Monday, 27 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 25 பெப்ரவரி 2012

5.     திருப்பீடப் பேச்சாளர் : சொமாலியாவை மீண்டும் கட்டி எழுப்பும் முயற்சியில் அனைவரும்
       பங்கு கொள்ள அழைப்பு

6.    தேவநிந்தனை சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கப் புதிய புத்தகம் உதவும் பாகிஸ்தான் உச்ச
       நீதிமன்ற வழக்கறிஞர்

7.     புதிய நற்செய்திப்பணித் திட்டத்தில் 12 ஐரோப்பிய மறைமாவட்டங்கள்

8.     போர் தொடர்புடைய கடும் பாலியல் வன்முறைக் குற்றவாளிகளில் முதன்முறையாக சிலர்
       தனிப்பட்டுச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர் 

9.     2010ம் ஆண்டில் 11 ஆயிரம் சிறார்ப் படைவீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர்

------------------------------------------------------------------------------------------------------

5. திருப்பீடப் பேச்சாளர் : சொமாலியாவை மீண்டும் கட்டி எழுப்பும் முயற்சியில் அனைவரும் பங்கு கொள்ள அழைப்பு

பிப்.24,2012. கடந்த பல ஆண்டுகளாக, போர், பஞ்சம் மற்றும் வறுமையினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள சொமாலியாவில், ஒப்புரவையும் அமைதியையும் கட்டி எழுப்புவதற்கான முயற்சியில், கிறிஸ்தவ அன்பின் அடிப்படையில், நாம் அனைவரும் பங்கு கொள்வோம் என்று திருப்பீடப் பேச்சாளர் அழைப்பு விடுத்தார்.
சொமாலியாவின் தீவிரவாதம் மற்றும் கடற்கொள்ளைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் இலண்டனில் நடைபெற்ற அனைத்துலகக் கூட்டம் குறித்து Octava Dies என்ற வத்திக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி இவ்வாறு கூறினார்.
1989ம் ஆண்டில் மொகதிஷ்சு ஆயர் கொலம்போ, 1995ம் ஆண்டில் தன்னார்வப் பணியாளரான மருத்துவர் கிராசியெல்லா ஃபூமாகாலி, 2003ம் ஆண்டில் தன்னார்வப் பணியாளரான மருத்துவர் அன்னலீனா தொனெல்லி, 2006ம் ஆண்டில் அருள்சகோதரி லியோனெல்லா ஸ்கோர்பாட்டி ஆகியோர் சொமாலியாவில் கொல்லப்பட்டது குறித்துப் பேசிய அவர், அன்பே அனைத்தையும் வெல்லும் என்று அன்னலீனா கூறியதையும் சுட்டிக் காட்டினார்.
இவ்வன்பின் அடிப்படையில் நாம் அந்நாட்டிற்கு உதவுவோம் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கேட்டுள்ளார்.
சொமாலியாவின் எதிர்காலத் தீர்வு குறித்து இடம் பெற்ற இந்த இலண்டன் கூட்டத்தில் 55 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சொமாலியக் கடல்கொள்ளையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்தியப்பெருங்கடலில், கண்காணிப்புக் கப்பலை, பிரிட்டனும், மற்ற நாடுகளும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

6. தேவநிந்தனை சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கப் புதிய புத்தகம் உதவும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்

பிப்.24,2012. பல்சமய உரையாடலை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் பாகிஸ்தானில் வெளியாகியுள்ள புத்தகம், அந்நாட்டில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிலவும் பதட்டநிலைகள் குறைவதற்கு உதவும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் Abid Hassan Minto கூறினார்.
முஸ்லீம்கள் கேட்கிறார்கள், கிறிஸ்தவர்கள் பதில் சொல்கிறார்கள் என்ற தலைப்பில், ஜெர்மன் நாட்டு இயேசு சபை அருள்தந்தை Christian Troll எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் இவ்வாறு பேசினார் Minto.
பாகிஸ்தானில் தேவநிந்தனை குறித்த குற்றச்சாட்டுக்களையொட்டி, முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பதட்டநிலைகள் நிலவி வருகின்றன. கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Muslim Swalat, Masihi Jwabat என்ற இப்புத்தகமானது 7 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

7. புதிய நற்செய்திப்பணித் திட்டத்தில் 12 ஐரோப்பிய மறைமாவட்டங்கள்

பிப்.24,2012. ஒரு சிறப்பான புதிய நற்செய்திப்பணி திட்டத்தில் 12 ஐரோப்பிய மறைமாவட்டங்கள் இத்தவக்காலத்தில் ஈடுபட்டுள்ளன.
புதிய நற்செய்தி அறிவித்தல் என்ற தலைப்பில், வருகிற அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக இத்திட்டம் அமைந்துள்ளது.
இத்திட்டம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, இங்கிலாந்தின் Liverpool பங்குத்தந்தை பேரருட்திரு Peter Fleetwood, திருஅவைக்கும், நற்செய்திக்கும், இயேசு என்ற மனிதருக்கும், மிகுந்த பிரமாணிக்கத்துடன் இருப்பது குறித்து இத்தவக்காலத்தில் அதிகம் வலியுறுத்தப்படுவதாகக் கூறினார்.
பார்செலோனா, புடாபெஸ்ட், டப்ளின், ஃபிராங்பெர்ட், லிஸ்பன், பாரிஸ், தூரின், வியன்னா, பிரசெல்ஸ், வார்சா, சாக்ரப் ஆகிய ஐரோப்பிய நகரங்களில் Mission Metropolis என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

8. போர் தொடர்புடைய கடும் பாலியல் வன்முறைக் குற்றவாளிகளில் முதன்முறையாக சிலர் தனிப்பட்டுச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர் 

பிப்.24,2012. போர் தொடர்புடைய கடும் பாலியல் வன்முறைக் குற்றங்களைச் செய்தவர்களில், சில இராணுவத்தினர், உப இராணுவத்தினர், இன்னும் பிற ஆயுதம் தாங்கிய குழுக்களைத் தனது சந்தேகப் பட்டியலில் முதன்முறையாகச் சேர்த்துள்ளது .நா. நிறுவனம்.
போர் தொடர்புடைய பாலியல் வன்முறை என்ற தலைப்பில், இவ்வியாழனன்று ஆண்டறிக்கை வெளியிட்ட .நா. நிறுவனம், போர் தொடர்புடைய பாலியல் வன்முறை, ஒரு நாட்டிலோ அல்லது ஒரு கண்டத்திலோ மட்டும் இடம் பெறுவதில்லை, மாறாக, இது உலக அளவில் இடம் பெறும் ஆபத்தான செயல் என்று குறை கூறியுள்ளது.
பெண்கள் வியாபாரம் செய்யும் சந்தைகளிலும், பள்ளிக்குச் செல்லும் சிறாரின் பாதையிலும், அரசியல் கைதிகள் வைக்கப்பட்டுள்ள சிறைகளிலும், போர்கள் நுழைந்து விட்டன எனவும், பாலியல் வன்செயல் நாட்டின் ஒட்டுமொத்த அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது எனவும் .நா. கூறியுள்ளது.
சாட், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, நேபாளம், இலங்கை, கிழக்குத் திமோர், லைபீரியா, சியெரா லியோன், போஸ்னியா-எர்செகொவினா போன்ற நாடுகளில், சண்டை முடிந்த பின்னரும் நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதியைக் கட்டி எழுப்புவதற்கும் பாலியல் வன்முறை எவ்வளவு தூரம் அச்சுறுத்தலாகவும் தடையாகவும் இருக்கின்றது என்பதையும் அவ்வறிக்கை எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிட்டுள்ளது.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் LRA புரட்சிக்குழு, தென் சூடானிலுள்ள ஆயுதம் தாங்கிய உப இராணுவக் குழுக்கள், ஐவரி கோஸ்ட் நாட்டின் முன்னாள் ஆயுதம் தாங்கிய குழுக்கள், காங்கோ சனநாயகக் குடியரசின் ஆயுதம் தாங்கிய குழுக்கள் ஆகியவை அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
தேர்தல்கள், அரசியல் நெருக்கடி, உள்நாட்டுப் பதட்டநிலைகள் போன்ற சமயங்களில், எகிப்து, கினி, கென்யா, சிரியா போன்ற நாடுகளில் பாலியல் வன்முறை பயன்படுத்தப்பட்டதையும் இந்த .நா. அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.
இவ்வறிக்கையை .நா.பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதி Margot Wallström வெளியிட்டார்.

9. 2010ம் ஆண்டில் 11 ஆயிரம் சிறார்ப் படைவீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர்

பிப்.24,2012. உலகில் குறைந்தது 15 நாடுகளில், ஆயுதம் ஏந்திய கும்பல்கள் அல்லது இராணுவத்தினருக்கு ஆயிரக்கணக்கான சிறார் ஆபத்தான வேலை செய்வதற்குத் தினமும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
உளவாளிகள் அல்லது பாலியல் அடிமைகள் போன்ற ஆபத்தான வேலை செய்வதற்கு ஆயிரக்கணக்கான சிறார்க் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று கூறும் அச்செய்தி நிறுவனம், மியான்மார், ஆப்கானிஸ்தான், சாட், சொமாலியா, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, கொலம்பியா உட்பட பல நாடுகளில் சுமார் 14 ஆயிரம் சிறார் வீடுகளிலிருந்து கடத்தப்பட்டு, அவர்கள் தப்பித்துச் செல்லாமல் இருப்பதற்காக நெருப்பால் சுடப்படுகின்றனர் என்றும் கூறியது.
மருந்துகள் மற்றும் பிற அச்சுறுத்தல்களால் இச்சிறார், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கொடுஞ்செயல்களைச் செய்கின்றனர் எனவும் பீதெஸ் அறிவித்தது.
2010ம் ஆண்டில் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறார் படைவீரர்கள் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் சமூகத்தில் இணைக்கப்பட்டனர் என்று .நா. அறிக்கையில் வெளியானதையும் இச்செய்தி நிறுவனம் சுட்டிக் காட்டியது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...