Wednesday, 3 April 2013

Catholic News in TAmil - 03/04/13


1. முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான்பால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள பீடத்திற்கு முன்பாக திருத்தந்தை பிரான்சிஸ்

2. திருத்தந்தை பிரான்சிஸ் - கண்ணீரின் வழியாகக் கடவுளைத் தெளிவாகக் காணமுடியும்

3. முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்களின் செயலராகப் பணியாற்றிய பேராயர் Loris Capovilla அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் தொலைபேசி தொடர்பு

4. தாழ்ச்சி, கருணை ஆகிய நற்பண்புகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு திருத்தந்தையை வழங்கியதற்காக கடவுளுக்கு நன்றி - வியட்நாம் கர்தினால்

5. இலங்கையின் Welikada சிறையில் புனித வார நிகழ்வுகள்

6. திருத்தந்தை பிரான்சிஸ் டோமினிக்கை அரவணைத்து முத்தமிட்டது, கடவுளிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஒரு முத்தம் - மாற்றுத் திறனாளியின் பெற்றோர்

7. அணு ஆயுதங்களை அழிக்க பிரிட்டனில் ஈஸ்டர் போராட்டங்கள்

8. ஆயுத வர்த்தகம் தொடர்பான உலகளாவிய  ஒப்பந்தம் உலக மக்களுக்குக் கிடைத்த வெற்றி - ஐ.நா.பொதுச் செயலர்

------------------------------------------------------------------------------------------------------

1. முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான்பால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள பீடத்திற்கு முன்பாக திருத்தந்தை பிரான்சிஸ்

ஏப்.03,2013. ஏப்ரல் 2ம் தேதி மாலை 7 மணியளவில், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயம் திருப்பயணிகளுக்கு மூடப்பட்டபின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைந்தத் திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான்பால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள பீடத்திற்கு முன்பாக செபத்தில் ஈடுபட்டார்.
2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இறையடி சேர்ந்த முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் மறைந்ததன் எட்டாம் ஆண்டு நினைவையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் மேல்தளத்தில் அமைந்துள்ள புனித செபஸ்டியன் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது கல்லறைக்கு முன் செபத்தில் ஈடுபட்டார்.
இதன்பின்னர், பேராலயத்தின் இன்னும் இரு இடங்களில், திருத்தந்தையர்களான புனித பத்தாம் பயஸ் அவர்களும், முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்களும் வைக்கப்பட்டுள்ள கல்லறைக்களுக்கு முன்பாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபத்தில் ஈடுபட்டார்.
புனித பேதுரு பசிலிக்காவின் அடித்தளத்தில் ஈரடுக்குகளுக்குக் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் புனித பேதுருவின் கல்லறையையும், அதற்கு அடுத்தபடி மேல்தளத்தில் அமைந்துள்ள பல திருத்தந்தையரின் கல்லறைகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று மாலையில் தரிசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் - கண்ணீரின் வழியாகக் கடவுளைத் தெளிவாகக் காணமுடியும்

ஏப்.03,2013. நமது கண்ணீர் என்ற கண்ணாடியின் வழியாக இயேசுவை நாம் தெளிவாகக் காணமுடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
"நான் ஆண்டவரைக் கண்டேன்" என்று மகதலா மரியா சொன்ன வார்த்தைகளை மையப்படுத்தி இச்செவ்வாய் காலைத் திருப்பலியை புனித மார்த்தா இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
சமுதாயத்தால் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பெண்ணாக, பாவத்தில் வாழ்ந்த மகதலா மரியா, இயேசுவைக் கல்லறையில் காணாததால் வடித்தத் துயரக் கண்ணீர், இயேசுவை அடையாளம் கண்டு கொண்டதும் ஆனந்த கண்ணீராக மாறியது என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை, கண்ணீருக்கு உள்ள வலிமையை எடுத்துரைத்தார்.
நாம் ஒவ்வொருவரும் துயரிலும், மகிழ்விலும் வடிக்கும் கண்ணீருக்கு மதிப்பு உள்ளது என்றும், பல நேரங்களில் கண்ணீரின் வழியாகக் கடவுளைத் தெளிவாகக் காணமுடியும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் - வத்திக்கான் வானொலி

3. முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்களின் செயலராகப் பணியாற்றிய பேராயர் Loris Capovilla அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் தொலைபேசி தொடர்பு

ஏப்.03,2013. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் தனிப்பட்டச் செயலராகப் பணியாற்றிய பேராயர் Loris Capovilla அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் இத்திங்கள் மாலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.
1963ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி திருத்தந்தை 23ம் ஜான் "Pacem in Terris", அதாவது, 'உலகில் அமைதி' என்ற புகழ்பெற்ற சுற்றுமடலை வெளியிட்டார். அம்மடலின் 50ம் ஆண்டு நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அம்மடலை எழுத திருத்தந்தை 23ம் ஜான் அவர்களுக்குப் பெருமளவு உதவிகள் செய்த அந்நாள செயலரும், தற்போது 98 வயது நிரம்பியவருமான பேராயர் Capovilla அவர்களை வாழ்த்தி, திருத்தந்தை பிரான்சிஸ் தொலைபேசியில் பேசினார்.
இத்தொலைபேசி அழைப்பு தனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்வையும் அளித்தது என்று கூறிய  பேராயர் Capovilla, திருத்தந்தை தன்னைச் சந்திக்க விழைவதாகக் கூறியதால், Bergamoவில் தங்கியிருக்கும் தான் அவரை வத்திகானில் சந்திக்க முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறினார்.
1960களில் அணு ஆயுதங்கள் பெருகி வந்த நேரத்தில் வெளியான "Pacem in Terris" சுற்றுமடல், கத்தோலிக்கத் திருஅவை என்ற வட்டத்தையும் தாண்டி நல் மனதுள்ளவர்கள் அனைவரும் அமைதி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென விடுக்கப்பட்ட ஓர் அழைப்பாக இருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் Vatican Insider

4. தாழ்ச்சி, கருணை ஆகிய நற்பண்புகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு திருத்தந்தையை வழங்கியதற்காக கடவுளுக்கு நன்றி - வியட்நாம் கர்தினால்

ஏப்.03,2013. தாழ்ச்சி, கருணை ஆகிய நற்பண்புகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு திருத்தந்தையை வழங்கியதற்காக கடவுளுக்கு நன்றி என்று வியட்நாம் கர்தினால் Jean-Baptiste Pham Minh Man கூறினார்.
Ho Chi Minh நகரில் உள்ள Notre Dame பேராலயத்தில் உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியை தலைமையேற்று நடத்திய கர்தினால் Pham Minh Man, 28 பேருக்கு திருமுழுக்கு வழங்கினார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
திருப்பலியின் இறுதியில் கூடியிருந்த 2000க்கும் அதிகமான மக்களுக்கு புதியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவம் பதித்த படம் ஒன்றை வழங்கிய கர்தினால் Pham Minh Man, அப்படத்தின் பின்புறம் அச்சடிக்கப்பட்டுள்ள சிறு செபத்தை திருத்தந்தைக்காக செபிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
மத நம்பிக்கையற்ற வழிகளில் வளர்ந்துவரும் உலகில், தாங்கள் இன்னும் அதிக நம்பிக்கையுடன் வாழ புதிய திருத்தந்தையின் வழியாக இறைவன் அழைப்பதைப்போல் உணர்கிறோம் என்று இத்திருப்பலியில் கலந்துகொண்ட பீட்டர் என்ற இளைஞர் ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் - AsiaNews

5. இலங்கையின் Welikada சிறையில் புனித வார நிகழ்வுகள்

ஏப்.03,2013. சிறையில் அடைபட்டிருக்கும்போது எங்கள் வாழ்வை மீண்டும் ஒரு முறை பின்னோக்கிப் பார்க்க இறைவன் வாய்ப்பளிக்கிறார் என்று இலங்கையில் உள்ள ஒரு சிறைக் கைதி கூறினார்.
திருக்குடும்பத் துறவுச் சபையைச் சார்ந்த அருள் சகோதரிகளின் முயற்சிகளால், இலங்கையில் உள்ள Welikada சிறையில் புனித வார நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
புனித வெள்ளியன்று நடைபெற்ற சிலுவைப் பாதையிலும், உயிர்ப்பு ஞாயிறன்று நடைபெற்ற திருப்பலியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கைதிகள் கலந்துகொண்டனர் என்றும் இவர்களில் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளைப் பேசும் கைதிகள் உள்ளனர் என்றும் அருள்தந்தை பிரசன்னா பெர்னாண்டோ ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்பட்ட இச்சடங்குகளின்போது கைதிகள் பக்தியுடன் பங்கேற்றதும், உயிர்ப்பு ஞாயிறு திருப்பலியில் காணிக்கைப் பவனியின்போது கைதிகள் எரியும் மெழுகுகள் ஏந்தி வந்ததும் அர்த்தம் நிறைந்ததாக இருந்தன என்று அருள்தந்தை பெர்னாண்டோ கூறினார்.

ஆதாரம் - AsiaNews

6. திருத்தந்தை பிரான்சிஸ் டோமினிக்கை அரவணைத்து முத்தமிட்டது, கடவுளிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஒரு முத்தம் - மாற்றுத் திறனாளியின் பெற்றோர்

ஏப்.03,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் மகன் டோமினிக்கை அரவணைத்து முத்தமிட்டது, கடவுளிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஒரு முத்தமாகக் கருதுகிறோம் என்று மாற்றுத் திறனாளி ஒருவரின் பெற்றோர் கூறியுள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 31ம் தேதி உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியை புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நிறைவேற்றியபின், மக்கள் மத்தியில் அவர் வாகனத்தில் சென்றபோது, மூளை தொடர்பான நோயினால் உடல் செயலற்று வாழும் Dominic Gondreau என்ற சிறுவனை அணைத்து முத்தமிட்டது உள்ளத்தைத் தொடும் ஒரு காட்சியாக உலகெங்கும் காணப்பட்டது.
சிறுவன் டோமினிக்கின் தந்தை Paul Gondreau அமெரிக்காவில் Rhode Island என்ற மாநிலத்தில் இறையியல் ஆசிரியராகப் பணியாற்றுபவர். தங்கள் மகன் படும் துயரங்கள் வழியாகவும், அவன் காட்டும் அன்பின் வழியாகவும் தாங்கள் அன்பையும் துன்பத்தையும் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டோம் என்று கூறும் பேராசிரியர் பால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் மகனை அணைத்ததன் வழியாக அவரது அன்பு உள்ளத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது என்று கூறினார்.
CNN என்ற ஊடகத்திற்கு சிறுவன் டோமினிக்கின் தாய் கிறிஸ்டினா அளித்த பேட்டியில், 'திருத்தந்தையிடமிருந்து எங்கள் மகன் பெற்ற அரவணைப்பு, கடவுளிடமிருந்து நாங்கள் அனைவருமே பெற்ற ஒரு முத்தம்' என்று குறிப்பிட்டார்.

ஆதாரம் - CNS

7. அணு ஆயுதங்களை அழிக்க பிரிட்டனில் ஈஸ்டர் போராட்டங்கள்

ஏப்.03,2013. உயிர்ப்புத் திருவிழா நாட்களையொட்டி, அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் என்று பிரிட்டனில் வழக்கமாக நடைபெறும் ஈஸ்டர் போராட்டங்கள் Berkshire பகுதியின் Aldermaston நகரில் இத்திங்களன்று நடைபெற்றது.
Pax Christi என்ற கத்தோலிக்க அமைப்பினர் மேற்கொண்ட இப்போராட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர். அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் Trident எனப்படும் நீர்மூழ்கிக் கப்பலுக்குத் தேவையான ஆயுதங்கள் Aldermaston என்ற நகரில் தயாரிக்கப்படுவதால், 'Scarp Trident' என்ற விருதுவாக்குடன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
Trident திட்டங்களுக்காக பிரித்தானிய அரசு ஒதுக்கும் 100 பில்லியன் பவுண்டுகள், அதாவது, ஏறத்தாழ 8,700 கோடி ரூபாய் மக்களின் முன்னேற்றத்திற்குப் பயனுள்ள  வகையில் செலவழிக்க அரசு தீர்மானம் எடுக்கவேண்டும் என்று இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Pax Christi அமைப்பின் உபதலைவர் Bruce Kent, ஏப்ரல் 1ம் தேதி முதல், மே 20ம் தேதி முடிய அணு ஆயுதங்களைத் தடை செய்யவேண்டும் என்ற தலைப்பில் பல்வேறு நகரங்களில் உரையாற்றுகிறார் என்று ICN கத்தோலிக்கச் செய்தி அறிவித்துள்ளது.

ஆதாரம் - ICN

8. ஆயுத வர்த்தகம் தொடர்பான உலகளாவிய  ஒப்பந்தம் உலக மக்களுக்குக் கிடைத்த வெற்றி - ஐ.நா.பொதுச் செயலர்

ஏப்.03,2013. பல ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கும், நாம் கண்ட கனவுகளுக்கும் ஒரு சிகரமாக, உலக மக்களுக்குக் கிடைத்த வெற்றி இது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஆயுத வர்த்தகம் தொடர்பான ஓர் உலகளாவிய  ஒப்பந்தம் உருவாக இச்செவ்வாயன்று பெரும்பான்மை உலக நாடுகள் இசைவு தந்ததையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பான் கி மூன் இவ்வாறு  கூறினார்.
193 நாடுகள் கலந்துகொள்ளும் ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில், அனைத்து நாடுகளின் ஒப்புதலையும் பெற்று ஒரு சட்டமாக உருவாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி, கடந்த வியாழனன்று அனைத்து வாக்குகளையும் பெற முடியாமல் தோல்வியுற்றது.
இந்த ஒப்பந்தம், ஐ.நா.வின் பொது அவையில் இச்செவ்வாயன்று 154 நாடுகளின் ஒப்புதலுடன் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஈரான், சிரியா, வடகொரியா ஆகிய மூன்று நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்த வேளை, 23 நாடுகள் ஓட்டளிக்காமல் இருந்துவிட்டன.
சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்களை வாங்கும் வன்முறை கும்பல்களைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த ஒப்பந்தத்தை, அமெரிக்காவின் துப்பாக்கிக் கழகம் பல வழிகளிலும் தோல்வியுறச் செய்வதற்கு முயன்றது என்பதும் இந்த முயற்சிகளை மீறி, அமெரிக்க ஐக்கிய நாடு இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து நாடுகளின் கையொப்பம் பெறுவதற்கு ஜூன் மாதம் 3ம் தேதி இந்த ஒப்பந்தம் வெளியிடப்படும் என்றும், 50 நாடுகளின் கையொப்பம் பெற்ற நாளிலிருந்து 90 நாட்களில் இந்த ஒப்பந்தம் நடைமுறை சட்டமாகும் என்றும் Reuters செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் UN / Reuters

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...