கடல்குதிரை
கடல்குதிரை
என்பது மிகச் சிறிய மீன் இனத்தை சேர்ந்த உயிரினமாகும். கடல்குதிரையைப்
பொறுத்த வரையில் அதன் முக அமைப்பு மட்டுமே குதிரையின் அமைப்பில்
அமைந்திருக்கின்றதே தவிர மற்ற எவ்வித ஒற்றுமையும் இல்லை. கண்களை
எப்பக்கமும் திருப்பும் ஆற்றலுடைய கடல்குதிரை, பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும். 2.5 செ.மீ முதல் 35 செ.மீ வரை அளவில் 35க்கும்
மேற்பட்ட வகைகள் உலகின் எல்லா கடற் பகுதியிலும் காணப்படுகின்றன. இவை
கடலின் ஆழம் குறைந்த பகுதிகளிலும் கடலின் ஓரப்பகுதியிலும் கடல்
பாசிகளுக்கிடையே வாழ்கின்றன. இவற்றின் முக்கிய உணவு இறால் மற்றும் சிறிய
மீன் வகைகளாகும். இதன் உடலின் மேற்பகுதி கடினமான ஓட்டைப் போன்ற கவச அமைப்பு
கொண்டுள்ளது. இது இவற்றின் முக்கிய பாதுகாப்பு அம்சமாகும். மேலும் இவை
பெற்றுள்ள மற்றுமொரு பாதுகாப்பு அம்சம், சூழலுக்கேற்றார் போல் தங்கள் நிறத்தை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் ஆற்றலாகும். மூன்று நாட்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்லும் வேகம்தான் இதனுடையதாகும்.
உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ளக்கூடியது. பெண் கடல்குதிரைகள் ஒரு நேரத்தில் 200
முட்டைகள் வரை இடக்கூடிய இயல்பைப் பெற்று விளங்குகின்றன. ஆண்
கடல்குதிரைக்கு மட்டும் இருக்கும் பிரத்யேகமாக வயிற்றுப் பகுதியில் அமைந்த
தோல் பையில் பெண் கடல்குதிரைகள் முட்டைகளை இட்டுச் செல்கின்றன. அந்த
முட்டைகள் குஞ்சு பொரிக்கும் தன்மையில்லாத மலட்டு முட்டைகளாகும். அதன்
பிறகு ஆண் கடல்குதிரை அதில் தன் உயிர் அணுவை செலுத்தி அந்த முட்டையை சூல்
கொள்ளச் செய்கின்றது. அதன் பிறகு அதை 40 முதல் 50 நாட்கள் வரை தன் வயிற்றிலேயே வைத்திருந்து பிறகு பெற்றெடுக்கின்றது.
No comments:
Post a Comment