Thursday 9 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 07 பெப்ரவரி 2012

1. திருத்தந்தை : தவக்காலத்தில் பிறரின் தேவைகளுக்கு மிகுந்த அக்கறை காட்ட அழைப்பு

2. திருத்தந்தை : குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவது மிகவும் முக்கியம்

3. கர்தினால் Levada : குருக்களின் பாலியல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வழிகளைக் கண்டுபிடிக்க அழைப்பு

4. திருத்தந்தை வருகிற செப்டம்பரில் லெபனனுக்குத் திருப்பயணம்

5. ஹொண்டுராசில் வன்முறை அதிகரிப்பு, அரசுத்தலைவருக்குக்  கர்தினால் எச்சரிக்கை

6. உலக இளையோர் பற்றிய ஐ.நா.ஆய்வறிக்கை

7. கண்ணிவெடிகளை முற்றாக அகற்ற 10 ஆண்டுகள் தேவை

8. மார்ச் 1ல் செயல்பாட்டுக்கு வருகிறது தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்

9. ஆப்ரிக்காவில் இரண்டாயிரம் சமூகங்கள், பெண்களின் பிறப்புறுப்பை முடமாக்கும் நடவடிக்கையைக் கைவிட்டுள்ளன -  ஐ.நா.

-------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : தவக்காலத்தில் பிறரின் தேவைகளுக்கு மிகுந்த அக்கறை காட்ட அழைப்பு

பிப்.07,2012. தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் ஒருவர் ஒருவருக்குப் "பாதுகாவலர்களாக" இருக்குமாறு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இம்மாதம் 22ம் தேதி திருநீற்றுப் புதனன்று ஆரம்பிக்கும் தவக்காலத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் அன்புக்கும் விசுவாச வாழ்வுக்கும் நற்சான்றுகளாய் இருப்பதற்குச் சவால் விடுக்கப்படும் இவ்வுலகில், கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஒரே உடலின் உறுப்பினர்கள் என்ற உணர்வில், பிறரன்பு, சேவை, நற்பணி ஆகியவற்றில் ஒருவர் ஒருவருக்குத் தூண்டுதலாய் இருக்க வேண்டிய உடனடித் தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சகோதரத்துவம் சமூகத்தன்மை கொண்டது என்பதால், இது, பிறரின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதிலும், சகோதரத்துவத் திருத்தத்திற்கு இட்டுச் செல்லும் ஆன்மீக வாழ்க்கை மீது கருத்தாய் இருப்பதிலும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலுள்ள, அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக(எபி.10,24)” என்ற பகுதியைத் தலைப்பாக வைத்து தவக்காலச் செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை, தனியாள் மற்றும் சமூகத்தின் விசுவாசப் பயணத்தில் புதுப்பித்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிறர்மீது கருத்தாய் இருப்பதென்பது, பிறரின் உடல், நன்னெறி மற்றும் ஆன்மீக வாழ்க்கைக்கு நன்மையான அனைத்தையும் செய்வதாகும் என்று கூறியுள்ள திருத்தந்தை, இக்காலத்திய கலாச்சாரம், நன்மை, தீமை இவை பற்றிய உணர்வை இழந்து விட்டது போல் தெரிகிறது, எனினும், நன்மை உலகில் இருக்கிறது, அது தீமையை மேற்கொண்டுவிடும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிறரிடம் பொறுப்புடன் நடந்து கொள்வது என்பது, பிறரின் நன்மையை விரும்பி, அதற்காக உழைப்பது என்ற திருத்தந்தை, தீமையின் முன்னர் நாம் மௌனம் காக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
கிறிஸ்தவ சகோதரத்துவத் திருத்தம், எப்பொழுதும் அன்பையும் இரக்கத்தையும் கொண்டிருக்க வேண்டுமென்றும் கூறியுள்ள திருத்தந்தை, சகோதரத்துவத் திருத்தம் நாம் அனைவரும் சேர்ந்து தூய்மையான வாழ்வு நோக்கிப் பயணம் செய்ய உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தையின் இத்தவக்காலச் செய்தியை, “Cor Unum” என்ற திருப்பீடத்தின் பிறரன்பு அவைத் தலைவர் கர்தினால் Robert Sarah, அவ்வவையின் செயலர் பேருட்திரு Giampietro Dal Toso, நேரடிப் பொதுச்செயலர் பேருட்திரு Segundo Tejado Munoz ஆகியோர் இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் வெளியிட்டனர்.

2. திருத்தந்தை : குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவது மிகவும் முக்கியம்

பிப்.07,2012. குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவது மிகவும் முக்கியம் மற்றும் இச்செயலானது, திருஅவையின் சொந்த புதுப்பித்தல் நடவடிக்கையோடு சேர்ந்து இடம் பெற வேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் 'நலமடைதல் மற்றும் புதிய மாற்றங்கள் நோக்கி' என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
உலகெங்கும் உள்ள பல ஆயர்களும், துறவற சபைகளின் தலைவர்களும் உண்மையான கிறிஸ்துவின் வழியில் சென்று இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சிறார்க்கு உதவுவதற்கு இக்கருத்தரங்கு உதவும் என்ற தனது நம்பிக்கையையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
சின்னஞ்சிறு சகோதரர்க்குச் செய்யும் ஒவ்வொருப் பிறரன்புச் செயலும் தனக்கே செய்வதாகும் என்பதை நம் ஆண்டவர் இயேசு நமக்கு நினைவுபடுத்துகின்றார் என்பதையும் அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளார்.
இவ்வியாழன் வரை நடைபெறும் இந்த நான்கு நாள்   கருத்தரங்கில், நூற்றுக்கும் அதிகமான ஆயர்கள், துறவற சபைகளின் தலைவர்கள், மருத்துவர்கள், இறையிலாளர்கள், மேய்ப்புப்பணியாளர்கள், உளவியல் நிபுணர்கள் என 200க்கும் அதிகமான பிரதிநிதிகள்  கலந்துகொள்கின்றனர்.

3. கர்தினால் Levada : குருக்களின் பாலியல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வழிகளைக் கண்டுபிடிக்க அழைப்பு

பிப்.07,2012. உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் இத்திங்களன்று இக்கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய, திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் William Joseph Levada, குருக்களின் பாலியல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நல்ல வழிகளைக் கண்டுபிடிப்பதற்கு நாம் ஒருவருக்கொருவர் உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
குருக்களின் இத்தகைய தவறான நடவடிக்கைகளிலிருந்து சிறாரைப் பாதுகாக்க வேண்டுமெனவும், குருக்கள் இந்தச் செயல் பற்றி விழிப்புணர்வு பெறுவதற்கும், குருத்துவ வாழ்விலிருந்து இதனை அப்புறப்படுத்தவும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் கர்தினால் Levada வலியுறுத்தினார்.
இன்னும், குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகளுக்குப் பலியான சிறாருக்காகத் திருஅவை மிகவும் வருந்துகிறது என்பதைக் காட்டுவதற்காக மன்னிப்பு வழிபாடு ஒன்றும், திருப்பீட ஆயர் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet தலைமையில் இச்செவ்வாயன்று நடைபெற்றது.
இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றவாளிக் குருக்களைக் கத்தோலிக்க அதிகாரிகள் பாதுகாத்த செயல்களுக்காகவும் இவ்வழிபாட்டில் மன்னிப்பு கேட்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் ஆசியா மற்றும் ஆப்ரிக்காவிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

4. திருத்தந்தை வருகிற செப்டம்பரில் லெபனனுக்குத் திருப்பயணம்   
 
பிப்.07,2012. 2010ம் ஆண்டில் மத்திய கிழக்கு நாடுகளுக்கென வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு ஆயர் மாமன்றத்தின் அப்போஸ்தலிக்க ஏட்டை வருகிற செப்டம்பரில் திருத்தந்தை வழங்குவார் என்று எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal அறிவித்தார்.
வருகிற செப்டம்பரில் திருத்தந்தை லெபனன் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு, அந்த ஆயர் மாமன்றத்தின் தீர்மானங்கள் அடங்கிய ஏட்டை வழங்குவார் என்று எருசலேம் சிமியோன், அன்னா ஆலயத்தில், ஆண்டவர் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாத் திருப்பலியை நிகழ்த்தியபோது கூறினார் முதுபெரும் தலைவர் Fouad Twal.
இந்த அறிவிப்புப் பற்றிக் கருத்து தெரிவித்த திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, இந்நோக்கத்திற்காகத் திருத்தந்தை லெபனன் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்வது பற்றிச் சிந்தித்து வருவதாகக் கூறினார்.

5. ஹொண்டுராசில் வன்முறை அதிகரிப்பு, அரசுத்தலைவருக்குக்  கர்தினால் எச்சரிக்கை

பிப்.07,2012. ஹொண்டுராசில் வன்முறை பரவலாக இடம் பெற்று வருவதை ஏற்றுக் கொண்டு, அந்நாட்டில் வளர்ந்து வரும் வறுமையை அகற்றுவதற்கு அரசுத்தலைவர் Porfirio Lobo ஆவன செய்யுமாறு வலியுறுத்தினார் அந்நாட்டுக் கர்தினால் Oscar Andres Rodriguez.
அதிகரித்து வரும் கடும் வன்முறைகள், வறுமை, வாழ்வை மதிப்பது குறைபடுதல், குடும்பங்கள் பிளவுபடுதல், காவல்துறையில் ஊழல், போதைப்பொருள் வியாபாரம், சமயம் சார்ந்த குழப்பம், கட்டுப்பாடற்ற குடியேற்றம் ஆகியவற்றால், நமது தாயகம் மிகவும் வேதனையுடன் இரத்தம் சிந்தி வருகின்றது என்றும் கர்தினால் கூறினார்.
பயம், அழுகை, உறக்கமின்மை, பெருங்கவலை அகிய இவற்றோடு வாழ்ந்து கொண்டிருக்க முடியாது, மாறாக, தீமையை நன்மையால் வெல்லுமாறும் அவர் அரசுத்தலைவரைக் கேட்டுக் கொண்டார்.
ஹொண்டுராஸ் நாட்டின் பாதுகாவலியாகிய Suyapa அன்னைமரியா திருவுருவம் கண்டெடுக்கப்பட்டதன் 265ம் ஆண்டு விழாவைக் கொண்டாடிய நிகழ்வில் இவ்வாறு கூறினார் கர்தினால் Andres Rodriguez. இவ்விழாவில் அரசுத்தலைவர் Lobo உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
2010ம் ஆண்டில் லோபோ அரசுத்தலைவர் பதவிக்கு வந்த பின்னர் 17க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராசில் 2011ம் ஆண்டில் 6,700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

6. உலக இளையோர் பற்றிய ஐ.நா.ஆய்வறிக்கை

பிப்.07,2012. வேலைவாய்ப்பின்மை, போதுமான கல்வி வசதியின்மை, அரசு முதலீடுகள் பற்றாக்குறை, பாதுகாப்பற்ற வேலையிடங்கள் போன்றவை, இளையோரை அதிகம் பாதித்து வருவதாக ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
15க்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளையோரிடம் ஒரு மாத காலமாக இணையதளம் வழியாக ஆய்வு நடத்திய, DESA  என்ற ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை, இவ்வறிக்கையை இத்திங்களன்று வெளியிட்டது.
2009ம் ஆண்டில் உலகில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர், ஏறக்குறைய 7 கோடியே 58 இலட்சம் இளையோர் வேலையின்றி இருந்தனர் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

7. கண்ணிவெடிகளை முற்றாக அகற்ற 10 ஆண்டுகள் தேவை

பிப்.07,2012. இலங்கையின் வடக்கே போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றி முடிப்பதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் எடுக்கும் என ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித்திட்ட நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கை, தேசிய கண்ணிவெடிகளுக்கான நடவடிக்கை மையத்தின் தகவல்களின்படி வடக்கில் இன்னும் 126 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியிருக்கின்றது.
கண்ணிவெடிகள் முழுவதுமாக அகற்றப்படாத காரணத்தினால் வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் 6,700 பேர், தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் இன்னும் தங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
2009 ம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி முதல், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 554 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பதாக ஐநாவின் மனிதாபிமானப் பணிகளுக்கான இணைப்பு அலுவலகத்தின் அறிக்கையொன்று கூறுகின்றது.
கண்ணிவெடி விபத்துக்களில் கடந்த 2010ம் ஆண்டு 47 பேர் பாதிக்கப்பட்டிருந்த அதேவேளை, அவ்வெண்ணிக்கை, கடந்த வருடம் 24 ஆகக் குறைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

8. மார்ச் 1ல் செயல்பாட்டுக்கு வருகிறது தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்

பிப்.07,2012. இந்தியாவில், தேசியப் பயங்கரவாத தடுப்பு மையத்தை, மார்ச் 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967ன் கீழ், எந்த நபரையும் கைது செய்யவும், எந்த ஓர் இடத்திலும் சோதனை நடத்தவும், தேசியப் பயங்கரவாத தடுப்பு மையத்தை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்கு மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக் குழு, மூன்று வாரங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மார்ச் 1ம் தேதி முதல், தேசியப் பயங்கரவாத தடுப்பு மையம் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த அமைப்பில், உளவுத் தகவல்கள் சேகரிப்பு, உளவுத் தகவல்களை ஆய்வு செய்தல், நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என, மூன்று பிரிவுகள் இருக்கும்.
தேசியப் புலனாய்வு நிறுவனத்திற்குப்பின், மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்படும் இரண்டாவது அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

9. ஆப்ரிக்காவில் இரண்டாயிரம் சமூகங்கள், பெண்களின் பிறப்புறுப்பை முடமாக்கும் நடவடிக்கையைக் கைவிட்டுள்ளன -  ஐ.நா.

பிப்.07,2012. ஆப்ரிக்காவில் கடந்த ஆண்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் சமூகங்கள், பெண்குழந்தைகளின் பிறப்புறுப்பை முடமாக்கும் நடவடிக்கையைக் கைவிட்டன என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஐ.நா.வின் மக்கள்தொகை நிதி அமைப்பு வெளியிட்ட இவ்வறிக்கையில், ஆப்ரிக்காவில் இடம் பெறும் இந்நடவடிக்கை, எல்லா இடங்களிலும் முற்றாக நிறுத்தப்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையைக் கைவிடும் சமூகங்களின் எண்ணிக்கை அண்மை சில ஆண்டுகளில் 8,000த்துக்கு அதிகமாகியுள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
13 கோடி முதல் 14 கோடி வரையிலான சிறுமிகளும் பெண்களும் இதுவரை இச்செயலுக்கு உள்ளாகியுள்ளனர். இப்பழக்கம் பெரும்பாலும் ஆப்ரிக்காவில் இடம் பெறுகின்றது. சில ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இப்பழக்கம் நடைபெறுகின்றது என்று ஊடகங்கள் கூறுகின்றன.
தினமும் 8,000 சிறுமிகள் என ஒவ்வோர் ஆண்டும் சுமார் 30 இலட்சம் சிறுமிகளும் பெண்களும் பிறப்புறுப்பு முடமாக்கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என ஐ.நா. கூறியது.


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...