Friday, 24 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 20 பெப்ரவரி 2012

 
1. திருத்தந்தை : திருஅவையில் உள்ள ஒவ்வொன்றும் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது

2. புதிய கர்தினால்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தார் பாப்பிறை

3. இந்தியாவில் மத தீவிரவாதிகளின் போக்கு குறித்து கர்தினால் ஆலஞ்சேரி கவலை

4. அயர்லாந்தில் குருக்களின் தவறான செயல்களுக்காக திருத்தந்தை ஆழ்ந்த வருந்தமடைந்தார் - வத்திக்கான் அதிகாரி

5. ஆஸ்திரேலிய‌ குருவுக்கு பாகிஸ்தான் அர‌சின் மிக‌ உய‌ரிய‌ விருது

6. கோவாவில் வழக்கமாக நடைபெறும் 'கார்னிவல்' கேளிக்கை விழாக்கள் இரத்து

7. மேற்கு வங்க அரசின் நெல் கொள்முதல் கொள்கைகளால் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக இயேசு சபை மையம் கவலை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : திருஅவையில் உள்ள ஒவ்வொன்றும் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது

பிப்.20,2012. தனக்காக அல்ல, மாறாக, மக்களை இயேசுவிடம் கொண்டு வரும் நோக்கத்திற்காகவே கத்தோலிக்கத் திருஅவை இருந்து வருகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இஞ்ஞாயிறன்று 22 புதிய கர்தினால்களுடன் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, தான் யாரிடமிருந்து வந்ததோ மற்றும் யாரால் வழிநடத்தப்படுகிறதோ அவர், தன்வழியாக ஒளிரச் செய்வதற்காகவே திருஅவை இவ்வுலகில் செயல்படுகின்றது என்றும் கூறினார்.
புனித பேதுருவின் தலைமைப்பீடம் என்ற பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்திய திருத்தந்தை, வத்திக்கான் பசிலிக்காவில் எல்லாரையும் கவர்கின்ற 17ம் நூற்றாண்டு பெர்னினியின் புனித பேதுருவின் தலைமைப்பீட உருவச் சிலை நோக்கியும் தனது சிந்தனைகளைத் திருப்பினார்.
இந்த உருவச்சிலை, திருஅவையின் சாராம்சத்தையும், திருஅவையில் திருத்தந்தையின் படிப்பினைகளின் காணக்கூடிய வெளிப்பாட்டையும் குறித்து நிற்கின்றது என்றும் அவர் கூறினார்.
பேதுருவின் பாறை, ஆளைச் சார்ந்தது அல்ல, ஆனால் இயேசுவால் அதனிடம் ஒப்படைக்கப்பட்ட அலுவலைச் சார்ந்தது என்ற திருத்தந்தை, திருவருட்சாதனங்கள், திருவழிபாடு, நற்செய்தி அறிவிப்பு, பிறரன்பு என திருஅவையில் உள்ள ஒவ்வொன்றும் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறினார்.
கிறிஸ்துவின் மந்தையை விசுவாசத்திலும் பிறரன்பிலும் ஒன்றிணைப்பதற்கான பேதுரு மற்றும் அவரின் வழிவருபவரின் சிறப்புப்பணியின் அடையாளமாகவும் புனித பேதுருவின் தலைமைப்பீடம் இருக்கின்றது என்றும் திருத்தந்தை இப்பெருவிழாத் திருப்பலியில் கூறினார்.
திருப்பலியின் இறுதியில் மக்களோடு இணைந்து மூவேளை செபத்தைச் செபித்த திருத்தந்தை அவர்களுக்கு வழங்கிய உரையில், புதிய கர்தினால்களுக்குத் தன் சிறப்பான வாழ்த்துக்களையும் வெளியிட்டார்.


2. புதிய கர்தினால்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தார் பாப்பிறை

பிப்.20,2012. மூர்க்கத்தனங்களும் முரண்பாடுகளும் நிறைந்து காணப்படும் மனித குல விவகாரங்களில் கிறிஸ்துவின் ஒளியையும் நம்பிக்கையையும் கொணரும் திருச்சபை என்றும் உயிர்துடிப்புடன் கூடிய பிரசன்னத்தைக் கொண்டுள்ளது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த சனிக்கிழமையன்று திருச்சபையில் புதிதாக கர்தினால்களாக உயர்த்தப்பட்ட 22 பேரையும் இத்திங்களன்று அவர்களின் உறவினர்களுடன் திருப்பீடத்தில் சந்தித்து வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை, திருச்சபையில் ஒன்றித்திருந்து அதன் மீட்புச் செய்தியை அறிவித்து, உண்மை மதிப்பீடுகளைப் பலப்படுத்தி, உண்மையில் நிலைத்திருந்து, அனைத்து நிகழ்வுகளிலும் அமைதியுடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். ஒன்றிப்பு என்பது திருச்சபையில் இறைவனின் கொடை, அதன் உதவியுடன் ஒவ்வொருவரும் வளரமுடியும் என மேலும் கூறினார் பாப்பிறை.
புதிய கர்தினால்களின் உறவினர்களும் நண்பர்களும், கர்தினால்களோடும் ஒருவர் ஒருவரோடும் விசுவாசத்திலும் பிறரன்பிலும் ஒன்றித்திருந்து துணிவுள்ள இறைசாட்சிகளாக விளங்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.


3. இந்தியாவில் மத தீவிரவாதிகளின் போக்கு குறித்து கர்தினால் ஆலஞ்சேரி கவலை

பிப்.20,2012. இந்தியாவில் தலத்திருஅவையின் வளர்ச்சியை ஓர் அச்சுறுத்தலாகக் காணும் தீவிரவாதக் குழுக்கள், அரசுக்குத் தவறானத் தகவல்களைத் தந்து கத்தோலிக்கர்களின் உரிமைகளைப் பறிக்க முயன்றுவருவதாகக் குற்றஞ்சாட்டினார் புதிய கர்தினால் ஜார்ஜ் ஆலங்சேரி.
கடந்த சனியன்று திருத்தந்தையால் கரிதினால்களாக உயர்த்தப்பட்ட 22 பேரில் ஒருவரான சீரோ மலபார் ரீதி திரு அவைத்தலைவர் கர்தினால் ஆலஞ்சேரி, இந்திய மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதாகவே இருப்பினும் அவர்களின் ஆழமான விசுவாசமும் ஒன்றிப்பும் அகில உலக திருஅவைக்கு ஓர் உறுதியானச் செய்தியை வழங்க முடியும் என்றார்.
பலம் மிக்க பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்திய கத்தோலிக்கர்கள், தங்கள் விசுவாசத்தைக் காப்பாற்ற எந்த விலையைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்றார் கர்தினால் ஆலங்சேரி. இந்தியாவில் மதத் தீவிரவாதம் மிகச்சிறிய அளவிலான மக்களாலேயே கைக்கொள்ளப்படுகிறது என்று கூறிய கர்தினால், மக்களின் வாக்குகளைப் பெற விரும்பும் சில அரசியல்வாதிகள் இந்த மதத்தீவிரவாதிகளுடன் கைக்கோர்ப்பது குறித்த கவலையையும் தெரிவித்தார்.
பெரும்பான்மை இந்துக்கள் மதசகிப்புத்தன்மையுடையவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் ஏனைய மதத்தவருடன் அவர்கள் அமைதியிலும் இணக்க வாழ்விலும் இணைந்து செயலாற்றி வருகின்றார்கள் என்ற பாராட்டையும் வெளியிட்டார் கர்தினால்.
இந்து மதத்திலிருந்து தலித் மக்கள் கிறிஸ்தவத்தில் நுழையும்போது அவர்களின் சலுகைகள் நிறுத்தப்படுவது குறித்த கவலையையும் வெளியிட்டார் கர்தினால் ஆலஞ்சேரி.


4. அயர்லாந்தில் குருக்களின் தவறான செயல்களுக்காக திருத்தந்தை ஆழ்ந்த வருந்தமடைந்தார் - வத்திக்கான் அதிகாரி

பிப்.20,2012. அயர்லாந்தில் குருக்களுக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுகள் கத்தோலிக்க விசுவாசிகளை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியது என்பதை திருத்தந்தை நன்கு உணர்ந்து, குருக்களின் தவறான செயல்களுக்காக அவரும் ஆழ்ந்த வருந்தமடைந்தார் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
அயர்லாந்து நாட்டிற்கு திருப்பீடத் தூதராக அண்மையில் நியமனம் பெற்ற பேராயர் Charles Brown, இஞ்ஞாயிறன்று இப்பொறுப்பை ஏற்கும் வேளையில், Dublin பேராலயத்தில் ஆற்றிய திருப்பலியில் இவ்வாறு கூறினார்.
திருஅவையில் குருக்களின் தவறான செயல்பாடுகள் வெளிவந்த காலத்திலிருந்தே திருத்தந்தை இந்தப் பிரச்சனைக்கு தகுந்த வகையில் தீர்வு காண வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதைக் கூறிய திருப்பீடத் தூதர், திருஅவையின் இந்த முறைகேட்டைச் சரிசெய்வதற்கு திருத்தந்தை முழு முயற்சிகள் எடுத்து வருகிறார் என்பதையும் அயர்லாந்து மக்களுக்கு எடுத்துரைத்தார்.
அகில உலக திருநற்கருணை விழாவை எதிர்நோக்கியிருக்கும் அயர்லாந்தில், இந்த சிறப்பான ஆண்டில் தான் போறுப்பேற்றிருப்பதைக் குறித்து தன் மகிழ்வையும் தெரிவித்தார் திருப்பீடத் தூதர் பேராயர் Charles Brown.


5. ஆஸ்திரேலிய‌ குருவுக்கு பாகிஸ்தான் அர‌சின் மிக‌ உய‌ரிய‌ விருது

பிப்.20,2012. வெளிநாட்டவர்க்கான மிக உயரிய விருதான Sitara-e-Quaid-e-Azam விருதை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கத்தோலிக்க குரு Robert McCulloch என்பவருக்கு வழங்கியுள்ளது பாகிஸ்தான் அரசு.
கொலம்பன் மறைபோதகச் சபையைச் சேர்ந்த இக்குரு, நல ஆதரவு, கல்வி மற்றும் மதங்களிடையேயான உறவு ஆகிய துறைகளில் ஆற்றிய பணிகளுக்கென இவ்விருது வழங்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
2010ம் ஆண்டு டிசம்பர் வரை தொடர்ந்து 30 ஆண்டுகள் பாகிஸ்தானில் மருத்துவ, கல்வி மற்றும்  பிறரன்புப் பணிகளையும் திறம்பட ஆற்றியுள்ள குரு McCulloch, தற்போது உரோம் நகரில் உள்ள கொலம்பன் தலைமையகத்தில் பொருளாளராகச் செயலாற்றி வருகிறார்.


6. கோவாவில் வழக்கமாக நடைபெறும் 'கார்னிவல்' கேளிக்கை விழாக்கள் இரத்து

பிப்.20,2012. தவக்காலம் துவங்குவதற்கு முன், கோவாவில் வழக்கமாக நடைபெறும் 'கார்னிவல்' கேளிக்கை விழாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கோவாவில் இச்சனிக்கிழமை நடைபெற்ற ஒரு பேருந்து விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் இறந்தனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கோவா பேராயர் Felipe Neri Ferrao தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தை அடுத்து, இஞ்ஞாயிறு முதல் மூன்று நாட்கள் நடைபெறவிருந்த கார்னிவல்கொண்டாட்டங்களைக் கோவா முதலமைச்சர் திகம்பர் காமத் இரத்து செய்துள்ளார்.
விபத்தில் இறந்த நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் கத்தோலிக்கர்கள். புனித தாமஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இம்மூன்று குழந்தைகளின் அடக்கச் சடங்கு இத்திங்களன்று நிறைவேறியது.


7. மேற்கு வங்க அரசின் நெல் கொள்முதல் கொள்கைகளால் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக இயேசு சபை மையம் கவலை

பிப்.20,2012. மேற்கு வங்க அரசின் நெல் கொள்முதல் கொள்கைகளால் அம்மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகக் கவலையை வெளியிட்டுள்ளது இயேசு சபையினரின் உதயானி என்ற சமூக மையம்.
உணவுக்கான உரிமை என்ற சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இவ்வமைப்பின் இயக்குனர் இயேசு சபை குரு இருதய ஜோதி உரைக்கையில், அரசு நேரடியாக விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்யாமல் இடைத்தரகர்கள் மூலம் இதை மேற்கொள்வதால், குறைந்த விலையில் நெல்லை விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவதுடன், தங்கள் நெல்லை சொந்த செலவிலேயே அரவை நிலையங்களுக்கு எடுத்துச் சென்று இடைத்தரகர்களிடம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது என்றார்.
இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டியிருப்பதால், மேலும் கடன் சுமையுடனேயே விவசாயிகள் வாழவேண்டியிருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு அவர்களிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய மேற்கு வங்க அரசு முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் இயேசு சபை குரு இருதய ஜோதி.
கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மேற்கு வங்கத்தில் 32 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...