Thursday, 9 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 09 பெப்ரவரி 2012

1. அருட்பணியாளர்கள் துணிவுடனும், விழிப்புடனும் செயல்பட அழைக்கப்படுகிறார்கள் - வத்திக்கான் அதிகாரி

2. வத்திக்கான் அதிகாரி : அமைதி  காக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக திருஅவை போராட வேண்டும்

3. அகில உலகத் திருஅவை கருத்தரங்கில் மணிலா பேராயர் Luis Antonio Tagle

4. கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது - அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர்

5. குழந்தைகள் மற்றும் இளையோரின் கல்விக்கென இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள் தகுந்த முயற்சிகள் மேற்கொள்ளவில்லை - கிறிஸ்தவத் தலைவர்

6. இரு கொரிய நாடுகளிலும் பிரிந்து வாழும் குடும்பங்கள் மீண்டும் இணைவதற்கு வழிகள் அமைக்கப்பட வேண்டும்

7. இந்தோனேசியாவின் ஒரு சில தீவுகளில் உருவாகியுள்ள பஞ்சத்தை நீக்க கத்தோலிக்கத் திருஅவை முயற்சிகள்

8. இந்தியாவில் தொடர்ந்து நிகழும் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்

------------------------------------------------------------------------------------------------------

1. அருட்பணியாளர்கள் துணிவுடனும், விழிப்புடனும் செயல்பட அழைக்கப்படுகிறார்கள் - வத்திக்கான் உயர் அதிகாரி

பிப்.09,2012. மக்களை வழிநடத்தும் பணியில் ஈடுபடும் அருட்பணியாளர்கள் துணிவுடனும், விழிப்புடனும் செயல்பட அழைக்கப்படுகிறார்கள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
'நலமடைதல் மற்றும் புதிய மாற்றங்கள் நோக்கி' என்ற மையக்கருத்தில் உரோம் நகரின் கிரகோரியன் பல்கலைக் கழகத்தில் இவ்வியாழனன்று நிறைவுற்ற கருத்தரங்கின் ஒரு பகுதியாக, இப்புதன் மாலைத் திருப்பலியில், திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத்தின் தலைவர் பேராயர் Fernando Filoni மறையுரையாற்றியபோது, இவ்வாறு கூறினார்.
அண்மையில் திருத்தந்தையால் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள   பேராயர் Filoni, திருஅவையைப் பாதித்துள்ள இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண அகில உலக திருஅவை ஆர்வம் கொண்டுள்ளது என்பதை இக்கருத்தரங்கு உணர்த்துகிறது என்று கூறினார்.
அகில உலகத் திருஅவை அருட்பணியாளர்கள் ஆண்டைக் கொண்டாடிய வேளையில் குருக்களின் இந்தத் தவறு அதிக அளவில் வெளிச்சத்திற்கு வந்ததைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எடுத்துரைத்து, குருக்கள் செய்த இந்தப் பாவத்தால் திருஅவை என்ற தாயின் முகம் பெரிதும் அழுக்கடைந்தது என்றும், தாழ்ச்சியுடன் இக்கறையை நீக்க அனைவருமே இணைய வேண்டும் என்றும் திருத்தந்தை கூறியதை பேராயர் Filoni தன் மறையுரையில் சுட்டிக் காட்டினார்.
கத்தோலிக்கத் திருஅவையின் 110 மறைமாவட்டங்களின் பிரதிநிதிகள், அகில உலக துறவியர் சபைகளின் 30 தலைவர்கள் உட்பட 200க்கும் அதிகமான திருஅவைத் தலைவர்கள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கு இவ்வியாழனன்று நிறைவடைந்தது.


2. வத்திக்கான் அதிகாரி : அமைதி  காக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக திருஅவை போராட வேண்டும்

பிப்.09,2012. அமைதி  காக்கும் ஒரு கலாச்சாரத்திற்கு எதிராக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள திருஅவை போராட வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்தார்.
கடந்த நான்கு நாட்களாக உரோம் கிரகோரியன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அகில உலகத் திருஅவை கருத்தரங்கில் இப்புதனன்று உரையாற்றிய திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தின் அதிகாரியாகப் பணிபுரியும் பேரருள் தந்தை Charles J. Scicluna, இவ்வாறு கூறினார்.
நீதியின் அடிப்படையாக இருப்பது உண்மை என்பதால், உண்மையைப் பேசாமல் இருப்பது நீதிக்கும் புறம்பானது என்று அருளாளர் இரண்டாம் ஜான்பால் கூறியதைச் சுட்டிக் காட்டிப் பேசிய அருள்தந்தை Scicluna, பாலியல் வன்முறைகள் நடைபெற்றபோது அமைதிகாத்தது இத்தவறு வளர்வதற்கு பெரும் காரணமாக இருந்தது என்று எடுத்துரைத்தார்.
சிறுவர் மற்றும் வலுவற்றோர் நடுவில் பாலியல் வன்முறைகள் நடைபெறுவதைத் தடுக்கவும், இத்தவறுகளுக்கு சரியான தீர்வுகள் காணவும் திருஅவையின் ஒவ்வொரு மறைமாவட்டமும் இவ்வாண்டு மேமாதத்திற்குள் விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்ற திருஅவையின் அறிவிப்பை, கருத்தரங்கில் கூடியிருந்த அனைவருக்கும் கூறினார் அருள்தந்தை Scicluna.
திருத்தந்தையர்கள் இரண்டாம் ஜான்பால் மற்றும் 16ம் பெனடிக்ட் இருவரும் இப்பிரச்சனையைத் தீர்க்க எடுத்துக்கொண்ட முயற்சிகளை அருள்தந்தை Scicluna கூடியிருந்த அனைவருக்கும் விளக்கினார்.


3. அகில உலகத் திருஅவை கருத்தரங்கில் மணிலா பேராயர் Luis Antonio Tagle

பிப்.09,2012. பாலியல் வன்முறை குற்றங்களில் குருக்கள் ஈடுபட்டதால் திருஅவை சந்தித்த பிரச்சனை இதுவரை ஆசியத் திருஅவையில் பெருமளவில்  உணரப்படவில்லை என்று மணிலா பேராயர் Luis Antonio Tagle கூறினார்.
கிரகோரியன் பல்கலைக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் அகில உலகத் திருஅவை கருத்தரங்கில் இவ்வியாழனன்று உரையாற்றிய பேராயர் Tagle, இப்பிரச்சனை மேற்கத்திய நாடுகளில் மட்டும் இல்லை என்றும், ஆசிய நாடுகளிலும் ஆங்காங்கே உள்ளது என்றும் சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில், சிறார் மற்றும் இளஞ்சிறார் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாவது ஆசிய நாடுகளில் பரவலாகக் காணப்படும் ஒரு குற்றம் என்பதையும் சுட்டிக்காட்டிய பேராயர் Tagle, ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களால் இந்தக் குற்றம் இன்னும் அதிகமாகியுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
அகில உலகத் திருஅவையின் ஒவ்வொரு மறைமாவட்டமும் இந்தப் பிரச்சனையைக் கையாளும் வழிகளை உருவாக்குவதற்கு உதவியாக இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது என்றும், ஆசியத் திருஅவையைப் பொறுத்தவரை இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் திருஅவைகள் இந்த வழிமுறைகளை வகுத்துள்ளன என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


4. கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது - அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர்

பிப்.09,2012. திருமண உறவைத் தகுந்த வகையில் காப்பதற்கு மக்கள் அளித்துள்ள முடிவுக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்று அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர் கூறியுள்ளார்.
கலிபோர்னியா மாநிலத்தில் ஓரினத் திருமணத்தைச் சட்டமாக்கும் ஒரு முயற்சியாக அம்மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் கணிப்பில் பெரும்பான்மையான மக்கள் ஓரினத் திருமணத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
மக்கள் அளித்த கருத்தை மாநில அரசு ஏற்கத் தேவையில்லை என்று கலிபோர்னியாவின் நீதி மன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மக்கள் குரலுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள ஒரு பெரும் தாக்குதல் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவரும், அண்மையில் திருத்தந்தையால் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ளவருமான நியூயார்க் பேராயர் Timothy Dolan இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையே, அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அண்மையில் வெளியிட்ட நலவாழ்வு குறித்த ஒரு திட்டத்திற்கு எதிராக, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள 183 மறைமாவட்டங்களில் 169 மறைமாவட்ட ஆயர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். கருக்கலைப்பை மக்கள் வரிப்பணத்தில் இணைப்பதற்கு அரசு வெளியிட்டுள்ள இத்திட்டத்திற்கு அமெரிக்க ஆயர் பேரவையும்  தன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.


5. குழந்தைகள் மற்றும் இளையோரின் கல்விக்கென இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள் தகுந்த முயற்சிகள் மேற்கொள்ளவில்லை - கிறிஸ்தவத் தலைவர்

பிப்.09,2012. குழந்தைகள் மற்றும் இளையோரின் கல்விக்கென இந்திய அரசு வழங்கும் பல்வேறு நிதி உதவிகள் உரியவர்களைச் சென்று அடைவதற்கு இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள் தகுந்த முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று கிறிஸ்தவப் பொதுநிலையினரைச் சேர்ந்த ஒரு தலைவர் கூறினார்.
ஆந்திராவின் ஹைதராபாத் நகரில் இப்புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்கள் கிறிஸ்தவ கல்வியை மையப்படுத்தி, கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய தேசிய ஒருமைப்பாட்டு கழகத்தின் ஒரு முக்கிய உறுப்பினரான ஜான் தயாள் இவ்வாறு கூறினார்.
இந்திய அரசு குழந்தைகளின் கல்விக்கென்று நிதி ஒதுக்கீடு செய்யும்போது, அந்த நிதியைச் சரிவர பயன்படுத்த கிறிஸ்தவ நிறுவனங்கள் தவறுகின்றன என்று ஜான் தயாள் குறைகூறினார்.
இந்திய அரசின் பல தவறுகளால் இளைய தலைமுறையைச் சார்ந்த 20 விழுக்காட்டினரே தங்கள் உயர் கல்வியை முடிக்கின்றனர் என்று இக்கருத்தரங்கில் உரையாற்றிய அரசு அதிகாரி Raymond Peter எடுத்துரைத்தார்.


6. இரு கொரிய நாடுகளிலும் பிரிந்து வாழும் குடும்பங்கள் மீண்டும் இணைவதற்கு வழிகள் அமைக்கப்பட வேண்டும்

பிப்.09,2012. வட மற்றும் தென் கொரிய  நாடுகளுக்கிடையே தற்போது நிலவும் உறவு மிகவும் நலிவடைந்துள்ளது என்றும், இதை விரைவில் சரிசெய்வதே இரு நாடுகளுக்கும் நல்லது என்றும் இவ்விரு நாடுகளின் சமுதாய மற்றும் மதத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Gwangju உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Hyginus Kim Hee-joong உட்பட 100க்கும் அதிகமான சமுதாய மற்றும் மதத்தலைவர்கள் அண்மையில் இணைந்து வந்து வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இரு கொரிய நாடுகளிலும் பிரிந்து வாழும் குடும்பங்கள் மீண்டும் இணைவதற்கு வழிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பிறரன்புப் பணிகள் தொடரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இரு கொரிய நாடுகளின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாக, 2000ம் ஆண்டில் இரு நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் கூறப்பட்ட பல அம்சங்கள் நாளடைவில் மறைந்து விட்டன என்றும், இவைகளை மீண்டும் புதுப்பிப்பது இருநாடுகளுக்கும் சிறந்தது என்றும் இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் தவறுகள் இழைத்துள்ளன, எனவே, ஒருவரை ஒருவர் மன்னிப்பதன் மூலமே இரு நாடுகளும் மீண்டும் இணைய முடியும் என்று தேசிய கிறிஸ்தவ சபைகளின் நீதி மற்றும் அமைதிக் குழுவின் தலைவர் அருள்திரு Lee Hae-hak கூறினார்.


7. இந்தோனேசியாவின் ஒரு சில தீவுகளில் உருவாகியுள்ள பஞ்சத்தை நீக்க கத்தோலிக்கத் திருஅவை முயற்சிகள்

பிப்.09,2012. இந்தோனேசியாவின் ஒரு சில தீவுகளில் உருவாகியுள்ள பஞ்சத்தை நீக்க இந்தோனேசிய கத்தோலிக்கத் திருஅவை முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
இந்தோனேசியாவில் கிழக்கு சும்பா தீவு மற்றும் கிழக்கு Nusa Tenggara பகுதிகளில் வேளாண்மை பொய்த்துவிட்டதால் அங்குள்ள மக்கள் பட்டினியால் இறக்கும் சூழல் உருவாகியுள்ளது.
"ஒரு கிண்ணத்தில் அரிசி" என்ற பெயரில் தலத் திருஅவை மேற்கொண்டுள்ள இந்தத் துயர்துடைக்கும் பணியால் இதுவரை 2000 அமெரிக்க டாலர்கள் நிதியும், பல மூட்டைகள் அரிசியும் திரட்டப்பட்டுள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இந்தோனேசிய மக்கள் ஒன்றிணைந்து வர வேண்டிய நேரம் இது என்று ஆயர்கள் Hilarius Moa Nurak, மற்றும் Yos Suwatan ஆகியோர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


8. இந்தியாவில் தொடர்ந்து நிகழும் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்

பிப்.09,2012. இந்தியாவுக்கும் ஐரோப்பிய அவைக்கும் இடையே இவ்வெள்ளியன்று நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு, இந்தியாவில் தொடர்ந்து நிகழும் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாக அமைய வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு என்ற அமைப்பு கூறியுள்ளது.
ஆசிய கண்டத்திலும் உலக அளவிலும் இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறியிருப்பதைக் காண முடிகிறது. ஆயினும், இந்த முன்னேற்றங்களுக்கு இணையாக அந்நாட்டின் மனித உரிமை காக்கப்படுதல் முன்னேறவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் உயர் அதிகாரி Lotte Leicht கூறினார்.
தலித், பழங்குடியினர், சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற பல்வேறு சாரார் மீது மனித உரிமை மீறல் குற்றங்கள் இந்தியாவில் பெருகி வந்துள்ளன என்று இந்த கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகள் அதிகாரத்தில் இருந்தபோதிலும், இவை எதுவும் வலுகுறைந்த மக்களின் உரிமை மீறல்களைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இவ்வெள்ளியன்று இந்தியாவுக்கும் ஐரோப்பிய அவைக்கும் இடையே நடைபெற உள்ள பேச்சுவார்த்தைகளின்போது ஐரோப்பிய அவை இந்தியாவிடம் வலியுறுத்த வேண்டிய பரிந்துரைகளை இந்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஐரோப்பிய அவையின் தலைவர்கள் Herman Van Rompuy, மற்றும் Jose Manuel Barroso ஆகியோரிடம் சமர்ப்பித்துள்ளது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...