Friday, 24 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 18 பெப்ரவரி 2012

1. புதிய கர்தினால்கள், அன்புடனும் ஆர்வத்துடனும், ஞானத்துடனும், மறைசாட்சிகளுக்குரிய துணிவுடனும் திருஅவைக்குப் பணிபுரியுமாறு திருத்தந்தை அழைப்பு

2. திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 213

3.   22 புதிய கர்தினால்கள்

4. வருகிற அக்டோபர் 21ல் ஏழு அருளாளர்களுக்குப் புனிதர் பட்டம்

5. கொடைகளை இறைவனிடமிருந்து இலவசமாகப் பெற்றதை ஏற்று அவற்றைப் பிறரன்பிலும் சேவையிலும் வெளிப்படுத்த வேண்டும் - புதிய ஹாங்காங் கர்தினால்

6. கலவரம் மிகுந்த சிரியாவில், நலிந்தவர்கள் அடிப்படைத் தேவைகளின்றி துன்புறுகின்றனர் - அருள்தந்தை Pizzaballa

7. பொது இடங்களில் சிகரெட்டுக்குத் தடை: வீட்டுக்குள் புகைப் பிடிப்பது அதிகரிப்பு

8. குறைந்து வரும் மார்பகப் புற்று நோய்


-------------------------------------------------------------------------------------------

1. புதிய கர்தினால்கள், அன்புடனும் ஆர்வத்துடனும், ஞானத்துடனும், மறைசாட்சிகளுக்குரிய துணிவுடனும் திருஅவைக்குப் பணிபுரியுமாறு திருத்தந்தை அழைப்பு

பிப்.18,2012. அன்புடனும் ஆர்வத்துடனும், வெளிப்படையாகவும் ஆசிரியர்களின் ஞானத்துடனும், மேய்ப்பர்களின் சக்தி மற்றும் பலத்துடனும், மறைசாட்சிகளுக்குரிய பற்றுறுதி மற்றும் துணிவுடனும் புதிய கர்தினால்கள் திருஅவைக்குப் பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஒன்றிப்பின் காணக்கூடிய அடித்தளமாகிய பேதுருவில் வெளிப்படும் திருஅவையின் சிறந்த பணியாளர்களாக இருக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
கிறிஸ்து, சிலுவையில் தம்மையே முழுவதும் கொடையாக அளித்தது, புதிய கர்தினால்களின் வாழ்வுக்கு அடித்தளமாகவும், பிறரன்பில் விசுவாசத்துடன் செயல்படக்கூடிய தூண்டுதலையும் வலிமையையும் கொடுப்பதாகவும் இருக்கட்டும் எனவும் அவர் கூறினார்.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் 22 புதிய கர்தினால்களுக்கு சிவப்புத் தொப்பியும், மோதிரமும் வழங்கி, அவர்களுக்குரிய ஆலயத்தையும் குறித்த திருவழிபாட்டை இச்சனிக்கிழமை நிகழ்த்திய திருத்தந்தை, அத்திருவழிபாட்டில் புதிய கர்தினால்களுக்கு ஆற்றிய பேருரையில் இவ்வாறு கூறினார்.
அடக்கி ஆள்தலும் சேவையும், தன்னலக்கோட்பாடும் பிறர்க்கென வாழும் தகைமையும், பொருள்களைக் கொண்டிருத்தலும் கொடையும், சுயநலமும் கைம்மாறு கருதாத தன்மையும், ஆகிய இவைகள் ஒவ்வொரு காலத்திலும் இடத்திலும் ஒன்றுக்கொன்று, மிகவும் முரணாக அமைகின்றன என்றும் உரைத்தார் திருத்தந்தை.
ஆயினும், இயேசு காட்டிய வழி, பிறருக்குத் தொண்டு செய்யவும், பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமானது(மாற்.10,45), என்றுரைத்த திருத்தந்தை, புதிய கர்தினால்களும் இயேசுவின் இவ்வழியில் நடக்கத் தூண்டப்படுகிறார்கள் என்று கூறினார்.
எவ்வளவுக்குப் பணியாளராய் இருக்க முடியுமோ அவ்வளவுக்கே அதிகாரமும் மகிமையும் வந்தடைகின்றது என்றும், மனித குலத்திற்கு முழுவதும் விசுவாசமாய் இருப்பதிலும், மனித குலத்தின்மீது முழுவதும் பொறுப்புடன் நடந்து கொள்வதிலும் இயேசுவின் சேவை உண்மைவடிவம் பெற்றது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
கிறிஸ்துவின் நற்செய்தியினால் எப்பொழுதும் வழிநடத்தப்பட்டவர்களாய், எல்லாக் காலத்திலும் கிறிஸ்துவுக்குப் பிரமாணிக்கமுள்ளவர்களாக வாழக் கர்தினால்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள், அவர்களுக்காகச் செபிக்குமாறு விசுவாசிகளைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்து கொண்ட இவ்வழிபாட்டில், புதிய கர்தினால்களுக்குரிய சிவப்புத் தொப்பி, மோதிரம், அவர்களுக்குரிய ஆலயம் ஆகியவற்றின் அர்த்தங்களையும் விளக்கினார்.
உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் (மத்.16,18) என்று இயேசு புனித பேதுருவிடம் சொன்ன திருச்சொற்களுடன் இப்பேருரையைத் தொடங்கிய திருத்தந்தை, இச்சொற்கள், இன்றைய நிகழ்ச்சியின் திருஅவைப் பண்பை விளக்குகின்றன என்றும் கூறினார்.
கேரளாவின் சீரோ-மலபார் ரீதித் திருஅவையின் தலைவரான பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி, ஹாங்காங் ஆயர் John Tong Hon உட்பட 22 பேர் இச்சனிக்கிழமையன்று புதிய கர்தினால்களாக உயர்த்தப்பட்டனர்.
இஞ்ஞாயிறன்று இப்புதிய கர்தினால்களுடன் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இப்புதிய கர்தினால்களுள் 2 பேர் ஆசியர்கள். 7 இத்தாலியர் உட்பட 16 பேர் ஐரோப்பியர்கள்.

2. திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 213

பிப்.18,2012. இச்சனிக்கிழமை புதிய கர்தினால்களாக உயர்த்தப்பட்ட 22 பேரையும் சேர்த்து தற்போது திருஅவையில் 213 கர்தினால்கள் உள்ளனர். இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 125. எண்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 88.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது பாப்பிறைப் பணிக்காலத்தில் நான்காவது தடவையாக புதிய கர்தினால்களை அறிவித்துள்ளார்.
இவர் இதுவரை  கர்தினால்களாக உயர்த்தியுள்ளவர்களின் எண்ணிக்கை 84.
தற்போது 71 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கர்தினால்களாக உள்ளனர். ஐரோப்பாவில் 119, வட அமெரிக்காவில் 21 (அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா), இலத்தீன் அமெரிக்கா 32, ஆப்ரிக்கா 17, ஆசியா 20 மற்றும் ஓசியானியா 4.
கர்தினால்கல், கத்தோலிக்கத் திருஅவையின் இளவரசர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

3.  22 புதிய கர்தினால்கள்

பிப்.18,2012. பிப்ரவரி 18ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் புதிய கர்தினால்களாக உயர்த்தப்பட்ட 22 பேர்....
திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் பேராயர்  Fernando Filoni,
வத்திக்கான் பாவமன்னிப்புச்சலுகை நீதிமன்றத் தலைவர் பேராயர் Manuel Monteiro de Castro,
உரோம் மேரி மேஜர் பசிலிக்கா தலைமைக்குரு பேராயர் Santos Abril Y Castellò,
திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோர் அவைத் தலைவர் பேராயர் Antonio Maria Veglio,
வத்திக்கான் நகர நாட்டின் பாப்பிறை அவைத் தலைவரும் வத்திக்கான் நகர நாட்டின் நிர்வாகியுமான பேராயர் Giuseppe Bertelli,
திருப்பீடச் சட்டப்பிரிவு அவைத் தலைவர் பேராயர் Francesco Coccopalmerio,
திருப்பீட துறவறத்தார் பேராயத் தலைவர் பேராயர் JOÃO Braz de Aviz,
எருசலேம் புனிதக் கல்லறை அமைப்புத் தலைவர் பேராயர் Edwin Frederik O'Brien, திருப்பீடச் சொத்து நிர்வாகத்துறைத் தலைவர் பேராயர் Domenico Calcagno,
திருப்பீடப் பொருளாதாரத்துறைத் தலைவர் பேராயர் Giuseppe Versaldi,
இந்தியாவின் சீரோ-மலபார் ரீதி திருஅவையின் தலைவராகிய எர்ணாகுளம் அங்கமலி உயர் பேராயர் George Alencherry,
கனடாவின் டொரோன்ட்டோ பேராயர் Thomas Christopher Collins,
செக் குடியரசின் பிராக் பேராயர் Dominik Duka,
நெதர்லாந்தின் Utrecht பேராயர் Willem Jacobus Eijk,
இத்தாலியின் பிளாரன்ஸ் பேராயர் Giuseppe Betori,
அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க் பேராயர் Timothy Michael Dolan,
ஜெர்மனியின் பெர்லின் பேராயர் Rainer Maria Woelk,
சீன மக்கள் குடியரசின் ஹாங்காங் ஆயர் John Tong Hon
ரொமேனியாவின் Făgăraş மற்றும் Alba Iulia பேராயரான முதுபெரும் தலைவர் Lucian Muresan,
லுவெய்ன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் சமய வரலாற்று முன்னாள் பேராசிரியர் Namur மறைமாவட்டத்தின் அருட்பணி Julien Ries,
பல்வேறு உரோம் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய அகுஸ்தீன் சபை அருள்தந்தை Prospero Grech,
உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் இயேசு சபை அருள்தந்தை Karl Becker

4. வருகிற அக்டோபர் 21ல் ஏழு அருளாளர்களுக்குப் புனிதர் பட்டம்

பிப்.18,2012. 22 புதிய கர்தினால்களுக்கு சிவப்புத் தொப்பியும், மோதிரமும் வழங்கி, அவர்களுக்குரிய ஆலயத்தையும் குறித்த திருவழிபாட்டை நிறைவு செய்த திருத்தந்தை, அதன் பின்னர், ஏழு அருளாளர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான வாக்கெடுப்பு கூட்டத்தையும் புதிய கர்தினால்களுடன் நடத்தினார்.
இதற்கான இரகசிய வாக்கெடுப்பில் இப்புதிய கர்தினால்கள் கலந்து கொண்டனர்.
-இயேசு சபையின் மறைசாட்சி அருள்திரு Giacomo Berthieuபிரான்சில் 1838ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி பிறந்தார். இவர், மடகாஸ்கர் நாட்டின் Ambiatibe ல் 1896ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி கொல்லப்பட்டார்.
-பிலிப்பீன்சில் 1654ம் ஆண்டு பிறந்த பொதுநிலையினரான வேதியர் Pedro Calungsod, Marianne தீவின் Guam ல் 1672ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.
-நாசரேத் திருக்குடும்ப சபை மற்றும் ஆண்டவரின் பணியாளர்கள் சபைகளை ஆரம்பித்த அருட்பணி Giovanni Battista Piamarta, இத்தாலியின் பிரேஷாவில் 1841ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பிறந்தார். இவர் ரேமேதெல்லோவில் 1913ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி இறந்தார்;
-போதிக்கும்பணியின் மறைபோதக சகோதரிகள் சபையை தோற்றுவித்த Maria del Monte Carmelo, இஸ்பெயினின் Vic ல், 1848ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி பிறந்தார். மத்ரித்தில் 1911ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி இறந்தார்;
-நியுயார்க்கின் Syracuse புனித பிரான்சிஸ் மூன்றாம் சபை சகோதரிகள் சபையின் அருட்சகோதரி Maria Anna Cope, ஜெர்மனியின் Heppenheim ல் 1838ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி பிறந்தார். Molokai அன்னை Marianne என்றழைக்கப்படும் இவர், 1918ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி, Molokai ல் இறந்தார்;
-பொதுநிலை விசுவாசியான, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Auriesville ல், 1656ம் ஆண்டு பிறந்த Caterina Tekawitha, கனடாவின் Sault ல்1680ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி இறந்தார்;
- பொதுநிலை விசுவாசியான ஜெர்மனியின் Mindelstetten ல், 1882 ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பிறந்த Anna Schaffer, 1925ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி இறந்தார்.
இவர்கள் எழுவரும் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
இவர்கள் வருகிற அக்டோபர் 21ம் தேதி ஞாயிறன்று புனிதர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று இக்கூட்டத்தின் இறுதியில் அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.  

5. கொடைகளை இறைவனிடமிருந்து இலவசமாகப் பெற்றதை ஏற்று அவற்றைப் பிறரன்பிலும் சேவையிலும் வெளிப்படுத்த வேண்டும் - புதிய ஹாங்காங் கர்தினால்

பிப்.18,2012. இன்றைய சமுதாயத்தில், இளைய சகோதர சகோதரிகளின் பொருளாதாரத் தேவைகளை மட்டுமல்ல, அவர்கள் இறைவனின் குழந்தைகள் என்ற உரிமையையும் சுதந்திரத்தையும் வழங்குவதில் நாம் ஆர்வம் காட்ட வேண்டுமென்று புதிய ஹாங்காங் கர்தினால் John Tong Hon கூறினார்.
இச்சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர் வெளியிட்ட தவக்காலச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
நாம் கொடைகளை இறைவனிடமிருந்து இலவசமாகப் பெற்றதை ஏற்று அவற்றைப் பிறரன்பிலும் சேவையிலும் வழங்க முன்வர வேண்டும் என்றும் புதிய கர்தினால் John Tong Hon கேட்டுக் கொண்டார்.
தான் கர்தினாலாக உயர்த்தப்பட்டிருப்பது, திருத்தந்தை அனைத்துச் சீன மக்கள்மீது கொண்டிருக்கும் அன்பைக் காட்டுகின்றது என்றும் அவர் கூறினார்.

6. கலவரம் மிகுந்த சிரியாவில், நலிந்தவர்கள் அடிப்படைத் தேவைகளின்றி துன்புறுகின்றனர் - அருள்தந்தை Pizzaballa

பிப்.18,2012. எகிப்தில் மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர், சிரியாவில் தற்போது காணப்படும் நிலவரம், மத்திய கிழக்குப் பகுதி மாறி வருவதைக் காட்டுகின்றது என்று, சிரியாவுக்கானப் புனித பூமி பாதுகாவலர் கூறினார்.
சிரியாவில் ஓராண்டுக்கு முன்னர் இத்தகைய நிலைமை நினைத்துப் பார்க்க முடியாதபடி இருந்தது என்றும், அந்நாட்டில் அண்மை மாதங்களாக இடம் பெற்று வரும் வன்முறை உள்நாட்டுப் போர் போன்று தெரிவதாகவும் பிரான்சிஸ்கன் சபை அருள்தந்தை Pierbattista Pizzaballa வின் அறிக்கை கூறுகிறது.
சிரியாவின் Damascus, Aleppo, Lattakiah, Oronte போன்ற பகுதிகளில் பணியாற்றி வரும் பிரான்சிஸ்கன் சபையினரின் மருத்துவப் பராமரிப்பு இல்லங்கள், அகதிகளுக்குப் புகலிடம் வழங்கும் இடங்களாக மாறியுள்ளன என்றும் அக்குரு, பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இதற்கிடையே, ஐ.நா., பொது அவையில், சிரியா அதிபர் Bashar al-Assad  மீதான கண்டனத் தீர்மானத்திற்கு, இந்தியா உட்பட, 137 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இச்சூழலில், சிரியாவின் ஹோம்ஸ் நகரில், சிரியா இராணுவத்தின் கடும் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

7. பொது இடங்களில் சிகரெட்டுக்குத் தடை: வீட்டுக்குள் புகைப் பிடிப்பது அதிகரிப்பு

பிப்.18,2012. புகை, மது போன்றவை கெடுதல் என்று பிரச்சாரம் செய்யப்பட்டாலும், அவைகளின் விற்பனை, எவ்விதக் குறைவும் இல்லாமல் நடைபெறுகின்றது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை இருப்பதால், வீடுகளில் புகைப்பிடிப்பது அதிகரித்திருக்கிறதா என்று சர்வதேச புகையிலைக் கட்டுப்பாடு வாரியம் அண்மையில் ஆய்வு நடத்தியது.
இத்தடைக்கு பிறகு வீட்டில் புகைப் பிடிப்போரின் எண்ணிக்கை அயர்லாந்தில் 25 விழுக்காடும், பிரான்சில் 17 விழுக்காடும், ஜெர்மனியில் 38 விழுக்காடும், நெதர்லாந்தில் 28 விழுக்காடும் அதிகரித்துள்ளன.
இது இங்கிலாந்தில் 22 விழுக்காடாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது குறைவு. பொது இடத்தில் புகைப் பிடிக்க முடியாது என்பதால், வீட்டில் அதிகம் சிகரெட் பிடிக்கின்றனர். இதனால் வீட்டில் இருக்கும் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் ஆகியோர் சிகரெட் புகையை சுவாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

8. குறைந்து வரும் மார்பகப் புற்று நோய்

பிப்.18,2012. பெண்களின் உயிரைக் குடிக்கும் மார்பகப் புற்றுநோய் ஐரோப்பாவில் குறைந்து வருவதாக சுவிஸ் மற்றும் இத்தாலி ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 
கடந்த 20022006ம் ஆண்டில் மார்பகப் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 விழுக்காடாகக் குறைந்திருந்தது. பின்பு இவ்வெண்ணிக்கை 16.7 விழுக்காடாக ஆகியிருந்தது. 2006க்கும்2012 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒன்பது விழுக்காடாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
வடக்கு ஐரோப்பிய நாடுகளில்தான், அதிகமான எண்ணிக்கையில் அதாவது 38 விழுக்காட்டுப் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறந்தனர். அதுவும் இளம் பெண்களிடையே இம்மரணம் ஏற்பட்டதாக லுசோன் பல்கலைக்கழகத்தின் சமூகம் மற்றும் தடுப்பு மருந்துக்கான மையமும், இத்தாலியின் மிலான் நகரில் உள்ள மாரியோ நெக்ரி மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...