Sunday, 5 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 03 பெப்ரவரி 2012

 
1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : கடவுளோடு கொண்டிருக்கும் உறுதியான பிணைப்பு, துறவு வாழ்வின் பண்பை விளக்குகின்றது

2. MISEREOR இயக்குனர்: இந்தியத் திருஅவை சமுதாய நல்வாழ்வுப் பணிகளை ஊக்குவிக்க வேண்டும்

3. சிறந்ததோர் இந்தியா உருவாக்கப்பட உரையாளர்களின் பரிந்துரைகள்

4. இயேசுவை, கம்யூனிச புரட்சிவாதிஎன்று சித்தரித்திருப்பதற்கு கேரளத் திருஅவைத் தலைவர்கள் கண்டனம்

5. ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவத்தின் நேர்மறையான தாக்கத்தை வெளிப்படுத்த அழைப்பு

6. பிப்ரவரி 13, அனைத்துலக வானொலி தினம்

7. மலேரியாவால் இடம் பெறும் இறப்புக்களின் எண்ணிக்கை 2020க்குப் பின்னர் குறையும் புதிய அறிக்கை

8. குவைத்தில் முதலாளிகளின் நிர்ப்பந்தத்தில் சீரழியும் இலங்கைப் பெண்கள்

------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : கடவுளோடு கொண்டிருக்கும் உறுதியான பிணைப்பு, துறவு வாழ்வின் பண்பை விளக்குகின்றது

பிப்.03,2012. சாட்சிய வாழ்வு வாழ்வதற்கும், நற்செய்தி அறிவிப்புக்கும், விசுவாச ஆண்டு துறவிகளுக்குச் சிறப்பான வாய்ப்பை வழங்குகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
அனைத்துலக துறவியர் தினமான பிப்ரவரி 2ம் தேதி இவ்வியாழன் மாலை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஆயிரக்கணக்கான இருபால் துறவியருடன் சேர்ந்து மாலை திருப்புகழ்மாலை செபித்து மறையுரையாற்றிய  திருத்தந்தை, வருகிற அக்டோபரில் தொடங்கும் விசுவாச ஆண்டு, அனைத்து விசுவாசிகளுக்கும், சிறப்பாக, துறவியருக்கு, அகப்புதுப்பித்தலுக்கு ஏற்ற காலமாக இருக்கின்றது என்று கூறினார்.
இறைவனோடு தனக்குள்ள உறவை வலுப்படுத்துவது, ஒருவரது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் பெற வேண்டும் எனவும், இது, துறவற வாழ்க்கையின் தன்மையை மிக அதிகமாக விளக்குவதாகவும் இருக்கின்றது எனவும் கூறினார் திருத்தந்தை.
உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து இருபால் துறவியரின் விசுவாசத்தின் சான்றுக்கு இந்நாள் அதிகக் கவனம் செலுத்துகின்றது என்று மறையுரையாற்றிய அவர், துறவிகள் தங்களையே இறைவனுக்குக் கையளிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் எண்ணங்களையும் உணர்வுகளையும் மீண்டும்  தூண்டுவதாக இத்தினம் அமைகின்றது என்றும் தெரிவித்தார்.
ஏழ்மை, கன்னிமை, பணிவு ஆகிய நற்செய்தி அறிவுரைகள், நம்பிக்கை, பற்றுறுதி, பிறரன்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தி, மக்களை இறைவனிடம் நெருக்கமாகக் கொண்டு வருகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.
துறவிகள் தங்களது சபைகளின் தனிவரம் மூலம், திருஅவைக்கும் இன்றைய உலகுக்கும் நம்பத்தகுந்த சாட்சிகளாகத் திகழுமாறும் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, திருஅவையின் போதனைகளுக்கு விசுவாசமாக இருக்கவும், விசுவாசத்திற்குச் சான்றுகளாக இருக்கவும் அவர்களை வலியுறுத்தினார். 
இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டது, கிறிஸ்துவே உலகின் ஒளி என்பதை வெளிப்படுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்துவே உலகின் ஒளி என்ற கருத்தானது கிறிஸ்மஸ் விழாக்களில் வெளிப்படுத்தப்பட்டு திருக்காட்சி விழாவில் நிறைவை எட்டியது என்றும் கூறினார்.
பிப்ரவரி 2ம் தேதியன்று இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வு சிறப்பிக்கப்படுகின்றது. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால், இந்நாளை, அனைத்துலக துறவியர் தினமாக அறிவித்து, 1997ம் ஆண்டில் முதன் முறையாக இத்தினத்தைச் சிறப்பித்தார்.


2. MISEREOR இயக்குனர்: இந்தியத் திருஅவை சமுதாய நல்வாழ்வுப் பணிகளை ஊக்குவிக்க வேண்டும்

பிப்.03,2012. இந்தியத் திருஅவை, மேற்கொள்ளும் மறைப்பணியில், சமுதாய நல்வாழ்வுப் பணிகளுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு ஜெர்மன் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
இம்மாதம் ஒன்றாந்தேதி முதல் பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய, ஜெர்மன் கத்தோலிக்க ஆயர் பேரவையின் வளர்ச்சித்திட்ட ஒத்துழைப்பு நிறுவனமான MISEREOR இயக்குனர் பேருட்திரு Josef Sayer இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியில் ஆழமாக வேரூன்றப்பட்டுள்ள இந்தியத் திருஅவை, இந்தியச் சமுதாயத்துக்கு எண்ணற்ற சேவைகளைச் செய்து வருகின்றது என்றும் பாராட்டினார் பேருட்திரு Sayer.
MISEREOR ஜெர்மன் பிறரன்பு நிறுவனம், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆப்ரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் 1,600 சமூகநலத் திட்டங்களுக்கு உதவியுள்ளது.


3. சிறந்ததோர் இந்தியா உருவாக்கப்பட உரையாளர்களின் பரிந்துரைகள்

பிப்.03,2012. பெங்களூரு புனித ஜான் தேசிய நலவாழ்வு நிறுவனத்தில் 30வது பொதுக்கூட்டத்தை நடத்தும், இந்திய ஆயர்களுக்கு உரையாற்றிய புகழ்பெற்ற சமூக ஆர்வலர் பேராசிரியர் T.K.Oomen, இந்தியத் திருஅவை, ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டோரின் வாழ்வு மேம்படுவதற்காக உழைக்குமாறு பரிந்துரைத்தார்.
சந்தை, குடிமக்கள் சமுதாயம், நாடு ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் தொடர்பு பற்றி விளக்கிய Oomen, ஏழைகள் தங்களது நிலத்தையும், சமத்துவத்துக்கும் மாண்புக்குமான சட்டரீதியான உரிமைகளையும் இழந்து விடாமல் இருப்பதற்குத் திருஅவை, அரசையும் சமுதாயக் குழுக்களையும் முடுக்கி விடுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் மதமாற்றம் செய்வதில் புத்தமதம் முதலிடத்தில் இருந்த போதிலும், கிறிஸ்தவமே, மக்களை மதமாற்றும் முத்திரையைப் பெற்றுள்ளது என்றும் கூறிய அவர், இந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் சொல்லுவதற்குத் திருஅவை ஏதாவது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன, இத்தகைய பன்மைத்தன்மை கொண்ட சமுதாயம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் Oomen கூறினார்.
மேலும், இக்கூட்டத்தில் உரையாற்றிய இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவரான Naveen Chawla,  கல்வி மற்றும் நலவாழ்வுத் துறைகளில் செய்து வரும் நற்பணிகளைத் தொடர்ந்து ஆற்றுமாறு திருஅவைத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டார்.  
அன்னை தெரேசா வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும், அன்னை தெரேசாவோடு  20க்கும் மேற்பட்ட ஆண்டுகளாகத் தொடர்பு வைத்திருந்தவருமான Chawla, அன்னை தெரேசாவின் அன்புப் பணிகளைத் தொடர்ந்து நடத்துமாறும் வலியுறுத்தினார்.
இந்தியத் திருஅவையின் 170 ஆயர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டம் இம்மாதம் 8ம் தேதியன்று முடிவடையும்.


4. இயேசுவை, கம்யூனிச புரட்சிவாதிஎன்று சித்தரித்திருப்பதற்கு கேரளத் திருஅவைத் தலைவர்கள் கண்டனம்

பிப்.03,2012. அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ள இந்திய கம்யூனிச கட்சி வரலாறு குறித்த அருங்காட்சியகத்தில் இயேசுவை, கம்யூனிச புரட்சிவாதிஎன்று சித்தரித்திருப்பதற்கு கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்கள் தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
Marx மட்டுமே சரிஎன்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வருங்காட்சியகத்தின் ஒரு பிரிவில், மறைசாட்சியம், கிறிஸ்துவிலிருந்து சேஎன்ற தலைப்பும் இடம் பெற்றுள்ளது. அடுத்த வாரத்தில் திருவனந்தபுரத்தில் தொடங்கும் அக்கட்சியின் மாநிலக் கருத்தரங்கின் போது இது திறக்கப்படும்.
இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, கேரள இலத்தீன் ரீதி ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் மரிய காலிஸ்ட் சூசைபாக்கியம், இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் குறை கூறியுள்ளார்.
கம்யூனிசவாதிகள், இயேசுவின் போதனை மீதான தங்கள் புறக்கணிப்பை எப்போதுமே காட்டியுள்ளனர் என்றும், தற்போதைய இந்நடவடிக்கை, திருஅவைத் தலைவர்களைக் கேவலப்படுத்துவதற்காகவே இடம் பெற்றுள்ளது என்றும் பேராயர் சூசைபாக்கியம் மேலும் கூறியுள்ளார்.
சே(Che)” என்பது அர்ஜென்டின நாட்டின் கம்யூனிச புரட்சிவாதியான எர்னஸ்த்தோ சே குவாராவைக் குறிப்பதாகும். 
கேரளாவின் 3 கோடியே 20 இலட்சம் மக்களில் 22 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.


5. ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவத்தின் நேர்மறையான தாக்கத்தை வெளிப்படுத்த அழைப்பு

பிப்.03,2012. ஐரோப்பிய சமுதாயத்தில் கிறிஸ்தவத்தின் நேர்மறையான தாக்கத்தை அக்கண்டத்தின் கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்துமாறு ஐரோப்பிய ஆயர் பேரவைகள் அவையும், ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகளின் அவையும் கேட்டுள்ளன.
கிறிஸ்தவ சபைகளுக்கு அறிவு சார்ந்த விவாதங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள கிறிஸ்தவ சபைகளின் அவைகள், அவ்விவாதங்களின் போது, கிறிஸ்தவ விசுவாசம் சமுதாயத்திற்குச் செய்யக்கூடிய நன்மைகள் பற்றி எடுத்துக் கூறுமாறு கேட்டுள்ளன.
கடந்த மாத இறுதியில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளன ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள்.


6. பிப்ரவரி 13, அனைத்துலக வானொலி தினம்

பிப்.03,2012. பிப்ரவரி 13ம் தேதியை அனைத்துலக வானொலி தினமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ.
வானொலி ஒலிபரப்பு, வானொலி ஒலிபரப்பாளர்கள் மத்தியில் சர்வதேச அளவில் ஒத்துழைப்பு, சமுதாய வானொலிகள் உட்பட அனைத்து வானொலிகள் மூலமாகத் தகவல்கள் பெறும் வழிகளை உருவாக்கி ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களுக்காக, அனைத்துலக வானொலி ஒலிபரப்பு தினத்தைச் சிறப்பிக்கத் தீர்மானித்திருப்பதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
இவ்வனைத்துலக வானொலி தினத்தை, மாநில, தேசிய, மற்றும் சர்வதேச அளவில் சிறப்பிக்குமாறும், ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ கேட்டுக்கொண்டுள்ளது.


7. மலேரியாவால் இடம் பெறும் இறப்புக்களின் எண்ணிக்கை 2020க்குப் பின்னர் குறையும் புதிய அறிக்கை

பிப்.03,2012. உலக அளவில் மலேரியாவால் இடம் பெறும் இறப்புக்களின் எண்ணிக்கை, 2020ம் ஆண்டுக்குப் பின்னர்தான் குறையும் என்று புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
The Lancet என்ற பிரிட்டன் மருத்துவ இதழில் வெளியான அறிக்கையின்படி, மலேரியாவால் இடம் பெற்ற இறப்புக்கள், 1980ம் ஆண்டில் 9 இலட்சத்து 95 ஆயிரமாகவும், 2004ம் ஆண்டில் 18 இலட்சத்து 20 ஆயிரமாகவும், 2010ம் ஆண்டில் 12 இலட்சத்து 40 ஆயிரமாகவும் இருந்தது என்று தெரிய வந்துள்ளது.
எனினும், 2020ம் ஆண்டுக்குப் பின்னர்தான் இவ்வெண்ணிக்கை ஒரு இலட்சமாகக் குறையும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.


8. குவைத்தில் முதலாளிகளின் நிர்ப்பந்தத்தில் சீரழியும் இலங்கைப் பெண்கள்

பிப்.03,20102. இலங்கையிலிருந்து குவைத் நாட்டுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் பணிப்பெண்கள், அந்நாட்டு வீட்டுத் தலைவர்களால் தகாத தொழிலுக்கு ஏலம் விடப்படுவதாக அங்கிருந்து நாடு திரும்பிய பெண்கள் தெரிவித்துள்ளனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதியான நிலைக்குள்ளான பணிப்பெண்களில் மற்றுமொரு பிரிவினர் இவ்வியாழன் காலை நாடு திரும்பியுள்ளனர்.
விமானம் மூலம் சுமார் 70 பணிப்பெண்கள் இலங்கையை வந்தடைந்தனர். இவ்வாறு நாடு திரும்பியப் பணிப்பெண்களில் அதிகமானோர், குவைத் மற்றும் சவுதி அரேபிய நாடுகளில் பணியாற்றியவர்கள் எனக் கூறப்படுகின்றது.
உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்பதுடன் வேலைவாய்ப்பு நிலையத்தினால் உறுதியளிக்கப்பட்டவாறு தாங்கள் நடத்தப்படவில்லை என்றும் பணிப்பெண்கள் கவலை தெரிவித்தனர்.
நாட்டிற்குத் திரும்பியவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஊடகச் செய்தி கூறுகின்றது.



No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...