Friday, 3 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 02 பெப்ரவரி 2012

1. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை மேற்கொள்ளும் விவாதங்களும், எடுக்கும் முடிவுகளும் நல்ல பலனைத் தரவேண்டும் - திருத்தந்தை

2. இறையடி சேர்ந்த கர்தினால் Anthony J.Bevilacquaக்கு திருத்தந்தை அனுப்பிய இரங்கல் தந்தி

3. இறைவாக்கினரைப் போல செயலாற்றுவது கத்தோலிக்கத் திருஅவையின் முக்கியப் பணி

4. கடந்த 15 ஆண்டுகளில் 10 இலட்சம் கருக்கள் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை இழந்துள்ளனர் - தென்னாப்ரிக்க ஆயர் பேரவை

5. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு விசுவாச அட்டைகள்

6. குஜராத்தில் பழமை வாய்ந்த கல்லறைத் தோட்டம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதற்கு வன்மையான கண்டனம்

7. மியான்மார் உள்நாட்டுப் போரினால் புலம் பெயர்ந்துள்ள 60,000க்கும் அதிகமான மக்களுக்கு தலத்திருஅவை உதவி

8. கொழும்பு தேயிலை மாநாடும் தேயிலைத் தொழிலாளர்களும்

------------------------------------------------------------------------------------------------------

1. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை மேற்கொள்ளும் விவாதங்களும், எடுக்கும் முடிவுகளும் நல்ல பலனைத் தரவேண்டும் - திருத்தந்தை

பிப்.02,2012. இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்தை மையப்படுத்தி இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை மேற்கொள்ளும் விவாதங்களும், எடுக்கும் முடிவுகளும் நல்ல பலனைத் தரவேண்டும் என்று திருத்தந்தை 16 ம் பெனடிக்ட் கூறினார்.
இப்புதனன்று பெங்களூருவில் ஆரம்பமான இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 30வது பொதுக்குழு கூட்டத்திற்கு திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அனுப்பியுள்ள செய்தி இந்தப் பேரவையின் துவக்க அமர்வில் வாசிக்கப்பட்டது.
இப்பொதுக்குழு கூட்டத்தின் ஆரம்பத் திருப்பலியை இப்புதன் காலை தலைமையேற்று நடத்திய திருப்பீடத் தூதர் பேராயர் Salvatore Pennacchio, இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் தீர்க்கமான எண்ணத்துடன் கிறிஸ்துவ சமுதாயம் உழைக்க வேண்டும் என்று கூறினார்.
திருப்பலிக்குப் பின்னர் நடைபெற்ற துவக்க விழாவில் தலைமை உரையாற்றிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ், இந்திய சமுதாயத்தின் மனசாட்சியாக கத்தோலிக்கத் திருஅவை செயல்படுகிறது என்று கூறினார்.
செல்வர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இடைவெளியே இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனை என்றும், இந்தியாவின் பெரும்பாலான வளங்கள் செல்வந்தர்களை மட்டும் சேர்வது வருத்தத்திற்குரிய ஒரு நிலை என்றும் கர்தினால் கிரேசியஸ் எடுத்துரைத்தார்.
இத்துவக்க விழாவில் சிறப்புரை யாற்றிய நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், கிறிஸ்துவத் தலைவர்கள் கடவுளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கைக்கு உரிய ஊழியர்களாகச் செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இத்துவக்கவிழா அமர்வின்போது, அண்மையில் திருத்தந்தையால் கர்தினாலாக நியமனம் பெற்றுள்ள சிரோ மலபார் திருஅவையின் தலைமைப்பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரிக்கு சிறப்பான வாழ்த்துக்களை அனைத்து ஆயர்களும் தெரிவித்தனர்.


2. இறையடி சேர்ந்த கர்தினால் Anthony J.Bevilacquaக்கு திருத்தந்தை அனுப்பிய இரங்கல் தந்தி

பிப்.02,2012. அமெரிக்காவில் இச்செவ்வாய் இரவு இறையடி சேர்ந்த கர்தினால் Anthony Joseph Bevilacqua அவர்களின் மறைவுக்கு தன் ஆழந்த வருத்தத்தை வெளியிட்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதனன்று தந்தி அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் பிலடெல்பியா உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Charles Chaputக்கு அனுப்பியுள்ள இந்தச் செய்தியில், மறைந்த கர்தினால் Bevilacqua குடியேற்றதாரர் மட்டில் கொண்டிருந்த சிறப்பான அக்கறையைத் திருத்தந்தை நினைவு கூர்ந்தார்.
1923ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்த Anthony Bevilacqua, 1949ம் ஆண்டு குருவாகவும், 1980ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைபடுத்தப்பட்டார். திருஅவைச் சட்டங்களில் பட்டம் பெற்று, அத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த Bevilacqua, 1991ம் ஆண்டு அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
1988ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை பிலடெல்பியா உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணிபுரிந்த கர்தினால் Anthony Bevilacqua, புற்றுநோயால் உடல் நலம் குன்றி, இச்செவ்வாய் இரவு தனது 88வது வயதில் இறையடி சேர்ந்தார்.
கர்தினால் Anthony Bevilacquaன் மறைவை அடுத்து தற்போது, கத்தோலிக்கத் திருஅவையில் உள்ள கர்தினால்களின் எண்ணிக்கை 191ஆக குறைந்துள்ளது. இவர்களில் 80க்கும் குறைவான வயதுடைய 107 கர்தினால்கள் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள்.


3. இறைவாக்கினரைப் போல செயலாற்றுவது கத்தோலிக்கத் திருஅவையின் முக்கியப் பணி

பிப்.02,2012. இன்றைய இந்தியாவுக்கு இயேசு வருகை தந்தால், அவர் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு என்னென்ன முயற்சிகள் எடுப்பார் என்பதை கத்தோலிக்கத் திருஅவை சிந்திக்க வேண்டும் என்று இயேசு சபை குரு Rudolf Heredia கூறினார்.
பெங்களூருவில் பிப்ரவரி 1 முதல் 8ம் தேதி வரை நடைபெற்றுவரும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுக் குழு கூட்டத்தில் இவ்வியாழனன்று சிறப்புரையாற்றிய சமூகவியல் சிந்தனையாளரான அருள்தந்தை Heredia, இயேசுவின் காலத்திய வழிமுறைகளுக்கும், இன்றைய இந்தியாவுக்குத் தேவையான வழிமுறைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் கண்டறிய வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
நீதியான சமுதாயத்தை உருவாக்குவது இன்று இந்தியாவில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு முக்கியமான நோக்கமாக இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறிய அருள்தந்தை Heredia, குடியாட்சியின் மீது நம்பிக்கை இழந்துள்ள மக்கள் மத்தியில், ஓர் இறைவாக்கினரைப் போல செயலாற்றி, உண்மையை எடுத்துரைப்பது கத்தோலிக்கத் திருஅவையின் முக்கியப் பணி என்று வலியுறுத்தினார்.
இந்தியாவின் அனைத்து மக்களின் முழுமையான வளர்ச்சியில் நாம் அக்கறை கொண்டுள்ளோமா அல்லது, கத்தோலிக்க மக்கள், கிறிஸ்துவ மக்களின் வளர்ச்சியில் மட்டும் நாம் அக்கறை கொண்டுள்ளோமா என்பதை ஆயர்கள் ஆய்வு செய்யவேண்டும் என்ற கேள்வியையும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள 170 ஆயர்கள் முன் வைத்தார் இயேசு சபை குரு Heredia.


4. கடந்த 15 ஆண்டுகளில் 10 இலட்சம் கருக்கள் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை இழந்துள்ளனர் - தென்னாப்ரிக்க ஆயர் பேரவை

பிப்.02,2012. தென்னாப்ரிக்காவில் கருக்கலைப்பு சட்டப் பூர்வமாக்கப்பட்ட பின்னர், கடந்த 15 ஆண்டுகளில் 10 இலட்சம் கருக்கள் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை இழந்துள்ளன என்று தென்னாப்ரிக்க ஆயர் பேரவையின் ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.
15 ஆண்டுகளுக்கு முன் தென்னாப்ரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பான, ஆபத்தான கருக்கலைப்புகள் நடைபெற்று வந்ததைத் தடுக்கும் வண்ணம் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், இந்தச் சட்டத்தால், உண்மையான பயன்கள் விளைந்துள்ளனவா என்ற கேள்வியை எழுப்பி, Johannesburg பேராயரும், தென்னாப்ரிக்க ஆயர் பேரவையின் தலைவருமான பேராயர் Buti Tlhagale, ஆயர்கள் சார்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டாலும், கத்தோலிக்கத் திருஅவையின் கண்ணோட்டத்தில் அது எப்போதும் நன்னெறிக்கு முரணானது என்பதை ஆயர்களின் இவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறது.
கருக்கலைப்பு அவரவர் தனிப்பட்ட உரிமை என்று வலியுறுத்தும் அரசு, கருக்கலைப்பு மனசாட்சிக்கு எதிரானது என்று உணரும் ஒருவர் அந்தச் செயலில் ஈடுபட மறுக்கும்போது, அதையும் அரசு ஒருவரது அடிப்படை உரிமை என்று மதிக்க வேண்டும் என்று பேராயர் Tlhagale சுட்டிக்காட்டினார்.


5. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு விசுவாச அட்டைகள் 

பிப்.02,2012. நமது அடையாளங்களை உறுதிப்படுத்தும் பல்வேறு அட்டைகளை நாம் எப்போதும் சுமப்பதுபோல், நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தும் ஓர் அடையாள அட்டையையும் நாம் சுமக்க வேண்டும் என்று இங்கிலாந்து ஆயர் Kieran Conry கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்திருக்கும் விசுவாச ஆண்டு 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் துவங்கவிருப்பதால், தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடும் ஆறு அம்சங்கள் அடங்கிய ஓர் அட்டையை கத்தோலிக்கர்கள் எப்போதும் தங்களுடனேயே வைத்திருக்கும்படி இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று ஆயர் Conry விளக்கம் அளித்தார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள 24 கத்தோலிக்க மறைமாவட்டங்களில் வாழும் கத்தோலிக்கர்கள் தங்கள் பைகளில் சுமந்து செல்லும் வண்ணம் 10 இலட்சம் அட்டைகளை வழங்க இங்கிலாந்தின் நற்செய்திப் பணிக் குழு தீர்மானித்துள்ளது என்று ஆயர் Conry கூறினார்.
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த 10 இலட்சம் அட்டைகளையும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள மறைமாவட்டங்களில் வழங்கத் தீர்மானித்திருப்பதாக ICN கத்தோலிக்கச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


6. குஜராத்தில் பழமை வாய்ந்த கல்லறைத் தோட்டம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதற்கு வன்மையான கண்டனம்

பிப்.02,2012. குஜராத்தின் அகமதாபாத் நகருக்கருகே சபர்மதியில் இருந்த பழமை வாய்ந்த கல்லறைகள் இயந்திரங்கள் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதை அகில இந்திய கிறிஸ்தவ கழகம் வன்மையாக எதிர்த்துள்ளது.
குடியரசு நாளன்று நடைபெற்ற இந்த வன்முறைச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்புதனன்று ஊர்வலம் மேற்கொண்ட கிறிஸ்தவக் கழகம், சபர்மதி காவல் துறை நிலையத்தில் முறையீடு செய்துள்ளது.
இயந்திரங்கள் கொண்டு நடத்தப்பட்ட இந்த வன்முறைச் செயலுக்குப் பின்புலத்தில் ஒரு குழுவே இயங்கியிருக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி வாகனங்கள் நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது கிறிஸ்தவ உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது என்றும் இக்குழுவைச் சார்ந்தவர்கள் கூறினர்.
அகமதாபாத் பகுதியில் ஆங்கிலேயர்கள் இருந்தபோது, அங்கிருந்த ஏழு கிறிஸ்தவ சபைகளுக்குப் பொதுவாக இந்த கல்லறைத் தோட்டம் வழங்கப்பட்டது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. மியான்மார் உள்நாட்டுப் போரினால் புலம் பெயர்ந்துள்ள 60,000க்கும் அதிகமான மக்களுக்கு தலத்திருஅவை உதவி

பிப்.02,2012. மியான்மார் இராணுவத்திற்கும், கச்சின் பகுதி விடுதலைப் படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் புலம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தலத்திருஅவை செய்து வரும் முயற்சிகளில், அவர்களுக்கு உணவு வழங்குவதே பெரும் பிரச்சனையாக உள்ளது என்று மியான்மார் அருள்பணியாளர் ஒருவர் கூறினார்.
2011ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைபெற்று வரும் இந்த உள்நாட்டுப் போரினால் இதுவரை புலம் பெயர்ந்துள்ள 60,000க்கும் அதிகமான மக்கள் பங்குத் தளங்களிலும், பல்வேறு கிறிஸ்தவ நிறுவனங்களிலும் தங்க வைக்கப் பட்டுள்ளனர் என்று பங்குத்தந்தை Luke Kha Li கூறினார்.
கச்சின் பகுதியின் தன்னாட்சிக்காகப் போராடும் குழுக்கள் மியான்மார் அரசுடன் அரசியல் பேச்சு வார்த்தைகள் நடைபெறும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று கூறி வருவதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.


8. கொழும்பு தேயிலை மாநாடும் தேயிலைத் தொழிலாளர்களும்

பிப்.02,2012. கொழும்பில் பிப்ரவரி 1 முதல் 3ம் தேதி வரை நடைபெற்றுவரும் பன்னாட்டு தேயிலை மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த சுமார் 170 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
உலகிலேயே தலைசிறந்த தேயிலை இலங்கையில் தான் கிடைக்கிறதுஎன்பதை நிருபிப்பது தான் இந்த பன்னாட்டு மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று இம்மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் மைக்கல் ஜேடி சொய்சா பிபிசி ஊடகத்திடம் கூறினார்.
கடந்த ஆண்டு தேயிலை விற்பனையில் இலங்கை 1.5 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருமானம் ஈட்டியதாகக் கூறிய ஜேடி சொய்சா, பல ரகங்களில் பல சுவைகளில் கிடைக்கும் இலங்கைத் தேயிலைக்கு உலகச் சந்தையில் இருக்கும் தேவையை இன்னும் அதிகரிப்பதற்கு இந்த பன்னாட்டு மாநாடு உதவும் என்று சொய்சா மேலும் தெரிவித்தார்.
நிலைமை இப்படி இருக்க, மறுபுறம் இலங்கை அரசின் இந்த வருமானத்திற்குக் காரணமாக இருக்கின்ற தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக குடியிருப்பு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உரிய முறையில் உறுதிப்படுத்தப்படாத நிலையில் பின்தங்கிய நிலையில் இருந்துவருகின்றார்கள் என்று பிபிசி சுட்டிக்காட்டுகிறது

No comments:

Post a Comment