Monday, 27 February 2012

1.     திருத்தந்தை : பிறரன்புப் பணி, நற்செய்திப்பணியின் புதிய வடிவம்

2.    திருத்தந்தை, Tonga மன்னர் சந்திப்பு

3.     குழந்தைப்பேறின்மைக் குறைபாட்டை அறநெறி வழிகளில் தீர்க்கும் முறைகள் குறித்த  
       வத்திக்கான் கருத்தரங்கு

4.    கருத்தடை குறித்த ஒபாமாவின் நடவடிக்கை, சமய சுதந்திரத்தின் மீதான வரலாற்றுத்
       தாக்குதலின் தொடக்கம்கர்தினால் டோலன்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : பிறரன்புப் பணி, நற்செய்திப்பணியின் புதிய வடிவம்

பிப்.24,2012. தற்போதைய கலாச்சாரம், நன்மை தீமை குறித்த உணர்வை இழந்திருந்தாலும், தீமையை நன்மையால் வெல்ல முடியும் என்பதை கிறிஸ்தவர்கள் தங்களது முழு சக்தியுடன் வலியுறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
தேவையில் இருப்போரின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே நாம் அடுத்தவரிடம் பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்றும் திருத்தந்தை கூறினார்.
இதன் மூலம், பிறரின் துன்பங்களைக் கண்டு ஒதுங்கும் நமது கடின இதயத்தையும் நம்மால் மாற்ற முடியும் என்றும் கூறிய திருத்தந்தை, நமது இதயங்களைக் கிறிஸ்துவின் இதயத்தோடு ஒத்திணங்கிச் செல்வதாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Circolo San Pietro என்றழைக்கப்படும் உரோம் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் 35 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த போது இவ்வாறு உரைத்த திருத்தந்தை, பிறரன்புப் பணியானது, இயேசுவின் போதனையின் ஒளியில், நற்செய்திப்பணியின் புதிய வடிவமாக இருக்கின்றது என்றும் கூறினார்.
இவ்வமைப்பினர், ஆண்டுதோறும் புனித பேதுருவின் தலைமைப்பீட விழாவையொட்டி தன்னைச் சந்தித்து, தனது பிறரன்புப் பணிகளுக்கென நன்கொடைகளை வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, இந்நன்கொடையானது, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து உதவி கேட்பவர்க்குப் பயன்படுத்தப்படுகின்றது என்றும் கூறினார்.
கர்தினால் Iacobini யின் வழிகாட்டுதலில், உரோம் செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளையோரால் 1869ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது Circolo San Pietro என்ற பிறரன்பு அமைப்பு. திருத்தந்தையர் வரலாற்றின் கடினமான நேரங்களில் அவர் மீதான தங்களது விசுவாசத்திற்குச் சான்று பகரவும், குருக்களுக்கு எதிரான போக்கிலிருந்து திருத்தந்தையைப் பாதுகாக்கவுமே இவ்வமைப்பு உருவானது. செபம், செயல், தியாகம்என்ற விருதுவாக்கைக் கொண்ட இவ்வமைப்பு, உரோம் நகரின் பல்வேறு இடங்களில் ஏழைகளுக்கு உணவும் மற்ற உதவிகளையும் செய்து வருகின்றது.

2. திருத்தந்தை, Tonga மன்னர் சந்திப்பு

பிப்.24,2012. தென் பசிபிக் பெருங்கடல் பகுதி நாடான Tonga மன்னர் ஐநதாம் Siaosi Tupou வை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் மன்னர் ஐநதாம் Siaosi Tupou.
Tonga வின் சமூக, பொருளாதார நிலவரம், அந்நாட்டின் சமூகத்திற்குக் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றி வரும் பணிகள், சர்வதேச நிலவரம் போன்றவை இச்சந்திப்பில் இடம் பெற்றன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
தென் பசிபிக் பெருங்கடல் பகுதியிலுள்ள Tonga நாடு, 176 தீவுகளை உள்ளடக்கியதாகும். 7 இலட்சத்துக்கு மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட இத்தீவுக் கூட்டங்களில் 52ல், மக்கள் யாரும் வாழவில்லை. 1773ம் ஆண்டில் நாடுகாண் கடல்பயணி James Cook, Tonga சென்ற போது அவருக்குக் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து அந்நாடு நட்புத் தீவுகள் எனவும் அழைக்கப்படுகின்றது.

3. குழந்தைப்பேறின்மைக் குறைபாட்டை அறநெறி வழிகளில் தீர்க்கும் முறைகள் குறித்த வத்திக்கான் கருத்தரங்கு

பிப்.24,2012. குழந்தைப்பேறின்மைக் குறைபாட்டை, செயற்கை முறையில் தீர்ப்பது குறித்த நடவடிக்கைகள் பல சமயங்களில் தேவையற்றதாகவும், ஒழுக்கநெறிக்குப் புறம்பானதாகவும் இருக்கின்றது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
குழந்தைப்பேறின்மைக் குறைபாட்டை அறநெறி வழிகளில் தீர்க்கும் முறைகள் குறித்து, திருப்பீட வாழ்வுக் கழகம் வத்திக்கானில் நடத்தி வரும் கருத்தரங்கு குறித்து பேட்டியளித்த அக்கழக அதிகாரி அருட்பணி Renzo Pegoraro இவ்வாறு தெரிவித்தார்.
நவீனத் தொழில்நுட்பப் பரிசோதனைக்கூடங்களில் கருவை வளரச் செய்வதில் பெரும் ஆபத்து இருக்கின்றது என்றும் அக்குரு கூறினார்.
வளர்ந்த நாடுகளில் 15 விழுக்காட்டுத் தம்பதியரும், வளரும் நாடுகளில் 30 விழுக்காட்டுத் தம்பதியரும் குழந்தைப் பேறின்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அருட்பணி Pegoraro தெரிவித்தார்.
இவ்வியாழனன்று தொடங்கிய திருப்பீட வாழ்வுக் கழகத்தின் 18 வது பொதுக் கூட்டம், இச்சனிக்கிழமை திருத்தந்தையைச் சந்திப்பதோடு நிறைவடையும். பிரேசில், எகிப்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து 16 வல்லுனர்கள் இக்கூட்டத்தில் உரையாற்றுகின்றனர்.

4. கருத்தடை குறித்த ஒபாமாவின் நடவடிக்கை, சமய சுதந்திரத்தின் மீதான வரலாற்றுத் தாக்குதலின் தொடக்கம்கர்தினால் டோலன்

பிப்.24,2012. கருத்தடை செய்வதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பராக் ஒபாமா வழங்கியுள்ள காப்பீட்டுச் சலுகைத் திட்டம், சமய சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் வரலாற்றுத் தாக்குதலின் தொடக்கமாக இருக்கின்றது என்று கர்தினால் திமோத்தி டோலன் கூறியுள்ளார்.
தங்களது சமயக் கோட்பாட்டை மீறாமல் இருந்தால், கத்தோலிக்கர்கள் அரசின் காப்பீட்டுத் திட்டத்தை இழக்க வேண்டியிருக்கும் என்று அரசு சொன்னால், இது எங்கே போய் முடியும்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் கர்தினால் டோலன்.
ஒபாமாவின் இந்நடவடிக்கை குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கேட்டுள்ள கர்தினால் டோலன், கருத்தடை குறித்த அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பற்றிய ஆணை, அரசியல் அமைப்பின் வரையறைகளை மீறுவதாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒபாமாவின் இந்நடவடிக்கை, அவசரகால நிலையை உருவாக்கியுள்ளதாகவும், சமய நம்பிக்கையாளர்கள், தங்களது மனசாட்சியை மீறுவதற்கு இது கட்டாயப்படுத்தும் எனவும் குறிப்பிட்டு, பல மதங்களைச் சார்ந்த அமைச்சர்கள் வெள்ளை மாளிகைக்குச் செய்தி அனுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...