Thursday, 9 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 06 பெப்ரவரி 2012

1. திருத்தந்தை : நோயின் வேதனையைத் தாங்கிக் கொள்ள இறையன்பு உதவுகிறது

2. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் மீண்டும் தெரிவு

3. இந்தியத் திருஅவை, சமுதாய நீதியை வலியுறுத்தும் பணிகளில் ஈடுபட்டிருப்பதால், கத்தோலிக்கத் துறவியர் உயிரிழக்கின்றனர்

4. அன்னை தெரேசாவோ, கிறிஸ்தவ கல்விக் கூடங்களோ என்னை ஒருபோதும் மதம் மாற்ற முயன்றதில்லை - இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர்

5. கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் இத்திங்கள் முதல் வியாழன் வரை நடைபெறும் முக்கியமானதொரு கருத்தரங்கு

6. The Big Bang என்ற கோட்பாடு நமது விசுவாசத்திற்கு எதிரானது அல்ல - வத்திக்கான் விண்வெளி ஆயவாளர்

7. இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 50 கோடி வீடுகள் தேவைப்படும்

8. அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் கொலை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : நோயின் வேதனையைத் தாங்கிக் கொள்ள இறையன்பு உதவுகிறது

பிப்.06,2012. இயேசு கிறிஸ்துவின் அன்பில் நம்பிக்கை வைப்பதன் மூலம், நீண்ட கால நோயின் வேதனைகளைத் தாங்கிக் கொள்ள இயலும் என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தமது வானகத்தந்தையிடமிருந்து வந்த அன்பின் வல்லமையால் இயேசு தீயவனை எதிர்கொண்டது போல, பிணியாளியும், இறையன்பில் தனது இதயத்தைப் பதியச் செய்வதன் மூலம், நோயின் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.
கடும் துன்பங்களை எதிர்கொள்கின்றவர்களுக்கு இறைவன் ஆழ்ந்த அக அமைதியைக் கொடுப்பதால் அவர்கள் இத்துன்பங்களைத் தாங்கிக் கொள்கின்றார்கள் என்று நமக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகம் பனியால் மூடப்பட்டிருந்தாலும், அதையும் பொருட்படுத்தாமல் கடும் குளிரில் இஞ்ஞாயிறு நண்பகலில் அங்கு கூடியிருந்த ஏறக்குறைய பத்தாயிரம் விசுவாசிகளிடம் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை இயேசு குணமாக்கியதையும், பேய்களை ஓட்டியதையும் உள்ளடக்கிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை வைத்துச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, இயேசு தமது பொதுவாழ்வில்,   போதனைகளோடு, பல்வேறு பிணிகளிலிருந்தும் விடுதலை அளிப்பதை தமது முக்கிய நடவடிக்கைகளாகக் கொண்டிருந்தார் என்பதை நான்கு நற்செய்தியாளர்களுமே எவ்வாறு விளக்கியுள்ளனர் என்றும் கூறினார்.
இவ்வுலகிலும், மனிதரிலும் தீமையின் அடையாளமாக நோய் நோக்கப்படும் வேளை, கிறிஸ்துவின் குணப்படுத்தும் செயல்கள்,  இறையாட்சி அண்மையில் உள்ளது என்பதைக் காட்டுகின்றன எனவும், அவரது மரணம் மற்றும் உயிர்ப்பினால் கிடைத்த அவரது வெற்றியின்   முன்சுவையாகவும் அவை இருக்கின்றன எனவும் கூறினார் திருத்தந்தை.
நோய் விரைவில் குணமாகாமல், அதன் வேதனை நீடித்தால் பிணியாளிகள் தனிமைப்படுத்தப்படுவர், அவர்கள், சோர்வுக்கு உள்ளாகி, மனிதத்தையும் இழக்கக்கூடும் என்றுரைத்த திருத்தந்தை, அண்மைப் பத்தாண்டுகளில் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தகுந்த மருந்துகளை வழங்கி வருகிறது என்றும் சுட்டிக் காட்டினார்.
மரணத்தை எதிர்நோக்கும்போதுகூட, மனிதனால் இயலாததை விசுவாசம் இயலக்கூடியதாக ஆக்கும் என்பதற்கு அருளாளர் கியாரா பதானோவின் வாழ்க்கை சான்றாக உள்ளது எனவும் குறிப்பிட்டு, நோயாளிகளுக்கு மனிதருடைய அரவணைப்பு தேவைப்படுகின்றது என்றும் அவர் கூறினார். 
பிப்ரவரி 11ம் தேதியான வருகிற சனிக்கிழமை லூர்து அன்னை  திருவிழா. அன்று, உலக நோயாளர் தினம் கடைபிடிக்கப்படுகின்றது. இயேசு பிணியாளரைக் குணமாக்குகிறார், அவரால் குணமாக்க முடியும் என்பதில் இத்தினத்தில் நம்பிக்கை வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டு மனிதத் துன்பம் எப்பொழுதும் அன்பால் சூழப்பட்டதாக இருக்கட்டும் என்று தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் மீண்டும் தெரிவு

பிப்.06,2012. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக தற்போது பணியாற்றும் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் மீண்டும் அந்தப் பொறுப்பில் நீடிக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் இம்மாதம் முதல் தேதியிலிருந்து நடைபெற்று வரும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 30வது பொதுக் கூட்டத்தில் இத்திங்களன்று இம்முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த ஈராண்டுகளாக இந்திய ஆயர் பேரவையின் தலைவராகப் பணியாற்றும் மும்பைப் பேராயர் கர்தினால் கிரேசியஸ், மேலும் ஈராண்டுகள் இப்பொறுப்பில் நீடிக்கும்படி ஆயர் பேரவை முடிவெடுத்துள்ளது, கர்தினால் அவர்களின் தலைமைத்துவப் பண்புகளுக்கு தரப்பட்டுள்ள ஒரு நம்பிக்கை வாக்கு என்று பேரவையின் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய அருள்தந்தை பாபு ஜோசப் கூறினார்.
சீரோ மலங்கரா ரீதி திருஅவையின் உயர் பேராயர் Moran Mor Baselios Cleemis துணைத்தலைவராகவும், ஆக்ரா பேராயர் Albert D’Souza, தலைமைச் செயலராகவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Thalassery உயர்மறைமாவட்ட சீரோ மலபார் ரீதி பேராயர் Mar George Valiamattom இரண்டாவது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


3. இந்தியத் திருஅவை, சமுதாய நீதியை வலியுறுத்தும் பணிகளில் ஈடுபட்டிருப்பதால், கத்தோலிக்கத் துறவியர் உயிரிழக்கின்றனர்

பிப்.06,2012. துயர்துடைக்கும் பிறரன்புப் பணிகளில் மட்டுமே ஈடுபட்டிருந்த இந்தியத் திருஅவை, தற்போது சமுதாய நீதியை வலியுறுத்தும் பணிகளில் ஈடுபட்டிருப்பதால், கத்தோலிக்கத் துறவியர் உயிரிழக்கும் நிலைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று இந்திய கத்தோலிக்கத் திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.
இம்மாதம் முதல் தேதியிலிருந்து 8ம் தேதி வரை பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்திய  கத்தோலிக்க ஆயர் பேரவையின் 30வது பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கத்தோலிக்கத் துறவியர் அமைப்பின் தலைவர், அருள்சகோதரர் மானி மேக்குன்னெல் தன் உரையில் இவ்வாறு கூறினார்.
வறுமைப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடி வந்த அருள்சகோதரிகள் ராணி மரியா, வல்சா ஜான் ஆகியோர் அநீதியாகக் கொலையுண்டதைப்பற்றிப் பேசிய அருள்சகோதரர் மேக்குன்னெல், இந்தியாவில் பணி புரியும் இருபால் துறவியரைக் குறித்த சில புள்ளிவிவரங்களையும் எடுத்துரைத்தார்.
இந்தியாவில் 1,25,000 துறவியர் பணிபுரிகின்றனர் என்றும், இவர்களில் 27,224 பேர் முழு நேரச் சமுதாயப் பணியிலும், 12,421 பேர் பகுதி நேரப் பணியாளர்களாகவும் உள்ளனர் என்று அண்மைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் பணிபுரியும் துறவியரில் 80 விழுக்காட்டினர் பெண் துறவியர் என்றும், இவர்களில் 90 விழுக்காட்டினர் நலவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.


4. அன்னை தெரேசாவோ, கிறிஸ்தவ கல்விக் கூடங்களோ என்னை ஒருபோதும் மதம் மாற்ற முயன்றதில்லை - இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர்

பிப்.06,2012. அருளாளர் அன்னை தெரேசா பணிவு மிகுந்த சேவையாலும், எடுத்துக்காட்டான வாழ்வாலும் கிறிஸ்துவ மறையை வெளிப்படுத்தினாரே ஒழிய, தன் மறை மற்ற மறைகளைவிட உயர்ந்ததென்று எப்போதும் சொன்னதில்லை என்று இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறினார்.
பெங்களூருவில் தற்போது நடைபெற்றுவரும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 30வது பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நவீன் சாவ்லா, தான் ஒரு கிறிஸ்தவர் அல்லாதவர் என்றாலும், அன்னை தெரேசாவோ அல்லது தான் பயின்ற கிறிஸ்தவ கல்விக் கூடங்களோ தன்னை ஒருபோதும் மதம் மாற்ற முயன்றதில்லை என்பதை வலியுறுத்திக் கூறினார்.
இந்தியாவில் பிறந்த அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை உள்ளதென்பதைச் சுட்டிக் காட்டிப் பேசிய முன்னாள் தேர்தல் ஆணையர், இந்தியச் சட்டங்கள் அனைவரையும் உள்ளடக்கும் ஒரு சிறந்த சட்ட அமைப்பு என்பதையும் எடுத்துரைத்தார்.
இன்றையச் சூழலில் திருஅவை சந்தித்து வரும் பல்வேறு எதிர்ப்புக்களையும் தாண்டி, கத்தோலிக்க கல்வி நிறுவனங்களும் நலவாழ்வு நிறுவனங்களும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற சிறப்பான வேண்டுகோளை சாவ்லா ஆயர்கள் கூட்டத்தில் முன் வைத்தார்.
கத்தோலிக்கத் திருஅவையினர் இந்திய அரசின் பல்வேறு துறைகளுடன் பேச்சு வார்த்தைகள் மேற்கொண்டு தங்களது உரிமைகளையும் கோரிக்கைகளையும் பெறவேண்டும் என்று சாவ்லா வலியுறுத்தினார்.
சமுதாயப் பணிகளில் ஈடுபட்ட அன்னை தெரேசா பல்வேறு ஏளனங்களையும் சந்தித்தார் என்பதை நினைவுபடுத்திய நவீன் சாவ்லா, திரு அவையின் சமூகப் பணியாளர்களும் அன்னையின் வழியைப் பின்பற்றி, தங்கள் நற்செயல்களைத் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


5. கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் இத்திங்கள் முதல் வியாழன் வரை நடைபெறும் முக்கியமானதொரு கருத்தரங்கு

பிப்.06,2012. பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்களைக் குறித்து, ஆசியத் தலத்திருஅவைகளில் புகார்கள் எழும்போது அவற்றை எதிர்கொள்ளும் வழிகள் உரோமையில் ஆரம்பமாகியுள்ள் ஒரு கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என்று இயேசுசபை அருள்தந்தை Hans Zollner கூறினார்.
உரோமையில் இயேசு சபையினர் நடத்தும் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் இத்திங்கள் முதல் வியாழன் வரை 'நலமடைதல் மற்றும் புதிய மாற்றங்கள் நோக்கி', என்ற தலைப்பில் நடைபெறும் திருஅவையின் கருத்தரங்கைக் குறித்து கருத்தரங்கின் அமைப்பாளர்களில் ஒருவரான அருள்தந்தை Zollner இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்கத் திருஅவையின் 110 மறைமாவட்டங்களின் பிரதிநிதிகள், அகில உலக துறவியர் சபைகளின் 30 தலைவர்கள் உட்பட 200க்கும் அதிகமான திருஅவைத் தலைவர்கள் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கிற்கு திருப்பீடத்தின் முழு ஆதரவும் உள்ளது என்று வத்திக்கான் பேச்சாளர் அருள்தந்தை பெதேரிகோ லோம்பார்தி கூறியுள்ளார்.
மணிலா உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Luis Antonio Tagle, 'ஆசியாவில் குருக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றுவார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சட்டரீதியாக மட்டுமல்லாமல், உளநலரீதியாகவும் இந்த வன்முறைகளுக்கு உள்ளானவர்கள் நலம் பெறுவதற்கான வழிமுறைகள் இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


6. The Big Bang என்ற கோட்பாடு நமது விசுவாசத்திற்கு எதிரானது அல்ல - வத்திக்கான் விண்வெளி ஆயவாளர்

பிப்.06,2012. விண்வெளி உருவானதை விளக்க முற்படும் The Big Bang என்ற கோட்பாடு நமது விசுவாசத்திற்கு எதிரானது அல்ல என்று வத்திக்கான் விண்வெளி ஆயவாளர் ஒருவர் கூறினார்.
இத்தாலியில், கலிலேயோவின் பிறப்பிடமான Pisa நகரில் வத்திக்கான் விண்வெளி ஆய்வகம் நடத்தவிருக்கும் ஒரு கண்காட்சியைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வகத்தின் இயக்குனர் இயேசுசபை அருள்தந்தை Jose Gabriel Funes இவ்வாறு கூறினார்.
மற்றொரு உலகத்திலிருந்து கதைகள்: நமக்குள்ளும், வெளியிலும் உள்ள விண்வெளி(“Stories from another world: The Universe within us and outside us”) என்ற தலைப்பில் மார்ச் மாதம் 10ம் தேதி முதல் ஜூலை மாதம் முதல் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, விண்வெளியைக் குறித்து புதிய பாதையைக் காட்டிய கலிலேயோவின் பிறப்பிடத்தில் நடைபெறுவது பொருத்தமானது என்று அருள்தந்தை Funes எடுத்துரைத்தார்.
1400 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்வெளி உருவாகும் வகையில் நடைபெற்ற The Big Bang என்ற செயல்பாடு, கடவுள் இந்த விண்வெளியில் உள்ள அனைத்தையும் படைத்தவர் என்பதை மறுக்கவில்லை என்றும், விவிலியத்தில் கூறப்பட்டுள்ளவைகளுக்கும் அறிவியல் கூறுவதற்கும் முரண்பாடுகள் இல்லை என்றும் அருள்தந்தை Funes செய்தியாளர்களிடம் விளக்கினார்.


7. இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 50 கோடி வீடுகள் தேவைப்படும்

பிப்.06,2012. இந்தியர்களுக்கு, அடுத்த 10 ஆண்டுகளில், 50 கோடி வீடுகள் தேவைப்படும் என இந்தியத் தொழிற்சாலை மற்றும் வர்த்தகக் கழகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பேசிய, இந்திய தொழிற்சாலை மற்றும் வர்த்தகக் கழகக் கூட்டமைப்பின் தலைவர் பிரதீப் பூரி, வரும் 2050ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக உயரும். அப்போது நகர்ப்புறங்களில் மட்டும், 90 கோடி மக்கள் வாழும் நிலை ஏற்படும். இதைக் கணக்கிடும் போது, அடுத்த 10 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் 50 கோடி புதிய வீடுகள் தேவைப்படும் என்று தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போதிய நிதி வசதியில்லாததால் சந்தை, நடைபாதை, விளையாட்டுத்திடல், குடியிருப்பு, பாலம் ஆகியவற்றைப் பராமரிப்பதற்கு முடிவதில்லை. எனவே, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புத்தாக்க அமைப்பு மூலம் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். நகர்ப்புறங்களில் கட்டுமான பணிகளை ஒப்பந்தம் விடும் அரசு, இனி அந்த கட்டுமானங்களைப் பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதீப் பூரி கூறினார்.


8. அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் கொலை

பிப்.06,2012. பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் வழியே நடத்தப்பட்ட தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக இலண்டனிலிருந்து இயங்கும் புலனாய்வு செய்திப் பணியகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
இத்தாக்குதல்களுக்குப் பின்னர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்தவர்கள் மீதும் இரண்டாவது கட்டமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் வான் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை அதிபர் ஒபாமா அண்மையில் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...