1. திருத்தந்தை பிரான்சிஸ், பான் கி மூன் சந்திப்பு
2. திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரைத் தீர்ப்பிடவோ, புறங்கூறவோ கூடாது
3. திருத்தந்தை பிரான்சிஸ் : பிரிட்டனின் முன்னாள் பிரதமர் தாட்சர் மனித சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு அர்ப்பணித்திருந்தவர்
4. பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் அவர்களின் இறப்பையொட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் இரங்கல்
5. ரியோ நகரின் ஏழைகளின் குடியிருப்புப் பகுதிகளைப் பார்வையிடுமாறு திருத்தந்தைக்கு அழைப்பு
6. எகிப்தியக் கிறிஸ்தவர்கள் அமைதி காக்குமாறு அழைப்பு
7. பான் கி மூன் : வேதிய ஆயுதங்கள் ஐந்தாண்டுகளுக்குள் ஒழிக்கப்பட வேண்டும்
8. உலகில் இராணுவத்துக்கென 17 ஆயிரம் கோடி டாலர் செலவிடப்படுகிறது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ், பான் கி மூன் சந்திப்பு
ஏப்.09,2013. ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் இச்செவ்வாயன்று சந்தித்து, நியுயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும், இச்சந்திப்பின்போது உலகில் இடம்பெறும் சண்டைகள், அதனால் ஏற்பட்டுள்ள அவசர மனிதாபிமான நெருக்கடிகள், குறிப்பாக அமைதி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சிரியா, கொரியத்
தீபகற்பம் மற்றும் ஆப்ரிக்கா குறித்து இவ்விருவரும் உரையாடினர் என்று
திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி
கூறினார்.
உலக அமைதி, அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மனித
சமுதாயத்தின் நல்வாழ்வை ஊக்குவித்தல் ஆகிய ஐ.நா.வின் பணிகளில் திருப்பீடம்
மையமாக இருந்து செயல்பட்டுவருதைத் திருத்தந்தையிடம் தெரிவித்தார்
ஐ.நா.பொதுச் செயலர்.
மேலும், கத்தோலிக்கத் திருஅவை தனது தனித்துவத்துக்கு ஒத்திணங்கிச் செல்லும் வகையில், ஒருங்கிணைந்த மனித மாண்பை ஊக்குவிப்பது உட்பட அது செய்துவரும் பணிகளையும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் நேரடிச் செயலர் பேராயர் Antoine Camilleri ஆகியோரையும் சந்தித்தார் ஐ.நா.பொதுச்செயலர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரைத் தீர்ப்பிடவோ, புறங்கூறவோ கூடாது
ஏப்.09,2013. கிறிஸ்தவ சமூகத்தில் அமைதியைக் கொண்டுவரும் தூயஆவி, அதன் உறுப்பினர்கள் தாழ்ச்சியுள்ளவர்களாக, பிறரைப் பற்றித் தவறாகப் பேசாதவர்களாக இருப்பதற்குக் கற்றுத் தருகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் இச்செவ்வாயன்று கூறினார்.
இச்செவ்வாய்
காலை புனித மார்த்தா இல்லத்தில் திருப்பலியில் பங்கு கொண்ட வத்திக்கான்
நலவாழ்வு அலுவலகத்தினர் மற்றும் வத்திக்கான் நிர்வாகப் பணியில்
இருப்போருக்கு ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
முதல் கிறிஸ்தவர்களைப் புதிய வாழ்வுக்குள் கொண்டுவந்த தூய ஆவியின் வழியாக அவர்கள் ஒரே இதயமும் ஒரே மனமும் கொண்டிருந்தனர், இவர்கள் இக்காலக் கிறிஸ்தவச் சமூகத்துக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றார்கள் என்றுரைத்தார் திருத்தந்தை.
இயேசுவுக்கும் நிக்கதேமுவுக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்தும் விளக்கியத் திருத்தந்தை, மனிதர் தூய ஆவியால் புதிதாகப் பிறக்க முடியும் என்றும், திருமுழுக்கில் பெற்ற புதிய வாழ்வை, தூய ஆவியின் உதவியுடன் நாம் வளர்க்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
பிறரைப்பற்றி குறை பேசும்போது, என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் என்ற திருத்தந்தை, இவை தூயஆவி நம்மில் வருவதை விரும்பாத தீயவனின் சோதனைகள் என்றும் கூறிய அவர், இந்தப் போராட்டங்கள் பங்குகள், குடும்பங்கள், நண்பர்கள் என எல்லா இடங்களிலும் எப்போதும் காணப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : பிரிட்டனின் முன்னாள் பிரதமர் தாட்சர் மனித சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு அர்ப்பணித்திருந்தவர்
ஏப்.09,2013.
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் உயிரிழந்ததையொட்டி தனது
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இத்திங்களன்று அனுப்பிய இரங்கல் செய்தியில், பிரதமர் தாட்சர் குறித்த திருத்தந்தையின் பாராட்டுகளும், அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்கான திருத்தந்தையின் செபமும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாடுகள் மத்தியில் பொதுநலமும், மனித சுதந்திரமும் ஊக்குவிக்கப்படுவதற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவர் பிரதமர் தாட்சர் என்று திருத்தந்தை பாராட்டியுள்ளார்.
இரும்புப்
பெண்மணி என்று அனைத்துலக அளவில் அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மார்கரெட்
தாட்சர் இத்திங்களன்று இலண்டனில் தனது 87வது வயதில் காலமானார். இவர்
பிரிட்டனின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராகப் பணியாற்றியவர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் அவர்களின் இறப்பையொட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் இரங்கல்
ஏப்.09,2013. மேலும், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் அவர்களின் இறப்பையொட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்களும், தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
1979ம்
ஆண்டு முதல் 1990ம் ஆண்டுவரை பிரிட்டனில் பிரதமராகப் பணியாற்றிய தாட்சர்
அவர்களின் ஆன்மா நிறைசாந்தி அடைவதற்குத் தாங்கள் செபிப்பதாகக் கூறியுள்ள
ஆயர்கள், அவரின் குடும்பத்தினருக்கும், அவருக்காக
வருந்துவோருக்கும் தங்களது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர். பல்வேறு
உலகத் தலைவர்களும் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
ஹாங்காங்
சீனாவிடம் ஒப்படைக்கப்படுவது குறித்த அறிக்கையில் 1984ம் ஆண்டில்
கையெழுத்திட்டவர் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர். இவர் பிரதமராக
இருந்த காலத்தில்தான் Falkland தீவுகள் தொடர்பாக அர்ஜென்டினாவுடன் பிரிட்டன் போரில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றது.
ஆதாரம் : CNS
5. ரியோ நகரின் ஏழைகளின் குடியிருப்புப் பகுதிகளைப் பார்வையிடுமாறு திருத்தந்தைக்கு அழைப்பு
ஏப்.09,2013.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் இவ்வாண்டில் நடைபெறவிருக்கும்
அனைத்துலக இளையோர் தின நிகழ்வுகளில் கலந்துகொள்ளச் செல்லும் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் திருப்பயணத்திட்டங்களில் மேலும் சில நிகழ்ச்சிகளைச்
சேர்க்குமாறு பரிந்துரைத்துள்ளார் அந்நகர் பேராயர் Orani Tempesta.
அனைத்துலக இளையோர் தின நிகழ்வுகளுக்குப் பொறுப்பான, திருப்பீட பொதுநிலையினர் அவைக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ள பேராயர் Tempesta, ரியோ டி ஜெனிரோ நகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள “favela” எனப்படும் ஏழைகளின் குடியிருப்புக்களைத் திருத்தந்தை பார்வையிடும் நிகழ்ச்சித் திட்டத்தைச் சேர்க்குமாறு கேட்டுள்ளார்.
அத்துடன், அந்நகரின் புகழ்பெற்ற கிறிஸ்து மீட்பர் திருத்தலம், 17ம் நூற்றாண்டு Penha அன்னைமரியா திருத்தலம், அந்நாட்டின் ஆயர்களுடன் சந்திப்பு ஆகியவற்றையும் நிகழ்ச்சித் திட்டத்தில் சேர்க்குமாறு கேட்டுள்ளார் பேராயர் Tempesta.
ஆதாரம் : CNA
6. எகிப்தியக் கிறிஸ்தவர்கள் அமைதி காக்குமாறு அழைப்பு
ஏப்.09,2013. எகிப்தின் கெய்ரோவில் புனித மாற்கு காப்டிக் ஆர்த்தடாக்ஸ் பேராலயம் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டிருக்கும்வேளை, அந்நாட்டுக்
கிறிஸ்தவர்கள் அமைதி காக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்
அலெக்ஸாண்டிரியாவின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் 2ம் Tawadros.
எகிப்தில்
இனவாதக் கலவரத்தில் கொல்லப்பட்ட நான்கு காப்டிக் கிறிஸ்தவர்களுக்கு
இஞ்ஞாயிறன்று அடக்கச்சடங்கு நடைபெற்றபோது இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 2
கிறிஸ்தவர்கள் இறந்துள்ளனர் மற்றும் 80க்கும் அதிகமானோர்
காயமடைந்துள்ளனர்.
எகிப்தில் பாதுகாப்பையும் தேசிய ஒன்றிப்பையும் காக்கும் நோக்கத்தில் மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுள்ளார் முதுபெரும் தலைவர் 2ம் Tawadros.
இதற்கிடையே, எகிப்திய அரசுத்தலைவர் Mohammed Morsi, நாட்டில் வன்முறையை நிறுத்துவதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளதாக முதுபெரும் தலைவர் Tawadros அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : CNA
7. பான் கி மூன் : வேதிய ஆயுதங்கள் ஐந்தாண்டுகளுக்குள் ஒழிக்கப்பட வேண்டும்
ஏப்.09,2013.
நச்சு வாயு அடைக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும்
சண்டைகள் உலகில் இனிமேல் ஒருபோதும் இடம்பெறக் கூடாது என்று கூறியுள்ள
அதேவேளை, வேதிய
ஆயுதங்கள் உலகிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படுவதற்கு ஐ.நா.வின் 188
உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி
மூன்.
அங்கோலா, வட கொரியா, எகிப்து, இஸ்ரேல், மியான்மார், சொமாலியா, தென் சூடான், சிரியா ஆகிய எட்டு நாடுகள், வேதிய ஆயுதங்கள் ஒழிப்பு ஒப்பந்தத்தில் இன்னும் இணையாமல் இருப்பதைக் குறிப்பிட்ட பான் கி மூன், அந்நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணையுமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்திங்களன்று Hagueல் நடைபெற்ற, வேதிய ஆயுதங்கள் ஒழிப்பு ஒப்பந்தம் குறித்த மூன்றாம் ஆய்வுக் கூட்டத்தில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள ஐ.நா.பொதுச்செயலர், இந்த ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவுக்கு எவ்வகையிலும் நியாயம் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
பேரழிவை
ஏற்படுத்தும் இத்தகைய ஆயுதங்களை இந்த 21ம் நூற்றாண்டில் பயன்படுத்தியதாக
சிரியா நாடு குற்றம் சாட்டப்பட்டுள்ளது எனவும் பான் கி மூன் கூறினார்.
ஆதாரம் : UN
8. உலகில் இராணுவத்துக்கென 17 ஆயிரம் கோடி டாலர் செலவிடப்படுகிறது
ஏப்.09,2013. உலகில் தற்போது 17 ஆயிரம் கோடி டாலர் இராணுவத்துக்கெனச் செலவிடப்பட்டுவரும்வேளை, இதற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையில் இறங்குவதற்குப் பிரித்தானிய அமைதி அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன.
“உலகில் இராணுவத்துக்கானச் செலவு 2013” என்ற அறிக்கை வெளியிடப்படவிருக்கும் இம்மாதம் 15ம் தேதியன்று, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு Pax Christi, தேசிய நீதி மற்றும் அமைதி அமைப்பு, கிறிஸ்தவச் சுற்றுச்சூழல் அமைப்பு, ஆயுத வியாபாரத்துக்கு எதிரான அமைப்பு என சில அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன.
பன்னாட்டு அளவில் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இக்காலத்தில், சுற்றுச்சூழல் சீரழிந்து வரும் இக்காலத்தில், பிரிட்டனில் மட்டும் நான்காயிரம் கோடி டாலரை இராணுவத்துக்கெனச் செலவிடப்பட்டு வருவதாக ICN செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஆதாரம் : ICN
No comments:
Post a Comment