1. ஆப்ரிக்காவில் கடும் ஏழ்மையில் துன்புறும் மக்களின் துயர் துடைக்குமாறு உலகினருக்குத் திருத்தந்தை அழைப்பு
2. திருத்தந்தை : நாசரேத்தூர் இயேசுவின் வரலாறு இன்றைய நமது விசுவாசத்திற்கு முக்கியமானது
3. புதிய கர்தினால்களுக்குத் தொப்பி, மோதிரம் வழங்கும் திருவழிபாடு
4. நைஜீரியப் பேராயர் : தீவிரவாத தாக்குதல்கள் நாட்டின் முதலீடுகளுக்கு முட்டுக்கட்டை
5. அனைத்துலக திருநற்கருணை ஆண்டுக்குத் தாய்வான் திருஅவை தயாரிப்பு
6. வன ஆண்டு நிறைவு
7. வெப்பநிலை மாற்றத்தினால் ஏற்படும் பெருங்கடல்களின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு
8. அண்டார்ட்டிக் பகுதியில் இரஷ்ய அறிவியலாளர் சாதனை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஆப்ரிக்காவில் கடும் ஏழ்மையில் துன்புறும் மக்களின் துயர் துடைக்குமாறு உலகினருக்குத் திருத்தந்தை அழைப்பு
பிப்.10,2012. ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் கடும் ஏழ்மையில் வாடும் மக்களின் துயர் துடைப்பதற்குச் சர்வதேச சமுதாயம் தீவிர முயற்சிகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
சஹாராவையடுத்த பகுதிக்கான, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அமைப்பின் 25 உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, சாஹெல் பகுதியில் வறுமையை ஒழிப்பதற்கு முயற்சித்து வரும் திருஅவை உறுப்பினர்களுக்குத் தனது ஆதரவையும் ஊக்கத்தையும் அளிப்பதாகவும் கூறினார்.
இவ்வமைப்பானது, கிறிஸ்தவப் பிறரன்பின் அடையாளமாக இருக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்துவின் அன்பு, மதம், இனம், கலாச்சாரம் என அனைத்தையும் கடந்து எல்லாருக்கும் முக்கியமானது என்பதற்கு இவ்வமைப்பு சான்றாக இருக்கின்றது என்றும் கூறினார்.
தொடர் மோதல்களையும், தீர்க்க முடியாத பிரச்சனைகளையும் கொண்டுள்ள ஆப்ரிக்கா, தற்போது, திருஅவைக்கு நம்பிக்கையின் கண்டமாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
28 ஆண்டுகளாக இயங்கி வரும் இவ்வமைப்புக்குப் புதுப்பித்தல் அவசியம் என்றும், இதில் பணிசெய்பவர்கள், அப்பகுதியில் திருத்தந்தையின் கருவிகள் போன்று செயல்படுவதால், அவர்களுக்குக் கிறிஸ்தவக் கல்வியும், கிறிஸ்தவப் பயிற்சியும் அளிக்கப்படுமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
1980ம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் ஆப்ரிக்காவின் Burkina Faso வுக்கு திருப்பயணம் மேற்கொண்ட பின்னர், வறுமை, வறட்சி, தரிசு நிலங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் துன்புறும் அப்பகுதி மக்களுக்கு உதவுவதற்கென இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
2. திருத்தந்தை : நாசரேத்தூர் இயேசுவின் வரலாறு இன்றைய நமது விசுவாசத்திற்கு முக்கியமானது
பிப்.10,2012. தனது இறுதி முடிவின் நிறைவை அடைவதற்கு, மனிதரின் வாழ்வு நற்செய்தியின் அனைத்துக் கூறுகளினாலும் வழிநடத்தப்பட்டு, மாற்றம் பெற முடியும் என்ற நம்பிக்கையில், நற்செய்தி அறிவிக்கும் கலாச்சாரம் உருவாக்கப்பட்டது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலிய ஆயர் பேரவையின் கலாச்சார ஆணையம் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள மூன்று நாள் கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
உலகின் பல்வேறு நாடுகளில் இயேசுவின் பெயரால் இன்றும் பல விசுவாசிகள் துன்பங்களையும் அடக்குமுறைகளையும் எதிர்நோக்கும்வேளை, நாசரேத்தூர் இயேசுவின் வரலாறு, கடந்த காலத்தோடு முடிந்துவிட்டதாகக் கருதப்படக் கூடாது, மாறாக அது இன்றைய நமது விசுவாசத்திற்கும் முக்கியமானது என்றும் திருத்தந்தை கூறினார்.
இயேசு, மனித வரலாற்றில் என்றென்றும் நுழைந்து, அதன் அழகோடும் வல்லமையோடும் தொடர்ந்து வாழ்கிறார், பலவீனமானப் பண்பைக் கொண்ட அதற்கு எப்பொழுதும் தூய்மைப்படுத்துதல் அவசியம் என்றும் திருத்தந்தை கூறினார்.
நாசரேத்தூர் இயேசு என்ற தலைப்பில் தான் வெளியிட்டுள்ள இரண்டு நூல்கள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, ஞானம் மற்றும் அன்பின் கதவுக்குத் திறவுகோலாக இருப்பவர் இயேசு என்றும் தெரிவித்துள்ளார். “இயேசு, நமது காலத்தவர்” என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.
3. புதிய கர்தினால்களுக்குத் தொப்பி, மோதிரம் வழங்கும் திருவழிபாடு
பிப்.10,2012. புதிய கர்தினால்களுக்குச் சிவப்புத் தொப்பி, மோதிரம் வழங்கும், இன்னும் அவர்களுக்கான ஆலயம் குறிக்கப்படும் திருவழிபாடு, இம்மாதம் 18ம் தேதி உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெறும் என்று பாப்பிறைத் திருவழிபாட்டு நிகழ்வுகளுக்குப் பொறுப்பான பேருட்திரு Guido Marini அறிவித்தார்.
இத்திருவழிபாட்டை நிகழ்த்திய பின்னர், ஏழு அருளாளர்களை புனிதர்களாக அறிவி்ப்பது குறித்த கூட்டத்தில் திருத்தந்தை கலந்து கொள்வார் என்றும் பேருட்திரு Marini வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இயேசு சபையின் மறைசாட்சி அருள்திரு Giacomo Berthieu, மறைசாட்சியான வேதியர் Pedro Calungsod, நாசரேத் திருக்குடும்ப சபை மற்றும் ஆண்டவரின் பணியாளர்கள் சபைகளை ஆரம்பித்த அருட்பணி Giovanni Battista Piamarta, போதிக்கும்பணியின் மறைபோதக சகோதரிகள் சபையை தோற்றுவித்த Maria del Monte Carmelo, நியுயார்க்கின் Syracuse புனித பிரான்சிஸ் மூன்றாம் சபை சகோதரிகள் சபையின் அருட்சகோதரி Maria Anna Cope, பொதுநிலை விசுவாசிகள் Caterina Tekawitha, Anna Schaffer ஆகிய எழுவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவது குறித்து அக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
4. நைஜீரியப் பேராயர் : தீவிரவாத தாக்குதல்கள் நாட்டின் முதலீடுகளுக்கு முட்டுக்கட்டை
பிப்.10,2012. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் தொடர்ந்து இடம்பெற்று வரும் குண்டு வெடிப்புகள், அந்நாட்டுக்கு மிகவும் தேவைப்படுகின்ற வெளிநாட்டு முதலீடுகளுக்குத் தடைகளாக இருக்கின்றன என்று அந்நாட்டுப் பேராயர் Matthew Ndagoso கூறினார்.
இவ்வாரத்தில், Kaduna நகர் இராணுவக் குடியிருப்புக்களில் தற்கொலை குண்டு வெடிப்பு இடம்பெற்ற பின்னர், இவ்வாறு நிருபர்களிடம் கூறிய Kaduna பேராயர் Ndagoso, Boko Haram இசுலாம் தீவிரவாத அமைப்பின் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுமாறு கேட்டுக் கொண்டார்.
நைஜீரிய அரசுத்தலைவர் Goodluck Jonathan, இத்தீவிரவாத அமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை வரவேற்றுப் பேசிய பேராயர், இருதரப்பினரும் ஒருவர் ஒருவர் மீதான காழ்ப்புணர்வுகளைக் கைவிடுமாறு வலியுறுத்தினார்.
5. அனைத்துலக திருநற்கருணை ஆண்டுக்குத் தாய்வான் திருஅவை தயாரிப்பு
பிப்.10,2012. அயர்லாந்து நாட்டு டப்ளினில் இவ்வாண்டில் நடைபெறவிருக்கும் அனைத்துலக திருநற்கருணை மாநாட்டுக்குத் தாய்வான் தலத்திருஅவை தயாரித்து வருகிறது.
“திருநற்கருணை : கிறிஸ்துவோடும் ஒருவர் ஒருவரோடும் ஒன்றிப்பு” என்ற தலைப்பில், வருகிற ஜூன் 10 முதல் 17 வரை டப்ளினில் அனைத்துலக திருநற்கருணை மாநாடு நடைபெறவிருக்கிறது.
இதே தலைப்பைப் பிரதிபலிக்கும் வண்ணம் தேசிய திருநற்கருணை மாநாட்டுக்கும் ஏற்பாடு செய்து வரும் தாய்வான் தலத்திருஅவை, திருநற்கருணை பற்றிய நூல்களையும் வெளியிட்டுள்ளது.
6. வன ஆண்டு நிறைவு
பிப்.10,2012. காடுகளின் சமூக மற்றும் பொருளாதார மதிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது ஐ.நா.நிறுவனம்.
அனைத்துலக வன ஆண்டை இவ்வியாழனன்று நிறைவு செய்த நிகழ்ச்சியில் உரையாற்றிய, ஐ.நா. காடுகள் கழகத்தின் (UNFF) இயக்குனர் Jan McAlpine, இவ்வுலகில் வாழும் 700 கோடிப் பேரின் உடல், பொருளாதார மற்றும் ஆன்மீக நலத்தோடு காடுகள் தொடர்பு கொண்டுள்ளன என்று கூறினார்.
உலகின் நிலப்பகுதியில் 31 விழுக்காடு காடுகள் எனவும், இவை, நூறாயிரம் கோடி டன்களுக்கு அதிகமான கார்பனைச் சேமித்து வைத்து, 160 கோடிக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களுக்கு உதவுகின்றன என்று ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக அவை (ECOSOC) கூறியது.
மேலும், காடுகள் அழிக்கப்படுவதால் வெளியாகும் வாயுக்கள், உலகம் வெப்பமடைவதற்கு 12 முதல் 20 விழுக்காடு வரை காரணமாகின்றன என்றும் அவ்வவை தெரிவித்தது.
காடுகளைப் பாதுகாப்பதற்கு, சிறப்பான பங்கை அளித்த பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களும் இவ்விழாவில் கவுரவப்படுத்தப்பட்டனர்.
இரண்டு அமெரிக்கப் பள்ளிச் சிறுமிகள், ஒரு ஜப்பானிய மீனவர், பிரேசிலில் கொல்லப்பட்ட ஒரு தம்பதியர் உட்பட 8 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
7. வெப்பநிலை மாற்றத்தினால் ஏற்படும் பெருங்கடல்களின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு
பிப்.10,2012. “வெப்பநிலை மாற்றத்தினால் ஏற்படும் பெருங்கடல்களின் தாக்கம்” குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வைப் புகட்டும் நோக்கத்தில், உலகின் பெருங்கடல்களில் பயணம் செய்து வரும் அறிவியல் ஆய்வுக் கப்பல் ஒன்று தற்போது நியுயார்க் வந்தடைந்துள்ளது
ஏறத்தாழ மூன்று ஆண்டுகளாக ஆய்வுகளை நடத்தி வரும், Tara Oceans என்ற இக்கப்பல் பணியாளர்கள், அட்லாண்டிக், பசிபிக், அண்டார்டிக், இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் எழுபதாயிரம் மைல்கள் பயணம் செய்து, வெப்பநிலை மாற்றத்தினால் கடல்சார் வாழ்வு, பல உயிரினங்களின் வாழ்வு போன்றவைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எடுத்துரைத்து வருகின்றனர்.
UNEP என்ற ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு மற்றும் யுனெஸ்கோவின், சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு மற்றும் பெருங்கடல் அமைப்பின் ஆதரவுடன் இப்பணி நடத்தப்பட்டு வருகிறது.
8. அண்டார்ட்டிக் பகுதியில் இரஷ்ய அறிவியலாளர் சாதனை
பிப்.10,2012. தென்துருவத்திலுள்ள அண்டார்ட்டிக் பகுதியில் உறைந்த நிலையில் உள்ள பனிப்படலத்துக்குக் கீழே நான்கு கிலோமீட்டர் தூரத்துக்குத் துளையிடும் தங்களது திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக இரஷ்ய அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
வெள்ளைக் கண்டம் என்றழைக்கப்படும், அண்டார்ட்டிக் பனிப் பகுதியில், உறைநிலையிலுள்ள பனிப்படலங்களுக்கு கீழே 300க்கும் அதிகமான ஏரிகள் இருப்பதாக அறியப்படும் நிலையில், ஓர் ஏரியில் இந்த அளவுக்கு ஆழமாகத் துளையிடப்படுவது இதுவே முதல் முறை என்று அந்த அறிவியலாளர்கள் கூறினர்.
அண்டார்ட்டிகாவின் உறைநிலை வரலாறு மற்றும் சூரிய மண்டலத்தில் வேறெங்கெல்லாம் உயிரினம் இருக்கக் கூடும் என்பதை, இந்த ஏரிகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அண்டார்ட்டிகாவில் கடந்த சில பத்தாண்டுகளாக எடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக, இந்த ஆய்வை மேற்கொண்ட இரஷிய ஆய்வு மையமான வோஸ்டாக் நிலையம், அக்கண்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment