Wednesday, 15 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 11பெப்ரவரி 2012

1. துன்புறும் தனது உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சமுதாயம், மனிதாபிமானமற்றது : திருத்தந்தை

2. அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் கிறிஸ்தவத்திற்குப் பலர் மனம் மாறுகின்றனர் - ஹாங்காங் கர்தினால் Zen

3. ஐரோப்பாவில் விசுவாசம் இறக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது - கர்தினால் பஞ்ஞாஸ்க்கோ

4. Nuba மலைப்பகுதிகளில் அப்பாவி குடிமக்கள் பசியால் இறப்பு - El Obeid ஆயர் கவலை

5. குஜராத் அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இயேசு சபை மனித உரிமை ஆர்வலர் வரவேற்பு

6. குடியேற்றதாரக் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமைஇலங்கை காரித்தாஸ்

7. மேற்கு ஆப்ரிக்காவில் எலக்ட்ரானிக் கழிவுகளின் ஆபத்து குறித்து .நா எச்சரிக்கை

8. அனைத்துலக வானொலி தினத்தைச் சிறப்பிக்க உலக நாடுகளுக்கு யுனெஸ்கோ அழைப்பு

9. தமிழகத்தில் ஜூனுக்குள் 64 இலட்சம் மரக்கன்றுகள் நட உத்தரவு

------------------------------------------------------------------------------------------------------

1. துன்புறும் தனது உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சமுதாயம், மனிதாபிமானமற்றது : திருத்தந்தை

பிப்.11,2012. நோயாளிகளுக்குச் சிறப்புக் கவனம் தேவைப்படுகின்றது என்பதை இறைமக்கள் சமுதாயத்துக்கு எடுத்துரைக்கவும், துன்பத்தின் மதிப்பை நோயாளிகள் உணர்ந்து கொள்வதற்கு மற்றவர் உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் உலக நோயாளர் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
இச்சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்ட உலக நோயாளர் தினம் குறித்துப் பேசிய, திருப்பீட நலவாழ்வுப்பணி அவைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski, இந்நோயாளர் தினம், லூர்து அன்னை விழாவன்று சிறப்பிக்கப்படுவதன் நோக்கத்தையும் விளக்கினார்.
துன்பத்துக்கும் துன்புறுவோருக்கும் இடையே இருக்கும் உறவை வைத்து மனித சமுதாயத்தின் உண்மையான தன்மை அளக்கப்படுகிறது என்றும், துன்புறும் தனது உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் அவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு உதவ முடியாத ஒரு சமுதாயம், கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற சமுதாயம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியிருப்பதையும் (Spe Salvi), பேராயர் சுட்டிக் காட்டினார்.
மேலும், நலவாழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வப் பணியாளர்கள், கிறிஸ்தவச் சமூகங்கள், துறவறக் குழுமங்கள் போன்ற அனைவரையும் இவ்வுலக தினம் ஊக்கப்படுத்துகின்றது என்றும் பேராயர் Zimowski கூறினார்.
உலக நோயாளர் தினம், லூர்து அன்னை விழாவான பிப்ரவரி 11ம் தேதியன்று சிறப்பிக்கப்பட வேண்டுமென்று, அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால், 1992ம் ஆண்டில் அறிவித்தார். எனவே, இவ்வுலக தினம், 1993ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

2. அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் கிறிஸ்தவத்திற்குப் பலர் மனம் மாறுகின்றனர் - ஹாங்காங் கர்தினால் Zen

பிப்.11,2012. தூயவர்கள் மற்றும் துன்புறும் மக்கள் வழியாக, இயேசு எனது காலத்தவராய் இருக்கிறார் என்று ஹாங்காங் முன்னாள் ஆயர் கர்தினால் Joseph Zen Ze-kiun கூறினார்.
"இயேசு நமது காலத்தவர்" என்ற தலைப்பில் இத்தாலிய ஆயர் பேரவையின் கலாச்சார ஆணையம் உரோமையில் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் Zen, ஷங்காய் மற்றும் ஹாங்காங்கில் தனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
சீனாவில் குருத்துவக் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கும் காலத்தில் தனக்குக்  கிடைத்த அனுபவம், சீனத் திருஅவையின் ஆழமான விசுவாசம், அத்திருஅவை எதிர்கொள்ளும் இன்னல்கள் போன்றவைகளையும் இக்கருத்தரங்கில் எடுத்துக் கூறினார்
மறைந்த Xian ஆயர் Anthony Li Duan எதிர்கொண்ட சில இன்னல்களைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Zen, திருத்தந்தை 2ம் ஜான் பால், சீன மறைசாட்சிகளைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார் என்பதற்காக, அத்திருத்தந்தைக்கு எதிரான ஆவணத்தில் கையெழுத்துப் போடுவதற்காக பெய்ஜிங் கூட்டத்திற்குச் செல்ல மறுத்தது, திருஅவைச் சட்டத்துக்குப் புறம்பான ஆயர் திருநிலைப்பாட்டிற்குச் செல்ல மறுத்தது என, ஆயர் Duan சந்தித்த நெருக்கடி நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டினார்.
அரசின் அடக்குமுறைகள், அழுத்தங்கள் போன்றவைகளுக்கு மத்தியிலும் கிறிஸ்தவத்திற்குப் பலர் மனம் மாறுகின்றனர் என்றும், ஒவ்வோர் ஆண்டும் வயது வந்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் திருமுழுக்குப் பெறுகின்றனர் என்பதையும் குறிப்பிட்டார் கர்தினால் Zen.
ஏறக்குறைய 70 இலட்சம் மக்களைக் கொண்ட ஹாங்காங்கில், 3 இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் கத்தோலிக்கர்.

3. ஐரோப்பாவில் விசுவாசம் இறக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது - கர்தினால் பஞ்ஞாஸ்க்கோ

பிப்.11, 2012. இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம் சார்ந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன என்று இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்க்கோ (Angelo Bagnasco) இக்கருத்தரங்கில் கூறினார்.
"இயேசு நமது காலத்தவர்" என்ற தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய கர்தினால் பஞ்ஞாஸ்க்கோ, ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய இடங்களில் கிறிஸ்தவத்தின் புத்துணர்ச்சி, உணரக்கூடியதாய் இருக்கின்றது என்று கூறினார்.
ஆனால், இயேசு கிறிஸ்துவை நம் ஆண்டவரும் மீட்பருமென அறிவிக்கும்  அதே ஆர்வத்தை ஐரோப்பிய நாடுகளில் காண முடிவதில்லை எனவும், பிராணவாயு இல்லாத சுடர் போன்று விசுவாசம் இறக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது எனவும் கூறினார் கர்தினால் பஞ்ஞாஸ்க்கோ.
ஐரோப்பிய நாடுகளில் இயேசுவைப் பற்றிப் பேசுவதற்கே தயக்கம் இருப்பது போல் தெரிவதாகவும் உரைத்த அவர், இயேசு என்ற மனிதர் குறித்து இக்கருத்தரங்கு நடைபெற்றதற்குத் தனது பாராட்டையும் தெரிவித்தார்.
உரோமையில் நடைபெற்ற இப்பன்னாட்டுக் கருத்தரங்கு, இச்சனிக்கிழமை நிறைவடைந்தது.   

4. Nuba மலைப்பகுதிகளில் அப்பாவி குடிமக்கள் பசியால் இறப்பு - El Obeid ஆயர் கவலை

பிப்.11,2012. சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடையே இடம் பெறும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள Nuba மலைப்பகுதிகளில் அப்பாவி மக்கள், பசியாலும், குண்டுவெடிப்புக்களாலும் இறந்து கொண்டிருக்கின்றனர் என்று El Obeid ஆயர் Macram Max Gassis கூறினார்.
கடும்மோதல்களால் துன்புறும் இம்மக்களுக்கு அருட்பணியாளர்களும் அருள்சகேதரிகளும் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகின்றனர் என்றும் ஆயர் Gassis தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலையில் தென் சூடான், சூடானிலிருந்து பிரிந்து, தனிநாடாகச் செயல்படத் தொடங்கியதிலிருந்து, இவ்விரு நாடுகளுக்கிடையே எல்லைப்பகுதி தொடர்பாக, மோதல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.
இதற்கிடையே, இவ்விரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் தென்னாப்ரிக்க முன்னாள் அரசுத்தலைவர் Thabo Mbeki, இவ்விரு நாடுகளும் வன்முறைகளைக் கைவிடும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக இச்சனிக்கிழமை தெரிவித்தார்.
இவ்விரு நாடுகளும் ஒன்று மற்றதன் இறையாண்மையையும், நிலப்பரப்பையும் மதிப்பதாக இசைவு தெரிவித்திருப்பதாகவும் Mbeki கூறினார்.

5. குஜராத் அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இயேசு சபை மனித உரிமை ஆர்வலர் வரவேற்பு

பிப்.11,2012. குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு இடம் பெற்ற கலவரத்தில் அழிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட வழிபாட்டுத்தலங்களை குஜராத் அரசு மீண்டும் கட்டிக் கொடுக்க வேண்டும் மற்றும் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியிருப்பதை வரவேற்றுள்ளார் இயேசு சபை அருள்தந்தை Cedric Prakash.
2002ம் ஆண்டு இடம் பெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கத் தவறியுள்ளது என்று, குஜராத் இசுலாமிய நிவாரணக் குழு (IRCG) வழக்குப் பதிவு செய்திருந்ததை விசாரித்த உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
2002ம் ஆண்டு இடம் பெற்ற கலவரத்தில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் உட்பட 523 வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டன. ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து கருத்துச் சொன்ன, அகமதபாத் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரான இயேசு சபை அருள்தந்தை Cedric Prakash, நீதிக்காகப் போராடுகின்றவர்களுக்கும், நாட்டின் சமயச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்ற விரும்புகின்றவர்களுக்கும் இது நல்ல செய்தி என்று கூறினார்.

6. குடியேற்றதாரக் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமைஇலங்கை காரித்தாஸ்

பிப்.11,2012. வெளிநாடுகளில் முழுப் பாதுகாப்புடன் வேலை செய்வதற்கான உரிமை, ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்று, கொழும்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் Ramanie Jayathilaka கூறினார்.
குடியேற்றதாரத் தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பங்களின் சமூக நலம்என்ற தலைப்பில், Sedec என்ற இலங்கை காரித்தாஸ் நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய பேராசிரியர் Jayathilaka, குடியேற்றதாரக் குடிமக்கள், தங்கள் நாடுகளைவிட்டுச் செல்லும் முன்னரும், சென்ற பிறகும் அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதை வலியுறுத்திப் பேசினார்.
மேலும், இக்கூட்டத்தில் பேசிய, காரித்தாஸ் நிறுவனத்தின் பெண்கள் பிரிவுத் தலைவர் அருள்சகோதரி Ushani Perera, குடியேற்றத்தின் நன்மை, தீமைகளை எடுத்துரைத்து அவர்களை வழிநடத்த வேண்டியது, திருஅவையின் உறுப்பினர்களாகிய எங்களது கடமை என்று குறிப்பிட்டார்.
இலங்கையின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 23 விழுக்காட்டினர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இக்குடியேற்றதாரத் தொழிலாளர், 2010ம் ஆண்டில், தேசியப் பொருளாதாரத்துக்கு 241 கோடி அமெரிக்க டாலர் வழங்கினர்  என்று அருள்சோகதரி Ushani Perera கூறினார்.
இவர்கள் நாட்டின் வருமானத்துக்குப் பெரும் ஊற்றாக உள்ளனர் என்றும் அச்சகோதரி கூறினார்.

7. மேற்கு ஆப்ரிக்காவில் எலக்ட்ரானிக் கழிவுகளின் ஆபத்து குறித்து .நா எச்சரிக்கை

பிப்.11,2012. மேற்கு ஆப்ரிக்காவில் அதிகரித்து வரும் எலெக்ட்ரானிக் கருவிகளின் கழிவுகள் நலவாழ்வுக்கும், சுற்றுப்புறச்சூழலுக்கும் பெரும் ஆபத்துக்களை முன்னிறுத்துகின்றன என்று .நா. வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.
மேற்கு ஆப்ரிக்காவில் வெளியேற்றப்படும் இந்த -கழிவுகளில் ஏறக்குறைய 85 விழுக்காடு, வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் எலெக்ட்ரானிக் கழிவுகள் என்று கூறும் இவ்வறிக்கை, தொழிற்சாலை நாடுகள் அனுப்பும் பயன்படுத்தப்பட்ட கருவிகளால் இந்த ஆபத்து மேலும் மோசமடைந்துள்ளது என்றும் கூறுகிறது.
தொழிற்சாலை நாடுகள் அனுப்பும் பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரானிக் கருவிகள், மீண்டும் பயன்படுத்தப்பட முடியாதவை, அவை தூக்கி எறியப்பட வேண்டும் என்ற நிலையையே பல நேரங்களில் நிரூபித்துள்ளன என்றும் .நா.அறிக்கை தெரிவிக்கிறது.
ஆப்ரிக்காவிலும், உலகின் பிற பகுதிகளிலும் வெளியேறும் எலெக்ட்ரானிக் கருவிகளின் கழிவுகள், சரியாகக் கையாளப்படுவது, கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும், பசுமைப் பொருளாதாரத்தின் வளங்களை நன்கு பயன்படுத்தவும் உதவும் என்றும் .நா.சுற்றுச்சூழல் திட்ட இயக்குனர் Achim Steiner கேட்டுக் கொண்டுள்ளார்.
பெனின், ஐவரி கோஸ்ட், கானா, லைபீரியா, நைஜர் ஆகிய ஆப்ரிக்க நாடுகள், கடந்த ஈராண்டுகளுக்கு மேலாக, ஆண்டுதோறும் 6 இலட்சத்து 50 ஆயிரம்  முதல் பத்து இலட்சம் டன்கள் வரையிலான -கழிவுகளை வீடுகளிலிருந்து வெளியேற்றி வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

8. அனைத்துலக வானொலி தினத்தைச் சிறப்பிக்க உலக நாடுகளுக்கு யுனெஸ்கோ அழைப்பு

பிப்.11,2012.  கல்வியறிவுக்கும், பேச்சு சுதந்திரத்திற்கும், பொது விவாதத்திற்கும் வானொலி நற்சேவையாற்றி வருகிறது என்பதைக் கொண்டாடும் விதமாக, இத்திங்களன்று முதன்முறையாக அனைத்துலக வானொலி தினம் கடைபிடிக்கப்படவிருக்கின்றது என்று யுனெஸ்கோ என்ற .நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம் அறிவித்தது
வேகமாக மாறி வரும் இவ்வுலகில், மக்களையும் சமூகங்களையும் இணைப்பதற்கும், தகவல்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதற்கும், புரிந்து கொள்ளுதலை வளர்ப்பதற்கும் வானொலியைப் பயன்படுத்துமாறு யுனெஸ்கோ இயக்குனர் Irina Bokova, இவ்வுலக தினத்திற்கானச் செய்தியில் கேட்டுள்ளார்.
உலகின் மக்களில் 95 விழுக்காட்டினரைச் சென்றடைவதற்கும், போக்குவரத்து வசதிகள் குறைந்த இடங்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்குச் செய்திகளை எளிதாகக் கொண்டு சேர்ப்பதற்கும் வானொலி சிறந்த ஊடகமாக இருக்கின்றது என்றும் அச்செய்தி கூறுகிறது.
உலகில் சுமார் நூறு கோடிப் பேருக்கு வானொலி வசதி கிடையாது, எடுத்துக்காட்டாக, நேபாளத்தில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள், வானொலி கேட்க முடியாத இடங்களில் வாழ்கின்றனர் என்றும் யுனெஸ்கோ கூறியது.
1946ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி .நா. வானொலி ஆரம்பிக்கப்பட்டது. அதற்கும் 15 ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது, 1931ம் பிப்ரவரி 12ம் தேதியே, வானொலியைக் கண்டுபிடித்த குலியெல்மோ மார்க்கோனி அவர்களால் வத்திக்கான் வானொலி துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

9. தமிழகத்தில் ஜூனுக்குள் 64 இலட்சம் மரக்கன்றுகள் நட உத்தரவு

 தமிழகத்தில் ஜூன் மாதத்துக்குள் 64 இலட்சம் மரக்கன்றுகளை நட, வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24ம் தேதியன்று தொடங்கும் இந்தப் பணியை, ஜூன் மாதத்துக்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...