் பலியாவதைத் தடுக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை பெரிதும் ஆதரித்தது.
எந்த ஒரு குறிப்பிட்டக் குழுவையும் ஆதரித்தோ, எதிர்த்தோ திருஅவை அறிக்கைகள் தர விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அந்நாட்டு ஆயர் பேரவைச் செயலர் ஆயர் Jose Daniel Falla, இருப்பினும், அமைதியை விரும்பி மக்கள் மேற்கொண்டு வரும் எந்த ஒரு முயற்சிக்கும் திருஅவையின் முழு ஆதரவு உண்டு என்பதை வலியுறுத்தினார்.
வன்முறை, ஆள் கடத்தல் என்ற தவறான முறைகளால் நாட்டின் அமைதியையும், வளர்ச்சியையும் பெருமளவு பாதிக்கும் போராட்டக் குழுக்கள் நாட்டின் சமுதாயத்துடன் இணைய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார் ஆயர் Hector Gutierrez Pabon.

ஆதாரம் : CNA

7. புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் பாதுகாக்கப்பட்டு வரும் Bom Jesus பசிலிக்காவிற்கு ஆபத்து

ஏப்.11,2013. புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் பாதுகாக்கப்பட்டு வரும் Bom Jesus பசிலிக்கா, பழமை வாய்ந்த, பாதுகாக்கப்பட வேண்டிய உலகச் சின்னம் என்ற நிலையை இழக்கும் ஆபத்து உள்ளது என்று கோவா மாநில அவை உறுப்பினர் விஜய் சர்தேசாய் கூறினார்.
கத்தோலிக்கத் திருஅவையின் முக்கியமான பசிலிக்கா ஆலயங்களில் ஒன்றான Bom Jesus, 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, பழம்பெரும் சின்னமாக 1980ம் ஆண்டு முதல் இந்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பேராலயத்திற்கு அருகே 100 மீட்டர் தூரத்தில் நான்கு வழி விரைவுச் சாலை ஒன்று அமைக்கும் முயற்சியில் கோவா மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சியை எதிர்த்து பேராலய நிர்வாகமும், இந்திய அரசின் பழமைச் சின்னங்களின் பாதுகாப்பு அமைப்பும் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வந்துள்ளன.
உலகின் பழம்பெரும் சின்னங்கள் எதையும் பாதிக்கும் வகையில் 300 மீட்டர்கள் சுற்றளவுக்கு எவ்வித கட்டுமானங்களும் எழுப்பப்படக் கூடாது என்ற விதிமுறைக்கு எதிராக இந்த நால்வழிச் சாலை அமையப் போகிறது என்று மாநில அவை உறுப்பினர் சர்தேசாய் இச்செவ்வாயன்று மாநில அவையில் தன் எதிர்ப்பை வெளியிட்டார்.

ஆதாரம் : Business Standard

8. 'உலகில் மரண தண்டனை குறைகிறது' - Amnesty International

ஏப்.11,2013. மரண தண்டனை வழங்கப்படும் போக்கு உலக அரசுகள் மத்தியில் பரவலாக குறைந்திருப்பதாக Amnesty International அமைப்பு கூறியுள்ளது.
2010ம் ஆண்டு 67 நாடுகளில் 2024 மரண தண்டனைகளும், 2011ம் ஆண்டு 63 நாடுகளில் 1923 மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன என்று கூறும் இவ்வறிக்கை, 2012ம் ஆண்டு 58 நாடுகளில் 1722 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
இருந்தபோதிலும் பல நாடுகளில் கடந்த ஆண்டில் மரண தண்டனை மீண்டும் நிறைவேற்றப்பட ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறித்து தான் ஏமாற்றம் அடைந்திருப்பதாக Amnesty International பொதுச்செயலர் Salil Shetty கூறினார்.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதல்களில் பிடிபட்ட Ajmal Kasab என்ற இளைஞருக்கு 2012ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2004ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட முதல் மரண தண்டனை இதுவே.
Amnesty International அறிக்கையின்படி, சீனாவில் பல மரண தண்டனைகள் ரகசியமாக நிறைவேற்றப்படுகின்றன என்றும், ஏனைய நாடுகளைவிட அதிகமாக, ஆயிரக்கணக்கில் சீனாவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன என்றும் சொல்லப்படுகிறது.
2012ம் ஆண்டு சீனாவில் 1000க்கும் அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்று கூறும் இவ்வறிக்கையில், ஈரானில் 314, ஈராக்கில் 129, சவூதி அரேபியாவில் 79, அமெரிக்க ஐக்கிய நாட்டில் 43 என்ற எண்ணிக்கைகள் காணப்படுகின்றன.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment