Wednesday, 15 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 13 பெப்ரவரி 2012

 
1. திருத்தந்தை : இளையோர் இறைவனின் அன்பு அழைப்புக்குத் தாராளமாய்ப் பதில் சொல்வதற்கு ஏற்ற சூழல்களைத் திருஅவை உருவாக்க வேண்டும்

2. திருத்தந்தை : மனிதரின் மீட்பை வெளிப்படுத்துவதற்காக இயேசு தொழுநோயாளியைக் குணமாக்கினார்

3. சிரியாவில் வன்முறை முடிவுக்கு வர திருத்தந்தை அழைப்பு

4. சிரியாவில் வன்முறைகள் குறித்து திருப்பீடத்தூதுவர் கவலை

5. ஆள் கடத்தல்களால் சூடான் இளையோர் அச்சத்தில் வாழ்கின்றனர் என்கிறார் ஆயர்

6. மலாவி மக்களின் விசுவாசத்தை ஆழப்படுத்த வேண்டியது, அவசியமான, அவசரமானத் தேவையாக உள்ளது - ஆயர் Montfort Stima

7. மதம் மாறிய 10 பேர் ஈரானில் கைது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இளையோர் இறைவனின் அன்பு அழைப்புக்குத் தாராளமாய்ப் பதில் சொல்வதற்கு ஏற்ற சூழல்களைத் திருஅவை உருவாக்க வேண்டும்

பிப்.13,2012. குருத்துவ அல்லது சிறப்பு அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்படுவதை உணரும் தங்களது உறுப்பினர்கள் மீது, பங்குச் சமூகங்களும், பக்த சபைகளும், திருஅவை இயக்கங்களும் மிகுந்த அக்கறை காட்டுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
வருகிற ஏப்ரல் 29ம் தேதி சிறப்பிக்கப்படும் 49வது உலக இறையழைத்தல் தினத்திற்கெனச் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை,  பல இளையோர் இறைவனின் அன்பு அழைப்புக்குத் தாராளமாய்ப் பதில்சொல்வதற்கு ஏற்றச் சூழல்களை உருவாக்கித்தர வேண்டியது திருஅவையின் முக்கியமான கடமையாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இறையழைத்தல்களைப் பேணி வளர்க்கும் பணியில், நல்ல வழிமுறைகள் காட்டப்பட வேண்டும், இந்த வழிநடத்தலில், திருமறைநூல்கள் பற்றிய அறிவில் வளர்தல் மூலம் இறைவார்த்தையின் அன்பால் ஊட்டம் பெறுதல், தனியாகவும் குழுவாகவும் இடைவிடாத செபம் செய்வதில் கருத்தாய் இருத்தல் ஆகியவை முக்கியத்துவம் பெற வேண்டுமென்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இவற்றின் மூலம், அன்றாட வாழ்வின் குரல்களுக்கு மத்தியில் இறைவனின் அழைப்பைக் கேட்கக்கூடியதாய் ஆக்க இயலும் எனவும், எல்லாவற்றுக்கும் மேலாக, திருப்பலியும் திருநற்கருணையும் ஒவ்வோர் இறையழைத்தல் பயணத்தின் மையமாகவும் அமைய வேண்டும் எனவும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
இறையாட்சிப் பணியில் வாழ்வின் அழகை முழுமையாகச் செலவழிக்க, திருமறைநூல், செபம், திருப்பலி ஆகியவை விலைமதிப்பில்லாத சொத்தாக இருக்கின்றன என்ற திருத்தந்தை, தலத்திருஅவைகளும், அவற்றிலுள்ள பல்வேறு குழுக்களும் உறுதியான, நன்கு தேர்ந்து தெளிந்த இறையழைத்தல்கள் வருவதற்கு உதவும் என்ற தனது நம்பிக்கையையும்  தெரிவித்துள்ளார்.
இறையழைத்தல்கள், இறையன்பின் கொடை என்பது, 49வது உலக இறையழைத்தல் தினத்திற்காகத் திருத்தந்தை வழங்கியுள்ள செய்தியின் மையப் பொருளாகும்.


2. திருத்தந்தை : மனிதரின் மீட்பை வெளிப்படுத்துவதற்காக இயேசு தொழுநோயாளியைக் குணமாக்கினார்

பிப்.13,2012. தன்னைக் குணமாக்குமாறு வேண்டிக்கொண்ட தொழுநோயாளியை இயேசு குணப்படுத்திய இஞ்ஞாயிறு நற்செய்தியை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இயேசு கிறிஸ்துவின் இக்குணப்படுத்தலானது, மீட்பு வரலாறு முழுமையையும் உள்ளடக்கியுள்ளது என்ற திருத்தந்தை, மனிதரைத் தூய்மையற்றவர் என்று சொல்லி சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்கு இந்நோயே போதுமானதாக இருந்த அக்காலத்தில், இயேசு அந்நோயாளியைத் தொட்டுக் குணப்படுத்தினார் என்று கூறினார்.
ஒரு தொழுநோயாளி குணமான பின்னரும்கூட, அவர் சமுதாயத்தோடு எப்போது மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே யூதக் குருக்களின் வேலையாக இருந்தச் சூழலில், ஒரு தொழுநோயாளி இயேசுவிடம் வந்து, நீர் விரும்பினால் எனது நோயைக் குணமாக்க உம்மால் முடியும் என்று சொல்வதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
தொழுநோயாளியைத் தொடுவது யூதச்சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், இயேசு அந்நோயாளியைத் தொடுவதைத் தவிர்க்கவில்லை என்றார் திருத்தந்தை.
கிறிஸ்துவின் இந்தச் செயலிலும் வார்த்தைகளிலும் முழு மீட்பு வரலாறும் அடங்கியுள்ளது என்ற திருத்தந்தை, இறைவனோடு நமக்குள்ள உறவை முறித்து உருவமிழக்கச் செய்யும் தீமையிலிருந்து நம்மைக் குணப்படுத்தி, தூய்மைப்படுத்துவதற்கான இறைவனின் விருப்பம் இவற்றில் உள்ளன என்றும் கூறினார்.
தொழுநோயாளியை இயேசு தொட்டது, இறைவனுக்கும் மனிதக் கறைகளுக்கும் இடையேயும், தூய்மைக்கும் தூய்மையற்றதன்மைக்கும் இடையேயும் இருக்கும் ஒவ்வொரு தடையும் தகர்த்தெறிகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
இயேசுவின் இச்செயலானது, தீமை மற்றும் அதன் எதிர்மறை சக்தியைப் புறக்கணிக்கவில்லை, ஆனால், மிகக்கொடுமையான, தொற்றிக் கொள்ளும் தன்மையுடைய நிலையிலும்கூட, தீமையையவிட இறைவனின் அன்பு உறுதியானது என்பதை அவரின் செயல் காட்டுகின்றது என்று திருத்தந்தை விளக்கினார்.
13ம் நூற்றாண்டு புனிதரான பிரான்சிஸ் அசிசியார், தொழுநோயாளரை அணைத்தது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இதன்மூலம் இப்புனிதர் பெருமை என்ற  அவரது  தொழுநோயிலிருந்து குணமானார், இது அவரை இறையன்புக்கு இட்டுச் சென்றது என்று தெரிவித்தார்.


3. சிரியாவில் வன்முறை முடிவுக்கு வர திருத்தந்தை அழைப்பு

பிப்.13,2012. சிரியாவில் இடம் பெறும் இரத்தம் சிந்துதலும், வன்முறையும் முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
அத்துடன், உரையாடல், ஒப்புரவு மற்றும் அமைதிக்கான அர்ப்பணத்தின் பாதையைத் தேர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, சிரிய மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், சர்வதேச சமுதாயத்தின் வேண்டுகோளுக்கும் செவிமடுக்குமாறு சிரிய அரசை வலியுறுத்தினார்.
சிரியாவில் 11 மாதங்களுக்கு முன்னர் கலவரங்கள் தொடங்கிய போது, தேர்தல் மற்றும் அரசியலில் சில சீர்திருத்தங்கள் கொண்டு வருவதாக அந்நாட்டு அரசு வாக்குறுதி அளித்தது. ஆயினும், அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மீண்டும் சிரியாவில் வன்முறைகள் தொடங்கியுள்ளன.
கடந்த வாரத்தில் இரண்டு வாகன குண்டு வெடிப்புகள் இடம் பெற்றதில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களும் படைவீரர்களும் காயமடைந்துள்ளனர்.
சிரியாவில் அதிகரித்து வரும் வன்முறைகளை மிகுந்த கவலையோடு கவனித்து வருவதாகவும், இதில் பலியான சிறார் உட்பட அனைவருக்காகவும் தான் செபிப்பதாகவும்  திருத்தந்தை கூறினார்.


4. சிரியாவில் வன்முறைகள் குறித்து திருப்பீடத்தூதுவர் கவலை

பிப்.13,2012. உள்நாட்டுக்கலகங்கள் இடம்பெற்று வரும் சிரியாவின்  Homs நகரில் நிலைமைகள் மிகவும் சீர்கேடடைந்து வருவதுடன், அப்பாவிப் பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் அந்நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் Mario Zenari.  
வன்முறைகள் இடைவெளியின்றி தொடர்ந்து கொண்டிருப்பதால் Homs நகர் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உரைத்த பேராயர், மருந்து, உணவு, மருத்துவ வசதி, உறைவிடங்கள் ஆகியவை இல்லாத நிலையில் துன்புறும் மக்கள், இறந்தவர்களை புதைக்கக்கூட வெளியில் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது என கவலையை வெளியிட்டார்.
ஐநாவின் உதவியோடு அரபு நாடுகளின் கூட்டமைப்பு, சிரியாவில் அமைதியைக் கொணர எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டிய பேராயர் Zenari, வன்முறைகளை தடுத்து நிறுத்த சர்வதேச சமுதாயத்தின் முயற்சிகள் இன்றியமையாதவை என்பதையும் வலியுறுத்தினார்.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானத்தைத் தொட்டு வருகின்றன என்ற அவர், இதனிடையே, ஆள்கடத்தல்கள் மற்றும் அச்சுறுத்தி பணம்பறித்தல் போன்ற நிகழ்வுகளும் ஆழ்ந்த கவலை தருவதாக உள்ளன என மேலும் கூறினார்.


5. ஆள் கடத்தல்களால் சூடான் இளையோர் அச்சத்தில் வாழ்கின்றனர் என்கிறார் ஆயர்

பிப்.13,2012. புதிய இராணுவ வீரர்கள் தேவைப்படும் தீவிரவாதக் குழுக்கள், சிறுபான்மை சமுதாய இளைஞர்களைக் கடத்திச் செல்வதால், கிறிஸ்தவ இளையோரிடையே அச்சம் பரவிக்கிடப்பதாக சூடானின் Khartoum ஆயர் கவலையை வெளியிட்டுள்ளார்.
பெரும்பான்மை கிறிஸ்தவ இளைஞர்கள் தென் சூடான் பூர்வீக இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால், அவர்களை இரவிலும் வீடு புகுந்து கடத்திச் செல்வது தீவிரவாத குழுக்களின் அத்து மீறியச் செயல்பாடாக உள்ளது என்ற துணை ஆயர் Daniel Adwok Kur, கடத்தப்படுவோம் என்ற அச்சத்தினால் இளையோர் கோவில் வழிபாடுகளுக்கு வருவதையே தவிர்த்து வருகின்றனர் என்றார்.
அண்மையில் Joseph Makwey, Sylvester Mogga, என்ற இரு குருக்கள் கடத்தப்பட்டு, இரு வாரங்களாக மறைவான இடத்தில் வைக்கப்பட்டு சித்ரவதைப்படுத்தப்பட்ட பின்னர், உயர் அதிகாரிகளின் பெருமுயற்சிகளுக்குப்பின் விடுவிக்கப்பட்டுள்ளது பற்றியும் குறிப்பிட்ட ஆயர், தீவிரவாதக்குழுக்களின் செயல்பாடுகளைத் தடுக்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்ற கவலையையும் வெளியிட்டார்.
ஆள்கடத்தல்களின் எண்ணிக்கை சூடானில் அதிகரித்து வருவதால், வருங்காலம் குறித்த அச்சத்துடனேயே மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என மேலும் கூறினார் ஆயர் Adwok Kur.


6. மலாவி மக்களின் விசுவாசத்தை ஆழப்படுத்த வேண்டியது, அவசியமான, அவசரமானத் தேவையாக உள்ளது - ஆயர் Montfort Stima

பிப்.13,2012. ஆப்ரிக்க நாடான மலாவியில் மக்களுக்கு மறைக்கல்வி வழங்கி, அவர்களின் விசுவாசத்தை ஆழப்படுத்த வேண்டியது, அவசியமான, அவசரமானத் தேவையாக உள்ளதென்று அந்நாட்டு ஆயர் Montfort Stima தெரிவித்தார்.
மலாவி நாட்டு கத்தோலிக்கர்களின் நிலை குறித்து Aid to the Church in Need (ACN) என்ற பிறரன்பு அமைப்புக்குப் பேட்டியளித்த Blantyre உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயர் Stima, ஒவ்வோர் ஆண்டும் ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகளும், 200 முதல் 300 வயது வந்தவர்களும் திருமுழுக்கு பெறும் அந்நாட்டில், குருக்களின் பற்றாக்குறையும் பெருமளவில் உள்ளது என்று கூறினார்.
80,000 கத்தோலிக்கர்கள் வாழும் பங்குகளில் இரு குருக்களே பணியாற்றுகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டிய ஆயர் Stima, மக்களின் விசுவாசம் ஆழப்படுவதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் எடுத்துரைத்தார்.
மலாவி நாட்டின் 1 கோடியே, 30 இலட்சம் மக்கள் தொகையில், 80 விழுக்காட்டினர் கிறிஸ்தவர். இந்நாட்டில் 40 இலட்சம் கத்தோலிக்கர் வாழ்கின்றனர்.


7. மதம் மாறிய 10 பேர் ஈரானில் கைது

பிப்.13,2012. ஈரானின்  Shiraz எனுமிடத்தில் தனியார் வீடு ஒன்றில் செப வழிபாடு நடத்திவந்த 10 கிறிஸ்தவர்களைக் கைது செய்துள்ளது அந்நாட்டு பாதுகாப்புத் துறை.
கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய 10 பேர் ஒரு வீட்டில் கூடியிருந்து செபித்துக்கொண்டிருந்தபோது, அங்கு திடீரென்று புகுந்த, சாதாராண உடையணிந்த பாதுகாப்புத் துறையினர், அந்த பத்துப் பேரையும் கைது செய்து அடையாளம் தெரியாத இடத்திற்கு எடுத்துச் சென்று சிறை வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை வெளிப்படுத்த மறுக்கும் பாதுகாப்புத்துறை, அவர்களின் குடும்பங்களுக்கும் எவ்வித தகவலையும் வழங்க மறுத்துள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் Ahwaz எனுமிடத்திலுள்ள கோவிலிலிருந்து கிறிஸ்தவ மறைபோதகரையும், சில கிறிஸ்தவர்களையும் ஈரான் காவல்துறை கைது செய்துள்ளது.
கிறிஸ்தவர்களை மேற்கத்திய நாடுகளின் ஒற்றர்களாக ஈரான் காவல்துறை சந்தேகிப்பதே இக்கைதுகளுக்கான முக்கியக் காரணம் என செய்தி நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.



No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...